Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,543 முறை படிக்கப்பட்டுள்ளது!

100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2

உங்களுக்கு உதவுவதற்காக இங்கே விரிகிறது ‘100/100 சூப்பர் டிப்ஸ்’  2/2

பாதுகாப்பான ஃபர்னிச்சர்

52. ஃபர்னிச்சர் வாங்கச் செல்லும் முன் ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன தேவை, என்ன அளவில், என்ன தரத்தில், என்ன வடிவத்தில், என்ன நிறத்தில் தேவை என்பதை ஓரளவுக்கு முடிவு செய்து விட்டு செல்லுங்கள். என்ன விலையில் வாங்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்து அதற்கேற்ற மரத்தையோ, உலோகத்தையோ, தரத்தையோ முடிவு செய்யலாம். பெரிய கடைகளில் சின்னதாக தோன்றும் சோஃபாக்கள்… நமது வீட்டுக்கு வந்ததும் அறைகளை முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதை மனதில் கொள்ளவும்.

53. வீட்டை அடைப்பது போல ஃபர்னிச்சர்களை வாங்கி நிறைத்து வைக்காதீர்கள். மிகத் தேவையானதை மட்டுமே வாங்குங்கள். பழையவற்றை விற்பனை செய்வது கடினம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

54. மாதத்தின் துவக்கத்தில் பர்னிச்சர் வாங்குவதைவிட, கடைசியில் வாங்குவது நல்லது. பெரும்பாலான கடைகள் மாதம் எவ்வளவு விற்பனை என கணக்கு காட்ட வேண்டியிருக்கும். எனவே, கடைசி வாரத்தில் கொஞ்சம் மலிவு விலையில் அல்லது நியாயமான விலையில் பொருட்களைத் தள்ளிவிட பார்ப்பார்கள். அது நமக்கு லாபகரமானதாக இருக்கும்.

55. கட்டில் வாங்கப் போகிறீர்கள் எனில், எத்தனை பேருக்கான கட்டில் என்பதைவிட, எந்த அறையில் அதைப் போடப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து வாங்குவது நல்லது.

56. சிறு குழந்தைகள் உள்ள வீட்டில் விலையுயர்ந்த லெதர் சோஃபா போன்றவற்றை வாங்கும்போது கவனம் தேவை. குழந்தைகள்… கத்தி, பென்சில், பேனா என எதை வைத்து வேண்டுமானாலும் கிழிக்கக் கூடும். அதேபோல, குழந்தைகளுக்கான கட்டில் அல்லது மேஜை போன்றவை வாங்கும்போது பாதுகாப்பை அதிகமாக கவனத்தில் கொள்ளுங்கள். ஆணிகள், கழன்று விழும் பகுதிகள் போன்றவை இல்லாத பொருட்களாக வாங்கவேண்டும். கட்டில், குழந்தைகளுக்குரிய உயரத்தில், வடிவத்தில் இருக்கவேண்டும்.

57. உங்கள் பட்ஜெட்டுக்கு இதுதான் கிடைத்தது என்று எதையாவது வாங்குவதைத் தவிருங்கள். ஃபர்னிச்சர் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டியவை என்பதால் பயன் தரக் கூடியதை மட்டுமே வாங்குங்கள்.

58. சோஃபாவில் உட்கார்ந்து பார்த்து உங்களுக்கு சரியாக இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே வாங்குங்கள். அதி அற்புதமான சோஃபாக்கள்கூட சிலருக்கு உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமத்தைக் கொடுப்பவையாக இருக்கும்.

ஏ.சி. வாங்குவோர் கவனிக்கவும்!

59. உங்கள் அறையின் அளவுக்கு ஏற்ப, ஏ.சி. மெஷினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறை என்றால், அதற்கென குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுள்ள மெஷினை வாங்காமல், விலை குறைவாக இருக்குமே என்று குறைவான அளவுள்ள மெஷினை வாங்கினால்… அது கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். விரைவிலேயே மெஷின் கெட்டும் போகும். அதேபோல, சிறிய அறைக்கு, குறிப்பிட்டதைவிட கூடுதல் அளவுள்ள மெஷினை வாங்கினால், அறை விரைவில் குளிர்ந்து, அவஸ்தையைக் கொடுப்பதாக அமைந்துவிடும்.

60. அறையில் எத்தனை ஜன்னல்கள் உண்டு, ஃபால்ஸ் சீலிங் உண்டா, அறைக்கு மேல் மொட்டை மாடியா… போன்ற பல விஷயங்களை அலசி உங்கள் ஏ.சி-யின் அளவை முடிவு செய்யுங்கள்.

61 ‘ஃபில்ட்டர்’களை எளிதாகச் சுத்தம் செய்யக் கூடிய ஏ.சி. மெஷின்களை வாங்குங்கள். அதுதான் சொந்தமாக நீங்களே பராமரிக்க வசதியாக இருக்கும்.

62 ‘எனர்ஜி சேவர்’ என்ற பெயரில் வரும் ஏ.சி. மெஷின்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். தொடர்ச்சியாக மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். ‘எனர்ஜி ஸ்டார்’ அதிகம் இருந்தால் அதிக மின்சாரம் மிச்சமாகும்.

63. ஏ.சி. மெஷின் கன்ட்ரோல்கள் எளிதில் இயக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இருளிலும் எத்தனை டிகிரி குளிர் என்பதை டிஜிட்டலில் காட்டும் மெஷின் என்றால் வசதியாக இருக்கம். அதேபோல ‘டைமர்’ உள்ளிட்ட சமாசாரங்களும் இருக்கிற மெஷினென்றால்… அதிகம் பயனுள்ளதாக இருக்கும். ரிமோட்டும் இருளிலும் ஒளிரக் கூடிய வகையில் இருப்பது நல்லது.

64. விண்டோ ஏ.சி. மெஷின் அதிகம் சத்தமிடும். சத்தம் தவிர்க்க நினைப்பவர்கள் ஸ்பிலிட் ஏ.சி. வாங்குவதே நல்லது.

65. ஏ.சி. மெஷினுக்கு ‘வருட சர்வீஸ்’ வாங்கி வைப்பது நல்லது. தேவையான இடைவெளியில் சர்வீஸ் செய்வது மெஷினின் ஆயுளை நீட்டிக்கும்.

66. நீளமான வராண்டா போன்ற அறை எனில், அதன் குறுகிய சுவரில் ஏ.சி. மெஷின் மாட்டும் போது, ‘டர்போ ஆப்ஷன்’ உள்ள மெஷினாக இருப்பது நல்லது. அதுதான் காற்றை அறை முழுதும் வீரியத்துடன் செலுத்தும்.

67. ஏ.சி. போன்ற பொருட்களை வாங்கும்போது குளிர் காலத்தில் வாங்குங்கள். குழம்பவேண்டாம்… பெரும்பாலான பொருட்கள் ‘சீஸன்’ முடிந்தபின்பு வாங்குவது, குறைந்த விலைக்கு உத்தரவாதமாக இருக்கும்.

வாஷிங்மெஷின் – வெளுத்துக்கட்டுங்க!

68. வாஷிங் மெஷின் வாங்கும் முன், முக்கியமாக வீட்டில் வாட்டர் சப்ளை எப்படி இருக்கிறது. எத்தனை பேருக்கு மெஷின் பயன்படப் போகிறது என்பதை முடிவு செய்வது நல்லது.

69. எப்போதும் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் எனில், ஃபுல்லி ஆட்டோமேடிக் மெஷின் வாங்கலாம். இல்லையேல் செமி ஆட்டோமேடிக் வாங்குவது நல்லது.

70. ‘எனர்ஜி சேவர்’ ஸ்டார் இருக்கும் மெஷின் வாங்கினால் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.

71. முன்பக்கம் வழியாகத் துணிகளைப் போடும் ‘ஃபிரெண்ட் லோடிங்’ மெஷின், அதிக விலைகொண்டதாக இருக்கும். ஆனால், தண்ணீரும் மின்சாரமும் குறைவாகவே தேவைப்படும். அதிகம் சத்தமும் இருக்காது. துணிகளைக் கொஞ்சம் மென்மையாகத் துவைக்கும்!

72. எத்தனை ஆண்டுகளுக்கு ஃப்ரீ சர்வீஸ்; கொள்ளளவு என்ன; எத்தனை கிலோ எடைக்கு துணிகள் என்பதையெல்லாம் பாருங்கள். முழுக்க வாஷிங் மெஷினை மட்டும் நம்பியிருந்தால்… அதிக கொள்ளளவு உள்ள மெஷினை வாங்கலாம்.

‘ஆன்லைன்’ ஷாப்பிங்!

விழாக்காலத் ‘தள்ளுமுள்ளு’களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி ‘ஆன்லைன் ஷாப்பிங்’. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்… அலைச்சலும் மிச்சம்.

73. ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.

74. என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது ‘கிரெடிட் கார்ட்’ ஹிஸ்டரியில் இருக்கும். ‘பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே!’ என குழம்ப வேண்டியிருக்காது.

75. யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.

76. இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்… அதாவது, ‘SSL – Secure Sockets Layer’ என்றால்… பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

77. இணைய தளத்தில் ‘ரிஜிஸ்டர்’ செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.

விளையாட்டா எடுத்துக்காதீங்க!

78. குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

79. விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.

80. பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்… மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.

81. ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது, சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.

82. ‘குறைவான விலைக்குக் கிடைக்கிறதே’ என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.

டெலிவிஷன்… பவர்விஷன்!

83. டி.வி. வாங்கப் போகிறீர்களா… என்ன டி.வி. என்பதை முதலில் முடிவு செய்வதைவிட, அதை எந்த அறையில் வைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். அறையின் அளவுக்குத் தக்க டி.வி-யை வாங்குவதுதான் நல்லது. சின்ன அறையில் பெரிய டி.வி-யும், பெரிய அறையில் சின்ன (போர்ட்டபிள்) டி.வி-யும் வைத்தால், பார்வைக்கு நன்றாக இருக்காது என்பதோடு உங்களின் கண்களுக்கும் பிரச்னையை ஏற்படுத்தும்.

84. டி.வி-யைப் பயன்படுத்தி வீடியோ கேம்ஸ் விளையாடும் வசதியும் சமீபகாலமாக பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, குழந்தைகளை மனதில் வைத்து, வீடியோ கேம்ஸ் வசதியுள்ள டி.வி-யாக வாங்கிவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

85. டி.வி.டி. பிளேயர், வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர் என நாளுக்கு நாள் தொழில்நுட்ப முன்னேற்றம் வந்து கொண்டே இருப்பதால், லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் வகையில் இன்புட், அவுட்புட் வசதியுள்ள டி.வி-யாக இருப்பது நல்லது.

86. நம்பிக்கையான பிராண்ட், அதிக வாரண்டி/கியாரண்டி தரும் நிறுவனத்தின் டி.வி-க்கு முன்னுரிமை தரலாம்.

87. டி.வி-யின் ரிமோட், எளிதாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பது நல்லது. ஒருவேளை ரிமோட் வேலை செய்யாமல் போனால், டி.வி. பெட்டியில் உள்ள சுவிட்சுகளைப் பயன்படுத்த நேரிடலாம். எனவே, தேவையான சுவிட்சுகள் டி.வி-யிலும் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம்.

88. நீங்கள் எந்த பிராண்ட் டி.வி-யை வாங்கினாலும், அதற்குரிய சர்வீஸ் சென்டர்கள் உள்ளூரிலேயே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொண்டு வாங்குங்கள்.

உஷார்… உஷார்…

89. ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் ‘பில்’லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.

90. ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள், கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும்.

91. கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், ‘குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், ‘குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்’ என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.

92. பொருட்களை வாங்கும்போது ‘கியாரண்டி கார்ட்’ பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.

93. வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ”ஸாரி… ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க” என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

94. ‘இப்போது புதிய கைப்பிடியுடன்…’, ‘இப்போது புதிய ஸ்பீக்கருடன்…’ இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்… பர்ஸூக்குத்தான் ஆபத்து.

95. ‘பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு’ என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்… நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை!

96. ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்!

97. நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க், தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.

98. தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது, பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்… நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்!

99. ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.

100. வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்… அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.

நன்றி: பெட்டகம் பிளாக்ஸ்பாட்