Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2012
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,367 முறை படிக்கப்பட்டுள்ளது!

Spam – எரிதங்கள் (ஒரு விளக்கம்)

20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை.

மின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் விளம்பரம் அனுப்பும் விரும்பத்தகாத அஞ்சல்களை Spam என்று அறியப்படும் எரிதம் என்கிறோம். மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு எரிதம் நன்கு பழக்கமான ஒன்றாக இருக்கும் எனில் வியப்பில்லை.

மின்னஞ்சலைப் பார்வையிடத் தொடங்கும் போது நமது அஞ்சற்பெட்டியில் (Inbox) உள்ள கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்த்தவுடன் மனதில் மிகுந்த ஆர்வம் உண்டாகி அவற்றைச் சொடுக்கிப் படிக்கத் தொடங்குகிறோம். ஆனால் வந்திருப்பவை எல்லாம் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வந்திருக்கும் விளம்பரக் கடிதங்கள் (அவற்றில் சில முகம் சுளிக்க வைக்கும்) என்றால் எரிச்சல் தானே வரும்?

அட என் முகவரி எப்படி இந்த முகவருக்குச் சென்று சேர்ந்தது என நீங்கள் வியக்கலாம். அது போல நான் எனக்கு நெருங்கியவர்கள் தவிர வேறெவருக்கும் இம்முகவரியைக் கொடுக்கவில்லையே என எண்ணிக் கொண்டிருப்பீர்கள். உண்மையில் இந்த மடல்கள் நபர்களால் எழுதப்படுவதில்லை. பெரும்பாலும் இந்த மடல்கள் தானியங்கிச் செயலிகளால் எழுதப்படுகின்றன.

ஏதோ ஒரு நல்லெண்ணத்தில் நமக்கு தீங்கற்றதாகத் தெரிந்திருக்கும் ஒரு தளத்தில் நாம் நமது முகவரியைப் பதிந்திருக்கலாம். அவ்வகைத் தளங்கள் சரியான பாதுகாப்பு முறையில்லாமல் இருக்கும் பட்சத்தில் இதற்கெனவே இணையத்தை வருடி பாதுகாப்புக் குறைவான தளங்களின் இருக்கும் மின்னஞ்சல் முகவரிகளை அறுவடை செய்யும் செயலிகள் பல உள்ளன. இவை இது போன்ற தொல்லை தரும் விளம்பரங்களை நமக்கு அனுப்ப உதவுகின்றன.

இது போன்ற குப்பை மடல்கள் வருவதால் எரிச்சலும், நமக்கு நேர விரயமும் ஆகிறது. இவற்றை அழிப்பதிலேயே சில மணித்துளிகள் செலவழிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விடுகிறது.

இந்த எரிதத்தாக்குதல்கள் இலவச மின்னஞ்சல் வழங்கிகளின் சேவையைப் பெரிதும் பாதித்து வந்தன. ஆனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட கூகிள், ஹாட்மெயில், யாஹூ போன்ற நிறுவனங்கள் இவ்வகை மடல்களை வடிகட்டும் ஆயும் திறனை (logic) உள்ளடக்கி இருக்கின்றன. இதனால் இவற்றை எளிதாகக் கண்டறியவும் ஒரே சொடுக்கில் அத்தனை எரித மடல்களையும் அழிக்கவும் தற்போது இயலுகிறது. அவ்வாறு நாம் அழிக்காவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின் அவை அழிக்கப்பட்டுவிடும்

இவற்றில் சில அபாயகரமானவை நமக்கு மிக தெரிந்தவர்களின் பெயரில் வரும் மடல்களே, அவற்றுடம் கணினிக்குக் கேடு விளைவிக்கக் கூடிய வைரஸ்களும் கெடுதல் மென்பொருள்களும் (malware) உள்ளடக்கி இருக்கலாம். முதலில் இவற்றைக் கண்டறிந்து விழிப்புடன் அழிப்பது சற்றே அயர்வு அளிக்கக்கூடிய வேலையாக இருந்தாலும் நாளடைவில் இது எளிதாகப் பழகிவிடும்.

இந்த எரித மின்னஞ்சல்களை நம்பி யார் வாங்கப் போகிறார்கள்? எதற்காக இப்படி அனுப்பி வைக்கிறார்கள்? என்று கூட எண்ணத் தோன்றும். ஆனால் உண்மையில் பொருட்களைப் பற்றிய செய்திகளை மக்களிடையே பதிய வைக்க இவ்வகை மின்னஞ்சல்களை சில நிறுவனங்கள் உபயோகிக்கின்றன.

இவற்றைச் சட்டமியற்றிக் கட்டுப்படுத்த இயலாதா என நீங்கள் வியக்கலாம். சில நாடுகளில் எரிதங்களைத் தவிர்க்க சட்டவிதிகளே இயற்றப்பட்டிருக்கின்றன.

இவற்றையும் தாண்டி சில எரிதங்கள் நமக்கு வரலாம். அவற்றை சேவை வழங்கி நிறுவனங்களுக்குத் தெரிவித்தால் அவை தங்களின் ஆயும் திறனை (logic) அதிக கூராக்கி எரிதங்களை மிக எளிதாக வடிகட்டுகின்றன.

சிலமுறை நமக்கு வரவேண்டிய முக்கியமான மடல்களும் இவ்வகை வடிகட்டிகளால் ஒதுக்கப்பட்டு விடலாம். அவற்றையும் நாம் பிரித்தறிந்து இந்தத் தானியங்கி எரித வடிகட்டிக்குத் (Automatic Spam Filter) தெரிவித்தால் நல்ல முறையிலான மின்னஞ்சல் பலனைப் பெறலாம்.

நன்றி: இப்னுஹமீது – சத்தியமார்க்கம்