Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,199 முறை படிக்கப்பட்டுள்ளது!

பிழைக்கத் தெரியாதவர்? – சிறுகதை

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த நீலச்சட்டைக்காரரைப் பார்த்த போது சத்யமூர்த்தி போலத் தெரிந்தது. கார் அந்த பஸ் ஸ்டாப்பைக் கடந்து சில அடிகள் முன்னோக்கிச் சென்று விட்டிருந்தாலும் காரை நிறுத்தி ஜெயக்குமார் அந்த மனிதரை உற்றுப் பார்த்தார். சத்யமூர்த்தி தான். மனிதர் வேலையில் இருந்த போது எப்படி இருந்தாரோ பார்க்க அப்படியே தான் இப்போதும் தெரிந்தார். எந்தப் பெரிய முன்னேற்றமும் தெரியவில்லை. ஜெயக்குமார் ஏளனமாக நினைத்துக் கொண்டார். “இப்போது பஸ் பயணம் தானா? இது வரை ஓட்டிக் கொண்டிருந்த பழைய ஸ்கூட்டர் காயலாங்கடைக்குப் போய் விட்டது போல் இருக்கு”

அவரும் சத்யமூர்த்தியும் ஒரே அரசுத் துறையில் இன்ஜினியர்களாக பல வருடங்கள் சேர்ந்து வேலை பார்த்தவர்கள், சம வயதினர்கள், ஒரு மாத இடைவெளியில் ஒரே ஆபிசிலிருந்து ரிடையர் ஆனவர்கள்.  அதனால் தானோ என்னவோ தன்னை அடிக்கடி சத்யமூர்த்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் ஜெயக்குமாருக்கு ஏற்பட்டிருந்தது.

இருவரும் பணம் கொழிக்கும் அரசுத்துறையில் அதிகாரிகளாக இருந்தாலும் சத்யமூர்த்தி பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்து விட்டார். அந்தத் துறையில் சம்பளத்தைத் தவிர ஒரு பைசா அதிகமாக சம்பாதிக்காதவர் அனேகமாக அவர் ஒருவர் தான். அந்தத் துறையில் கையை நீட்டவே வேண்டியிருக்கவில்லை. வேலையாக வேண்டியிருந்தவர்கள் தாங்களாகவே பணமாகவும், பொருளாகவும் கொண்டு வந்து கொட்டினார்கள். அந்தத் துறையில் அனைவரும் சம்பாதித்ததில் அளவில்லை என்றாலும் ஜெயக்குமார் தன் தனி சாமர்த்தியத்தால் மற்றவர்களை விட இரட்டிப்பாக சம்பாதித்து விட்டிருந்தார். ஆனால் திறமையாகவும் கச்சிதமாகமாகவும் வேலை செய்தாலும் சத்யமூர்த்தி மட்டும் கடைசி வரை அப்படி வரும் பணத்தையும், பொருளையும் உறுதியாக மறுக்கிறவராகவே இருந்து விட்டார்.

அந்த நேர்மை ஜெயக்குமாருக்கு முட்டாள்தனமாகவே பட்டது. மற்றவர்களும் சத்யமூர்த்தியைப் பிழைக்கத் தெரியாத மனிதர் என்றே அழைத்தார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் சத்யமூர்த்தி மீது மிகுந்த மரியாதை இருந்தது. மேல் அதிகாரிகள் கூட அவரிடம் ஒரு தனி மரியாதையோடு நடந்து கொண்டனர். அதைக் கவனிக்கும் போதெல்லாம் பணம் வேண்டுமளவு கிடைத்த போதிலும் அந்தத் தனி மரியாதை தனக்குக் கிடைக்கவில்லையே என்ற பொறாமையில் ஜெயக்குமார் வெந்தார். சத்யமூர்த்தி வாய் விட்டு சொல்லா விட்டாலும் எல்லோரிடமிருந்தும் வித்தியாசப்படுவதாலேயே தன்னை உயர்த்திக் கொள்வது போல் அவருக்குத் தோன்றியது. சத்யமூர்த்தியின் முகத்தில் எப்போதும் தெரியும் ஒரு பெருமிதம் கலந்த நிறைவு ஜெயக்குமாருக்கு சகிக்க முடியாததாக இருந்தது.

சத்யமூர்த்தியின் கடைசி வேலை நாள் மாலை நடந்த பிரிவுபசார விருந்தில் அவர்கள் துறை அமைச்சர் நேரில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்ததும் அல்லாமல் அவரை வழியனுப்பி விட்டு மற்றவர்களிடம் சொன்னார். “தங்கமான மனுசன். இந்த மாதிரி ஆளைப் பார்க்கறது கஷ்டம்”. அதை ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்கள் கூட ஒப்புக் கொண்டார்கள்.

ஒரு மனிதனின் பின்னால் கிடைக்கும் பாராட்டு தான் உண்மையான பாராட்டு என்பதை உணர்ந்திருந்த ஜெயக்குமார் அன்று உள்ளூரப் பொருமினார். “என்ன தங்கமான மனுசன்? பிழைக்கத் தெரியாத ஆள் இவன். இத்தனை வருஷம் இங்கே வேலை பார்த்தும் ஒரு கார் கூட வாங்க வக்கில்லாத முட்டாள் இவன். ஒரு ஓட்டை ஸ்கூட்டர்லயே இப்பவும் போறான். என்னவோ இவன் மட்டும் தான் ஒழுங்கு என்கிற மாதிரி நடந்துக்கற ஆளுக்கு ஆமாம்கிற மாதிரி இந்த லூசுங்களும் புகழ் பாடறாங்க”.

சத்யமூர்த்திக்கு அடுத்த மாதம் ரிடையரான ஜெயக்குமார் அந்த அமைச்சரை நேரில் போய் பிரிவுபசார விருந்திற்குக் கூப்பிட்டார். வெளியூரில் கட்சிக் கூட்டம் ஒன்றில் முன்பே பேச ஒத்துக் கொண்டிருப்பதால் வர முடியாது என்று மந்திரி சொன்னது அவரைக் குறைத்தது போல் தோன்றியது. பிரிவுபசார விழா முடிந்து வெளியே வந்த போது தனக்குப் பின்னால் யார் என்ன சொல்வார்கள் என்ற கேள்வி எழ அவருக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. அன்று அவருக்கு மனமே சரியிருக்கவில்லை.

ரிடையரான பின் சொந்தமாய் ஒரு பிசினஸ் ஆரம்பித்து வெற்றிகரமாக வாழ்ந்த அவருக்கு ஏனோ அப்போதும் சத்யமூர்த்தியை அலட்சியப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றிலும் அவ்வப்போது தன்னையும் சத்யமூர்த்தியையும் ஒப்பிட்டுக் கொள்ளாமல் அவருக்கு இருக்க முடியவில்லை. ஒப்பிடும் போதெல்லாம் தான் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை கணக்கிடுகையில் தானே வெற்றியாளன் என்றும், சத்யமூர்த்தி முட்டாள் என்றும் ஜெயக்குமாருக்குத் தோன்றும். ஆனால் சத்யமூர்த்தியோ கடைசி வரை அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. அதை எப்படியாவது அவருக்கு உணர்த்தி, அவர் முகத்தில் தெரியும் பெருமிதம் கலந்த நிறைவை விலக்கி விட வேண்டும் என்று பல முறை ஜெயக்குமாருக்குத் தோன்றி இருக்கிறது.

இன்று பஸ் ஸ்டாப்பில் கூட்டத்தோடு கூட்டமாக பஸ்ஸிற்காக காத்து நிற்கும் சத்யமூர்த்தியைப் பார்க்கும் போது அந்த எண்ணம் வலுப்பட அவர் தன் விலையுயர்ந்த காரைப் பின்னோக்கி செலுத்தி அழைத்தார். ”சத்யமூர்த்தி”

சத்யமூர்த்தி அவரைப் பார்த்து சந்தோஷப்பட்டது போல் தெரிந்தது. காரை நெருங்கியவர் கேட்டார். “ஜெயக்குமார், சௌக்கியமா?”

“ஏதோ இருக்கேன். நீங்க எங்கே போக இங்கே நிக்கறீங்க?”

“வீட்டுக்குப் போகத்தான். 91 ஆம் நம்பர் பஸ்ஸுக்காக நிற்கறேன். நீங்க?”

“நானும் என் வீட்டுக்குத் தான் போய்கிட்டிருக்கேன். நீங்களும் வாங்களேன். பார்த்து பேசி பல காலம் ஆயிடுச்சு…..”

“இல்லை…. 91 இப்ப வந்துடுவான்”

”பக்கத்தில் தான் என் புதிய வீடிருக்கு. வந்து ஒரு அரைமணி நேரம் இருந்துட்டு போங்க.  பிறகு நானே உங்களை வீட்டில் ட்ராப் செய்து விடறேன்”

சத்யமூர்த்தி தயங்கினார். ஜெயக்குமார் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்து காரில் அவரை ஏற்றினார். வெளியே கடுமையான வெயில் இருந்ததால் அந்தக் காரில் ஏறி அமர்ந்த சத்யமூர்த்தி காரினுள் இருந்த ஏ.சி காற்றை நிஜமாகவே ரசித்த மாதிரி இருந்தது.

ஜெயக்குமார் மனதினுள் சொல்லிக் கொண்டார். “இப்பவாவது நீ இழந்தது  என்னவெல்லாம் என்று உணர்ந்து கொள் முட்டாளே. என் வீட்டுக்கு வந்து பார்த்தால் இன்னும் எத்தனையோ புரியும்”

போகும் வழியில் தங்களுடன் வேலை பார்த்தவர்களைப் பற்றி ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். பெரிய பங்களா போல் இருந்த தன் வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கிய போது சத்யமூர்த்தி முகபாவத்தை ஜெயக்குமார் உற்றுப் பார்த்தார். சொந்தமாய் இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் மட்டுமே வைத்திருக்கும் சத்யமூர்த்தி முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

ஜெயக்குமார் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் அவர் மனைவி இருக்கவில்லை.  ”அவளும் என் மூத்த மகனும் ஒரு கல்யாணத்திற்கு பெங்களூர் போயிருக்காங்க. காலைல ஃப்ளைட்ல தான் போனாங்க சின்னவன் இப்ப யூ எஸ்ல எம்பிஏ செய்துகிட்டிருக்கான்” என்று தெரிவித்தார். சத்யமூர்த்தி அப்படியா என்பது போல கேட்டுக் கொண்டார்.

“என்ன சாப்பிடறீங்க? காபி, டீ, ஜூஸ்?”

“ஜூஸே கொடுங்க”

ஒரு பெரிய கண்ணாடி தம்ளரில் ஜூஸும், பெரிய வெள்ளித் தட்டில் முந்திரி பாதாம்களையும் கொண்டு வந்து தந்து விட்டு ஜெயக்குமார் ஏ.சியை ஆன் செய்தார். ”இப்பவெல்லாம் ஏ.சி இல்லாமல் இருக்கவே முடியறதில்லை”

“அதிலேயே இருந்து பழகினதால் தான் அப்படி” என்று சத்யமூர்த்தி ஜூஸ் குடித்தபடியே பொதுவாகச் சொன்னார். பிறகு இரண்டு முந்திரிகளையும், இரண்டு பாதாம்களையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டவர் வெள்ளித் தட்டை சற்று தள்ளி வைத்தார்.

”போன வருஷம் தான் பத்து லட்சம் செலவு செய்து கொஞ்சம் ரெனவேட் செய்தேன். வாங்க வீட்டை சுத்திப் பார்க்கலாம்” என்று சொல்லிய ஜெயக்குமார் சத்யமூர்த்திக்குத் தன் பங்களாவை சுற்றிக் காண்பித்தார்.

சினிமாவில் காண்பிக்கப்படுவது போல இருந்தது அவர் பங்களா. ஒவ்வொரு அழகான வேலைப்பாடும் பணம் பணம் என்றது. ஒவ்வொன்றையும் சத்யமூர்த்தி ரசித்தாலும் அவர் முகத்தில் பொறாமை தெரியாததும், இப்போதும் தான் இழந்ததெல்லாம் என்ன என்று உணராததும்  ஜெயக்குமாருக்கு என்னவோ போலிருந்தது. ஏதோ ஒரு பொதுக்கட்டிட அழகை ரசிக்கும் பயணியினுடையதைப் போல இருந்தது அவர் ரசனை. அதனால் ”நன்றாக இருக்கிறது, அழகாக இருக்கிறது” என்று மனமார அவர் சொன்னதில் ஜெயக்குமாருக்குப் பெருமைப்பட முடியவில்லை.

பிறகு ஜெயக்குமார் சத்யமூர்த்தியைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். “இப்ப உங்க மகன் என்ன செய்யறான்?”

“அவன் சி ஏ முடிச்சுட்டான். தனியா ஆடிட்டிங் ப்ராக்டிஸ் செய்யறான்.”

“நீங்க என்ன செய்யறீங்க? எங்கேயாவது வேலைக்குப் போறீங்களா?”

“பையன் வேண்டாம்கிறான். இத்தனை நாள் எங்களுக்காக உழைச்சது போதும், இனி சும்மா இருங்கன்னு சொல்றான்….”

ஜெயக்குமாருக்கு சுருக்கென்றது. அந்த வார்த்தை அவர் குடும்பத்தினரிடமிருந்து இது வரை வந்ததில்லை.

”….ஆனா எனக்கு சும்மா இருக்க முடியலை. இது நாள் வரைக்கும் குடும்பத்தைத் தவிர வேற யாருக்கும் எதுவும் செய்யாமல் இருந்துட்டேன். இனியாவது நாலு பேருக்காவது உபகாரமாய் இருக்கணும், ஏதாவது செய்யணும்னு இப்ப ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமா டியூசன் எடுக்கறேன்….”

சத்யமூர்த்தி உற்சாகமாக அந்த ஏழை மாணவ மாணவிகளின் முன்னேற்றத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார்.  அவர் சொல்லிக் கொடுத்த ஒரு ஏழை மாணவன் சென்ற வருடம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் மூன்றாவதாய் வந்ததைச் சொல்கிற போது அவர் குரலில் தெரிந்த பெருமிதம் ஒரு தந்தையினுடையதாக இருந்தது.

ஒரு சிறு இடைவெளி கிடைத்த போது ஜெயக்குமார் கேட்டார். “உங்க ஸ்கூட்டர் என்னாச்சு”

“அது ஆறு மாசம் முன்னாடி ரிப்பேர் ஆயிடுச்சு. மெக்கானிக் கிட்ட போனா அவன் இதை சரி செய்ய இதுல எதுவுமே உருப்படியாய் இல்லைன்னு சொல்றான். இவ்வளவு வருஷமா இதை உபயோகிக்கறீங்கன்னு அந்த ஸ்கூட்டர் கம்பெனிக்கு தெரிவிச்சா அவங்க உங்களைக் கூப்பிட்டு கவுரவிச்சாலும் கவுரவிக்கலாம்னு சொல்றான்.” என்று சொல்லி விட்டு சத்யமூர்த்தி கலகலவென்று சிரித்தார்.

அதை மறைக்காமல் சிரித்துக் கொண்டே சொன்னது ஜெயக்குமாருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ”ஏன் நீங்க ஒரு கார் வாங்கலாமே”

” என் மகன் எனக்கு ஒரு கார் வாங்கித் தரணும்னு ரொம்ப நாளா சொல்லிகிட்டே இருந்தான். நான் அவன் கிட்டே சொன்னேன். ‘எனக்கு கார் வேண்டாம்டா. இந்த வயசுக்கு மேல நான் கார்ல எங்கே போகப் போகிறேன். ஸ்டேட் ரேங்க வாங்கின அந்த ஏழைப் பையனைப் படிக்க வைக்க அவன் அப்பாவுக்கு பணமில்லை. பாவம் கூலி வேலை செய்யறவர் அவர். எனக்கு கார் வாங்க செலவு செய்யற பணத்துல அந்தப் பையன் படிக்க உதவி செய். அது போதும்’னேன்… இப்ப அந்தப் பையன் என் மகன் உதவியால படிக்கிறான். நல்லாவே படிக்கறான்….”

சொல்லிக் கொண்டே போன சத்யமூர்த்தியின் முகத்தில் தெரிந்த நிறைவான மகிழ்ச்சியை ஜெயக்குமாரால் ரசிக்க முடியவில்லை. பேச்சை அதிகமாக வளர்த்தாமல் சீக்கிரமாகவே அவரை அவர் வீட்டில் கொண்டு போய் விட்டார். சத்யமூர்த்தி தன் வீட்டுக்குள்ளே வர அவரை அழைத்தார்.

“நேரமாயிடுச்சு. இன்னொரு நாள் வர்றேன்” என்று அவசரமாக அங்கிருந்து ஜெயக்குமார் கிளம்பிய போது அவர் மனதில் ஒரு இனம் புரியாத வெறுமை நிறைந்திருந்தது. சத்யமூர்த்தியிடம் வலியப் போய் பேசாமல் இருந்திருக்கலாம் என்று தோன்ற ஆரம்பித்தது….

நன்றி: – என்.கணேசன்