Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2011
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 26,095 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை ரசம்

‘சௌத் இண்டியன் சூப்பர் சூப்!’- இது, நம்ம ஊர் ரசத்துக்கு வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர். நாக்கின் ருசி நரம்புகளைத் தூண்டி, சாப்பிடும் அனுபவத்தை ஆனந்தமாக்குவதால்தான், நம்முடைய சாப்பாட்டில் ரசத்துக்கு ஸ்பெஷல் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். அத்தகைய ரசத்தை, இங்கே 30 விதமாக சமைத்து திக்குமுக்காட வைக்கிறார் சமையல் கலை நிபுணர் .

”இளநீர் ரசம், ஆப்பிள் ரசம், மாங்காய் ரசம் என வித்தியாசமான ரசங்களுடன், குடும்ப ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் வகையில் மருத்துவ குணம்மிக்க இஞ்சி ரசம், ஓமவள்ளி ரசம், திப்பிலி ரசம் போன்றவற்றையும் தந்திருக்கிறேன்” என்ற சமையல் கலை நிபுணர் சொல்லும் முக்கியமான டிப்ஸ் –

”பொங்கி வரும்போதே ரசத்தை இறக்கிவிடவேண்டும். அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது.” உங்களுக்காக 30 வகை ரசத்தையும், அழகுற அலங்கரித்து இங்கே பரிமாறுகிறார் செஃப் !

கொட்டு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் – 2 கப், ரசப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தேவையானவை: தனியா – 300 கிராம், மிளகு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், சீரகம் – 25 கிராம், மஞ்சள்துண்டு – சிறியது, காய்ந்த மிளகாய் – 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்).

செய்முறை: புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
—————————————————————————
முருங்கைப் பிஞ்சு ரசம்

தேவையானவை: முருங்கைப் பிஞ்சு (நறுக்கியது) – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், தக்காளி – 2, மிளகு – சீரகத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, தக்காளி, முருங்கைப் பிஞ்சு ஆகியவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, உப்பு, மிளகு – சீரகத்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
———————————————————————————–
வெங்காய ரசம்

தேவையானவை: தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், தக்காளி – 2, நறுக்கிய வெங்காயம் – கால் கப், புளித் தண்ணீர் – 2 கப், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை தூவவும் .
——————————————————————————–
கொத்தமல்லி ரசம்

தேவையானவை: தக்காளி – 3, தனியா – 2 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, கொத்தமல்லியுடன் தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பெருங்காயம் தேவை இல்லை.
——————————————————————————-
கறிவேப்பிலை ரசம்

தேவையானவை: கறிவேப்பிலை – ஒரு கப், துவரம்பருப்பு – 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், புளி – ஒரு சிறிய உருண்டை,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், நெய் – சிறிதளவு, கடுகு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
————————————————————————–
பொரித்த ரசம் – 1

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – 2 கப், தக்காளி – 2, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

அரைக்க: துவரம்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, மிளகு – ஒரு டீஸ்பூன் (சிறிது நெய்யில் வறுக்கவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்).

செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். (அல்லது பருப்பு, தக்காளி துண்டுகளை ஒன்றாக வேக வைத்து மசிக்கவும்). இதில் தேவையான அளவு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.
—————————————————————————
பொரித்த ரசம் – 2

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் – 2 கப், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு – ஒரு கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து…. கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.
—————————————————————
திப்பிலி ரசம்

தேவையானவை: கண்ட திப்பிலி – 10 கிராம், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கடுகு – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு திப்பிலியை வறுக்கவும். கீழே இறக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும் காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை இதில் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கரைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும் .
————————————————————————-
ஒப்பட்டு ரசம்

தேவையானவை: வேக வைத்த கடலைப்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – 3 டேபிள்ஸ்பூன், புளித் தண்ணீர் – 2 கப், ரசப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாக அரைத்து, வாணலியிலில் சேர்த்து கிளறிக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பருப்புக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.
————————————————————-
ஆப்பிள் ரசம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) – அரை கப், தக்காளி துண்டுகள் – கால் கப், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: துவரம்பருப்பு – இரண்டு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள் ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்). பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது,

மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெ யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும்.
——————————————————————————
துவரம்பருப்பு ரசம்

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – 2 கப், தக்காளி சாறு – அரை கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – மிளகு – மிளகாய் அரைத்த பொடி – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.
———————————————————————-
கிள்ளு மிளகாய் ரசம்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 2, கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், புளித் தண்ணீர் – 2 கப், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு.

செய்முறை: புளித் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவிட்டு… உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாயை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.
————————————————————————-
மைசூர் ரசம்

தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு – அரை கப், தக்காளி – 6, வெல்லம் – சிறிய துண்டு, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நெய்யில் கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும் (சீரகத்தை வறுக்க வேண்டாம்). மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்து வைத்திருப்பவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தக்காளி சாறு, வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் இவற்றுடன் அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
————————————————————————
மிளகு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் – 2 கப், மிளகு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் புளித் தண்ணீரை விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து புளிவாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.
——————————————————————————-
மாங்காய் ரசம்

தேவையானவை: மாங்காய் துருவல் – அரை கப், துவரம்பருப்பு, மிளகு – தலா 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, தக்காளி சாறு – கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.
—————————————————————————–
அரைத்து விட்ட வேப்பம்பூ ரசம்

தேவையானவை: காய்ந்த வேப்பம்பூ – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று, புளித் தண்ணீர் – 2 கப், கடுகு, நெய் (அ) எண்ணெய், உப்பு – தேவையான அளவு. வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கும்போது, தக்காளியையும் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். நெய் அல்லது எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
————————————————————————–
திடீர் ரசம்

தேவையானவை: புளி – எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு – 3 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 6 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிவற்றை லேசாக எண்ணெயில் வறுத்து, மிக்ஸியில் பவுடராக செய்து கொள்ளவும். இதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற் றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் இந்தப் பொடியை போட்டு, தேவையான தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சட்டென்று செய்யக் கூடியது இந்த ரசம்.
—————————————————————————-
டொமேட்டோ ப்யூரி ரசம்

தேவையானவை: டொமேட்டோ ப்யூரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு கப்,

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், ரசப்பொடி – 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: டொமேட்டோ ப்யூரியில் தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு ரசப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.
—————————————————————————–
தனியா ரசம்

தேவையானவை: தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தக்காளி – கால் கிலோ, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வறுத்து அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும்.
——————————————————————–
பார்லி ரசம்

தேவையானவை: பார்லி – ஒரு கப், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு – அரை கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பார்லியில் 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் இந்த தண்ணீருடன் தக்காளி சாறு, மிளகு – சீரகப் பொடி, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
——————————————————————————–
மோர் ரசம்

தேவையானவை: மோர் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், வெந்தயம், கடுகு – தலா அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: துவரம்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து, சீரகத்தை சேர்த்து அரைக்கவும். மோரில் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்) கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
——————————————————————————–
புளி இல்லாத ரசம்

தேவையானவை: தக்காளி சாறு – 2 கப், வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – அரை கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (நீள வாக்கில் கீறியது) – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : உளுத்தம்பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். தக்காளி சாறு, பருப்புத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்த பொடியையும் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கீழே இறக்கி, எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
——————————————————————————-
புதினா ரசம்

தேவையானவை: புதினா இலைகள் – ஒரு கப், மிள காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி சாறு (அ) புளித் தண்ணீர் – 2 கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும் இந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு அல்லது புளி தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
————————————————————————
இஞ்சி ரசம்

தேவையானவை: இஞ்சித் துருவல் – கால் கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு – 2 கப், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சித் துருவலுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, தக்காளி சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
—————————————————————————–
இளநீர் ரசம்

தேவையானவை: இளநீர் – 2 கப், தக்காளி சாறு – அரை கப், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், இளநீர் வழுக்கை – கால் கப், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும்.
————————————————————————–
ஸ்பெஷல் எலுமிச்சை ரசம்

தேவையானவை: தக்காளி – 3, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், கடுகு, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும் இதனுடன் தேவையான தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
————————————————————————-
அரைத்துவிட்ட பூண்டு ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தனியா – 4 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 10, புளித் தண்ணீர் – 2 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையானஅளவு.

செய்முறை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
——————————————————————————–
ஓமவள்ளி ரசம்

தேவையானவை: ஓமவள்ளி இலை – 5, சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், தக்காளி சாறு – 2 கப், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.
——————————————————————————-
ஸ்பெஷல் பூண்டு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் – 2 கப், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், தக்காளி – ஒன்று, கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் துவரம்பருப்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வதக்கி கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் தக்காளி துண்டுகளை வேகவிடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
——————————————————————————
உருண்டை ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், கடலைப்பருப்பு – கால் கப், புளித் தண்ணீர் – 2 கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்து ஆவியில் வேக விடவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, புளி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த விழுதை இதில் சேர்த்து, உப்பு போடவும். ஆவியில் வேக வைத்து எடுத்த பருப்பு கலவையிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ரசத்தில் போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

——————————————————————————

நன்றி: பெட்டகம் பிளாக்ஸ்பாட்.காம்