தர்மபுரியில், இரு கைகளை இழந்த வாலிபர், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், நான்கு பதக்கங்கள் வென்று இந்திய அளவில் நீச்சல் போட்டியில் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு ஊனம் தடையில்லை என்பதை, பல்வேறு சாதனைகள் மூலம் தமிழகத்தில் பல மாற்று திறனாளிகள் நிரூபித்து வருகின்றனர்.
ஊனத்தை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், தர்மபுரியை சேர்ந்த வாலிபர், தொடர்ந்து பல்வேறு சாதனைகள் செய்து, மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
தர்மபுரியை அடுத்த எம்.ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி பெருமாள். இவரது மகன் வெங்சடேசன். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, விவசாய பணிக்கு சென்றார். மின் ஒயரில் தவறுதலாக கை வைத்ததில், அவரது இரு கைகளும் கருகி, ஆப்பரேசன் மூலம் இரு கைகளும் அகற்றப்பட்டன. வெங்கடேசன், 10 வயது வரை இரு கைகளுடன் இருந்த போது, எப்படி உற்சாகத்துடன் இருந்தாரோ, அதே உற்சாகத்துடன், ஊனத்தை பற்றி கவலைப்படாமல் மற்றவர்களை போல் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு, தன் வாழ்க்கை பயணத்தை துவங்கினார் வெங்கடேசன்.
மற்றவர்களுக்கு சவால் விடும் வகையில் தன் ஊனத்தை பற்றி சிறு துளி கவலைப்படாமல், இரு கைகள் உள்ளவர்களின் செயல்பாடுகள் போல் செய்து அசத்தி வருகிறார். கால்களால் எழுதவும், புத்தகங்களை புரட்டவும், உணவு அருந்தவும் பழக்கப்பட்ட வெங்கடேசன், நீச்சல், சைக்கிள் பயிற்சி என, இரு கைகளை இழந்த போதும், அவருக்குள் இருந்த தன்னம்பிக்கையோடு உலா வருகிறார். இடைநிலை ஆசிரிர் பயிற்சி முடித்துள்ள வெங்கடேசன், தற்போது சென்னையில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி கல்வியல் மேம்பாட்டு நிறுவனத்தில் எம்.எட் படித்து வருகிறார். படிப்புடன் விளையாட்டிலும்
மற்றவர்களை போல் சாதனை படைத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள அவர், சமீபத்தில் இந்திய பாராலிம்பிக் கமிட்டியும், மஹாராஷ்டிரா மாநில பாராலிம்பிக் சங்கமும் இணைத்து தேசிய அளவிலான பாராலிம்பிக் முதன்மையாளர்கள் போட்டியை, மஹாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் கடந்த டிசம்பர் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தியது. இப்போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற வெங்கடேசன், நான்கு பதக்கங்களை வென்று, இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இவர் பெற்ற பதக்க விபரும் வருமாறு: நீச்சல் போட்டி ஆண்கள் பிரிவு
- 50 மீ., பிரஸ்ட் ஸ்டோர்க் முதலிடம் பெற்று தங்க பதக்கம்.
- 50 மீ., பிரீ ஸ்டையில் இரண்டாமிடம் வெள்ளி பதக்கம்,
- 50 மீ., பட்டர்பிளை முறை இரண்டாமிடம் வெள்ளி பதக்கம்,
- 50 மீ., பேக் ஸ்டேரோக் இரண்டாமிடம் வெள்ளி பதக்கம்.
இந்த போட்டிகளில் ஒரு போட்டியாளர் நான்கு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க அனுமதியுண்டு. வெங்கடேசன் நான்கு போட்டிகளில் பங்கேற்று, ஒரு தங்கம்
மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்களை பெற்று, இந்திய அளவில் தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். வெங்கடேசனுக்கும், பல மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி அளித்த தர்மபுரி மாவட்ட பாராலிம்பிக் கழக செயலாளரும் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், வெங்கடேசனை, கலெக்டர் லில்லி பாராட்டி பதக்கங்களை அணிவித்தார். வெங்கடேசன் கூறும்போது, “”மற்றவர்கள் போல் நானும் சாதிக்க வேண்டும் என்ற வேகமும், இரு கைகள் இழந்த போதும், தன்னம்பிக்கையும், என்னை ஊக்குவிக்கும் பல சமூக ஆர்வலர்களின் வாழ்த்தும், எனக்கு தொடர்ந்து வெற்றியை கொடுக்கிறது,” என்றார்.