Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,324 முறை படிக்கப்பட்டுள்ளது!

திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி!

திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி – ஒரு வரலாற்றுப் பார்வை!

முன்னுரை

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்.

அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன.

பொதுவான தமிழ் இலக்கியத்திற்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும் இடையிலான வேறுபாடே, இஸ்லாமிய வேலியைத் தாண்டாமலும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மற்ற மொழிகளுக்குச் சற்றும் சளைக்காமலும் தொண்டாற்றுவது தான். இதுவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் கொடையாகும்.

ஒரு சமூகத்தின் நம்பிக்கையை, கலாசாரத்தை, அதன் வழிபாட்டு முறையை, வாழ்க்கைச் சக்கரத்தை கலை நயத்தோடு வெளிப்படுத்துவதே இலக்கியம் ஆகும்.

இஸ்லாமிய இலக்கியம் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை, கலாசாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

இதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், சமூக, பொருளாதார, குடும்ப, தனிமனித ஒழுக்கங்கள் தான் வழிகாட்ட முடியும். இவற்றைத் தாய்மொழியில் அறிந்து அசைபோட இஸ்லாமிய மூலாதார நூல்களே துணை நிற்கும்.

இந்த வகையில், அரபி மொழியில் உள்ள திருக்குர்ஆன், நபிமொழி, சட்டம், வரலாறு உள்ளிட்ட அடிப்படை நூல்கள் தமிழில் இருந்தால்தான், அரபி மொழி அறியாத தமிழ் அறிஞர்கள் அவற்றை அறிந்து, இலக்கியப் படைப்புகளில் கையாள முடியும். தவிரவும், பொதுமக்களும் படித்துணர்ந்து பின்பற்றி வாழ முடியும்.

திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

அதையடுத்து திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, சட்ட நூல், வரலாறு ஆகிய மூலாதார நூல்கள் படிப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது.

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்

பெரும்பாலான உலக மொழிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் சிரியாக் (சுர்யானீ) மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. ஏழாம் நூற் றாண்டின் துவக்கத்தில்) முஸ்லிமல்லாத ஒருவரால் சிரியாக் மொழியில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டது. அடுத்து பெர்பரீஸ் மொழியிலும், அதை யடுத்து பாரசீக மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்திய மொழிகளில் உருது, ஹிந்தி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலை யாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி

தமிழில் முதன் முறையாகத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நாடறிந்த மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள்.

1876ஆம் ஆண்டு பிறந்த மௌலானா அவர்கள், 1906ல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றார். பாக்கியாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்களது காலத்தில் அங்கு சேர்ந்த மாணவர்களில் முதல் அணியில் மௌலானா அவர்களும் ஒருவர் என்பது சிறப்புக் குரியது.

1929ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான ‘அல்பகரா’ அத்தியாயத்திற்கு மட்டும் விரிவுரையுடன் மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள். பின்னர் முழுக் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட எண்ணி, வேலூர் பாக்கியாத்தில் நான்கு மாதங்கள் தங்கி, அங்குள்ள பெரிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று ‘தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்’ என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு முழுமையான மொழிபெயர்ப்பு வெளி யிட்டார்கள்.

திருமக்காவில் உள்ள ‘ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமீ’ எனும் உலக முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்று, சஊதி அரசின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட சிறப்பு இந்த மொழிபெயர்ப் புக்கு உண்டு. இந்த முதலாவது மொழிபெயர்ப்பு இதுவரை சுமார் 25 பதிப்புகளில் வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கது. அன்று இனிய தமிழில், எளிய நடையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு என்ற சிறப்பு இதற்கு உண்டு.

2. ஜான் டிரஸ்ட்

அடுத்து சென்னை டாக்டர் எஸ். முஹம்மத் ஜான் அவர்களால் 1983ல் ‘குர்ஆன் மஜீத்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஜான் டிரஸ்ட் இந்த மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.

ஆங்கிலத்தில் வெளிவந்த யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, கம்பம் மௌலவி, ஸதக்கத்துல்லாஹ் பாகவி, எம். அப்துல் வஹ்ஹாப் M.A. Bth ஆகியோரின் ஒத்துழைப் பால் இந்த மொழிபெயர்ப்பு வெளியானது. இதுவரை இது 20 பதிப்புகளில் வெளிவந்துள்ளது.

3. அஹ்மதிய்யா மொழிபெயர்ப்பு

‘திருக்குர்ஆன் (அரபி மூலத்துடன் தமிழாக் கம்)’ என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு இங்கிலாந்து ‘இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தில் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வெளியானது.

இது அஹ்மதிய்யா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் எழுதிய ‘தஃப்சீர் ஸஃகீர்’ எனும் உர்து விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டு மௌலவி, முஹம்மத் அலி என்பவரால் எழுதப்பட்டது.

4. திரீயெம் பிரிண்டர்ஸ்

‘குர்ஆன் தர்ஜமா’ என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு திரீயெம் பிரிண்டர்ஸ் நிறுவனத்தாரால் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்று வெளியானது. மௌலானா, M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th மௌலானா, K.A. நிஜாமுத்தீன் மன்பஈ உள்ளிட்ட அறிஞர்களால் இந்த மொழி பெயர்ப்பு எழுதப்பட்டது. இது பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

5. சஊதி மொழிபெயர்ப்பு

சஊதி அரபிய்யா அரசாங்கம் சார்பாக ‘சங்கை மிக்க குர்ஆன்’ எனும் பெயரில் 1992ஆம் ஆண்டு ஒரு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இந்த மொழி பெயர்ப்புப் பணியை மௌலவி, ரி. முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் தலைமையில் இலங்கை மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று மேற்கொண்டது. இது ஓர் இலவச வெளியீடாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

6. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் [IFT]

மௌலானா, சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் உர்து மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் அமைப்பால் 1996ஆம் ஆண்டு ‘திருக்குர்ஆன் (மூலம், தமிழாக்கம், விளக்கவுரை)’ என்ற பெயரில் அழகான தமிழில் திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியானது.

மௌலவி, குத்புத்தீன் அஹ்மத் பாகவி, S. அப்துர் ரஊஃப் பாகவி ஆகியோர் மொழி பெயர்க்க, மௌலவி, M.S. சையித் முஹம்மத் ஃபாஸில் பாகவி, மௌலவி, K.J. மஸ்தான் அலீ பாகவி ஆகியோரின் மேலாய்வில் இந்த மொழிபெயர்ப்பு வெளியானது. இது 15 பதிப்பு களில் வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

சரளமான நடை, நல்ல தமிழ், அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக் கும் முன்னுரை, அடிக்குடிப்பு விளக்கம் ஆகியவற்றால் இந்த மொழிபெயர்ப்புத் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

7. பஷாரத் பப்ளிஷர்ஸ்

சென்னை பஷாரத் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தார் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘தர்ஜமா அல்குர்ஆனில் கரீம்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். இதை திண்டுக்கல் மௌலவி, அ. சிராஜுத்தீன் நூரீ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதில் திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்ற பின்னணி நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.

8. மூன் பப்ளிகேஷன்ஸ்

2002 டிசம்பரில் சென்னை மூன் பப்ளி கேஷன்ஸ் நிறுவனத்தார், ‘திருக்குர்ஆன்’ எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். மௌலவி, பி. ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள் எழுதியுள்ள இந்த மொழிபெயர்ப்பு 400 விளக்கக் குறிப்புகளுடன் அமைந்துள்ளது. ஏராளமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

இவையன்றி திருச்சியிலிருந்து பேராசிரியர், பா. தாவூத் ஷா அவர்கள் எழுதி வெளியிட்ட ஒரு தமிழ் பெயர்ப்பும்  வந்துள்ளது.

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்

திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புடன், வசனங்களுக்கான நீண்ட விளக்கவுரைகள் (தஃப்சீர்) அரபி மொழியில் ஏராளமாக உள்ளன. அவற்றில் தஃப்சீர் தபரீ, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் கபீர், தஃப்சீர் பஹ்ருல் முஹீத், தஃப்சீர் அல்ஜவாஹிர், தஃப்சீர் அல்மனார் ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும். அரபியல்லாத பிற மொழிகளிலும் விரிவுரைகள் வெளிவந்துள்ளன.

தமிழில் திருக்குர்ஆன் விரிவுரைகள் சமீப காலத்தில் தான் வெளிவந்தன. உத்தமபாளையம் மௌலானா, எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்சீரில் குர்ஆனில் மஜீத்’ எனும் பெயரில் தமிழில் திருக்குர்ஆன் விரிவுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்கள்.

‘ரூஹுல் பயான்’ எனும் அரபி விரிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த விரிவுரை 1937ஆம் ஆண்டு தொடங்கி, 1961வரை 7 பாகங்களில் வெளிவந்தது.

அன்வாருல் குர்ஆன்

கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் நிறுவனத்தார் 1955ஆம் ஆண்டு முதல் ‘அன்வாருல் குர்ஆன்’ எனும் தமிழ் விரிவுரையை வெளியிட்டார்கள். தென்காசி மௌலானா, இ.எம். அப்துர் ரஹ்மான் ஃபாஸில் பாகவி அவர்கள் எழுதிய இந்த விரிவுரை, குர்ஆனின் 30 பாகங்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளில் வெளிவந்து நிறைவடைந்தது.

தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்

வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு முதல் ‘தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்’ எனும் பெயரில் திருக்குர்ஆன் விளக்கவுரை ஒன்றை தமிழில் வெளியிட்டுவருகிறது. பாக்கியாத் பேராசிரியர்களைக் கொண்ட குழுவினர் இந்த விரிவுரையை உருவாக்குவதில் ஈடுபட்டுவருகின்றனர்.

கைக்கு அடக்கமான வடிவில் இதுவரை 5 தொகுதிகள் வெளி வந்துள்ளன. கல்லூரி நிர்வாகம் இந்த விளக்கவுரையை முழுமையாக வெளியிடுவதில் தீவிர அக்கறை காட்டிவருகிறது.

தஃப்சீர் இப்னு கஸீர்

சிரியா நாட்டைச் சேர்ந்த இமாம் இஸ்மாயீல் பின் உமர் பின் கஸீர் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 700-774; கி.பி. 1300-1372) அரபி மொழியில் எழுதிய முதல் தரமான திருக்குர்ஆன் விரிவுரையே ‘தஃப்சீர் இப்னு கஸீர்’ என அறியப்படுகிறது. நான்கு பாகங்களில் வெளிவந்த இந்த விரிவுரையை பேராசிரியர் முஹம்மத் அலீ அஸ்ஸாபூனி அவர்கள் மூன்று பாகங்களில் சுருக்கித் தந்துள்ளார்.

இந்தச் சுருக்கப் பதிப்பைத் தமிழில் கொண்டு வரும் பெரு முயற்சியில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. மொத்தம் எட்டு பாகங்களில் வெளியிடத் திட்டமிட்டு, முதலாவது பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.

வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பல்லாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி தலைமையில் மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று இத்திருப்பணியை மேற்கொண்டுள்ளது.

நபிமொழித் தொகுப்புகள்

இஸ்லாத்தில் திருக்குர்ஆனுக்கு அடுத்த மூலாதாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கும் வாழ்வும் அடங்கிய ஹதீஸ் எனப்படும் நபிமொழிகள்தான். அரபி மொழியில் நூற்றுக்கணக்கான நபிமொழித் தொகுப்புகள் இருந்தும், தமிழில் அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீண்ட காலம் கழிந்து விட்டது. அண்மை காலமாகவே இதில் தமிழ் முஸ்லிம்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

1954ஆம் ஆண்டு உத்தமபாளையம் எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரீ’ என்ற பெயரில் ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பிரதியைத் தமிழில் வெளியிட்டார்கள். இது ஹுசைன் பின் முபாரக் அஸ்ஸுபைதீ (ரஹ்) அவர்கள் அரபி மூலத்தைச் சுருக்கி வெளியிட்ட பிரதியின் தமிழாக்கமாகும்.

இந்தத் தமிழாக்கம் மூன்று பாகங்களில் வெளிவந்தது. 1957ல் மூன்றாவது பாகம் வெளிவந்தது.

அடுத்து 1989ஆம் ஆண்டு ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பதிப்பான ‘முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம்’ தமிழாக்கத்தை மௌலவி, முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் எழுதி, துபை இஸ்லாமிய எழுச்சி மையம் [IAC] வெளியிட்டது.

இந்தச் சுருக்கப் பதிப்பின் அரபி மூலத்தைச் சுருக்கித் தந்தவர் ஹாஃபிள், அப்துல் அழீம் அல் முன்திரீ (ரஹ்) அவர்கள் ஆவார். இவர் ஹிஜ்ரீ 678ஆம் ஆண்டு (கி.பி. 1279) இதைத் தொகுத்து முடித்தார். பின்னர் நாஸிருத்தீன் அல்பானீ அவர்களின் விளக்கக் குறிப்புடன் வெளிவந்தது. இந்தத் தமிழாக்கம் நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டு, இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன.

அடுத்து 1964ஆம் ஆண்டு பிரபல தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தொண்டி எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள், ‘ஹதீஸ் – பெருமானாரின் பொன்மொழிப் பேழை’ எனும் பெயரில் நபிமொழித் தொகுப்புகளின் திரட்டைத் தமிழில் தந்தார்கள். இது மூன்று பாகங்களில் வெளிவந்துள்ளது.

பிரபல நபிமொழித் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ உள்ளிட்ட நூல்களிலிருந்து திரட்டப்பட்ட ஹதீஸ்களின் தமிழாக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.


ஹாஃபிள் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 773 – 852; கி.பி. 1371 – 1448) தொகுத்த ‘புலூஃகுல் மராம்’ எனும் நபிமொழித் தொகுப்பு ஒன்று 1999ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை மௌலவி, அப்துல் காதிர் உமரீ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள். சென்னை இஸ்லாமிய கல்வி வெளியீட்டு நிறுவனத்தார் இந்நூலை வெளியிட்டுள்ளனர். இது ஒரே பாகத்தில் வெளிவந்துள்ளது.

இவையன்றி, உத்தமபாளையம் மௌலானா, றி.ஷி.ரி. முஹம்மது இப்ராஹீம் பாகவி அவர்கள் ‘ஷமாயிலுத் திர்மிதீ’யைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட் ர்கள். அவ்வாறே இமாம் யஹ்யா பின் ஷரஃப் அந்நவவீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 676; கி.பி. 1277) அரபி மொழியில் தொகுத்த ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ எனும் நபிமொழித் தொகுப்பைத் தமிழில் பலர் மொழி பெயர்த்துள்ளனர்.

ஸிஹாஹ் சித்தா

1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ரஹ்மத் அறக்கட்டளை பிரபல நபிமொழித் தொகுப்புகளான புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ ஆகிய ஆறு ஆதாரபூர்வ ஏடுகளை (ஸிஹாஹ் சித்தா) தமிழில் கொண்டு வரும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரு தொகுப்புகளும் முழுமையாக வெளிவந்துள்ளன.

ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் 7 பாகங்களிலும், ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 4 பாகங்களிலும் அரபி மூலம், தமிழாக்கம், அடிக் குறிப்பு விளக்கங்களுடன் ஒவ்வொரு பாகமும் சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டு வெளி வந்துள்ளன. பல பதிப்புகளில் வெளிவந்துகொண்டுள்ளன.
எஞ்சிய நான்கு நபிமொழித் தொகுப்புகளின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக ஏழு ஆலிம்களைக் கொண்ட ஒரு குழு முழுநேரப் பணியைத் தனியான அலுவலகத்தில் மேற்கொண்டுள்ளது.

மார்க்கச் சட்டவியல் (ஃபிக்ஹ்)

ஃபிக்ஹ் எனப்படும் மார்க்கச் சட்டவியல் நூல்கள் அரபியிலும் பிற மொழிகளிலும் நிறைய உள்ளன. தமிழில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

1968ஆம்ஆண்டில் உத்தமபாளையம் மௌலானா, S.S. அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘கன்ஸுத் தகாயிக்’ எனும் அரபி நூலை அதே பெயரில் மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டார்கள். அத்துடன் தஅலீமுல் இஸ்லாம், தொழுகை விளக்கம், ஹாஜிகளின் தோழன், ரமளான் நோன்பு ஆகிய ஃபிக்ஹ் விளக்க நூல்களையும் மௌலானா எழுதியுள்ளார்கள்.

தேவதானப்பட்டி மௌலானா அப்துல்கரீம் நூரீ அவர்கள் ‘ஃபிக்ஹின் கலைக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள். இதை மதுரை குர்ஆனிய்யா புக் டிப்போ வெளியிட்டது.

ஷாஃபிஈ மத்ஹபைப் பொறுத்தவரை, கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை அலிம் சாஹிப் அவர்கள் அரபுத் தமிழில் எழுதிய ‘மஃகானீ’ எனும் நூலை, அண்மையில் கீழக்கரை மௌலவி, டாக்டர் ஷுஐப் ஆலிம் சாஹிப் அவர்கள் அதே பெயரில் தமிழில் எழுதி வெளியிட்டார்கள்.

மௌலவி, ஆதம் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் ‘ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். `பத்ஹுல் முஈன்’ போன்ற அரபி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இரு பாகங்களில் வெளிவந்துள்ளது.

வரலாறு

இஸ்லாமிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளி வந்திருந்தாலும், முழுமையான ஒரு வரலாற்றுத் தொகுப்புத் தமிழில் இல்லாதது பெரும் குறையே. அந்தத் தொகுப்பு ஆதாரபூர்வ வரலாற்று நூலாக இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்.

எகிப்து நாட்டு அறிஞர் முஹம்மத் ரிளா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றை ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற பெயரில் அரபியில் எழுதியுள்ளார். இதை இதே பெயரில் உத்தமபாளையம் மௌலானா, S.S அப்துல்காதிர் பாகவி அவர்கள் 1962ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இரண்டு பாகங்களில் வெளிவந்தது. ஷஹீத் கர்பலா, மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர், வீரசிற்பி உள்ளிட்ட வரலாற்று நூல்களையும் மௌலானா எழுதியுள்ளார்கள்.

இந்தியரான மௌலானா ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி அவர்கள் அரபியில் எழுதிய ‘அர்ரஹீகுல் மக்த்தூம்’ எனும் நபி (ஸல்) அவர்களின் முழு வரலாற்று நூல் பிரபலமான ஒன்று. இதை ‘ரஹீக்’ எனும் பெயிரல் ‘தாருல் ஹுதா’ நிறுவனத்தார் 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டனர்.

இந்நூலை மௌலவி, அ. உமர் ஷரீப் காசிமீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார். இது ஆறு பதிப்புகளில் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் சையித் இப்ராஹீம், எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், ஜமால் முஹம்மத், இலங்கை அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர், எழுத்தாளர் ஹசன், கவிஞர் மு. மேத்தா, வலம்புரிஜான், கவிஞர் பாப்ரியா உள்ளிட்டோர் இஸ்லாமிய வரலாற்று நூல்களைத் தமிழில் எழுதியுள்ளனர்.

முடிவுரை

இவ்வாறு இஸ்லாமிய மூலாதார நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தாலும், உரிய காலத்தில் வெளிவராத குறையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இன்னும் ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டியிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இன்று மொழிபெயர்ப்புக் கலை உன்னத இடத்தைப் பிடித்துள்ளது. அரபி மொழியிலிருந்து தூய்மையான தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் மிகுந்த அறிஞர்களுக்குச் சமுதாயத்தில் பெரிய பஞ்சம் உள்ளது. அரபி மொழி அறிந்தவர்களுக்குத் தூய தமிழ் தெரியவில்லை; தமிழ் அறிஞர் களுக்கு அரபி மொழி தெரியவில்லை.

இந்தக் குறையை நீக்க, மதரசாக்களில் மொழி பெயர்ப்புக்கென தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பிரிவிலிருந்து தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும். மாணவர்களுக்கு மொழிபெயர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனியும் காலத்தின் கட்டாயத்தை உணராமல் ஒதுங்கி வாழ்வது சமயத்துக்கோ சமுதாயத்துக்கோ நல்லதன்று.

தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் எந்த அளவுக்கு அதிகமாக வெளிவருகிறதோ, அந்த அளவுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையும். அல்லாஹ் அருள் புரிவானாக!

அ. முஹம்மது கான் பாகவி