Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,200 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 4

சரியாகப் படியுங்கள்!

”கற்க கசடற” என்னும் வள்ளுவன் அறிவுரையின் படி எதையும் குறையில்லாமல், சரியாகப் படிப்பது மிக முக்கியம். ஆயிரம் பேரைக் கொல்வான் அரை வைத்தியன் என்பார்கள். எதையும் அரைகுறையாய் கற்றுக் கொள்வதில் அனர்த்தமே விளையும்.

குழந்தை எழுதப் பழக ஆரம்பிக்கும் போது பென்சிலைத் தவறாகப் பிடிப்பது இயல்பு. எழுத்துக்களைத் தவறாக ஒழுங்கற்ற முறையில் எழுதுவதும் இயல்பு. அந்த சமயங்களில் பென்சிலை சரியாகப் பிடிப்பதும், ஒழுங்காக எழுதுவதுமே அதற்குக் கஷ்டமான காரியம். சில முறை முயன்று எனக்கு இதற்கு மேல் முடியாது, எனக்குப் படிப்பே வராது என்று குழந்தை இருந்து விடுவதில்லை. எழுதும் கலையில் தேர்ச்சி பெறும் வரை குழந்தை அப்படித்தான் எழுதும். ஆனால் தொடர்ந்து முயன்று பயிற்சி செய்தால் விரைவில் எழுதக் கற்றுக் கொண்டு விடும். அதன் பிறகு பென்சிலை சரியாகப் பிடிப்பதும் ஒழுங்காக எழுதுவதும் அதற்கு இயல்பான ஒன்றாகி விடும். இனி பென்சிலையும் பேனாவையும் தவறாகப் பிடிப்பதும் எழுத்துக்களைத் தவறாக எழுதுவதும் தான் அந்தக் குழந்தைக்குக் கஷ்டமான காரியம். இதைப் போலத்தான் வாழ்க்கைப் பாடங்களையும் சரியாகப் படிப்பதற்கு ஆரம்ப காலங்களில் புதிய முயற்சிகளும், அதிகப் பயிற்சிகளும் தேவை.

அப்படிச் செய்யாமல் தவறாகவே ஒன்றைப் படித்துக் கொண்டு அதையே சரியென்று நம்பி இருந்து விட்டால் அந்தத் தவறான பாடங்களால் தவறாக எதையும் படிப்பது தான் இயல்பாகி விடும். ஒரு காகிதத்தை நாலாக மடியுங்கள். பின் அந்த காகிதத்தை நாம் அப்படி மடிப்பது தான் சுலபமாக இருக்கும். பல முறை மடித்த பின் அந்தக் காகிதமே அப்படி மடிப்பதற்கு ஏதுவாகத் தான் தானாக மடங்கி நிற்கும். அது போலத் தான் நாம் நம் அனுபவங்களை எடுத்துக் கொள்ளும் விதமும். தவறாகவே எடுத்துக் கொண்டு பழகி விட்டால் பின் தவறாக நம்புவதே இயல்பாகி விடும். அந்த தவறான அஸ்திவாரத்தின் மேல் நாம் எழுப்பும் எல்லாமே தவறுகளாகவே மாறி விடும். நம் வாழ்க்கையையும் அடுத்தவர் வாழ்க்கையையும் நாம் நரகமாக்கி விட முடியும். இன்றைய பெரும்பாலான பிரச்னைகளுக்கு இந்தத் தவறான பாடம் கற்றலே காரணமாக இருக்கிறது என்பது உண்மை.

எதையும் சரியாகப் படிப்பது கஷ்டமான காரியம் இல்லை. உள்ளதை உள்ளபடி பார்த்து, உணர்ந்து முடிவுகளை எட்டுவது முக்கியம். அப்படிப் படிப்பது தான் சரியாகப் படிக்கும் முறை. முதலிலேயே ஒரு அபிப்பிராயத்தை மனதினுள்ளே வைத்துக் கொண்டு பார்த்தால் அதற்குத் தகுந்தது போலத் தான் நாம் படிக்கும் பாடங்கள் இருக்கும். அது தவறாகப் படிக்கும் முறையாகும்.

பெரும்பாலும் இந்தத் தவறான முறையில் தான் மனிதனைப் படிக்கிறோம், சூழ்நிலைகளைப் படிக்கிறோம், மதங்களைப் படிக்கிறோம், ஏன் நம்மையே அப்படித்தான் படிக்கிறோம். அதன் விளைவுகளை நம்மைச் சுற்றியும் பார்த்து குமுறுகிறோம். ஏன் இப்படியெல்லாம் ஆகின்றன? ஏன் இப்படியெல்லாம் இருக்கின்றனர்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றனர்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் மனிதர்களால் சரியாகப் படித்து புரிந்து கொள்ளவில்லை என்பது தான்.

பரிட்சையில் சரியாக மார்க் வாங்க முடியவில்லை என்றால் சரியாகப் படிக்கவில்லை, அந்தப் பரிட்சைக்குத் தேவையான தயார்நிலையில் இருந்திருக்கவில்லை என்று உணர்பவன் அடுத்த பரிட்சைக்கு சரியாகப் படித்துக் கொள்ள முடியும், தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் கேள்வித்தாள் கடினமானது, ஆசிரியர் சரியில்லை, படிக்கும் சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் எடுத்துக் கொண்டால் அந்த மாணவன் தன் பாடத்தைத் தவறாகப் படித்தவனாகிறான். ஒவ்வொரு முறை பரிட்சைக்கும் படித்துத் தயாராவதை விட காரணங்களுடன் தயாராக இருக்கக் கற்றுக் கொள்வான்.

இன்றைய மதக்கலவரங்களுக்குக் காரணம் மனிதர்கள் தங்கள் மதத்தைச் சரியாகப் படிக்காதது தான். எதைக் கடவுள் வாக்காக எடுத்துக் கொள்ளலாம், எதை சைத்தான் வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை சிந்தனா சக்தி கூட இல்லாதது தான்.

ஒரு பையனுக்கு ஒரு நாள் உடல்நிலை சரியில்லை. அவன் புத்தகத்தை எடுத்து படிக்கப் போகிறான், அல்லது விளையாடப் போகிறான். அவன் தந்தை சொல்கிறார் ”பேசாமல் போய் தூங்கு”. அந்தப் பையன் குணமான பின்னும் “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்று சதா தூங்கிக் கொண்டே இருந்தால் அவனை நல்ல பிள்ளை என்று பாராட்டுவோமா? எதை எதனால் சொல்கிறார் என்றறியாமல் கண்மூடித்தனமாக ஒரு அறிவுரையைப் பின்பற்றுவது முட்டாள்தனம் அல்லவா? அதே போல ஒரு காலகட்டத்தில் ஒரு சூழ்நிலையை மனதில் கொண்டு சொல்லப்படும் அறிவுரை எல்லா கால கட்டங்களுக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது. இது போலவே ஒரு மதநூலில் ஒரு வாசகத்தை வைத்து கடவுள் சொல்படி நடக்கிறோம் என்று சொல்வதும் கேலிக் கூத்தே. தங்கள் மதத்தினை சரியாகப் படிக்கவில்லை என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நாம் அதற்கு எத்தனை விலை தர வேண்டி இருக்கிறது, எத்தனை அழிவைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைய 90 சதவீதப் பிரச்னைகளுக்கு மனிதர்கள் சரியாகத் தங்கள் பாடங்களைப் படிக்க தவறுவதே காரணம். மேலோட்டமாகப் படித்து அதில் முழுமையாக அறிந்து கொண்ட நினைப்புடன் இருந்து விடுவதே காரணம். அந்த ஆரம்பத் தவறு அடுத்த தவறுகளுக்கு வழி ஏற்படுகிறது. பின் ஏற்படுவதெல்லாம் அனர்த்தம் தான். எனவே எதையும் சரியாகப் படியுங்கள். திறந்த மனதுடன் படியுங்கள். முன் படித்தவை தவறாக இருந்திருக்கின்றன என்பதை உணரும் பட்சத்தில் உடனடியாகத் திருத்தி சரி செய்து கொள்ளுங்கள். தவறுகளை ஒத்துக் கொள்வதில் கௌரவம் பறி போய் விடும் என்று தவறாக எண்ணாதீர்கள்.

சரியாகப் படிப்பதே சரியாக வழிகாட்டும். சிறப்பாக வழிநடத்தும்.

மேலும் படிப்போம்….

என்.கணேசன் – நன்றி: வல்லமை