Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,477 முறை படிக்கப்பட்டுள்ளது!

உலகை உருக்கும் வெப்ப உயர்வு

“சுட்டால் பொன் சிவக்கும், சுடாமல் கண் சிவந்தேன்” என்று நம் தமிழ் சினிமா பாடல்கள் பண்பலை வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் உலகம் முழுவதும் உள்ள வளிமண்டல விஞ்ஞானிகள் புவி வெப்பம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டிருப்பதை பற்றி பதட்டத்துடனும் பயத்துடனும் விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்து நாடுகளுக்கிடையேயான தட்பவெப்ப மாறுதல்களுக்கான அமைப்பு (Inter Governmental Panel on Climate Change -IPCC) தன்னுடைய நான்காவது அறிக்கையில் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் பிளவு, கடல் நீர் உயர்வதால் கடலோர பகுதிகளில் உண்டாகவிருக்கும் மாற்றங்கள் ஆகியவை பற்றி எச்சரித்துள்ளது. இவைகளின் மூலமாக நம் பூமி எதிர் நோக்கவிருக்கும் பொருளாதார, தட்பவெப்ப, புவியியல் மாற்றங்களை கவலையுடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறைகள் விரிசல் விடவும், உருகவும் ஆரம்பித்து விட்டதால் முதலில் பூமத்தியரேகையின் மேற்பகுதியில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து அவற்றின் பின்விளைவாகக் கீழே ஆப்பிரிக்கா, இந்தியா, ஜப்பான் கடல் மட்டங்களும் உயரும் என ஆய்வறிக்கை கூறுகின்றது. 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 1 மீட்டர் உயர்வதற்கு வாய்ப்புள்ளது என ஐ.பி.சி.சி. அறிக்கை கூறுகின்றது. ஆனால் ஏற்கனவே 1000 சதுர மைல்களுக்கு மேல் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் உருகிவிட்டதாகவும் 0.70 C வெப்பம் அப்பகுதியில் 1971-ஆம் வருடத்தை விட இப்பொழுது உயர்ந்துள்ளதாகவும் ரஷ்ய ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெப்பம் உயர்ந்து விடாமல் தடுக்கும் ஓசோன் படலத்தில் துளைகள் அதிகமாக ஆரம்பித்துள்ளது. ஓசோன் படலத்தை முட்டி தாக்கும் வாயுக்களான கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை சமீபத்தில் கடந்த 20 வருடங்களாக அதிகரித்துள்ளன. இந்த நச்சு வாயுக்களை ஆங்கிலத்தில் “Green House Gases” என்று அழகாக பசுமை நிறத்தில் அழைப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. திடீரென்று லட்சக்கணக்கான டன்கள் உயர்ந்து விட்ட எரிபொருள்களின் உபயோகம், மண்ணுக்குள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கும் நிலக்கரியை அதிகமாகத் தோண்டி மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தியமை, குளிரூட்டிகளின் உபயோகம், சில குறிப்பிட்ட வேளாண் உத்திகள், குறிப்பிட்ட பகுதியில் உண்டான நிலமாற்றங்கள் ஆகியவை நச்சு வாயுக்களின் உயர்வுக்கு காரணமாகும்.

வளர்ந்த நாடுகளின் தொழிற்புரட்சியின் காரணமாக கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவு 35 சதவீதம் உலக அளவில் ஒட்டு மொத்தமாக உயர்ந்துள்ளது. இந்த அளவிற்கான நச்சு வாயுக்களின் வெளியேற்றத்திற்கு 70 சதவிகிதம் அமெரிக்காவே காரணமாக இருப்பதால் ஐ. நா. வில் கியோட்டா அமர்வுக்குப் பின் உலக நாடுகள் அனைத்தும் இவ்விஷயத்தில் ஒன்று சேர்ந்து அமெரிக்காவை மிரட்டி நச்சு வாயு வெளியேற்ற குறைப்பிற்கான செலவில் பெரும் பங்கினை அமெரிக்காவை செலவழிக்க வைத்துள்ளது.

புவி வெப்ப உயர்வினால் விளையும் மிகப்பெரிய பயமுறுத்தும் மாற்றமான கடல் நீர்மட்ட உயர்வு 28 நாடுகளை மிகத்தீவிரமாக பாதிக்கின்றது. நாம் பயப்படுவது போலவே இந்தியாவும் அதில் மிக முக்கியமான நாடாகும். இந்தியாவின் 25 சதவிகித மக்கள் தொகையினர் கடல் பகுதியை ஒட்டி 50 கி. மீ. தூரத்துக்குள் வசித்து வருகின்றனர். வளர்ந்த நாடுகளுக்கிணையாக இந்தியா போட்டியிடுவதற்கு மிகவும் நம்பியிருக்கும் முக்கியத் தொழில் நகரங்களான சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.

ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலப் பகுதிகள் ஏற்கனவே கடல் மட்டத்திற்கு சற்று கீழே அமைந்துள்ளன. ஒருவேளை கடல் நீர் உயர்ந்து அடங்கினால் கடலோர விவசாய நிலப் பகுதிகளில் ஏற்படும் உப்புப் படிவுகளால் வேளாண்மை மற்றும் குடிநீர் உபயோகங்களில் மீளமுடியாத கடுமையான பாதிப்பை ஏற்படும் வாய்ப்புள்ளது.

பெங்களூர் அகிய இந்திய விஞ்ஞானக் கல்வி மையத்தின் வளிமண்டல ஆய்வாளர் து. ஸ்ரீனிவாசன் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் பனிப்பொழிவு குறைய ஆரம்பித்துள்ளதால் இமய மலையில் கங்கை, யமுனா, பிரம்மபுத்திரா ஆகிய மிகபபெரிய நதிகள் உற்பத்தியாகும் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் 21 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் அபாயகரமான எச்சரிக்கையாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருக்கும் புவி வெப்பத்தினால் இயற்கையான மற்றும் நன்மை பயக்கும் சமன்பாடுகளுடன் இருந்த மழை அளவு, மழைக்காலம், குளிர், மிதவெப்ப கால முறைகள் ஆகியவை அசாதரணமாக உயரவும், குறையவும் வாய்ப்புள்ளதாக நிலவியல் மற்றும் வளிமண்டல விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர். எதிர்வரும் 2100 ஆம் ஆண்டுக்குள் தட்ப வெப்ப, கடல் நீர்மட்ட மாற்றங்களை உலகம் சந்தித்தாக வேண்டும் என்று உறுதி செய்கின்றனர்.

வெற்றிகரமான தொழிற் புரட்சிகளின் மூலம் வளர்ந்த வல்லரசு நாடுகள் அதன் பின் விளைவாக வெளியேற்றிய நச்சு வாயுக்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கத்தில் வறுமையை வென்றாக வேண்டும். அடிப்படைத் தேவைகளையும், பாதுகாப்புகளையும், வசதிகளையும் சுயமாகப் பெற்று தன்னிறைவு பெற வேண்டும் என்பது போன்ற கட்டாயங்களில் தொழிற்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் என பூமி உருண்டையின் சமகால சமூகம் வேர்த்து விறுவிறுத்துப் போய் இருக்கின்றது. இந்த நெருக்கடியில் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் யாரைச் சொல்வது, யாரை விடுவது என்று இருட்டுக்குள் எட்டிப் பார்த்து அறிக்கை விடுகின்றார்கள்.

திடீர் திடீரென்று மனித சமூகங்களிடையே தோன்றி மறையும் வறுமை, பசிக்கொடுமைகள், நோய்கள், வேலையின்மை மற்றும் தீவிரவாதம் போன்ற மாற்றங்களையே சமாளிக்க முடியாமல் இருக்கும் போது கடல் கொந்தளிப்பு, பனிப்புயல், எரிமலை சீற்றம், வறட்சி ஆகிய சுற்றுப்புறத் தாக்குதல்களை எப்படி சமாளிக்கப் போகின்றார்கள் நமது 2100-ஆம் வருடத்துப் பேரப்பிள்ளைகள்.

அமைதியான நதியையும், கைகுலுக்கிச் செல்லும் கடலலைகளையும், பிரம்மிக்க வைக்கும் மலைத் தொடர்களையும் நேரில் பார்க்கப் பயந்து தூரத்தில் நின்று கண்களிலும் மனதிலும் பயத்துடன் பார்க்கும் அவலம் நேர்ந்து விடக்கூடாது நம் குழந்தைகளுக்கு.

நன்றி: எஸ். எஸ். பொன்முடி – முத்துக்கமலம்.காம்