Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,731 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்!

தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையர் வழியில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அழியாது காத்துப் பதிப்பித்தவர்; சிறுகதை எழுத்தாளர், சரித்திர நாவலாசிரியர், பத்திரிகை நிர்வாக ஆசிரியர், பதிப்பாசிரியர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர் மு.செய்யது முஹம்மது ஹசன்.

நாகப்பட்டினத்தில், 1918-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முஹம்மது சாலிஹ் சாஹிபுக்கும், ஜுலைகா பீவிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.

நாகப்பட்டினம் தென்னிந்திய திருச்சபை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தந்தையிடமும் தாத்தாவிடமும் அரபி, உருது, பார்ஸி ஆகிய மொழிகளைக் கற்றார். இவர் மேற்படிப்புப் படிக்க விரும்பினார். ஆனால், பாட்டன் விரும்பியபடி தன் தந்தையுடன் 1935-இல் பர்மாவுக்குச் சென்று, “மாந்தலே’ என்ற ஊரில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். அங்கே பர்மிய மொழியைக் கற்றார். 1937-இல் தாயகம் திரும்பினார். 1938-இல் “இந்திய தபால் தந்தித் துறை’யில் தந்திப் பிரிவில் அமைச்சகப்பணி எழுத்தாளராகச் சேர்ந்து கண்காணிப்பாளராய் உயர்ந்து, 38 ஆண்டுகள் பணியாற்றினார்.

கல்கியின் நூல்களைப் படித்து, அதன் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால், 1941-இல் எழுதத் தொடங்கினார். பணியிலிருந்த காலத்திலேயே கலைமகள், பிரசண்ட விகடன், சந்திரோதயம், ராஷ்டிரவாணி, மணிவிளக்கு, முஸ்லீம் முரசு முதலிய இதழ்களில் சிறுகதைகள் எழுதினார். “சாபு’ என்ற புனைபெயரில் வள்ளி, வளையல்கள், இரு சித்திரங்கள்; “ஜமீல்’ என்ற பெயரில், என் ஹலீமா, படிப்பும் பரம்பரையும்; “ஹசன்’ என்ற பெயரில், வீரத்தின் பரிசு முதலிய சிறுகதைகளை எழுதினார். 1942-இல் சென்னை அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்ட “பிரபலங்களின் சிறுகதைத் தொகுப்பில்’ இவரது சிறுகதையும் இடம்பெற்றது.

சிறுகதைகள் எழுதிவந்த ஹசனின் கவனம், பின் சரித்திர நாவல்கள் எழுதுவதில் திரும்பியது. மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, சொர்க்கத்து கன்னிகை, நீலவானம் ஆகிய ஐந்து சரித்திர நாவல்களை எழுதியுள்ளார்.

1956-இல் “மஹ்ஜபீன்’ நாவல் வெளிவந்தது. சிந்துநதிக் கரையினிலே 1971-இல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் பெற்றது. சீதக்காதி அறக்கட்டளையின் “செய்கு சதக்கத்துல்லா அப்பா’ இலக்கியப் பரிசையும், கம்பன் கழகத்தின் கி.வா.ஜ. நினைவுப் பரிசையும் வென்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் முஹம்மது ஹசனுக்குப் பொற்கிழி வழங்கி, “இஸ்லாமிய இலக்கியக் காவலர்’ என்ற பட்டமும் கொடுத்தனர். மஹ்ஜபீன், சிந்துநதிக் கரையினிலே ஆகிய இரு நாவல்கள் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எழுதிய சிந்துநதிக் கரையினிலே, புனித பூமியிலே, மேற்கு வானம் ஆகிய மூன்று நாவல்களையும் மூன்று பேராசிரியர்கள் ஆய்வு செய்து, “ஆய்வியல் நிறைஞர்’ (எம்.பிஃல்) பட்டமும், “ஹசனின் வரலாற்று நாவல்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில், பேராசிரியர் ஒருவர் ஆய்வு செய்து “முனைவர்’ (பிஎச்.டி) பட்டமும் பெற்றுள்ளனர்.

1966 லிருந்து 1980 வரை “முஸ்லீம் முரசு’ மாத இதழில், முதலில் நிர்வாக ஆசிரியராக இருந்தார். பின்னர் அவ்விதழின் முழு பொறுப்பையும் ஏற்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

மணிவிளக்கு, பிறை, உரிமைக்குரல் ஆகிய மாத இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று அரிய ஆலோசனைகள் வழங்கினார்.

17, 18-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எண்ணற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மறைந்துவிட்டன – கிடைக்கவில்லை. அவைகளைத் தம் கடின உழைப்பால் தேடிப் பிடித்து, துண்டு துண்டாகக் கிடந்தவற்றை ஒன்றாய் இணைத்துப் பதிப்பித்தார். ஆயிரம் மஸாலா, மிஹ்ராஜ் மாலை, சீறாப்புராணம், சின்னச் சீறா, திருமணக் காட்சி, கனகாபிஷேக மாலை, திருமண மாலை முதலிய காப்பியங்களையும், 20 சிற்றிலக்கியங்களையும் பதிப்பித்துள்ளார்.

தமிழக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், இலக்கியக் காவலர் எனப் பன்முகத் தன்மையோடு பளிச்சிட்ட மு.செய்யது முஹம்மது ஹசன், 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு, இஸ்லாமிய இலக்கியத் துறையை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

முஹம்மது ஹசனுக்கு மூன்று ஆண், மூன்று பெண் குழந்தைகள். அவர்களுள் ஒருவர்கூட எழுத்துத் துறையில் ஏற்றம் பெறவில்லை என்றாலும், அவரிடம் பயிற்சிபெற்ற பலர், எழுத்துலகில் இன்றைக்கும் பரிணமிக்கின்றனர் – பிரகாசிக்கின்றனர் என்பதுதான் ஹசனின் படைப்பிலக்கியத் திறனுக்குச் சான்று!

 நன்றி: மு.அ. அபுல் அமீன் நாகூர் -தினமணி