Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,640 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 16

வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம்.

வில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற ஆங்கில மகாகவிஞன் வானவில்லைக் குறித்து எழுதிய ஒரு பாடல் மிகவும் பிரபலமானது. பலரும் மேற்கோள் காட்டும் குழந்தையே மனிதனின் தந்தை (The Child is father of the Man) என்ற பிரபல பொன்மொழி இந்தக் கவிதையில் இருந்தே எடுக்கப்பட்டது. அந்தக் கவிதையை அனேகம் பேர் அறிந்திருக்கலாம்.

The Rainbow

My heart leaps up when I behold
A rainbow in the sky:
So was it when my life began;
So is it now I am a man;
So be it when I shall grow old,
Or let me die!
The Child is father of the Man;
I could wish my days to be
Bound each to each by natural piety.

அந்தக் கவிஞன் சொல்கிறான். “வானவில்லை வானில் பார்க்கும் போதெல்லாம் என் இதயம் சிலிர்க்கிறது. அப்படித் தான் என் வாழ்க்கை ஆரம்பித்த குழந்தைப் பருவத்தில் இருந்தது. வளர்ந்த பிறகு இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. இதே போல் என் வயோதிக காலத்திலும் இருக்கட்டும். அப்படி இல்லா விட்டால் நான் இறந்தே போவேனாக! குழந்தையே மனிதனின் தந்தை! இயற்கையின் அழகை ரசிக்கும் பக்தனாக, என் வாழ்நாள் அனைத்திலும் இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்.”

வளர்ச்சி என்பது மரத்துப் போவதல்ல. நம் நுண்ணிய உணர்வுகளையும் ரசனைகளையும் தியாகம் செய்வதல்ல. எனவே வளர்ந்து விட்டதால் அவற்றை இழந்து விட்டதாய் நியாயம் கற்பித்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் ஆகும். வளர வளர இழக்க வேண்டியது நம் முட்டாள்தனங்களையும், அறியாமையையும் தானே ஒழிய ரசனைகளை அல்ல.

மனோதத்துவ மேதை ஆல்ஃப்ரட் ஆட்லர் (Alfred Adler) அவர்களிடம் ஒரு பேட்டியாளர் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் மிகவும் சந்தோஷமான மனிதராக யாரை எண்ணுகிறீர்கள்?”

ஆட்லர் அவர்கள் சுற்றுலாத் தளமான ஒரு மலைமுகட்டில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவரைச் சொன்னார். அந்தப் பணியாளர் தினமும் அதிகாலை அந்த மலையேறி மேலே சென்று மாலை கடைசி சுற்றுலாப் பயணியும் கீழே இறங்கிய பின் தான் கீழே வர வேண்டும். மலை முகட்டில் ஒரு சிறிய கேபினில் கெட்டில் வைத்து தேவைப்படுகிறவர்களுக்கு தேனீர் தயாரித்துத் தரும் பணி அவருடையது.

ஆட்லர் அங்கு சென்றிருந்த சமயம் பயணி ஒருவர் மிகவும் குளிர் அதிகமாக உள்ளதென்று சொல்லி அந்த கேபினிற்குள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார். அந்தப் பணியாளர் அவரிடம் சொன்னார். “ஐயா இந்த மாலை நேர சூரிய கிரணங்கள் அந்த மேகங்களினூடே தெரிகிற அழகே தனி. கதவை சாத்தி விட்டால் அதை நீங்கள் கண்டு ரசிக்க முடியாமல் போய் விடும்.  நான் எப்போதும் அந்தக் காட்சியைத் தவற விடுவதே இல்லை”

ஆட்லர் அந்த பேட்டியாளரிடம் சொன்னார். “அந்த கடுங்குளிரையும் மீறி தினமும் காண்கிற அந்தக் காட்சியை தவற விடாமல் ரசிக்கும் அந்த பணியாளர் தான் மிகவும் சந்தோஷமான ஆள் என்று நினைக்கிறேன். அவர் வாங்கும் ஊதியம் குறைவாகவே இருக்கலாம், அந்த வேலை அடுத்தவர் பார்வைக்கு சுவாரசியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சலிக்காமல் தினமும் ரசிக்க முடிகிற அவர் தான் உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான மனிதர் என்று நினைக்கிறேன்”.

தினசரி வாழ்க்கையில் காணக் கிடைக்கிற அழகுகளை ரசிக்க மறந்து விடுவது உண்மையான எந்திரத்தனம். கிட்டத்தட்ட எந்திரங்களாய் மாறி விடுகிற போக்கு தான் வளர்ச்சி என்றால் நாம் வளராமலேயே இருப்பதே சிறந்தது. ஒரு அழகான கதையை, நெஞ்சை அள்ளும் கவிதையை, இனிமையான இசையை, குழந்தையின் மழலையை, இயற்கையின் அழகை ரசிக்க நேரமும் மனமும் இல்லாமல் ஓட்டும் வாழ்க்கையில் என்ன சிறப்பு இருக்கிறது? சதா சர்வ காலம் அதையே ரசித்துக் கொண்டிருப்பது போதுமானது என்று சொல்ல வரவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருக்கையில் அனைத்திற்கும் அவற்றிற்குரிய கவனம் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது. ரசனை நம் வயிற்றை நிரப்பி விடாது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஆனால் வயிற்றை நிரப்புவதிலும் பொருள் சேர்ப்பதிலும் மட்டுமே வாழ்க்கை நிறைவு பெற்று விடுவதில்லை.

ஒருவர் ரசனை இன்னொருவருக்கு இருப்பதில்லை. இசையை ரசிக்கும் ஒருவர் அந்த அளவுக்குக் கவிதையை ரசிக்காமல் போகலாம். வர்ட்ஸ்வர்த்தை சிலிர்க்க வைத்த வானவில் அழகு இன்னொருவருக்கு ஒரு பொருட்டே இல்லாமல் போகலாம். ஆனால் அந்த நபர் ஒரு குழந்தையின் மழலையையும், குறும்பையும் ரசிக்க முடிந்தவராக இருக்கலாம். இப்படி ஒவ்வொருவர் ரசனையும் வேறுபடலாம். ஆனால் ரசனைகளே இல்லாமல் இருப்பவர்கள் குறைவு. இருக்கும் ரசிக்கும் திறனையும் இன்றைய எந்திர வாழ்வில் சிறிது சிறிதாக இழந்து விடுவது மனிதன் தன்னில் ஒரு பகுதியை மரணிக்க வைத்து விடுவது போலத் தான். அதை அனுமதித்து விடாதீர்கள்.

நன்றி: -என்.கணேசன் –  வல்லமை