Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 28,238 முறை படிக்கப்பட்டுள்ளது!

தங்கம், வெள்ளி, முத்து, பவளம்,வைரம் ஓர் அலசல்!

ஆபரணங்கள்… சீர், பிறந்த வீட்டின் பெருமை சொல்லும் அடையாளம், ஸ்டேட்டஸ் சிம்பல், சென்ட்டிமென்ட், அன்பு பரிசின் நினவுச் சின்னம், அழகு என்று நம் கலாசாரத்திலும், வாழ்விலும் நம் கூடவே ஒட்டி உறவாடும் உலோக உறவுகள் என்று சொன்னால், அது மிகையில்லை!

தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற்றில் நம் பயன்பாடுகளின் பட்டியலும் நம் வசதி, பொருளாதாரம் காரணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங்களில் ஆபத்பாந்தவனாக கைகொடுத்துக் காப்பாற்றுவதுகூட இந்த நகைகள்தான். இன்னொருபுறம், இந்த ஆபரணங்களுக்காக பணம் செலவழிப்பது சிறந்த முதலீடாகவும் இருக்கிறது. இப்படி வாழ்க்கை முழுக்க நம் கூட வரும் இந்த நகைகளை எப்படிப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டும், பாராமரிக்க வேண்டும் என்று உங்களுக்கு குறிப்பு சொல்கிறது இந்தப் புத்தகம்.

தங்கத்தின் தரம் நிரந்தரமாக இருக்க..!

விண்ணைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை. இருந்தும் கிராமில் தொடங்கி கிலோக்கள் வரை அனைவரும் பொருளாதார நிலைக்கேற்ப தங்கம் சேர்க்கத்தான் விழைகின்றனர். தங்க நகைகளை வாங்கும்போது, அதன் தரத்தை உறுதி செய்வதற்காக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? ஜஸ்ட் ஹேவ் எ லுக்!

1. தங்கத்தின் தூய்மையில்தான் அதன் தரம் இருக்கிறது. இந்தத் தூய்மையின் சதவிகிதத்தை குறிக்கிறது ‘டச்’ அளவீடு. 24 கேரட் தூய தங்கம் என்பது 100 டச்.

2. தூய்மையான தங்கத்தில் (100 டச்) நகைகள் செய்ய முடியாது. அதனுடன் செம்பு சேர்த்து, 22 கேரட்டில்தான் செய்வார்கள். அதாவது அதிகபட்சம் 91 அல்லது 92 டச் வரை.

3. அடிக்கடி விளம்பரங்களில் கேட்கும் வார்த்தை ‘916’ கோல்ட். அப்படி என்றால்…? ‘916’ என்பது மேலே சொன்ன ’22 கேரட்’ தங்க நகைகளைக் குறிக்கும் அடையாளச் சொல். 91.6% தூய்மையான தங்கம் என்பதுதான் இதன் அர்த்தம்.

4. பொதுவாக ‘916’, ’22’ கேரட் என்ற குறியீடுகள் ’90 டச்’ வரையுள்ள தங்க நகைகளைக் குறிக்கும் அடையாள வார்த்தை. ‘916 கே.டி.எம்’, ‘916 ஹால்மார்க்’ என்ற குறியீடுகள் ’92 டச்’ தரத்தைக் குறிக்கும் அடையாள வார்த்தை. ’92 டச்’தான் நகைகளுக்கான உச்சபட்ச தரம்!

5. ‘கே.டி.எம்’ நகைகள் என்பது, செம்புக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு வகை பொடியைக் குறிக்கும் சொல். இந்த ‘கே.டி.எம்’ பொடியை பயன்படுத்தி நகையை வார்க்கும்போது, அதன் பெரும் பகுதி காற்றில் கரைந்து விடுவதால், அது நகையுடன் குறைந்த அளவே கலக்கும்; அதனால் ஒரு நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு.

6. ‘ஹால்மார்க்’ எனப்படுவது தரத்தை நிர்ணயிக்கும் முத்திரை! இந்த முத்திரை, ஒரு நகையில் ’92 டச்’ தூய தங்கம் இருக்கிறது என்பதை உறுதிசெய்யும்.

7. பொதுவாக, தங்க நகைகளில் இந்த ’22 கேரட்’, ‘916’, ‘ஹால்மார்க் முத்திரை’ போன்றவை பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றை வைத்துதான் நகையின் தரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் வாங்கும்போது இந்த அடையாளங்கள் குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து விடுங்கள்.

8. ’22 கேரட்’, ‘கே.டி.எம்’ போன்ற குறியீட்டு வார்த்தைகளை, நகை தயாரிக்கும் யாரும் பொறித்து விடமுடியும் என்பதால், ஜாக்கிரதை.

9. ‘ஹால்மார்க்’ முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. ‘ஹால்மார்க்’ என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகைகள் நம்பிக்கைக்கு உரியன என்கிறார்கள், இத்துறையில் உள்ள நிபுணர்கள்.

நகையை மாற்றுகிறீர்களா..?

ஏற்கெனவே நம்மிடம் உள்ள பழைய நகையை நகைக் கடையில் விலைக்கு கொடுத்துவிட்டு புது நகை வாங்குவது, அல்லது அந்த நகையை உருக்கி, புது நகை செய்வது போன்றவை நம்மிடம் நிலவும் பழக்கங்கள். அப்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

10. பொதுவாக, ஒரு மாடல் தங்க நகையை அழித்துவிட்டு, வேறு மாடல் நகையை செய்யும்போது நஷ்டம் ஏற்படும்தான். ஏனெனில், தங்கத்துடன் கலந்திருக்கும் செம்பு, நகையை உருக்கும்போது வேஸ்ட்டாகி விடும். அதைத்தான் ‘கழிவு’ என்கிறார்கள்.

11. அவ்வப்போது வருகிற டிசைனை அப்டேட் செய்து போட வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்கள், ‘ஹால்மார்க்’ நகைகளை வாங்கி, விருப்பப்படும்போது மாற்றிக் கொள்ளலாம்.

12. எல்லா கடைகளிலும் ஹால்மார்க் நகைகளை, அன்றைய சந்தை மதிப்பின்படி எடுத்துக் கொள்வார்கள். கழிவும் குறைவு.

13. எந்த ஊரில், எங்கு நகை வாங்கினாலும் பில், கியாரண்டி கார்டுகளைப் பத்திரப்படுத்துங்கள். சமயத்துக்கு அது உதவும்… எல்லா வகையிலும்.

14. நகையை மாற்றிவிட்டு புதிய நகை எடுக்க நினைப்பவர்கள், முன்பு அந்த நகையை வாங்கிய அதே கடையில் அதைச் செய்வதுதான் சரியான முடிவு. ஏனென்றால், அங்குதான் சரியான மதிப்பிலான தொகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

15. நகையை விற்றுவிட்டு பணமாகப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. வேறு நகைகளை வாங்கிக் கொள்ளச் சொல்லித்தான் வலியுறுத்துவார்கள். அதேசமயம், வாங்கிய கடையிலேயே கொடுக்கும்போது பணமாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கிராமுக்கு 8-10 ரூபாய் வீதம் கழித்துவிட்டு, மீதத் தொகையை கணக்கிட்டு பணம் தருவார்கள்.

16. ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளை வாங்கும்போது, எந்தக் கடையில் வாங்குவது என்ற சரியான முடிவில்தான் அதன் தரம் உள்ளது. நல்ல கடைகளைத் தேர்வு செய்வது முக்கியம். கட்டாயம் ‘பில்’களைப் பத்திரப்படுத்தவும்.

17. கவரிங் நகைகளில் கூட ’22 கேரட்’, ‘கே.டி.எம்’ முத்திரைகளைப் பொறித்து ஏமாற்றி விற்பவர்களும் உண்டு. சரி, எப்படிக் கண்டுபிடிப்பது அதன் தரத்தை..? தங்கத்தை கண்டறிய சிறந்த வழி… உரை கல்லில் உரசப்பட்ட தங்கத்தில், நைட்ரிக் அமிலத்தை லேசாக வைக்கும்போது… அது மின்னி நுரைத்தால், நல்ல தங்கம். பச்சையாக நுரைத்து வந்தால்… சந்தேகமே இல்லாமல் கவரிங்!

தங்க ஆபரணங்களைப் பாதுகாக்க..!

ஆபரணங்கள் புதிதாக வாங்கியபோது இருந்த பொலிவு, எப்போதும் நீடித்திருக்க, அதற்கான பராமரிப்பை நாம் கொடுத்தாக வேண்டும். அதற்கு…

18. தங்க நகைகளை அணிந்து, கழற்றி வைக்கும்போது, சோப்பு நுரையில் நன்கு அலசி, மென்மையான காட்டன் துணியில் துடைத்து பத்திரப்படுத்தி வைத்தால் எப்போதும் பொலிவுடன் இருக்கும்.

19. அதேபோல, அதிக நாட்கள் நகைப் பெட்டியில் வைத்த நகைகள் செம்மை நிறம் படிந்தோ… பச்சை நிறம் படிந்தோ காட்சி அளிக்கலாம். அதை, பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே அணியாமல், சோப் நுரையில் அலசி அணிந்தால், ‘புத்தம் புது மலரே’ என பொலிவாக இருக்கும்.

20. அன்றாட பயன்பாட்டுக்கு எப்போதும் போட்டிருக்கும் வளையல், கம்மல் போன்ற நகைகள் பாலிஷ் மங்கி காணப்படும். அவற்றை உடனடியாக பளபளக்க வைக்க ஷாம்புவினால் கழுவலாம். அல்லது, பூந்திக்கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து, அந்தத் தண்ணீரில் கழுவி, மென்மையான துணியால் துடைக்க… ‘தகதக’வென மின்னும்.

21. எப்போதாவது ஒருமுறை அணியும் ஆரம், நெக்லஸ், கல் வளையல் போன்ற நகைகளை ஒன்றோடு ஒன்று உரசாமல், வளையாமல், அதற்காக கொடுக்கப்பட்டுள்ள நகைப் பெட்டிகளில் தனித்தனியாக வைப்பது சிறந்தது.

22. நகைகளை அலுங்காமல், குலுங்காமல் வைக்க நகைப் பெட்டி இல்லை அல்லது இருப்பவை போதவில்லை… பீரோவில்தான் வைக்க வேண்டும் என்ற நிலை. என்ன செய்வது..? நகைகளை ‘பனியன்’ மாதிரியான காட்டன் துணியில் சுற்றி, பீரோ லாக்கரினுள் வைக்கலாம். பத்திரமாக இருக்கும்.

23. நகைப் பெட்டியில் வைத்தாலும்கூட, அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத நகைகளை இப்படி துணி சுற்றி, அந்தப் பெட்டிக்குள் வைத்தால் பளபளப்பு குறையாது.

வெள்ளி கொலுசு மணி..!

நம் கலாசாரத்தில் தங்கத்துக்கு அடுத்து, அதிகம் பயன்படுத்தப்படுவது வெள்ளிதான். அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என குழந்தை பிறந்ததிலிருந்து ஒட்டி உறவாடும் இந்த வெள்ளி நகைகளை எப்படி தரம் பார்த்து வாங்குவது, மாற்றுவது, பராமரிப்பது..?

24. தங்கத்திலிருக்கும் ‘ஹால்மார்க்’ மாதிரியான முழு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் பொதுவான முத்திரைகள், வெள்ளி நகைகளுக்கு இல்லை. ஆகையால், அவற்றை நம்பிக்கையான கடைகளில் வாங்குவது நல்லது.

25. வெள்ளி ஒரிஜினலா என எப்படிக் கண்டறிவது..? நைட்ரிக் அமிலம், தூய வெள்ளியின் மீது படும்போது நுரைத்தால் அது நல்ல வெள்ளி.

26. வெள்ளி நகையை வெண்மையான சுவரில் தேய்க்கும்போது கறுப்புக் கோடு விழுந்தாலும், அது 100% வெள்ளிதான். அதற்காக, அடிக்கடி தேய்த்தால் வெள்ளி வீணாகிவிடும்!

27. வெள்ளி நகைகள், 80 டச் தரத்தில் கிடைத்தால் அது வெரிகுட் வெள்ளி.

28. பெரும்பாலும் வெள்ளிக் கொலுசுகள் 60 டச் தரத்தில்தான் கிடைக்கும். ஆனால், விலையோ 80 ‘டச்’ அளவுக்கானதாக இருக்கும். காரணம், 20 சதவிகிதம் இதில் சேதாரமாகவே போய்விடும். இனிமேல் வாங்கும்போது இதையெல்லாம் விசாரித்து தெளிவு பெற்று வாங்குங்கள்.

29. வெள்ளியை மாற்றி, வேறு வெள்ளி நகை வாங்க முடிவெடுத்தால், முன்பு எந்தக் கடையில் அதை வாங்கினீர்களோ… அங்கேயே விற்றால் சரியான விலை கிடைக்கும்.

30. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான அடையாள வார்த்தைகள் வெள்ளி நகைகளில் பொறிக்கப்படுகின்றன. அதனால், நகைகளை வாங்கிய ஊரிலேயே விற்றால்தான் அதற்கான விலை கிடைக்கும்.

31. வெள்ளி நகை வியாபாரங்களில் ஊருக்கு ஊர் பல சூட்சமங்கள் உள்ளன. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான நகைக் கடைகளில் வெள்ளி கொலுசை வாங்கும்போது திருகாணியுடன் சேர்த்து எடை போடுவார்கள். ஆனால், அதே கடையில் திரும்ப விற்கும்போது திருகாணியைக் கழற்றி விட்டு எடை போடுவார்கள். ஏனென்றால், அங்கு திருகாணிகள் பெரும்பாலும் வெள்ளியில் செய்யப்படுவதில்லை என்பதே காரணம். இனி, இதையும் கவனித்தே கொலுசு வாங்குங்கள்.

பராமரிப்பு:

32. ‘வெள்ளி நகையை என் தங்கை அணிந்தால் கறுத்துப் போகாமல் அப்படியே இருக்கிறது. அதுவே நான் அணிந்தால்… கறுத்துவிடுகிறது’ – இப்படி பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்க முடியும். இது அந்த நகையை அணிந்திருப்பவரின் உடல் வெப்பத்தைப் பொறுத்தது. உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், வெள்ளி கறுக்கும். குளிக்கும்போது வெள்ளி நகைகளையும் குளிப்பாட்டினால்… கறுப்பழகி, வெள்ளையழகியாகலாம்.

33. வெள்ளி நகைகள் கறுத்துப் போனால் பல் துலக்கும் பேஸ்ட்டினால் கழுவலாம்; கடுமையான அழுக்கு ஏறி இருந்தால், பூந்திக்கொட்டை ஊற வைத்த நீரில் கழுவலாம்.

34. தயிர், எலுமிச்சம் பழம் போன்றவையும்கூட, அழுக்கை சுத்தமாக நீக்கும். ஆனால், இவற்றை அடிக்கடி உபயோகித்தால், அவற்றில் உள்ள அமிலம் வேதி வினைபுரிந்து, வெள்ளியைக் கரைக்கக்கூடும்.

35. வெள்ளி, நொடியில் பளபளக்க வேண்டுமா…? வீட்டில்இருக்கும் மென்மையான திருநீறைப் போட்டு மெள்ளத் தேய்த்தால்… விரும்பிய ரிசல்ட் கிடைக்கும்.

வெள்ளிப் பாத்திரங்கள்

பிறந்த வீட்டு சீதனமாகவோ, வீட்டு விசேஷங்களுக்கு கிஃப்ட்டாகவோ வந்த வெள்ளிப் பாத்திரங்களை காலத்துக்கும் பத்திரமாக பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டும் அல்லவா..? கூடவே, குழந்தைக்கு ஆசையாக சோறு ஊட்ட கிண்ணம், ஸ்பூன், டம்ளர் என வெள்ளியில் வாங்கும்போது, தரம் குறையாமல் பார்த்து வாங்க வேண்டும் அல்லவா..?

36. வெள்ளி நகைகளைப் போலவே பாத்திரங்களையும் நம்பிக்கையான கடையில் வாங்க வேண்டும். வாங்கும்போது, அதில் சீல் இருக்கிறதா என கண்டிப்பாகப் பார்த்து வாங்குவது விலை கொடுத்து வாங்கும் காசுக்கு நல்லது.

37. வெள்ளிப் பாத்திரங்கள் பொலிவிழக்காமல் இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக ஸ்டீல் பீரோவிலோ… ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் மற்றும் பித்தளை பாத்திரங்களுடன் கலந்தோ வைக்காமல் இருப்பது நல்லது.

38. நியூஸ் பேப்பர் அல்லாத மற்ற பேப்பர்கள், பிரவுன் கவர் பேப்பர்களில் சுற்றி வைக்கலாம்.

39. பாட்டி காலத்து மரப்பெட்டி இருந்தால், அதைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். அதற்குள் வெள்ளிப் பாத்திரங்களை பத்திரப்படுத்தி வைக்கலாம். மர பீரோவில் வைப்பது மிகச்சரியான சாய்ஸ்.

கல் நகை வாங்குவோர் கவனத்துக்கு!

எத்தனை நகைகளை அள்ளி அள்ளி அணிந்தாலும் ஒரே ஒரு கல் நகை அணிந்தால், அது மற்ற நகைகளையும் ‘டாப்’பாகத் தூக்கிக் காட்டும் என்பதுதான் ஜொலிஜொலிக்கும் கல் நகைகளின் சிறப்பு. அதை வாங்குவதில் இருக்கும் சூட்சமங்கள், சென்ட்டிமென்ட்களைப் பார்ப்போமா..?

40. பொதுவாக, கல் நகைகள் வாங்குவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவார்கள். காரணம், தங்க நகையின் மொத்த எடையில் நான்கில் ஒரு பங்கு எடையை இந்தக் கற்களே நிரப்பி விடும் என்பதால், விற்கும்போது சிரமம்.

41. பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் வளையல், தோடு, மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுவது அமெரிக்கன் டயமண்ட் (ஏ.டி. கல்) எனப்படும் கற்கள்தான். இது கொஞ்சம் எடை அதிகமுள்ளது, பளபளப்பும் அதிகமுள்ளது என்பதால்தான் இதைப் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.

42. ஆபரணங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான நவரத்தின கற்கள் நம்மூரில் கிடைப்பவைதான். அதில், நொய்யல் நதிக் கற்கள் புகழ் வாய்ந்தவை.

43. நவரத்தினக்கற்களை வாங்கும்போது பழக்கப்பட்ட, தெரிந்த கடைகளில், முழு விளக்கங்களையும் கேட்ட பின்பு, வாரன்டியுடன் வாங்குவதே புத்திசாலித்தனம்.

வைரக்கற்கள்:

44. வைரங்களின் நிறம், தரம், அது கிடைப்பதில் இருக்கும் தட்டுப்பாடு… இவையே அவற்றின் விலையை நிர்ணயிக்கின்றன.

45. வைரக்கற்களும் ‘கேரட்’ அளவால் மதிப்பிடப்படுகின்றன. உதாரணமாக, 200 மில்லி கிராம் என்பது ஒரு கேரட், 2 மில்லி கிராம் ஒரு சென்ட். இந்த அளவின் அடிப்படையில்தான் வைரங்கள் மதிப்பிடப்படுகின்றன.

46. ஒரு சென்ட் வைரம், பொதுவாக 2 முதல் 6 ஆயிரங்கள் வரை விற்கப்படுகிறது.

47. வைரத்தைப் பதித்திருக்கும் நகை, அல்லது அதைப் பிணைத்திருக்கும் நகையின் பிணைப்பு உறுதியாக உள்ளதா என்பதைப் பார்ப்பது முக்கியம். பிணைப்பு அறுந்தால் வைரம் அதோகதிதான்.

48. வைரம் உள்ளிட்ட கற்கள் விஷயத்தில் பல சென்டிமென்ட்கள் உள்ளன. அவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள், வைரம் வாங்குவதற்கு முன் உங்கள் ராசிக்கு அது சரியானதா என்பதை தெரிந்து வாங்கவும். நம்பிக்கை இல்லாதவர்கள் கோ அஹெட்!

பராமரிப்பு:

49. சாதாரண கல் நகைகளை, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது கழற்றி வைத்து விட்டால், எண்ணெய் இறங்கி அதன் ஷைனிங் டல்லாகிவிடுவது தவிர்க்கப்படும்.

50. ஒருவேளை கற்களின் ‘ஷைனிங்’, ‘ஐயே’ என்று முகம் சுளிக்கும் அளவுக்கு குறைந்திருந்தால், அதை மாற்றிவிடுவதுதான் சிறந்த வழி.

51. கல் நகை, வைர நகைகளை உபயோகித்த பின்பு, அதற்கான பிரத்யேகப் பெட்டிகளில் மட்டுமே வைக்க வேண்டும். அதிலும் மென்மையாக வெல்வெட் துணியில் வைப்பதுதான் மிக முக்கியம்.

52. வைரம் உறுதியானது என்பதால் பராமரிக்க எளிதுதான். ஆனால், வைரத்தோடு கண்ணாடி உரசாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

53. வைரமானாலும் சாதாரணக் கற்களானாலும் தினசரி உபயோகத்துக்கு கல் நகைகளை பயன்படுத்தக் கூடாது. மோதிரங்கள்..? ஒகே… பயன்படுத்தலாம்.

முத்தான முத்தல்லவோ!

நவரத்தினங்களில் நாம் அதிகம் பயன்படுத்துவது முத்துதான். இதன் வெண்மை நிறம், அழகு, விலை உள்ளிட்ட காரணங்களுக்காக இது ‘பெண்களின் சாய்ஸாகி’, முத்து மாலை, முத்து ஜிமிக்கி, முத்து வளையல் என பல ரூபங்களில் வசீகரிக்கிறது. அதை தரமானதாக வாங்க மற்றும் அதே தரத்துடன் பாதுக்காக்க…

54. முத்து வலிமையானது; அதன் தரத்தை எளிதில் கண்டுபிடிக்க வழி… வாயில் வைத்து கடிக்கும்போது மிகக் கடினமாக இருந்தால்… அது ஒரிஜினல். கொஞ்சம் நொறுங்குவது போல் இருந்தாலும் அது போலி!

55. முத்தைக் கடித்துப் பார்க்க எந்தக் கடைக்காரரும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதால், வாரன்டி கொடுக்கும் கடைகளில் முத்தை வங்குவதுதான் நல்லது.

பராமரிப்பு:

56. முத்து நகைகளை தினசரி பயன்பாட்டுக்கு பயன்படுத்தினால் சீக்கிரம் அது பொலிவை இழந்து விடும் என்பதால் சிறப்புத் தருணங்களில் மட்டும் பயன்படுத்தலாமே!

57. முத்து நகைகளை உபயோகித்த பின், மென்மையான காட்டன் துணியில் பொதித்து வைத்தால் எப்போதும் அதே பொலிவுடன் இருக்கும்.

58. முத்து நகைகளின் மீது எந்த ஒரு திரவ வேதிப்பொருளும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

59. தயிர், எலுமிச்சைச் சாறு போன்றவை முத்தின் மீது பட்டால், அதன் பொலிவு உடனடியாக மறையும். சரும அழகுக்காக தயிர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை முகத்தில் தேய்ப்பவர்கள்… முத்து கம்மல், வளையல் போன்றவற்றைக் கழற்றி வைத்துவிட்டு, அந்த வேலையைச் செய்யலாம்.

60. முத்து நகைகளை அதிக வெப்பமான இடத்தில் வைக்கக் கூடாது. வறண்ட பகுதி, முத்துக்கு எதிரி! உலர்ந்த, நிழல்மிக்க இடங்களில் வைக்க வேண்டும்.

61. முத்து நகைகளை எளிதில் சாயம்போகும் தன்மையுள்ள பேப்பரிலோ துணியிலோ வைத்தால் அதன் நிறம் மங்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

62. முத்தை அதிக உராய்வு படாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் தேய்ந்து, அழகை இழந்து விடும்.

63. முத்துக்களைக் கண்டிப்பாக தூய பட்டு நூலில் மட்டுமே கோக்க வேண்டும். வேறெந்த நூல் மற்றும் உலோகக் கம்பிகளைப் பயன்படுத்தினாலும், அதன் நீண்ட ஆயுளுக்கு கியாரன்டி இருக்காது.

64. பெர்ஃப்யூம் ஸ்ப்ரே பயன்படுத்துபவர்கள், அது முத்தின் மேல் நேரடியாகப் படாமல் பயன்படுத்த வேண்டும். அல்லது ஸ்ப்ரே பயன்படுத்திய பிறகு, முத்து நகைகளை அணியலாம்.

பவளம்… கவனம்!

நவரத்தினங்களில் முத்துக்கு இணையாகப் பயன்படுத்தப்படுவது பவளம். இதன் மயக்கும் சிவப்புக்கு மயங்கியே இதை அணிபவர்கள் பலர். இந்தச் சிவப்பு பவளங்களைப் பார்த்து வாங்குவதும், பராமரிப்பதும் இப்படித்தான்…

65. பவளத்தின் தரத்தை எப்படி அறிந்து கொள்வது என்பதுதான் அதை வாங்கும்போது வரும் முதல் கேள்வி. ஆழந்த சிவப்பு நிறம் உடைய பவளங்கள்தான் ஒரிஜினல்.

66. குறைந்த விலையில், பவளம் கிடைத்தால் அது டூப்பு பவளம். தரமான பவளத்தின் விலை அதிகம்.

67. முழுமையான ஃபினிஷிங் இல்லாமல், அங்கங்கு குழிகள், ஓட்டைகளோடு இருப்பதை வைத்தே டூப் பவளம் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்!

68. பவளத்தின் தரத்தை உறுதி செய்ய ஓர் உபாயம் இருக்கிறது. அதாவது, சுத்தமான பாலில் பவளத்தைச் சிறிது நேரம் போட்டு வைக்க, பாலின் நிறம் மாறாமல் அப்படியே இருந்தால்… அது போலி. பாலின் நிறம் கொஞ்சம் இளஞ்சிவப்பாக மாறினால்தான் அது ஒரிஜினல்!

69. சில நாட்களுக்கு தொடர்ந்து பவள நகையை போட்டுக் கொண்டிருக்க, உங்களுக்கு ஜுரம் வருகிறது. அப்போது அதன் நிறமும் டல்லாகிறது. அப்படியானால் அது போலிதானே?! இல்லவே இல்லை. இதுதான் சூப்பர்-ஒரிஜினல் பவளம். உடலின் அதிகப்படியான சூடு காரணமாக ஒரிஜினல் பவளத்தில் வேதிவினை மாற்றம் ஏற்படுவதுதான் காரணம்.

பராமரிப்பு:

70. பவள நகைகளின் மேல் பெர்ஃப்யூம் படுவதும், அதன் பொலிவை பாதிக்கும்.

71. முத்தைப் போலவே பவளத்தையும் மென்மையான துணியில் வைத்தால், பொலிவை இழக்காமல் அப்படியே இருக்கும்.

72. பவளத்தால் ஆன மணி உள்ளிட்டவை, மற்ற உலோகத்தால் ஆன நகைகளுடன் உரசுவது போல் தொடர்ந்து பயன்படுத்தினால், சீக்கிரம் பவளம் பாழாகிவிடும். எனவே, அப்படி அணிவதை தவிர்த்து விடலாமே..!

பிளாட்டினப் பிரியர்களுக்கு!

தங்கத்தைவிட காஸ்ட்லியானது பிளாட்டினம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோமா..?

73. தங்கத்தைவிட, விலை அதிகமான பிளாட்டினத்துக்கு, இந்தியாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. பிளாட்டினம் வாங்குவது என்று முடிவு செய்து விட்டால், அதிகம் பேர் வாங்குகிற, நம்பிக்கையான, பெரிய கடைகளில் வாங்குவதே நல்லது.

74. வெள்ளியைப் போல்… ஆனால், வெள்ளியைவிட அழகானது பிளாட்டினம். வெண்மை நிறத்தில் இருக்கும். நிறம் மங்கலாக இருந்தால், அது டுபாக்கூர்!

75. ஒரிஜினல் பிளாட்டினம் நகைகளில் ‘பிடி’  என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ‘பிளாட்டினம் கில்ட் இந்தியா’ என்கிற அமைப்பு இந்த முத்திரையைக் கொடுக்கிறது.
76. சம எடையுள்ள தங்கம், பிளாட்டினம் நகைகளை கையில் வைத்து ஃபீல் பண்ணும்போது, பிளாட்டினம் நகை கூடுதல் எடையுடன் இருப்பது போல் உணர்வோம். ஆனால், எடை மெஷினில் சரிபார்க்கும்போது இரண்டின் எடையும் சமமாக இருக்கும். இதுதான் பிளாட்டினத்தின் சிறப்பு!

77. பிளாட்டின நகையில் ‘பிடி-95’ என்று பொறிக்கப்பட்டிருந்தால், அதுதான் ஹை ஸ்டாண்டர்டு பிளாட்டினம்.

ஆஹா… கவரிங்!

தங்க நகைகளைப் பயன்படுத்த முடியாத நேரங்களில், அதைப் போலவே ஜொலிஜொலிக்கும் கவரிங் நகைகள்தான் கைகொடுக்கும். இதிலும் விதம்விதமான வளையல், செயின், ஆரம், நெக்லஸ், கம்மல், மோதிரம் என அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. காசு கொடுத்து வாங்கும் அந்த நகைகளுக்கும் கொடுக்க வேண்டும்தானே கவனம்?!

78. ‘தங்கம் மாதிரியே இருக்குதே இந்த கவரிங்… எப்படி?’ என்பவர்களுக்கு… செம்பு நகைகளின் மேல் தங்க முலாமை சரியான விகிதத்தில் கலந்து பூசுவதில்தான் இந்த நகைகள் அந்த ஜொலிஜொலிப்பை பெறுகின்றன.

79. எத்தனை கிராம் தங்கம், முலாமாகப் பூசப்படுகிறது என்பதில்தான் கவரிங் நகையின் தரமும் விலையும் இருக்கிறது.

80. இன்று இதன் சந்தை, எதிர்பாராத விதமாக விரிவடைந்துள்ளதால், அரை கிராம், 1 கிராம், 2 கிராம், 4 கிராம் என பலவகை கோட்டிங்களில் கவரிங் நகைகள் கிடைக்கின்றன. நம் வசதிக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

81. இதன் கோட்டிங் அளவுதான், அதன் பளபளப்புத் தரத்தை நிர்ணயிக்கும். உதாரணமாக, அரை கிராம் கோட்டிங் நகைகள்… 6 மாதம், 1 கிராம் கோட்டிங் நகைகள்… 1 வருடம் என அதன் கோட்டிங் அளவே, அதன் பளபளப்புக்கான ஆயுளை நிர்ணயிக்கும்.

82. அரை கிராம் கோட்டிங் நகையை எப்படி அடையாளம் காணுவது…? அதில் 500 என்று சீல் பொறிக்கப்பட்டு இருக்கும். அதேபோல, ஒரு கிராம் கோட்டிங் நகைகளில் 1000 என்றும், 2 கிராம், 4 கிராம் நகைகளில் முறையே 2, 4 எனவும் பொறிக்கப்பட்டிருக்கும்.

83. கவரிங் நகைகளில் போலிகள் அதிகம் புழங்கும் என்பதால், பெயர் பெற்ற கடைகளில் வாங்குவதுதான் சிறந்த வழி. அதுவும் கியாரன்டியுடன் வாங்குவது ரொம்ப நல்லது.

84. பேன்ஸி ஸ்டோர்களில் மிகக்குறைவான விலைகளில் கியாரன்டி இல்லாமல் கிடைக்கும் கவரிங் நகைகள், மைக்ரோ கவரிங் வகை நகைகள். இவற்றை அணிந்த ஒரு வாரத்தில்கூட கறுத்து விடலாம் என்பதால் வாங்குவதற்கு முன் யோசியுங்கள்.
85. கவரிங் நகைகள் கறுத்து விடுவதோடு மட்டுமல்லாமல், சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கி, அணியும் இடத்தில் புண்கூட உண்டாகும். எனவே, கூடுதல் ஜாக்கிரதை உணர்வு தேவை!

பராமரிப்பு:

86. கவரிங் நகைகளை அணிபவர்கள், அவற்றைத் தொடர்ந்து அணியாமல், தேவைப்படும் சமயங்களில் மட்டும் அணிந்தால் சீக்கிரம் கறுக்காது.

87. பயன்படுத்திய பின்பு, உப்பு இல்லாத நல்ல தண்ணீரில், சோப் போடாமல் கழுவி, ஈரம் போகத் துடைத்து மென்மையான துணி, அல்லது பேப்பரில் வைத்தால்… பொலிவுடன் இருக்கும்.

88. கவரிங் நகைகளை அணியும் சமயங்களில் அதன் மேல் உப்பு தண்ணீர், வியர்வை படாமல் பார்த்துக்கொண்டால் நீண்ட நாட்கள் கறுக்காமல் இருக்கும்.

89. பயன்படுத்திக் கொண்டிருக்கும் கவரிங் நகை கறுக்க ஆரம்பித்தால், உடனே மாற்றுவதுதான் நல்லது. பாலிஷ் போட்டாலும் நீண்ட நாள் உழைப்பதற்கு உத்திரவாதம் இல்லை.

ஃபேஷன் ஜுவல்லரி… பேஷ் பேஷ்!

டீன்-ஏஜ் யங்ஸ்டர் மட்டுமில்லை… இளவயது அம்மாக்களும் இப்போதெல்லாம் ஃபேஷன் ஜுவல்லரி நகைகளை அழகழகாக அணிந்து வலம் வருகிறார்கள். அவர்களுக்காக…

90. பெரும்பாலான ஃபேஷன் நகைகள் கல் வைத்துதான் செய்யப்பட்டிருக்கும். அந்த நகைகளை அணியும்போது, அவை மற்ற நகைகளுடன் உராயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சீக்கிரம் உடைந்து போகாமல் இருக்கும்.

91. ஸ்டோன் நகைகள் அதிகம் பயன்படுத்துவோர், கையில் எப்போதும் சிறியதாக கம் டியூப் (பசை) வைத்திருப்பது நல்லது. கல் உதிர்ந்து விழும்போது உடனே ஒட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

92. நெக்லஸ் வாங்கும்போது கடைகளில் அதற்கான சிறப்பு பாக்ஸில்தான் போட்டுக் கொடுப்பார்கள். அதிலேயே அந்த நெக்லஸை வைத்திருந்தால்தான், அதன் வடிவம் மாறாமல் இருக்கும். இல்லையென்றால் முறிந்து, பயன்படுத்த முடியாதபடி வீணாகும்.

93. நெக்லஸ் செயின், ஹ¨க்கில் இருக்கும் கோல்டன் கோட்டிங், வெயில் காலத்தில் வியர்வைக் கசிவால் சிலருக்கு கழுத்தில் அலர்ஜியை உண்டாக்கலாம். அதைத் தவிர்க்க, அதன் மேல் நெயில் பாலிஷை (நெயில் கலர்) தடவ, அந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். கவரிங் நகையென்றாலே அலர்ஜி ஏற்படும் என்பவர்கள், ஆசைக்குகூட அதைப் போடாமல் தவிர்ப்பதுதான் நல்லது.

94. ‘ஸ்டெட்’ எனப்படும் கம்மல் நகைகள் அதிகம் பயன்படுத்துபவர்கள், அதை ஒரு அட்டையில் ஓட்டை போட்டு அதில் பொருத்தி வைத்துவிட்டால், சரியான சமயத்தில் ஜோடியாக எடுத்துக் கொள்ள முடியும்.

95. வளையல்கள் அதிகம் வைத்திருப்பவர்கள், வளையல் ஸ்டாண்டுகளில் மாட்டி வைத்துவிட்டால் ஜோடி மாறாமல் அவசரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.

வொயிட் கோல்ட்…

இன்றைய இளைஞர்களின் பெரு விருப்பமாக இருப்பது வொயிட் கோல்ட். இதில் மோதிரம், பிரேஸ்லெட் போட்டுக்கொள்வது அவர்களின் ஃபேஷன். சரி, அது என்ன வொயிட் கோல்ட்..?

96. தங்கத்தின் மீது வெள்ளை நிற கோட்டிங் கொடுத்து செய்யப்படும் நகைகள்தான், வொயிட் கோல்ட் நகைகள். வெள்ளை நிற கோட்டிங்கில் நிக்கல், துத்தநாகம், பல்லேடியம் என்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன.

97. ஒரு நகையில் தங்கம், மற்ற உலோகங்கள் எத்தனை சதவிகிதம் கலக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்துதான், இந்த ஒயிட் கோல்ட் நகையின் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, 14 கேரட் வொயிட் கோல்ட் நகை என்றால், அதில் 58.3% தங்கம் இருக்கும். மீதி இருப்பவை மற்ற உலோகங்களால் ஆன கோட்டிங்.

பச்சை மரகதமே…பச்சை மரகதமே!

நவரத்னங்களில் முத்து, பவளம், வைரத்துக்கு அடுத்தபடியாக மரகதக்கல்லும் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் கல்லின் மகத்துவம்…

98. மரகதக்கல்லின் மனம் கவரும் பச்சை வண்ணம்தான் அதன் சிறப்பு. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், அதன் குணம் பற்றி தெரிந்த பின்பு ராசிக்கு ஏற்ப அணிந்து கொள்வது நல்லது. நம்பிக்கை இல்லாதவர்கள்.. இதன் அழகு நிறத்துக்காக அணியலாம்.

99. ஒரிஜினல் மரகதக்கல் பளபளப்புடனும் சரியான ஃபினிஷிங்கிலும் கிளாரிட்டியுடனும் இருக்கும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் கல்லில் கிளாரிட்டி மங்கலாக இருக்கும்.

100. இதையும் ‘கேரட்’ குறியீட்டால்தான் அளவிடுகிறார்கள். இதன் தரம், கிளாரிட்டி, ஃபினிஷிங் அடிப்படையில் இதன் விலை. ஒரு கேரட் 200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை தரத்தைப் பொறுத்து வேறுபடும்.

உங்கள் நகைகள் உங்களுக்கான சொத்து, அடையாளம். அதை கட்டிக் காப்பாற்றுங்கள் கெட்டிக்காரத்தனமாக!

நன்றி:  hi2forum.com