Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,564 முறை படிக்கப்பட்டுள்ளது!

பெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்

ஆயிரத்து எண்ணூறு வரை பெரியம்மை நோய் ஒரு கொடிய உயிர் கொல்லி நோயாகவும், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இருந்து வந்தது. முகம், கை, கால்களில் இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அருவருப்பான தழும்புகளைப் பெற்றிருந்தனர். கண்களில் இந்நோய் வந்தால் பார்வை பறி போய்விடும் நிலையும் இருந்தது.

எட்வர்டு ஜென்னர் கி.பி. 1800 இறுதியில் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பெரும்பான்மை மக்கள் இந்நோய்க்கு ஆளாகி வந்தனர்.

எட்வர்டு ஜென்னர் 1749 – ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி என்ற நகரில் பிறந்தார்.  மருத்துவப் பயிற்சி முடித்த இவர் தனது ஊரிலேயே தொழில் செய்து வந்தார்.

பெரியம்மை நோயைக் குணப்படுத்த ஜென்னர் இருபது ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் மூலம் ஏற்கனவே இந்நோய் ஏற்பட்டு பிழைத்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பதையும், மீண்டும் இந்நோய் அவர்களைத் தாக்குவது இல்லை என்பதையும் கண்டறிந்தார்.

1796 – ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் ஜென்னர் அவர்களின் வீட்டிற்குப் பால் கொண்டு வரும் சாரா நீல்ஸ் என்கிற பெண்மணி தனது கையில் மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் லேசாகத் தாக்கியிருப்பதைக் காட்டி இனி தனக்கு பெரியம்மை ஏற்படாது என்று திட்டவட்டமாகக் கூறினார். இது, அக்கால மக்கள் அனுபவப்பூர்வமாகக் கண்டறிந்த உண்மை.

இக்கூற்று ஜென்னரை சிந்திக்க வைத்தது. எனவே மாடுகளுக்கு ஏற்பட்டிருந்த அம்மை நோய் கட்டியிலிருந்து அந்நோய் திரவத்தைப் பிரித்தெடுத்த அவர் அதனை ஜேம்ஸ் பிலிப்ஸ் என்கிற 8 வயது சிறுவனின் கையில் லேசான சிராய்ப்பு ஏற்படுத்தி அதன் வழி உள்ளே செலுத்தினார். அவனுக்கு கோவசூரி என்னும் அம்மை நோய் ஏற்பட்டது. ஆனால், விரைவில் குணமடைந்தான். தொடர்ந்து அவனது உடலில் பெரியம்மை நோய் திரவத்தைச் செலுத்தினார். அவர் எதிர்பார்த்தது போலவே அவனுக்கு பெரியம்மை நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்பட்டிருந்தது. இதுவே அம்மை குத்துதலாக உருவானது. இவர் தான் கண்டுபிடித்த அம்மை குத்துதலை எவ்வித பயனையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு இலவசமாகவே செய்து வந்தார்.

இவரது சேவையை பாராட்டிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1802 – ஆம் ஆண்டு 10,000 டாலர் பரிசும், மீண்டும் இரண்டு ஆண்டு கழித்து 20,000 டாலர் பரிசும் வழங்கி கௌரவித்தது.

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததன் வாயிலாக மக்களுக்கு அளப்பரிய தொண்டு புரிந்த எட்வர்டு ஜென்னர் 1823 – ஆம் ஆண்டு ஜனவரி 26 – ஆம் தேதி தான் பிறந்த ஊரான பெரிகிலியில் தனது 73 – வது வயதில் மரணமடைந்தார்.

அவரது சிறுவயதில் நடந்த சம்பவங்கள்:

ஒரு பள்ளி விடுதியில் சில நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியது. எங்கிருந்து இந்த நாற்றம் வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக வார்டன் தன் உதவியாளர்களுடன், ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனை நடத்தினார்.

பல அறைகளை நன்றாக ஆராய்ந்த பின்பும் அவரால் நாற்றத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் எட்வர்ட் என்னும் மாணவனின் அறையை அடைந்தனர்.

“ஓ!… இந்த அறையிலிருந்துதான் கெட்ட நாற்றம் வீசுகிறது!” என்று சொல்லிக்கொண்டே வார்டன் அங்கிருந்த கட்டிலிலிருந்து படுக்கையை விலக்கினார். அப்போது அவர் அந்தப் படுக்கைக்குக் கீழே கண்டது என்ன தெரியுமா?

பலவிதமான முட்டைகள், வைக்கோல், இறந்த தவளையின் உடல், எலும்புத் துண்டுகள்… இப்படிப் பல பொருட்கள் அங்கு இருந்தன. அவற்றில் பல பொருட்கள் அழுகி நாறின.

வார்டன் மிகவும் கோபம் கொண்டார். அந்த அறையில் தங்கியிருந்த மாணவன் எட்வர்ட் பயந்து நடுங்கி நின்றான்.
“என்னடா இதெல்லாம்?” வார்டன் அதட்டினார்.

தயங்கித் தயங்கி எட்வர்ட் சொன்னான்:

“இயற்கைக் கண்காட்சி ஒன்றை உருவாக்குவதற்கான பொருட்கள் சார்…

வார்டன் தன் பணியாளரிடம், “இதையெல்லாம் அள்ளி உடனே வெளியே போடு!” என்று உத்தரவிட்டார்.

அப்போதுதான் தலைமை ஆசிரியர் அங்கே வந்தார்.

அவர் எட்வர்டின் அருகே சென்று அன்புடன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். பிறகு வார்டனிடம் சொன்னார்:

“இப்பொருட்களையெல்லாம் வெளியே போட்டுவிடாதீர்கள். இதுபோன்ற இன்னும் பல பொருட்களை எட்வர்ட் சேகரிக்கட்டும். அதையெல்லாம் வைத்து நாம் பள்ளியில் இயற்கை அறிவியல் தொடர்பான கண்காட்சி நடத்தலாம்!’

தலைமை ஆசிரியரின் வார்த்தைகளைக் கேட்டபோது நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தான் எட்வர்ட். சில தினங்களுக்குள் அவன் இன்னும் நிறையப் பொருட்களைச் சேகரித்து பள்ளியில் ஒரு பெரிய கண்காட்சி நடத்தினான்.

குழந்தைப் பருவத்தில் இயற்கையை ஆராய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டிய அந்த மாணவன் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக மாறினான்.

நன்றி: அமுதம்தமிழ்.காம் – புதுவை அறிவியல் இயக்கம்