Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,600 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்புக்கு முதுமை இல்லை – கதை

தோப்பில் முஹம்மது மீரான்

மேற்கு மூலை கறுத்திருந்தது. இருண்ட மேகமலை! மேக மலைகளுக்கு அந்தப் பக்கதில் சூரியன் படம் தாழ்த்திக் கிடந்தான். அந்திப் பொழுதின் கவர்ச்சி மெல்லத் தேய்ந்து மறைகிறது.

மழைக்கித் தானாக அழிந்து போகக் காத்து நிற்கின்ற மேக மலை, மேக மலை நீண்ட சுவாசம் விட்டது. சூடில்லாத குளிர்ந்த சுவாசம்.

எங்கேயோ மழை தகர்த்துப் பெய்கிறது. கறுத்த மேக மலையை வெட்டிப் பிளந்துகொண்டு ஒரு பொன் வாள் மின்னி மறைந்தது. அதைப் பார்த்தபோது இரண்டு கண்களும் தீய்ந்து போனதுபோல தோன்றியது மம்மாசனுக்கு.

‘கைஜா வேகமா நட, ஒட்டிரண்டு கடையைப் பாத்துட்டு போவோம். மழ வருது’

இடது பக்க விலாவோடு சேர்த்துப் பிடித்திருந்த பொட்டலத்தைத் தூக்கி தலையில் வைத்தார் மம்மாசன் எனும் முகம்மது ஹஸன். காலை வேகமாகத் தூக்கி வைத்து நடக்க முயன்றார். கால்கள் நிலத்தில் பதியவில்லை – ஆணிப் புற்று! ஒரு காலில் பச்சைவாருள்ள இரப்பர் செருப்பும் இன்னொரு காலில் தோல் செருப்பும் கழன்றுபோகாமலிருக்க காலோடு சேர்;த்து ஒரு துணிக்கட்டும்.

கைஜா – கதீஜா – புருஷனின் பின்னால் நடந்தாள். தலையில்முக்காட்டின்மேல் ஒரு நார்ப்பெட்டி, உள்ளே சட்டி லயம், அகப்பை முதலிய வீட்டுச் சாமான்கள்.

‘என்னவாச்சிதாங்கோ வாப்பா, நேத்தே பட்டினி, பொட்டப் புதூரிலிருந்தே நடந்து வாரோம். அரிசிச் சாப்பாடு கண்டு அஞ்சாறு நாளாச்சு’ ஒரு கடையின் முன் கை நீட்டினார். ஒரு பைசா நீண்டது. வாங்கினார். மனைவியிடம் கொடுத்தார். அவள் அதை இடுப்பில் வைத்திருந்த பெட்டியின் உள்ளே கிடந்த அலுமினியப் பாத்திரத்துக்குள் பத்திரப்படுத்தினாள்

அந்த மெலிந்த உருவம் குந்திக் குந்தி நடந்தது. ஒரு ஜவுளிக் கடையில் முன்னால் நின்றார்.

‘ஏதாவது தாருங்கோ!’

‘சில்லரை இல்லை’

‘சில்லரை இல்லை… முதலாளி இல்லை, ஆள் இல்லை…’ கிழவர் முணு முணுத்தார். மழை மேகம் திரண்டுகூடி வருவதைப் பார்த்தார். காற்றில் கடுமையான குளிர். கிழவர் சட்டைக் கழுத்திலுள்ள பித்தானைப் பூட்டினார்.

நாலு மணிக்குள்ள ரயில் இப்போத்தான் போச்சு. ரயில் துப்பிய புகை இன்னும் மறையவில்லை. இப்போதே இருட்டு வந்துவிட்டதைப் போல ஒரு தோற்றம்! பல கடைகளில் விளக்கு ஏற்றிவிட்டார்கள்.

‘கைஜா நாம் போவோம். விளக்கு பத்தினா ஆரும் ஒண்ணும் தரமாட்டானுவ’ புருஷனும் மனைவியும் நடந்தனர். களைப்பு மாறுவதற்காகக் கொஞ்ச நேரம் இடுப்பில் கைவைத்து நிமிர்ந்து நின்றார். இந்தச் சமயத்தில் பின்னல் மனைவியை வைத்துக்கொண்டு ஒரு நபர் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு அவர்களைக் கடந்து சென்றார். அவள் தலையில் வைத்திருந்த பிச்சிப் பூவிலிருந்து வாசைன பரந்தது.

‘அவ, புருஷன் வயித்தெப் பிடிச்சுட்டிருப்பதைப் பார்த்தீர்களா?’

‘பார்த்தேன், பார்த்தேன். இப்போ இப்படித்தான்’ கிழவர் நடந்தார்.

கைஜா ஏதோ அதிசயத்தைக் கண்டவளைப் போல வியந்து மூக்கில் விரல் வைத்து நின்றாள். ஸ்கூட்டர் பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டு நின்றாள்.

குழி விழுந்த கண்களில் அற்புதம் சுரந்தது! மனதின் ஆழத்தில் எங்கோ ஒரு கோணத்தில் மரத்துக் கிடந்த உணர்ச்சிக்கு அற்பச் சூடு தட்டியதுபோலத் தோன்றியது.

கிழவர் முணுமுணுத்துக்கொண்டு முன்னால சென்றார்.

பின்னால் ரப்பர் செருப்பின் சரசர சத்தம் கேட்காததைக் கண்டு நின்று திரும்பிப் பார்த்தார்.

‘கைஜா’ – கூர்ந்து பார்த்தார். பார்வை மங்கலில், பச்சைக் கைலி உடுத்த, சிவந்த சட்டையும், தலையில் கூடையும் தெளிவில்லாமல் தெரிந்தன.

‘பேதீல போனவளே, அங்கே எந்த மாப்பிள்ளையைப் பாத்துட்டு நிக்கிறா, உன் கழுத்தில் தாலி கட்டின நாளிலிருந்து பிடிச்ச கஷ்டகாலம்.’

‘நடுரோட்டில் நின்னு என்னாவது பேசினா நானும் பேசுவேன்.’

‘பேசுடீ ஏய் பேசு! அறுவாணிக் குடும்பம்’ கிழவர் நடந்தார்.

‘இல்லை! இவரு பெரிய சீமான் குடும்பம்’

‘ஆமாடீ’ கிழவர் திரும்பி நின்றுகொண்டார் தொடர்ந்தார்.

‘உன் குடுமபக்காரங்களைப்போல வீடெல்லாம்போய் சட்டி நக்குன குடும்பம் இல்லே என் குடும்பம’

‘அது ஈதுன்னு சென்னாத் தெரியும்?’

‘சொன்னா என்னடி செய்வே?’

– கிழவர் கையை ஓங்கிக்கொண்டு அவளை நெருங்கினார்.
‘கை நீளுதே.. அடியும் பாப்போம்.’

கிழவி தலையிலிருந்து நார்ப் பெட்டியைக் கீழே இறக்கி வைத்தாள். அடியை எதிர்நோக்கி நிமிர்ந்து நின்றாள்.

‘இங்கே நின்னுகிட்டு சண்டை போடாதீங்க…போங்க ஓய்.’ அருகே நின்ற கூலித் தொழிலாளி சொன்னான்.

‘இந்தப் பெட்டியைக் கொஞ்சம் தூக்கிவை மோனே. இந்த மனிசன் எப்போதும் இப்படித்தான்’
‘படைச்ச றப்பே! எல்லாம் நீ பார்த்துட்டுத்தானே இருக்கே,’ கிழவர் நடந்தார்.

பெரிதாக ஓர் இடி முழங்கிற்று. கிழவர் நடுங்கினார்.

ரோட்டு ஓரத்தில் ஒதுங்கி நின்று திரும்பி ‘கைஜா’ வைப் பார்த்தார். கைஜா ரொம்பவும் பின்தங்கி நின்றாள்.

‘வேகம் நடந்துவாவுட்டி. மழைக்கு முன்னே போய் சேருவோம்.’

கைஜா வேகமாக நடக்க முயன்றாள். நடை ஓடவில்லை.

‘நீ இதெ வச்சுக்கோ,’ – கிழவர் தம்மிடமிருந்த பொட்டலத்தை நீட்டினார். – ‘நான் அதை செமந்திட்டு வாறேன்.’

‘வேண்டாம், நோய் பிடிச்ச தலை நானே சுமக்கலாம்’

‘பத்துப் பைசாவுக்குக் கருவாடு வாங்கணும். மீன் திண்ணு ரொம்ப நாளாச்சு!’ தனக்குள்ளே பேசிக்கொண்டார்.

வேகம் நடயுங்கோ, இப்போ மழை பெய்யும். மேகம் கருத்து இருண்டு வருது! கஞ்சி வக்கீது எங்கே? மழை வருதே!’

‘ரயில் ஆப்பீசுலே வப்போம்!’

‘வேண்டாம், சினிமாப் பெரக்குப் பின்னாலே ஆளில்லாத வீடு இருக்கில்ல, அங்கே வைப்போம்.

‘அதுக்கு ‘பகுநாது’ வரை நடக்கண்டாமா? போவுறதுக்கு முன்னாலே மழை வரும்.’

‘வேகமா நடப்போம்’ – இரண்டு பேரும் நடந்தார்கள்.

இரயில்வே ‘கிராஸிங்’ கழிந்தபோது மழை பெய்தது.

இடியும், மின்னலும்! ‘மழை!’ – கிழவிக்கு கோபம் வந்தது – நீக்கம்புலெபோன மளை’

‘ரொம்ப தூரம் போகணும்னு சொன்னே, நட, நனஞ்சா மாத்தி உடுக்க வேறே இருக்காடி, பேதீலெ போனவளே’

இருவரும் விரைவாக நடந்தார்கள். அந்த மழையிலும், சினிமா கொட்டகையில் முதல் ஷோவுக்கு நீண்ட ‘கியூ’ நின்றிருந்தது.

கைஜா, தியேட்டரின் முன் முகப்பிலுள்ள பானரை நோக்கினாள்.

ஒரு ஆணின் நெஞ்சில் தலை சாய்ந்து நிற்கின்ற பெண்! மயங்கிச் சோர்ந்த அவள் கண்களில் பொங்கிச் சிந்துகின்ற ஆனந்த லகிரி!

‘இந்தா , நீங்க இந்தப் படத்தைப் பார்த்தீயளா?’

‘நீவாவே, படம்கிடம்னு நிக்கியா’ கைஜா வெட்கிப் போனாள்.

கணவனின் பின்னால் நடந்தாள்.

அறைக்குள் கணவனும் மனைவியும் இருக்கக்கூடிய நிலையைப் படமெடுத்து உலகத்துக்குக் காட்டுறாங்க., வெட்கங்கெட்ட சினிமாக்காரன். காசு சேர்க்க இதைவிடக் கேவலமான வழி…!

கைஜா தன் கல்யாண இரவை நினைத்துக் கொண்டாள்.

அடர்த்தியாக ரோமம் வளர்ந்து விரிந்த மார்பு! அதில் வெட்கத்தோடு தலை சாய்ந்து நின்றபோது உண்டான புளகிதம்! அந்தப் புளகிதத்தின் சுகத்தில் மறந்துபோன நிமிடங்கள்! இனி ஒருபோதும் திரும்பிவராத நஷ்டப்பட்ட இரவு!

இருவரும் ஆளில்லாத அந்தப் பாழடைந்த வீட்டுக்குள் வரும்போது, இருள் பரவ இருந்தது. தெருவிளக்கு துப்பிய ஒளி, அந்த வீட்டு வராந்தாவில் மங்கலாகத் தெரிந்தது.

அலுமினியப் பாத்திரத்தைக் கொட்டி அதில் கிடைத்த பைசாக்களை எண்ணிப் பொறுக்கினார். முப்பது மூணு பைசா, ஒரு பிடி அரிசி, இரண்டொரு வெங்காயம், நாலைந்து மிளகாய், கொஞ்சம் உப்பு…

நீ போய் கருவாடு வாங்கி வா!’ கைஜா இறங்கி சென்றாள். கிழவர் சாமான்களைப் பிரித்து வைத்தார். நார்ப் பெட்டியிலிருந்து ஒரு கலயத்தை வெளியிலெடுத்து சினிமாக் கொட்டகைக்குப் பின்புறமுள்ள குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து வந்தார்.

‘நார்ப் பெட்டியிலிருந்து சிறிய சூட்டடுப்பை வெளியிலெடுத்தார். தெருவிலிருந்து பொறுக்கி எடுத்தத சிறுசிறு சுள்ளிகளும் ஓலைத் துணுக்குகளும் அடுப்பில் தீயாய்ப் புகைந்தன. அரிசியில் கல் பொறுக்கி, பொறுக்கிய நெல்லை எஞ்சியிருந்த ஒன்றிரண்டு பற்களுக்கிடையில் வைத்து கடித்துத் துப்பினார்.

கைஜா கருவாட்டைக் கொண்டு வந்தாள். உலைத் தண்ணீர் கொதிப்பது கண்டு, ‘இவ்வளவு நேரமா என்ன செய்துட்டிருந்தியோ தண்ணி கொதிக்கிது தெரியலயா?’

கிழவர் மனைவியைக் கடுத்துப் பார்த்தார். ‘கொதிக்கிற வென்னியை எடுத்துத் தலையில கொட்டுனே;, கண்ணுக்கு முன்னாலே நிக்காதே, போய்டு, அதிகாரம் பண்ண வந்துட்டாயாக்கும்.

‘தலையில் கொட்டுங்க பாப்போம்’

‘கொட்டுனா என்னடி செய்வா?’

‘அப்போ தெரியும்.’

‘என்ன தெரிஞ்சா?’

‘ஐயே, நாக்குக்க நீளம்’

கைஜா புருஷன் கையிலிருந்து அரிசியை வாங்கிப் புடைத்து உலையிலிட்டாள்.

கிழவர் தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டியிருந்தார். கிழிந்த துண்டு. அதை அவிழ்த்து முகத்தைத் துடைத்தார். மழை வலுத்து, அடித்து நொறுக்கியது.

செவிப்பறை கிழிந்துவிடும்போல இடிமுழக்கம். பொன் நாகங்கள் போன்ற மின்னல் கீற்றுக்கள் கண்ணின் கருமணியை கொத்திப் பிடுங்கி மறைந்தன.

வாரி வெள்ளம் குத்தி வீழ்கின்ற சப்தம், இடையிடையே சுழன்றடிக்கும் காற்று வாராந்தாவில் தண்ணீரை வாரி இறைத்தது. அடுப்புக் கல் நனைந்து தீ அணைந்தது. கிழவி குனிந்து தீயை ஊதினாள். கண்களில் புகையின் எரிச்சல்.

‘வெறெக்கூட்டி’ – கிழவரின் நாடி நடுங்கியது. இரண்டு துடைகளுக்கிடையில் கை குத்திக் கூனியிருந்தார். ‘நிய்க்கு வெறெக்கயில்லையா?’

‘அடுப்புக்கக் கிட்டயில்லையா இரிக்கேன். வெறெக்கல்ல. நீங்களும் இஞ்செ வந்து இரியுங்கோ.’
கிழவர் மனைவியை ஒட்டிச் சேர்ந்து இருந்தார். காதிலிருந்து ஒரு துண்டு பீடியை எடுத்துப் பற்ற வைத்தார். சுகமாக இரண்டு புகை நீட்டி இழுத்தார்.

‘கைஜா, நம்ம கல்யாண அண்ணு ராத்திரி மளயில்லியா?’
‘ஓர்மையுண்டாக்கும்’
‘பின்னே?’
‘அண்ணைக்கு நல்ல குளிரு இல்லியா?’
‘ஒனக்கும் ஓர்மையுண்டாக்கும்’
‘பின்னே?’
கிழவர் சிரித்தார். மின்னாட்டத்தில் மனைவியின் காவி படிந்த பற்களைக் கண்டார்.

அகப்பையை எடுத்து கஞ்சியை கலக்கி கொஞ்சம் பதம் பார்த்து, கஞ்சியை இறக்கி வைத்து, கனலில் கருவாட்டைச் சுட்டெடுத்தாள். கருவாட்டில் ருசி மிகுந்த மணம், கிழவரின் நாசித் துவாரங்களைத் துளைத்து வயிற்றின் ஆயிரம் நாவுகளை உயிரூட்டி..

கிழவர் பொறுமை இழந்தார். ‘ஊத்துடீ.. பசிக்குது’

முன்னால் நாலு காசுக்கு வாங்கிய மைபாட்டிலில் சரிப்படுத்திய விளக்கை எடுத்துப் பற்ற வைத்தாள் கிழவி. அதன் சிணுங்கிய ஒளியில் கஞ்சியை ஊதிஊதிக் குடித்தார்கள்.

தோல் தொங்கும் கழுத்தினூடே சுடு கஞ்சி ஆவேசத்தோடு இறங்கிற்று. கருவாட்டை ருசித்துக் கடித்தார். கஞ்சியில் சோற்றைக் கையால் துழாவினார்.

கிழவிக்குப் பொறுக்கவில்லை. தனது பாத்திரத்திலிருந்து கொஞ்சம் பருக்கையை அள்ளி கணவரின் பாத்திரத்தில் போட்டாள்.. ‘குடியுங்கோ’

‘ஒனக்கு’

‘எனக்கு இருக்கு’

சுடு கஞ்சி குளிர்ந்த உதரச் சுவர்களை சூடாக்கியபோது ஒரு இன்பம்.

குளிர்ந்து நடுங்க வைக்கும் சுற்றுப்புறச் சூழ்நிலையிலிருந்து கொஞ்ச நேரத்துக்கு மோட்சம் கிடைத்துவிட்ட பரமானந்தம்.

பற்களுக்கிடையில் ஒட்டி இருந்த கருவாட்டுக் கசிவுகளைக் குத்திக் கிளறி எடுத்து வாயிலிட்டு நுணைத்து ருசித்தார்.

‘கைஜா, ஒனக்கு வெறெக்குதா?’

‘இல்லே’

‘நம்ம கல்யான அண்ணு ராத்திரி ஆத்தியம் (முதலில்) நீயா, நானா பேசினது?’

‘மறந்து போச்சா?’

‘நீதான் பேசினா!’

‘ஐயே!’ கிழவி நாணினாள்.

‘நீங்கதானே எனக்க கையைப் பிடிச்சுக்கிட்டு, நிக்க பேரென்னான்னு கேட்டீயோ, தெரியாத மாதிரி!’
‘பின்னே நீ கதவுக்குப் பின்னால போய் மறஞ்சு நிண்ணது எதுக்குட்டீ?’

‘எனக்கு வெட்கமா இருந்தது’

‘இப்போ வெட்கமில்லியோ?’

‘ஓ, ஒரு புதுமாப்பிள்ளே!’ கிழவி காவி படிந்த பற்கள் தெரியச் சிரித்தாள்.

‘சாவும் வரை நம்ம புதியாப்பிள்ளை, புதியோண்ணுதாண்டி! புள்ள இல்லாத குறைதான் ஒரு குறை’

‘எந்த எந்தப் பள்ளிக்கெல்லாம் நேச்சை நேத்தோம் படைச்சவனே’

கைஜா கைகள் மலர்ந்தன, கண்கள் மேல் நோக்கி உயர்ந்தன.

‘நமக்கு என்னடீ கவலை, கவலை பணக்காரங்களுக்கு, நமக்கு இண்ணு மட்டும்தான் உண்டு. பணக்காரங்களுக்கு நாளையும், மற்ற நாளும் உண்டு. நமக்கு நேரம் விடியணும். விடிஞ்சா இருட்டணும் அவ்வளவுதான்!’

‘அந்த குடுகுடு மோட்டாரில் போனவங்களைப் பாத்தீங்களா?’

கிழவி கணவனோடு சேர்ந்து இருந்தாள்.

‘பார்த்தேன், ஒனக்கு வெறெக்குதா?’

‘ஓம்… அவ அவளுக்க புருஷன் வயித்தப் பிடிச்சிரந்ததைப் பாத்தீயளா?’

‘பாத்தேன்..இப்போ.. அது பஷ்காரம் (நாகரீகம்) வெறக்குதுன்னா சேர்ந்து இருந்துக்கோ’

வீட்டுப் படிகளுக்கு மேலே மழை வெள்ளம் பொங்கி ஒடியது. தூரத்தில் வயல் வெளியில் தவளைகளின் நீண்ட கரைச்சல்! மழை நிற்பதாகத் தெரியவில்லை. பலமாகப் பெய்தது.

‘என்னமா வெறெயல்!.. கிழவி கைகளை நெஞ்சோடு சேர்த்து கன்னத்தில் கை தாங்கி இருந்தாள். பற்கள் வெடவெடத்தன. ‘சிலுமாப் பெரைக்கு முன்ன வச்சிருந்த அந்தப் படத்தைப் பாத்தீயளா?’

‘பாத்தேன்’

‘அவள் அவன் நெஞ்சோடு சேந்து இறுக்கிப் பிடிச்சிருந்ததைப் பாத்தபோது எனக்கு வெக்கமா இருந்தது’

‘சிலுமா வந்துதான் இந்த நாடு ஹலாக்காச்சு’

‘நான் சொன்னது கேக்கலியா?’

‘கேட்டேன்’

‘அந்தப் படத்தைப் பாத்தப்போ எனக்கு வெக்கமா இருந்தது’

‘பின்னே ஏன் வுட்டீ அதப் பாத்தா?’

‘கண்ணிருந்தா பாக்கமாட்டாங்களா!’ கிழவி கிழவரின் சுருக்கு விழுந்த கன்னத்தில் செல்லமாக நோகாமல் கிள்ளினாள்.

அந்த ஸ்பரிசத்தில் கிழவரின் குளிர்ந்த நரம்புகள் சூடு தட்டியது. அந்தச் சூட்டின் அனுபவத்தில் அந்தச் சுருங்கிய உதடுகளின் சிரிப்பில் தெளி நீர் ஊறியது.

‘எனக்கு வெறெக்கு’

‘சேந்து இருந்துக்கோ!’

‘நம்ம கல்யாணம் நடந்து எத்தரு வருஷமாச்சு!’

‘அம்பது வருஷமாச்சு! அம்பது வருஷம் அஞ்சு வருஷம்போல கழிஞ்சு போச்சு’

கிழவரின் காய்ந்த கரம் கிழவியின் முதுகெலும்பினூடே பரவிப் படர்ந்தது.
கிழவரின் எலும்பு முட்டி நிற்கும் மார்பில் கிழவி தலை சாய்த்தபோது, நினைவு எங்கெங்கோ பயணமாயிற்று.

‘ஒனக்கு மரணத்த நினைச்சுப் பயமிருக்கா?’

‘நிங்களுக்கு முன்னாலே மரிச்சு நிங்க கையாலே என்ன அடக்கணும்’

‘ஒனக்கு முன்னே நான் மரிக்கணும்’

‘எனக்கு முன்னே நீங்க மரிக்கக்கூடாது’

‘நான் மரிப்பேன்’

‘மரணம் அவ்வளவு சொகமா?’

‘மரணம்தான் பரமசொகம். பணக்காரங்களுக்கு மரணம் பயங்கரமானது. கைஜா வெறெக்கா?’

‘ஊம்.. நம்ம ரெண்டு பேரும் இந்த ராத்திரியே சேந்து மரிக்கலாமா?’

‘மரிப்போம்’
கிழவர் சிரித்தார். ‘ஆண்டவன் தந்த ஹயாத்தை வாழ்ந்து முடிச்சிட்டு மரிப்போம். வாழ்க்கை அமானமாகும். மரணம்தான் நமக்கு சொந்த வகை.

‘வாழ்க்கையை வாழாம மரிப்பவனெல்லாம் மடப் பயலுவ. நன்னி கெட்டவனுவ.’

‘மரணம் வந்துட்டாலோ?’

சிரிச்சிட்டே மரிப்போம்’

ஒரு காற்று சுழன்றடித்தது. தூவானத்தில் இருவர் உடம்பும் நனைந்தது. குளிர் அதிகமாகியது.

‘கைஜா’

‘என்ன?’

ஒரு மின்னல் வெட்டிப் பறித்தது. உடனே இடி முழக்கம். முன்னால் இடி விழுந்ததுபோல! இருவரும் பயந்து நடுங்கினர். கிழவர் பிடி இறுகியது. கிழவி அந்தப் பிடியில் ஒடுங்கிக் கிழவரின் நெஞ்சோடு சேர்ந்து கிடந்தாள்.

காற்று ஓலமிட்டது. ஓலத்தில் விளக்கொளி செத்து மறைந்தது. மின்னொளியில் அருகே நின்றிருந்த தென்னை தலைகள் ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.

‘எனக்கு வெறைக்குது’ கிழவி நடுங்கினாள்.

‘கைஜா’

‘உம்’

‘நம்ம கல்யாண ராத்திரி ஞாபகமிருக்கா? அப்பம் நீ எனக்க கையப் பிடுச்சிட்டு சொன்னது ஞாபகமிருக்கா?’

‘ஞாபகமிருக்கி. மரணம் வரை பிரிஞ்சி வாழப்புடாது என்று சொன்னது ஞாபகமிருக்கா?’

‘ஞாபகமிருக்கி. மரணம் வரை பிரிஞ்சிவ hழப்புடாது என்று சொன்னது ஞாபகமிருக்கிது’

‘அப்போ நான் உன் கன்னத்தில் பிச்செடுத்தது ஞாபகமிருக்கியா?’

‘ஞாபகமிருக்கி’

கிழவியின் மடிப்பு விழுந்த கன்னத்தில் கிழவரின் கூர்த்த மூக்கு பதிந்தபோது சொர்க்கம் வெட்கித்து நின்றது.

அன்புக்கு முதுமை உண்டா?