அடர்த்தியான மரங்கள், ஆனந்தமாகப் பாடும் பறவைகள். நறுமணம் கமழும் பல வண்ண மலர்கள், நடுவே ஒரு பளிங்குப்பாறை. அதன் மீது ஒரு சிலை. அது என்ன சிலை? சற்று வித்தியாசமான சிலைதான். மனிதச் சிலை. ஆனால் அதற்கு இரண்டு இறக்கைகள் காணப்படுகின்றன. கால்கட்டை விரல் மட்டும் நிலத்தில் ஊன்றிய அந்த மனிதன் வானத்தில் சிறகடித்துப் பறக்க தயார் நிலையில் இருப்பதைப் போல தோன்றுகிறது. கண் இமைக்கும் நேரம் ஏமாந்தால் போதும், சடசட வென்று இறக்கைகளை அடித்து சிட்டுக்குருவியைப்போல அவன் பறந்து சென்று விடுவான். அந்த மனிதன் தலையில் கட்டுக் குடுமி. இது யார் சிலை தெரியுமா? அரசியல்வாதியின் சிலையோ அல்லது, கடவுள் சிலையோ அல்ல. காலத்தின் சிலை.
ஆம் காலத்தின் அருமை பெருமைகளை தெரிந்த ஒரு சிற்பி இப்படியொரு சிலையை வடித்திருக்கிறான். காலம் – அது எப்போது வேண்டுமானாலும் நம்மை விட்டு பறந்து சென்று விடும். அது யாருக்காகவும் காத்திருக்காது. உங்களுக்குத் தேவை என்றால் நீங்கள் தான் அதை வலிய ஓடிச் சென்று அதன் குடுமியைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதையே அந்தச் சிலை குறிப்பாக உணர்த்துகிறது.
வினாடிகளை நாம் தவற விட்டால் ஆண்டுகள் நம்மை அலட்சியப்படுத்திச் சென்றுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றனர். அதன் பொருள் என்ன? அவ்வளவு விலை உயர்ந்தது காலம். பொன்னைத் தவற விட்டால் கூட வேறு ஒரு சமயத்தில் மறுபடியும் அதை சம்பாதித்து விடலாம். ஆனால் காலம் அப்படியா? யோசித்துப் பாருங்கள். நேற்று என்பது நேற்று தான். இழந்து விட்ட அந்த நாளை நாம் மறுபடியும் பெற முடியாது.
உதாரணத்திற்கு இன்று வியாழக்கிழமை என்று வைத்துக் கொள்வோம். நேற்று புதன் கிழமை அல்லவா? மறுபடியும் அந்த புதன் கிழமை வருமா? வேறு ஒரு புதன் கிழமை அடுத்த வாரம் வருகிறதே என்று விவரம் புரியாதவர்கள் சொல்லுவார்கள். நேற்று 25 ஆம் தேதி என்றால் மறுபடியும் அதே தேதி அதே மாதத்தில் வரவேண்டுமானால் நீங்கள் ஒரு வருடம் வரையில் காத்திருக்க வேண்டும். அப்படியே வந்தாலும் இழந்து போன அந்த 24 மணிநேரம், இழந்தது தான்.
கண் இமைக்கும் நேரத்தில் மழைக்காலங்களில் மின்னல் வானத்தில் மின்னுகிறது. சில நொடிகளே காணப்படும் மின்னலை உங்களால் பிடித்து வைக்க முடியுமா? முடியாது. அதே போலத்தான் மணித்துளிகளும். அவைகளை உங்களால் கட்டி வைக்க முடியாது. ஆனால் நல்ல எண்ணங்களின் மூலமாகவும், நல்ல செயல்களின் மூலமாகவும் அந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிவிட முடியும்.
நேரத்தை வீண்பேச்சில் கழிக்காமல் விளையாடுகின்ற மாணவி, உடல் ஆரோக்கியத்தை பெறுகிறாள். ஓவ்வொரு மணி நேரத்தையும் அலட்சியமாக வீணாக்காமல் பள்ளிப்பாடங்களை படிக்கின்ற மாணவன் அறிவுத்திறனை அதிகமாக்கிக் கொள்கிறான். ஒவ்வொரு நாளும் சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கிரகித்து தங்களுக்குத் தேவையான உணவை தாவரங்கள் தயாரித்துக் கொள்கின்றன. அதைப்போல நாமும் காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அதை பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
பாலுவிடம் அவனது தந்தை 24 பிளாஸ்டிக் குவளைகளை கொடுத்தார். இவற்றை உன் விருப்பம் போல பயன்படுத்திக் கொள் என்றார். அதே போல அவர் மீனாவிடமும் 24 குவளைகளைக் கொடுத்து, உன் விருப்பம் போல பயன்படுத்திக் கொள் என்றார். இருவரும் அந்த வண்ண வண்ண பிளாஸ்டிக் குவளைகளை ஆசையோடு எடுத்துக்கொண்டு ஓடினர்.
பாலு அவற்றை மேசை மீது ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அழகு பார்த்தான். பிறகு அதை கலைத்து விட்டு, பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று வரிசையாக வைத்து ரசித்தான். ஒரு குவளையில் தனது பென்சில், பேனா போன்றவற்றை போட்டு வைத்தான். மற்றொரு குவளையில் ஐஸ் தண்ணீரைக் கொண்டு வந்து குடித்தான். சிறிது நேரத்தில் அலுத்து விட்டது. இத்தனை குவளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று புரியாமல் அவற்றை அப்படியே மேசையின் இழுப்பறையில் வைத்து விட்டு, நண்பர்களுடன் அரட்டை அடிக்கப் புறப்பட்டுச் சென்றான்.
மீனாவிடமும் தந்தை 24 குவளைகளை கொடுத்தார் அல்லவா? அவள் அதை தோட்டத்திற்கு எடுத்துச் சென்றாள். பத்து குவளைகளில் தோட்டத்து மண்ணை நிரப்பினாள். சமையல் அறையில் இருந்து கடுகு, தனியா, எள் போன்றவற்றை சிறிது அளவு எடுத்து வந்து அதில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தாள். கீரை விதைகளை சில குவளைகளில் தூவி வைத்தாள். தினமும் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றினாள்.
தோழியிடம் இருந்து பெற்ற ஜப்பான் புல் வகையை சில குவளைகளில் வளர்க்க ஆரம்பித்தாள். சில குவளைகளில் நீர் விட்டு, அழகிய மலர்களை செருகி பூச்சாடியாக மாற்றினாள். இரண்டு குவளைகளை சுத்தப்படுத்தி ஒன்றை தண்ணீர் குடிக்கவும், மற்றொன்றை தேநீர் பருகவும் வைத்துக் கொண்டாள். இப்படியாக அவள் அத்தனை குவளைகளையும் நல்ல முறையில் பயன்படுத்தினாள்.
பத்து நாட்களுக்குப் பிறகு தந்தை பாலுவையும், மீனாவையும் அழைத்தார். “நான் கொடுத்த குவளைகளை கொண்டு வாருங்கள்” என்றார்.
பாலு ஓடிச் சென்று மேசையின் இழுப்பறையில் இருந்து புத்தம் புதிதாக இருக்கின்ற குவளைகளை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான். “அப்பா இதோ பாருங்கள்! இந்தக் குவளைகளை அப்படியே புத்தம் புதிதாக வைத்திருக்கிறேன்” என்றான் பெருமையோடு.
மீனா மவுனமாக நின்றாள். “மீனா உன்னுடைய குவளைகள் எங்கே?” என்று கேட்டார் அப்பா.
“அப்பா நான் அவற்றில் சில செடிகளை வளர்த்திருக்கிறேன்” என்று சொல்லிய மீனா தந்தையை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று குவளைகளில் வளர்ந்திருக்கும் எள், கொத்துமல்லி, கடுகு போன்ற தாவரங்களை காட்டினாள். தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அவர்கள் அறைக்குள் வந்த பொழுது மேசை மீது, பிளாஸ்டிக் குவளைகளில் வைத்திருந்த மலர்க்கொத்துக்கள் காற்றில் அசைந்து வரவேற்றன.
“இந்த 24 குவளைகளில் ஒரு பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. இவை ஒரு நாளில் அடங்கியுள்ள 24 மணிநேரத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு மணி நேரத்தையும் நீங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இவைகளை உங்களுக்குக் கொடுத்தேன். பாலு குவளைகளை அழகு பார்த்ததோடு, மேசையறையில் வைத்து மூடிவிட்டான். அதாவது அவன் தனக்குத் தரப்பட்ட 24 மணிநேரத்தை வீணாக்கி விட்டான். உபயோகப்படுத்தாமல் தவற விட்டுவிட்டான். இது தவறான செயல். இறைவன் எல்லோருக்கும் சமமாக ஒரு நாளில் 24 மணி நேரத்தை தந்திருக்கிறான். ஏழைக்கு 22 மணிநேரமும், பணக்காரர்களுக்கு 25 மணி நேரமும் தருவதில்லை. அவைகளை நாம் மிகச் சரியாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம். வளமான எதிர்காலத்தை அடைந்து மகிழ்ச்சியாக வாழலாம். இதற்கு எடுத்துக்காட்டாக மீனா நடந்து கொண்டிருக்கிறாள். அவள் குவளைகளை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டாள். அவற்றில் விதைகளைத் தூவி தாவரங்களை வளர்த்திருக்கிறாள். மலர்க்கொத்துக்களை வைத்து பூச்சாடியாக மாற்றி இருக்கிறாள். தேநீர் குடிப்பதற்கு குவளையாக பயன்படுத்துகிறாள். இவ்வாறு அவள் தனக்கு கிடைத்த நேரத்தை மிகப் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கிறாள். இது மிகவும் சரியான வழி” என்று பாராட்டினார்.
பிறகு பாலுவைப் பார்த்து “பாலு இந்த விஷயத்தை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள். நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கையில் நாம் முன்னேறவே முடியாது. குவளைகளின் மூலமாக நேரத்தின் அருமையை நன்றாக உணர்ந்து செயல்படு” என்றார்.
“தொலைக்காட்சி பார்க்கவும், நண்பர்களுடன் ஊர்சுற்றவும், அரட்டை அடிக்கவும், வீண் வதந்திகளைப் பரப்பவும் நேரத்தை செலவிடும் மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண் குறைவதோடு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் மதிப்பும் குறைவது உறுதி. ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது மாணவர்களின் கடமை. படிப்பு, தனித்திறமை, போட்டிகளில் பங்கேற்பது, தேவையான உழைப்பை தயங்காமல் செலுத்துவது, போன்றவற்றில் நேரத்தை செலவழிக்கும் மாணவன் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறுவது எளிது. அவனுடைய முன்னேற்றத்தை யாராலும் தடுக்கவே முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.
பாலுவுக்கு தன் தவறு புரிந்தது. தந்தையிடம் மன்னிப்புக் கேட்டான். அன்று முதல் ஒவ்வொரு மணிநேரத்தையும் பயனுள்ள வகையில் செலவழிக்க கற்றுக் கொண்டான்.