Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,334 முறை படிக்கப்பட்டுள்ளது!

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?

 மக்கள் உணர்ச்சி சமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், அணுகுண்டு வீச்சினால் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்த மக்கள், அதைப் பெரிது பண்ணாமல், தங்கள் நாட்டின் மின் தேவையை அணுசக்தி மூலமாகவே பெற முடிவு செய்து, குறுகிய காலத்திலேயே, 25 சதவீதம் வரை நாட்டின் மொத்த உற்பத்தியில் பெறுமளவுக்கு உயர்ந்து, அதன் பலனாக உலகிலேயே பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக திகழ்கிறது. இன்று இந்த நாட்டில் கூட, அணுசக்தியை எதிர்த்து முழக்கங்கள் எழுந்துள்ளன. இது மிகவும் துர்ப்பாக்கியமானது; ஏனெனில், உண்மைக்குப் புறம்பான துர்ப்பிரசாரங்களால் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 கூடங்குளம், புக்குஷிமா அணு உலைகள் – ஒரு ஒப்பீடு
அதிநவீனமான, பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வி.வி.ஈ.ஆர்.,ரக அணு உலைகளே கூடங்குளத்தில் நிறுவப்படுகின்றன. புக்குஷிமாவில் விபத்து நடந்த அணு உலைகளோ மிகப் பழமையான, பாதுகாப்பு அமைப்புகள் குறைந்த, பி.டபிள்யு.ஆர்., ரக அணு உலைகள். எனவே, இவையிரண்டையும் ஒப்பிட்டுத் தேவையற்ற, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வகையிலே கூடங்குளத்திலும், ஜப்பானில் நடந்தது போன்ற விபத்துக்கள் ஏற்படும் என்று பிரசாரம் செய்யப்பட்டு, அங்கு சுற்று புறங்களில் வசித்து வரும் மக்களிடையே ஒரு பீதி ஏற்பட்டுள்ளது. தவிரவும், ஜப்பானில் நடந்த அணு விபத்தின் சூழ்நிலைகள், மிகவும் மாறுபட்டவை. ஜப்பான் முழுவதுமே ஒரு பூமி அதிர்வுப் பிரதேசம். நம் தென்னிந்தியப் பகுதியோ, பூமி அதிர்வைப் பொறுத்தவரை ஒரு நிலையான பகுதி. அதற்காக இயற்கையின் சீற்றத்தாலோ அல்லது மனிதனின் கவனக்குறைவாலோ விபத்துக்களே ஏற்படாது என்று பொருளல்ல. நாம் கவனிக்க வேண்டியதெல்லாம், சுனாமி நிகழ்ந்தால், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு அணுமின் நிலையத்தில் தகுந்த பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளனவா என்பதே. விபத்துச் சூழ்நிலையில் அணு உலை தன்னைத் தானே செயலிழக்கச் செய்து கொண்டால் கூட, அதில் கதிரியக்க வெப்பம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். எனவே, இதைச் சமாளிக்கும் வகையில் உலையைக் குளிரூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சுற்றுச் சூழலையும், மக்களின் பாதுகாப்பையும் தலையாயக் கடமையாகக் கருத்தில் கொண்டே சம்பந்தப்பட்ட பொறியியல் வல்லுனர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு பாதுகாப்பு முறைமைகளைக் கொண்ட அணு உலைகளேயே வடிவமைத்திருக்கின்றனர். அணுசக்தித் துறைதான் உலகிலுள்ள தொழில் நுட்பத்துறைகளிலேயே மிகவும் அதிகக் கவனத்தோடு, மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழும் அளவிற்கு பொதுமக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் செயல்பட்டு வருகிறது.ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில், அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் தற்கால தொழில் நுட்பங்களைக் கொண்ட, அதிநவீன வகைப் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டவை, உலையைக் குளிர்விப்பதற்கான சாதனங்கள் எல்லாமே, இரட்டிப்பு செய்யப் பட்டுள்ளன. (ஒன்று பழுதடைந்தாலும், மற்றொன்று வேலை செய்யும்) புவியீர்ப்பு முறையிலே மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்ட நிலையிலும், குளிர்விக்கும் நீரோட்டம் தொடர்ந்து நடைபெறும் வகையிலும், சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் விபத்துக்கள் ஏற்படவே வாய்ப்பில்லை என்று ஒருவராலும் (எந்த ஒரு வாழ்க்கைத் துறையிலும்) அறுதியிட்டுக் கூற முடியாது. அணு உலையைப் பொறுத்த மட்டிலும், விபத்தின் விளைவுகள் மற்றத் தொழில் துறைகளோடு ஒப்பிடும்போது, ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவும், மிகுந்த ஆபத்தான விளைவுகளைக் கொண்ட விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிகக் குறைவாகக் கொண்டதாகவே அமைக்கப் படுகின்றன.அணுமின் நிலையத்தைச் சுற்றிலும், 30 கி.மீ., தூரத்திற்குள் வசிக்கும் மக்கள் எல்லாரும் விரட்டி அடிக்கப்படுவர் என்று, துர்ப்பிரசாரம் செய்வது நாட்டு நலனில் அக்கறை இல்லாதார் செய்யும் விஷமம். ஒரு பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்க் கொள்ள முடியும் என்பதற்கான, ஒரு ஒத்திகை பார்ப்பது என்பது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப் படுவதாகும். இது வேறு ஒரு துறையிலும் செயல்படுத்தப் படுவதில்லை! இதைப் புரிந்துக் கொள்ளாத வகையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, அச்சுறுத்தும் வண்ணம் அவர்களிடையே ஒரு மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துவது நாகரீகமானதல்ல. நாட்டிற்கு உகந்ததும் அல்ல. இதுபோலவே, மீன்பிடித் தொழிலும் முடங்கிப் போய் விடும் என்று கூறுவதும் அபத்தமானதே. தேசப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, மின் நிலையத்திலிருந்து கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது. (மற்ற இடங்களை போலவே). தமிழகத்திலேயே கல்பாக்கம் அணுமின் நிலையம், 25 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு, இந்த மாநிலத்தை பல ஆண்டுகளாக, மின் பற்றாக் குறையைத் தாக்குப் பிடிக்கத் துணையாய் இருந்து வருகிறது. மாநிலத்திற்குள்ளேயே, ஒரு தலைச் சிறந்த உதாரணத்தை வைத்துக் கொண்டே, தவறான வழியிலே பொதுமக்களைத் திசை திருப்புவது நாட்டு நலனின் அக்கறை உள்ளோர் செய்யும் காரியமல்ல.

 அணுசக்தித் துறையின் சிறந்த செயல்பாட்டுவரலாறு
புக்குஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்தில், கதிர்வீச்சினால் ஒருவருமே இறக்க வில்லை. சுனாமித் தாக்குதலினாலும், அதையொட்டிய ஏனைய காரணங்களாலும், பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர் என்பது தான் உண்மை. குறிப்பாக ஒருவருமே பன்னாட்டுக் கதிர்வீச்சித் தற்காப்புக் குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டுள்ள கதிர்வீச்சு உச்ச அளவைப் பெறவில்லை. இவ்வுண்மைகள் நம்புவதற்கே கடினமாக இருந்தாலும், உண்மைகளைப் புறக்கணிக்கவோ, திரித்து பேசவோ கூடாது என்பதுதானே முறை?மேலும், நம் நாட்டிலே சில கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலே கரையோரங்களில் படிந்துள்ள தோரியம் கனிமம் காரணமாக அணு உலைகளில் வேலை செய்யும் இடங்களிலுள்ள கதிர்வீச்சளவைக் காட்டிலும், அதிகமான அளவிலே சுற்றுச் சூழலில் கதிர்வீச்சு காணப்படுகிறது. இவ்விடங்களில் மக்களும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்குக் கதிர்வீச்சினால் உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறதா என்பதை திருவனந்தப்புரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற மண்டலப் புற்று நோய் ஆராய்ச்சி மையம், கண்டறிந்து வருகிறது. 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணித்து வந்த போதிலும், இதுவரை திட்டவட்டமாக கதிர்வீச்சு விளைவுகளைப் பதிவு செய்ய முடியவில்லை. சீனாவிலும் இம்மாதிரியே ஆய்வுகள் கூறுகின்றன. கூடங்குளம் அருகிலேயே மணவாளக்குறிச்சியில் அதிகக் கதிர்வீச்சுக் கொண்டச் சுற்றுச் சூழல் உண்டு. இங்கு கடற்கரையை ஒட்டி வாழும் மக்களைக் காட்டிலும், குறைவான அளவிலேயே கூடங்குளத்தைச் சுற்றிலுமுள்ளவர், அணுமின் நிலையம் செயல்படும்போது, கதிர்வீச்சுப் பெற வாய்ப்பிருக்கிறது. இடிந்தகரை கிராமத்திலேயே கூட சில இடங்களில் இயற்கையாகவே கதிர்வீச்சு அதிகமாக உள்ளது என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இம்மாதிரியான உண்மைச் செய்திகளை மக்களுக்குத் தெரியப் படுத்தி, அவர்களின் மனோபாவங்களை செப்பனிட வேண்டியது, அரசின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.தவிர, 40 ஆண்டுகளாக, 20 அணு உலைகளுக்கும் மேலாக இந்நாட்டில், ஒரு கதிர்வீச்சு விபத்தும் ஏற்படா வண்ணம், அணுசக்தித் துறை இயங்கி வந்திருக்கிறது என்பதனையும் மறக்கலாகாது. ஆக, இயற்கைப் பேரிடர் பற்றி மட்டிலுமே நாம் கவலைக் கொண்டு அதை முடிந்த அளவு எதிர் கொள்ளும் வகையிலே நம் செயல்பாடுகள் அமைய வேண்டும். இம்மாதிரியான நெறிமுறைகள் கூடங்குளம் அணு உலைகளில் கடை பிடிக்கப் பட்டுள்ளன என்பதை, நம் அணுமின் சக்திக் கழகம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறது. எனவே, பொது மக்கள் அச்சமுறத் தேவையே இல்லை.

 மக்களின் நம்பிக்கையைப் பெற அரசின் வெளிப்படை இயக்கம் தேவை
இன்று நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம், அரசின் வெளிப்படை இல்லாத செயல்பாடுகளே. பிரச்னைகள் பூதாகாரமாக உருவெடுத்த பின்னரே அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முன்வருகிறது. (உதாரணமாக, புக்குஷிமா விபத்து நடந்து, சில நாட்கள் வரை அது ஒரு சாதாரணமானதுதான் என்றும் ஒன்றும், கவலை கொள்ளத் தேவையில்லை என்ற ரீதியில்தான் செய்திகள் அறிவிக்கப்பட்டு வந்தன) கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கி வைப்பதில், மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் இதுவரை சரியாகத் தெரிவிக்கப் படவில்லை. இந்நாட்டின் முன்னேற்றத்தில் விருப்பமில்லாத அயல்நாட்டவரின் மறைமுகச் செயலாக இருக்கலாமோ என்று, சந்தேகிப்பதற்குக் கூட இடமுண்டு. 40 ஆண்டுகளாகக் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு துறையில், நம்மைத் தரம் தாழ்த்துவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு இடம் கொடுப்பது விவேகமல்ல. நினைத்தால் இழுத்து மூடி, பின் நினைத்தவுடன் செயல்படுத்தும் தொழில் நுட்பமுமல்ல. அதே சமயம் அரசும் திரும்பத் திரும்பத் தன்னிச்சையாகத் தொடங்கும் தேதியைத் தெரிவிப்பதும், பின் ஒருவிதக் காரணமும் காட்டாது தள்ளிப் போடுவதும் மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும். இம்மாதிரியான செய்திகளில் உண்மை நிலையை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுவதுதான், ஒரு அரசின் வெளிப்படை இயக்கத்திற்கு உதாரணம்.

 மக்கள், “தராசு நிலைப்பாட்டுடன்’ இருப்பது அவசியம்
கூடங்குளத்தைச் சுற்றிலும் வாழ் மக்கள், இப்போது எடுத்துக் கொண்டுள்ள நிலைப்பாடும் ஏற்புடையது அல்ல. ஜப்பானிலும், அவ்வப்போது அணுமின் உற்பத்திக்கு எதிராக, முழக்கங்கள் எழுந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், செயல்படுத்துவதில்தான் எவ்வளவு வேறுபாடு!நம் நாட்டில் வரலாறு வழியாகப் பெற்ற ஒரு நடைமுறை, தனிப்பட்ட ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் ஒரு கருவியாகக் போய்விட்டது. பொதுமக்களைத் தூண்டிவிடுவதென்பது மிக எளிதாக நடந்து விடுகிறது. சீரான சிந்தனையற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதுதான் சுதந்திரம் என்று தப்புக் கணக்குப் போடப் படுகிறது. உண்மையான நன்மை – தீமைகள், லாப – நஷ்டங்கள் என்னென்ன என்று சிந்தித்துப் பார்ப்பதுதான் அறிவுப் பூர்வமான முறை. இது எல்லாத் தொழில் நுட்பங்களுக்கும் பொருந்தும். திருவள்ளுவரும் இதைத் தானே கூறுகிறார்: “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான் றோர்க்கு அணி’ (குறள்118)கூடங்குளம் அணு உலையைப் பொறுத்த மட்டில், எல்லாப் பாதுகாப்பு நெறிமுறைகளும் செயல் படுத்தப் பட்டிருக்கின்றனவா என்று அரசைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வது, மக்களின் உரிமை. அவசியமும் கூட. ஆனால், முற்றிலுமாகக் கட்டி முடிக்கப்பட்ட நிலையத்தைத் தொடங்க விடாமல் தடுப்பது எவ்விதத்தில் நியாயம்? அதுவும் கோடானக் கோடி பொருட் செலவு செய்துள்ள நிலையிலும், தற்போது, மின்வெட்டினால் மக்கள் அவதியுற்று வரும் நிலையிலும், இவ்வெதிர்ப்பு இயக்கம் வரவேற்கத் தக்கதல்ல. கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் மூலம் கிடைக்கக் கூடிய வாழ்க்கை தர உயர்வைக் கருத்தில் கொண்டு, அறிவியல் ஆதாரமற்ற விபத்தையும், அதன் பின்விளைவுகளைப் பற்றிய வீணான கற்பனைகளையும் உதறி விடவேண்டும்.

 அணுசக்தி பற்றிய பயம் ஒரு மனநிலையே
அணுசக்தி பற்றிய ஒரு பயம் ஏற்படக் காரணமாக அமைந்தது, ஜப்பான் நாட்டின் மீது வீசப் பட்ட அணுகுண்டின் விளைவுகளே. இது துரதிருஷ்டவசமாக நடந்த ஒன்று. அணு உலை செயல்பாட்டை அணுகுண்டு வெடிப்புடன் ஒப்பிடுவது அறிவியல் உண்மைக்கு முற்றிலும் மாறானது. இதை ஏற்றுக் கொள்ள ஏனோ பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் தயங்குகின்றனர். தற்காலத்திய அணு உலைகளில் நிறுவப்பட்டு வரும் பாதுகாப்பு நுட்பங்கள், பல ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப் பட்ட புக்குஷிமா, செர்னோபில் அணு உலைகளைவிட, பல படிகள் உயர்ந்தவை. இவை விபத்து ஏற்படக் கூடிய செயல்பாடும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதிலேயே கருத்தாயிருக்க வேண்டும். அதிக மின் உற்பத்தி மூலமே இது சாத்தியம். இதை அடைவதற்கு உண்டான எல்லா முற்சிகளையுமே நாம் மேற்கொள்ள வேண்டும். எல்லாத் துறைகளிலுமே சிறிதளவேனும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கையில் அணுமின் உற்பத்தித் துறையில் இது மிக மிகக் குறைவே.

 நிவாரணங்களுக்கு சீரான தீர்வு வழிகள்
அரசின் செயற்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்திய அணுசக்திப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது அணுசக்தித் துறையினின்றும் சுதந்திரமாகச் செயல்படும் வண்ணம் சீர்திருத்தங்களும் கொண்டுவரப் பட்டுள்ளன. எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ மேற்கூறப்பட்ட ஆணையத்தின் ஆணை மூலமாக ஏற்படும் பாதிப்புகளைக் களைந்தெடுத்துக் கொள்ள உதவியாக ஒரு மேல்முறையீடு ஆணையமும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறான வழிமுறைகளையே, மக்கள் தங்கள் பயங்களைப் போக்கிக் கொள்ளப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாது, தெரு நிலைப் போராட்டமாக ஆக்கிவிடக் கூடாது.எனவே, சீரான சிந்தனைகளுடன் இரு தரப்பினரும் செயல்பட்டு, கூடிய சீக்கிரமே தமிழகத்திற்கும், ஏனைய இந்தியப் பகுதிகளுக்கும் அதிக அளவு மின்சாரம் கிடைத்து, நாடு முன்னேற்றப் பாதையில் துரிதமாகச் செல்லும் என்று எதிர் பார்ப்போம். கூடங்குளம் அணுமின் நிலையம் நமக்குக் கிடைத்த ஒரு வரமே தவிர சாபமல்ல!

 கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் பயன்கள்
இதுவரை கூடங்குளம் பகுதி, மிகவும் பின்தங்கிய, சரியான போக்குவரத்துக் கூட இல்லாத பகுதியாகத்தான் இருந்தது. இன்று சகல உள்கட்டு வசதிகளைப் பெற்றிருக்கிறது. மின் உற்பத்தி ஆரம்பித்தவுடன் இப்பகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதிற்குமான மின்தேவை வெகுவாகப் பூர்த்தி செய்யப்படும். அதன் மூலம் வாழ்க்கைத் தரம் பல்வேறு விதங்களில் உயரும். தொழிற்சாலைகள் பெருகும். 2000 மெ.வா., அளவு மின் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளும் இந்த சந்தர்ப்பத்தை இழப்பது, நம் கால்களில் நாமே கல்லைக் கட்டிக் கொண்டு, நம் முன்னேற்றத்தைத் தடை செய்து கொள்வதாகும். இதுவரை தொடர்ந்து, நாம் மின்வெட்டினால் அவதிப் பட்டு வந்தது போதாதா?

 – முனைவர் ம.ரா.ஐயர், முனைவர் க.ச.வ.நம்பி

 (கட்டுரையாளர்கள் இருவருமே மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி நிறைவு பெற்றவர்கள். இவர்கள் அணுக்கதிர் வீச்சுப் பாதுகாப்புமற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு பற்றிய துறைகளுக்குத் தலைவர்களாக இருந்தனர். தொடர்பு கொள்ள: iyermr2007 at gmail.com; ksvnambi at yahoo.com)