Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 78,298 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை டயட் சமையல்

30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.

“நாலுபடி ஏறுனதுக்கே இப்படி மூச்சு வாங்குது. ‘வெயிட்டக் குறைங்க, வெயிட்டக் குறைங்க’னு டாக்டர் சொல்றாரு. என்னென்னமோ செஞ்சுப் பாத்துட்டேன்… வெயிட் குறைய மாட்டேங்குது” நம்மில் பலர் இப்படி புலம்பிக் கொண்டும்…

“இவ மட்டும் எப்பப் பார்த்தாலும் ‘சிக்’னு இருக்காளே… என்ன மாயா ஜாலம் பண்றா?” என்று சிலரைப் பார்த்து ஏங்கிக் கொண்டும் இருக்கிறோம்.

உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து மற்றும் சில கெமிக்கல்கள் உடம்பில் தங்கி விடுவதுதான் காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. அதிகப்படியான இந்தச் சத்துக்கள் உடலில் தங்குவதற்குக் காரணம்… நம்முடைய வழக்கமான சாப்பாடு முறைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிசியை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் நாம், தானியங்கள், காய்கறி மற்றும் பழங்களை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை.

‘இந்த ரொட்டீன் சாப்பாட்டு முறையை மாற்றி, தினசரி உணவில் வெரைட்டியான உணவுகளை செய்து சாப்பிட்டால் உடல் பருமன் பிரச்னை வராது’ என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதையெல்லாம் அலசி ஆராயும் சேலம், சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன், ”நெகட்டிவ் கலோரி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். அதாவது, நாம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரியைவிட, அதை எரிப்பதற்காக நம் உடல் செலவிடும் கலோரியின் அளவு இருமடங்காக இருக்கவேண்டும். அதுதான் நெகட்டிவ் கலோரி உணவுப் பொருள். இத்தகைய நெகட்டிவ் கலோரி உணவு ரெசிபி என்னிடம் ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றைச் சாப்பிட்டே, 4 மாதத்தில் 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்” என்று தன்னுடைய அனுபவத்தைச் சொல்வதோடு, அத்தகைய உணவுகளில் 30 வகையை இங்கே உங்களுக்காக சமைத்துக் காண்பித்திருக்கிறார்.

“தினசரி உணவில் இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் சேர்த்து வாருங்கள், உடல் எடையில் மாற்றம் காண்பீர்கள். ‘சிக்’கென்று இருப்பவர்களிடம், அந்த ரகசியத்தைக் கேட்டுப் பாருங்கள் நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்” என உறுதியாகச் சொல்கிறார் கதிரவன்.
ஜஸ்ட் ட்ரை… ஹெவ் எ ஹெல்தி லைஃப்!

———————————————————————————————-


முட்டைகோஸ் சூப்
தேவையானவை: முட்டைகோஸ் – கால் கிலோ, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கால் மணிநேரம் கொதிக்க விடவும். வாசம் வந்ததும், இறக்கி வடிகட்டி, மிதமான சூட்டில் பரிமாறவும்.

குறிப்பு: காலையில் தினமும் வெறும் வயிற்றில் பருகி வர, உடல் கொழுப்பு கரையும்.

———————————————————————————————————

ஃப்ரூட்ஸ் அடை

தேவையானவை: அரிசி – ஒரு கப், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், அன்னாசி – ஒரு கப், திராட்சைப்பழம் – ஒரு கப், கடலைப்பருப்பு – 100 கிராம். உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித் தனியாக ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய ஆப்பிள், அன்னாசியையும் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். இதை தோசைக்கல்லில் அடை களாக வார்த்து, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்க… வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்.

குறிப்பு: அடை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய லைட்டான டிபன் இது!

—————————————————————————————-

பழ பாயசம்

தேவையானவை: ஆரஞ்சு (உரித்து கொட்டை நீக்கியது) – 1, நறுக்கிய அன்னாசி – 2 துண்டுகள், மாதுளை முத்துக்கள் – கால் கப், நறுக்கிய சிறிய கொய்யா – 1, திராட்சை – 20, பால் – ஒரு கப், சுகர் ஃப்ரீ சர்க்கரை – தேவையான அளவு, சேமியா – 100 கிராம்.

செய்முறை: பழங்களை நன்கு கழுவிக் கொள்ளவும். அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜுஸ§டன் காய்ச்சி ஆற வைத்த பால், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து தனியே வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதித்ததும் சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, ஜூஸ§டன் சேர்த்து நன்கு கலந்தால், பழ பாயசம் ரெடி!

குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள் ஸ்வீட் சாப்பிட ஆசைப்படும்போது குறைந்த கலோரிகள் உள்ள இதனைச் செய்து சாப்பிடலாம்.

—————————————————————————————————

கம்பு ரொட்டி

தேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், பச்சை மிளகாய் – 4, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கம்பு மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை வார்த்து, கனமான ரொட்டிகளாக சுட்டெடுக்கவும். சுட்ட ரொட்டிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மீண்டும் வதக்கி, கம்பு ரொட்டித் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: காலை நேர டிபனுக்கு உகந்தது. அதிக நேரம் பசி தாங்கும் என்பதால் நொறுக்ஸ் சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

—————————————————————————————————–

பட்டாணி கேரட் அடை

தேவையானவை: பட்டாணி – கால் கிலோ, மெல்லியதாக நறுக்கிய கேரட் – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, நறுக்கிய கொத்தமல்லி – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பட்டாணியை ஊற வைத்துக் கழுவி மிக்ஸியில் நன்கு அரைக்கவும். அந்த மாவில்… நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலக்கவும். அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: பட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.

———————————————————————————

பருப்புக் கூட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 1, குடமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம் – அரை டீஸ்பூன், பூண்டு – 4 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைக்கவும். ஊற வைத்த பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பாத்திரத்தில் போட்டு நன்கு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். தக்காளி வெந்து கரைந்ததும், வேக வைத்த பருப்பைச் சேர்க்கவும். எல்லாம் கலந்து வாசனை வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சாதம், சப்பாத்திக்கு சரியான ஜோடி. புரோட்டீன் சத்து நிறைந்தது. தினமும் துவரம்பருப்பு சாம்பார் செய்வதற்கு சிறந்த மாற்று முறைக் கூட்டு.

—————————————————————————————-

மிளகு தானிய சூப்

தேவையானவை: ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – ஒரு டீஸ்பூன், பிரியாணி இலை – 2, வெங்காயம் – 2, நறுக்கிய கேரட் – கால் கப், சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது பசியைத் தூண்டும். வயிறு மந்தம் சம்பந்தபட்ட பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இதை அருந்தலாம்.

——————————————————————-

காய்கறி உப்புமா

தேவையானவை: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், தக்காளி – 2, வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் (நறுக்கியது) – 2, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, சீரகம் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி போட்டுக் கலந்து, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து அரை பதத்தில் வேக விடவும். இந்தக் காய்கறி கலவையுடன் வறுத்த ரவையைச் சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால், தண்ணீர் விட்டு வேக விடவும். இறக்குவதற்கு முன், தயிர் சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: அனைத்து சத்துகளும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் டிபன் இது! அதிக கலோரி இல்லாததால் டயட்டுக்கும் சத்துக்கும் உகந்தது.

———————————————————————

தினை மாவு அடை

தேவையானவை: தினை மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), கடுகு-சிறிதளவு, வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுந்து – தலா கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை: கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைக்கவும். கழுவி, நன்கு அரைத்து, தினை மாவுடன் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, அதை அடை மாவில் கொட்டிக் கலக்கவும். தேங்காய் துருவல். உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்த மாவை, தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: இந்த அடை நிறைய நேரம் பசி தாங்கும். அனைத்துவிதமான சத்துக்களும் இதில் அடங்கியிருப்பதால் ஊட்டச் சத்து மிக்க சிறந்த பலகாரம்.

———————————————————

பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு

தேவையானவை: பச்சைப் பட்டாணி – ஒரு கப், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவர் – ஒரு கப், வெங்காயம் – 1, தக்காளி – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை தனித்தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த பட்டாணி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளதால் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்.

——————————————————————

கொண்டைக்கடலை மசாலா

தேவையானவை: கொண்டைக்கடலை – 200 கிராம், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா 2, சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் – முக்கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும். நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள நல்ல சைட் டிஷ். இதை, காலை நேரத்தில் சாப்பிடுவது உடல் வலுப்பெற உதவும்.

————————————————————————–

புளிப்பு இனிப்பு காளான்

தேவையானவை: காளான் – அரை கப், நன்கு கழுவி நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ், காலிஃப்ளவர், உரித்த பட்டாணி கலவை – அரை கப், வெங்காயம் – 1, தக்காளி சாஸ், சர்க்கரை – தேவையான அளவு, கரம் மசாலா – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுடுநீரில் காளானைக் கழுவி, தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறி மற்றும் பட்டாணிக் கலவையை வேக வைத்து, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். காளான் தண்டை நீக்கிவிட்டு, அரைத்த விழுதை அந்த இடத்தில் வைத்து ஸ்டஃப் செய்யவும். தக்காளி சாஸ§டன் சர்க்கரையைக் கலந்து கொள்ளவும். ஸ்டஃப் செய்த காளன் மேல் தக்காளி சாஸைத் தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வறுத்து, சாஸ் தடவிய காளனையும் போட்டு மென்மையாக வதக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், அனைத்து விட்டமின்களும், தாது சத்துக்களும் நிறைந்த இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைக் கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வரும்.

————————————————————————

முளைகட்டிய தானிய சப்பாத்தி

தேவையானவை: பாசிப்பருப்பு, கம்பு, ராகி, கொண்டைக்கடலை – தலா ஒரு கப், மைதா – கால் கிலோ, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தானியங்கள் அனைத்தையும் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊற வைத்துக் கழுவி, தனித்தனியாக ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில், அவை நன்றாக முளை விட்டிருக்கும். முளைகட்டிய தானியங்களை ஒன்றாகக் கலந்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவை சிறு கிண்ணம் போல் உருட்டி அதில் அரைத்த தானியக் கலவையை கொஞ்சமாக உள்ளே வைத்து, சப்பாத்திக் கல்லில் மெதுவாக உருட்டவும். தேய்த்த பரோட்டாக்களை தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டெடுக்கவும்.

குறிப்பு: முளைகட்டிய தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் ஒருங்கே கிடைக்கும். இதனை காலை, இரவு நேர டிபனாக அடிக்கடி சாப்பிட்டு வர… சத்துக் குறைபாடுகள் நீங்கி, உற்சாகமாக இருக்க வைக்கும்.

வாழைப்பூ அடை

தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப், அரிசி – ஒரு கப், உளுந்து – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப் வெங்காயம் – 3, கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்து, கடலைப்பருப்பைத் தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பத்தத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: வாழைப்பூ வடை, அதிக எண்ணெய் இழுக்கும். ஆனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த அடை, ஆரோக்கியமான உணவாகும். அதிக நேரம் பசி தாங்கும்.

————————————————-

பார்லி  மசாலா சாதம்

தேவையானவை: பார்லி, பீன்ஸ் – தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி – தலா 2, பட்டை, கிராம்பு – தலா 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பார்லி, பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, இஞ்சி- பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தாளித்துக் கொள்ளவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கியதும், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும் வரை வதக்கவும். வேக வைத்த பார்லி, பீன்ஸை சேர்த்து நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: பார்லியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது; உடல் பருமனை குறைக்கும். பார்லியை வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் இவ்வாறு செய்து சாப்பிட… சுவையாக இருக்கும்.

——————————————

சௌசௌ தர்பூசணி தோல் துவையல்

தேவையானவை: சௌசௌ தோல், தர்பூசணி தோல் கலவை – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சௌசௌ, தர்பூசணி தோலை நன்கு கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுக்கவும். கழுவிய காய்கறித் தோல், உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

குறிப்பு: காய்கறிகளின் தோலின் அடிப்புறத்தில்தான் அதிகமான விட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றை நாம் சீவி, எறிந்து விடுவதால், முழுமையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இவ்வாறு துவையல் செய்து சாப்பிடுவதால் அந்தச் சத்துக்கள் கிடைக்கும். தோல் துவையலின் சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

———————————————————

உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு

தேவையானவை: உருளைக்கிழங்கு – கால் கிலோ, கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 2, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கழுவிக் கொள்ளவும். கடலைப்பருப்பைக் கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும். பிறகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, அது நன்கு கரையும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், வேக வைத்தவற்றைச் சேர்த்துக் கலந்து மிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு: சாதம், சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். காலை, மதிய நேரங்களில் இதைச் சாப்பிடுவதே உகந்தது.

———————————————————————-

மக்காச்சோள ரொட்டி

தேவையானவை: சோள மாவு – ஒரு கப் (பெரிய மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காதிகிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்), மைதா மாவு – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை. பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ளவும். சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: மக்காச்சோளத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. ஆனால், உடல் எடை குறைப்புக்கு இது அதிகம் உதவும் என்பதால்தான், கார்ன்ஃப்ளேக்ஸ்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இப்படி ரொட்டி செய்து சாப்பிடும்போது மக்காச்சோளத்தின் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

————————————————————————

வீட் எனர்ஷி டிரிங்க்

தேவையானவை: கோதுமை, பாசிப்பருப்பு – தலா 100 கிராம், சின்ன வெங்காயம் – 5, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், கொத்தமல்லி – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை, பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனைக் கழுவி, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, வெந்த கோதுமை-பாசிப்பருப்பை வெளியே எடுக்கவும். இதை ஆற வைத்து, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: கோதுமையை வழக்கமான முறையில் இல்லாமல் இப்படி வித்தியாசமாக செய்து சாப்பிடும்போது, அதிலுள்ள முழுச் சத்தும் கிடைக்கிறது. மற்ற பானங்களைவிட, இது அதிக நேரம் பசி தாங்கும்.

—————————————————-

துவரம்பருப்பு சூப்

தேவையானவை: துவரம்பருப்பு – 100 கிராம், இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு, கொத்துமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 1.

செய்முறை: துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும். வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறும்.

குறிப்பு: பசியைத் தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் சாப்பிடலாம்.

——————————————————

வெஜ்  ஃபிஷ்  ஃப்ரை

தேவையானவை: நன்கு கழுவி, நீளமாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – ஒரு கப், மைதா, கோதுமை மாவு – தலா கால் கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில், எண்ணெய் விட்டு நறுக்கிய காய்களைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியதும், மைதா, கோது மாவை அதில் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, காய்கறி கலந்த மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே, மீன் வடிவத்தில் உருட்டவும். இதனை, தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள், இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன் மூலம் அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும்.

—————————————————-

கீரை  கோஃப்தா கறி

தேவையானவை: ஆய்ந்து, நன்கு அலசி, நறுக்கிய கீரை – ஒரு கட்டு, பனீர் (துருவியது) – 100 கிராம், உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, முந்திரி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், வெங்காய விழுது – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தயிர் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கீரையை வேக வைக்கவும். துருவிய பனீர், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு அதில் கீரை உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயில், எண்ணெய் விட்டு அதில் முந்திரி பேஸ்ட், வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி தயிர் சேர்த்துக் கலக்கவும். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை சேர்த்து வதக்கி, எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: அதிக கலோரியும் சத்தும் நிறைந்த இந்த உணவை எப்போதாவது ஒருமுறை செய்து உண்ணலாம். இதை உண்ட பிறகு, அடுத்த வேளை உண்ணும் உணவு லைட்டாக இருத்தல் நலம்.

———————————————–

கீரை ரொட்டி

தேவையானவை: அரிசி மாவு – கால் கிலோ, ஆய்ந்த கீரை – ஒரு கப், வெங்காயம் – 1, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஆய்ந்த கீரையையும் வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு, மைதா, நறுக்கிய கீரை, வெங்காயம், உப்புடன் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அவற்றை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: கீரையை எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், இதே போல் செய்து சாப்பிடலாம். காலை, மாலை டிபனுக்கு உகந்த உணவு!

————————————————–

மிக்ஸட் ரொட்டி காய்கறி சட்னி

தேவையானவை: சோயா மாவு, மைதா மாவு, கம்பு மாவு, சோள மாவு – தலா 100 கிராம், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிஃப்ளவர் கலவை – ஒரு கப், இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 3 பல், காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா மாவையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். சிறிது நேரம் கழித்து ரொட்டிகளாக சப்பாத்திக் கல்லில் தேய்க்கவும், ரொட்டிகளை தவாவில் இட்டு, எண்ணெய் விடாமல் சுட்டு எடுத்தால், பலவித சத்துக்கள் நிறைந்த மாவுகள் கொண்ட மிக்ஸட் ரொட்டி தயார்.

கடாயில் எண்ணெய் விட்டு, கொடுத்துள்ள காய்கறிகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ஆற வைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை மிக்ஸட் ரொட்டிக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

குறிப்பு: இந்த காம்பினேஷனில் அனைத்து விட்டமின்களும் சத்துக்களும் சரியாகக் கலந்துள்ளன. டயட்டில் இருப்பவர்கள், சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும்.

———————————————————

நூல்கோல் சப்பாத்தி

தேவையானவை: நன்கு கழுவி மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் – ஒரு கப், கோதுமை மாவு – அரை கிலோ, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நூல்கோலை வேக வைக்கவும். கோதுமை மாவில் உப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து, ஈரத் துணியால் 15 நிமிடம் மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேக வைத்த நூல்கோல் சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் சுருள வதக்கவும். பிசைந்த மாவில் கொஞ்சம் எடுத்து கிண்ணம் போல் செய்து, அதற்குள் வதக்கிய நூல்கோலை கொஞ்சம் வைத்து சப்பாத்திகளாக தேய்த்து, கல்லில் போட்டு எண்ணெய் விடாமல் சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: நூல்கோல் காயை அதிகம் விரும்பிச் சாப்பிடாதவர்கள், இதேபோல் செய்து சாப்பிடலாம். உடல் எடையைக் குறைப்பதில் நூல்கோலுக்கு முக்கிய இடம் உண்டு.

———————————————–

நவரத்தின புலாவ்

தேவையானவை: சாமை அரிசி (பெரிய மளிகைக் கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் காதி கிராஃப்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் – தலா 1, நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், பீன்ஸ் கலவை – ஒரு கப், இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுத்தம் செய்த சாமை அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த சாமை அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து, இதனுடன் சேர்க்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து மூடவும். மிதமான தீயில் வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை வதக்கவும். குக்கரில் ஆவி போனதும், மூடியைத் திறந்து வதக்கிய காய்கறிகளை சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

குறிப்பு: பாசுமதி அரிசியில் செய்யப்படும் புலாவுக்கு இணையான சுவையுடன் கூடிய இந்த புலாவ், குறைந்த கலோரிகளில் அதிக சத்து நிறைந்தது.

———————————————————————-

கலர்ஃபுல் புட்டு

தேவையானவை: அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் துருவல், கேரட் துருவல், ஆய்ந்து நறுக்கிய கீரை – தலா அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு புட்டு மாவு பதத்தில் பிசறிக் கொள்ளவும். புட்டுக்குழாயில் பிசறிய அரிசி மாவை முதலில் வைத்து, அதன் மேல் தேங்காய் துருவலை வைக்கவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவுடன் கேரட்டை சேர்த்துக் கலந்து வைக்கவும். அதன் மேல் தேங்காய் துருவலைத் தூவவும். அடுத்த அடுக்கில் அரிசி மாவில் போட்டுப் பிசறிய கீரையை வைக்கவும். அதன்மேல் கொஞ்சம் தேங்காய்த் துருவலை தூவவும். இதனை ஆவியில் வேக வைத்து, வெந்ததும் கம்பியால் புட்டை வெளியே எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: கார்போஹைட்ரேட், விட்டமின், தாது உப்புக்கள் அதிகம் அடங்கிய, எண்ணெய் கலக்காத உணவு இது. எளிதில் ஜீரணமாகக் கூடியது என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

————————————————————-

தர்பூசணி மசாலா

தேவையானவை: தர்பூசணி – கால் கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 2, பட்டை, கிராம்பு – தலா 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, தேன் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த வெங்காயம்-தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், நறுக்கிய தர்பூசணியைச் சேர்த்துக் கலந்து, வெந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன், தேன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: தர்பூசணியை பழமாக மட்டும் சாப்பிடாமல், இப்படி மசாலாவாகவும் செய்து சாப்பிடலாம். தேன் கலப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

———————————————————————-

முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை: பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கம்பு, கொள்ளு கலவை – ஒரு கப், எலுமிச்சம் பழம் – 1, வெங்காயம் – 1, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எல்லா பயறுகளையும் தண்ணீரில் ஊற வைக்கவும். அவற்றைக் கழுவி, முதல் நாள் இரவே ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் அவை முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயிர்களுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: புரோட்டீன், விட்டமின் சத்து நிறைந்த, கொழுப்பு சத்து இல்லாத இயற்கை வழி உணவு. காலை, மாலை நேர உணவாக இதை சாப்பிடலாம். நொறுக்குத் தீனி அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை உபாதை ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், இதை சாப்பிடலாம்.

——————————————————

பாகற்காய் அல்வா

தேவையானவை: பாகற்காய் – கால் கிலோ, காய்ச்சிய பால் – ஒரு கப், முந்திரி, உலர்ந்த திராட்சை – தலா 10, சுகர் ஃப்ரீ சர்க்கரை, நெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாகற்காயை மெல்லியதாக நறுக்கி, கொட்டை நீக்கி கழுவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து வேக விடவும். நன்கு வெந்தவுடன் வடிகட்டவும் (வடிகட்டிய நீரை சூப்பாகப் பயன்படுத்தலாம்). வெந்த பாகற்காயுடன் பால் சேர்த்து மீண்டும் குழைய வேக வைக்கவும். பாகற்காயும் பாலும் ஒன்றாகக் கலந்து நன்கு சுண்டியவுடன், சுகர் ஃப்ரீ சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

குறிப்பு: பாகற்காயின் கசப்புக்கு அஞ்சி அதனைத் தொடாதவர்களுக்கு இப்படி செய்து கொடுக்கலாம். கசப்புத் தன்மையுள்ள காய்கறிகள் கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டவை.

நன்றி:- சேர்வராய்ஸ் கேட்டரிங் கல்லூரி முதல்வர் கா.கதிரவன்

நன்றி:-அ.வி