அல் ·பாஹித் என்ற அரபு ஞானி ஒரு நாள் தன் நண்பரிடம் வருத்தத்துடன் சொன்னார். “நாம் கடவுளுடைய கருவியாக இருந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் சில சமயங்களில் சைத்தானுடைய கருவியாக இருந்து விடுகிறோம். இன்று கூட நான் சைத்தானுடைய கருவியாக மாற நேரிட்டது”
அவர் நண்பருக்கோ வியப்பு. இவரைப் போன்ற அப்பழுக்கில்லாத ஞானி எப்படி சைத்தானுடைய கருவியாக மாற முடியும்? “நீங்கள் மிகக் கவனமாக இருப்பீர்களே. பின் எப்படி அது சாத்தியம்?” என்று கேட்டார்.
“நான் இன்று மசூதிக்குத் தொழச் சென்ற போது என் செருப்பை வெளியே விட்டுச் சென்றேன். திரும்பி வந்து பார்த்த போது செருப்பைக் காணவில்லை. இன்று ஒரு திருடனை உருவாக்கி விட்டேனே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது”
“அதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லையே” என்றார் அந்த நண்பர்.
“என் தவறு தான் அது. ஒருவரை ஆசைப்பட வைப்பதும், கோபப்படுத்துவதும், சந்தேகத்தைக் கிளம்புவதும், வெறுப்பை விதைப்பதும், மனிதர்களைப் பிரிப்பதும் மிகவும் எளிது. சைத்தான் தன்னுடைய இந்த செயல்களைச் செய்ய மனிதர்களையே உபயோகப்படுத்துகிறது. அந்த வகையில் இந்தத் தவறு நிகழ நான் பயன்படுத்தப்பட அனுமதித்து விட்டேன்”
அல் ·பாஹிதின் சிந்தனையின் உயர்வைப் பாருங்கள்.
மற்றவர்களைத் தவறு செய்யத் தூண்டுவதில் இரண்டு வகை உண்டு. அறிந்து தூண்டுவது. அறியாமல் தூண்டுவது.
அறிந்தே மற்றவர்களைத் தவறு செய்ய மற்றவர்களைத் தூண்டுவது நேரடியாக அந்தத் தவறை விடக் கொடுமையானது. தங்களை நல்லவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரை நான் கவனித்திருக்கிறேன். அவர்களாகத் தவறுகள் செய்து அடுத்தவர்களைத் துன்புறுத்தத் தயங்கும் எத்தனையோ பேர் அடுத்தவர்களைக் குற்றம் செய்யத் தூண்டுவதில் வருத்தம் கொள்வதில்லை. என்ன செய்கிறோம், இதன் விளைவு என்ன என்ற சிந்தனை கூட அவர்களிடம் இருப்பதில்லை.
எனக்குத் தெரிந்த ஒருவர் தானாக மற்றவர்களிடம் சண்டை போட மாட்டார். ஆனால் மற்றவர்களை சண்டைக்குத் தூண்டி விடுவதில் கெட்டிக்காரர். மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளை தொனியை மாற்றி, முகபாவனையை மாற்றிச் சொல்லி சண்டையை மூட்டி விடுவார். அவரைப் பொறுத்த வரை அவர் பொய் சொல்லவில்லை. வார்த்தைகளை மாற்றிச் சொல்லவில்லை. ஆனால் தொனியும், சொல்லும் முகபாவமும் மாறினால் வார்த்தைகளின் அர்த்தம் முற்றிலுமாக மாறி விடுகிறது, அது பொய்யிலே பெரிய பொய் என்பது அவர் அகராதியில் இல்லை.
இன்னொருவர் மேலதிகாரியைப் பற்றி ரோஷக்கார சக ஊழியர்களிடம் சொல்கையில் “அவருக்கு நாம் எல்லாம் அடிமைகள் என்று நினைப்பு. கிள்ளுக்கீரையாய் நம்மை நினைக்கிறதால் தான் மதிப்பதே இல்லை…” என்று சொல்லிக் கொண்டே இருப்பார். திடீரென்று யாராவது ஊழியர் கிள்ளுக்கீரை இல்லை என்று நிரூபிப்பதற்காகவே அந்த மேலதிகாரியிடம் போய் சண்டை போடுவார். இப்படி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வேண்டுமென்றே தவறாக ஊகித்து மற்றவர்களுக்கிடையில் மனஸ்தாபத்தை வளர்த்துவதில் சிலர் கில்லாடிகள். கடைசியில் பெரும் பிரச்னைகள் அவர்களுக்குள் வெடிக்கையில் இவர்கள் மட்டும் இரண்டு பக்கமும் வேண்டப்பட்ட ஆட்களாய் நிற்பார்கள்.
உண்மையில் நேரடியாகச் சண்டை போடுபவர்களை விட அதிகமாக இவர்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே கேடு விளைவிக்கிறார்கள். அல் ·பாஹித் கூறியது போல இது போன்ற மனிதர்களையே சைத்தான் தன் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் என்றே தோன்றுகிறது. வதந்திகளைப் பரப்புவது, வெறுப்பு விதைகளைத் தூவுவது, மற்றவர் ஒற்றுமைக்கு பாதகம் விளைவிப்பது போன்ற செயல்களைச் செய்பவர்கள் சமூகத்திற்கு அளப்பரிய கேடுகள் விளைவிக்கிறார்கள்.
பல நேரங்களில் அவர்கள் அப்படியெல்லாம் செய்ய உண்மையான காரணம் நேரம் போகாமையே. உப்புசப்பில்லாத வாழ்க்கையில் சில நிமிட பரபரப்பிற்காக இப்படி அறிந்தே தவறுகள் செய்யத் தூண்டினாலும் விளைவுகள் அந்த சில நிமிடங்களையும் தாண்டி பல காலம் பலரைப் பாதிக்கிறது என்பதால் அது மிகப்பெரிய தவறு என்பதை அவர்கள் உணர மறந்து விடுகிறார்கள்.
அடுத்தது அறியாமல் தூண்டுவது. நம்முடைய செயல்கள் யார் யாரை எந்த அளவு பாதிக்கின்றன என்ற பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொள்வது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். நாகரிகம் என்ற பெயரில் ஆபாச ஆடைகள் அணிந்து வலம் வரும் பெண்கள் பலர் மனதில் பல வக்கிரங்களை உருவாக்கி விடுகிறார்கள். அப்படி உருவாகும் வக்கிரங்கள் யார் யாரிடம் எப்படி எல்லாம் நடக்கத் தூண்டும், யாரெல்லாம் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான எண்ணங்களை எழுதுகிற, ஊக்குவிக்கிற எழுத்தாளர்களையும், பதிவர்களையும் கூட இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போல் பேச்சாளர்கள், அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் கூட அந்த நேரத்திற்குப் பிரபலமாக வேண்டும் என்றும் பலர் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காகவும் கைத்தட்டலுக்காகவும் காரசாரமாகப் பேசி எத்தனையோ மனங்களில் விஷத்தைத் தடவி விடுகிறார்கள். அதன் விளைவுகளின் பிரம்மாண்டத்தை உணர அவர்கள் தவறி விடுகிறார்கள்.
அறிந்தும், அறியாமலும் செய்யும் இது போன்ற தூண்டுதல்களுக்கு இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். தவறுகள் செய்யாமல் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. மற்றவர்களைத் தவறுகள் செய்யத் தூண்டாமல் இருப்பதும் மிக முக்கியம். விஷ விதைகளை விதைப்பது சுலபம். ஆனால் உருவாகும் விருட்சங்களை அழிப்பது சுலபமல்ல. விருட்சங்களை அழிக்க சக்தி இல்லாதவர்கள் விதைகளையும் விதைக்காமல் இருப்பதே உத்தமம். தங்கள் பாவக்கணக்கை கூட்டாமல் இருப்பதே நல்லது.
நன்றி: -என்.கணேசன் – ஈழ நேசன்