Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,708 முறை படிக்கப்பட்டுள்ளது!

வேண்டாத பிள்ளை! – கதை

அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது மாடி வீட்டின் சன்னலோரம் உதுமான் அமர்ந்திருந்தார். எதிரே உள்ள தொடக்கப் பள்ளியின் வாசலருகில் வகுப்பு முடிந்து வரும் தம் குழந்தைகளை எதிர்பார்த்து பெற்றோர்களும், பணிப்பெண்களும் காத்திருக்கின்றனர். பள்ளி நேரம் முடிந்து குழந்தைகள் வரத்தொடங்கி விட்டனர். அவர்கள் ஒருவர் ஒருவராகவும் வருவார்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து உரக்கப் பேசி சிரித்துக் கொண்டும் வருவார்கள். சிலர் சோர்வாக வருவார்கள். களைப்பு முகத்திலேயே தெரியும். தனக்காக காத்திருக்கும் பெற்றோரை பார்த்த உடன் சடாரென ஒரு உற்சாகம் பிறக்க புத்தகப்பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஓடி வருவார்கள். பத்து, பதினைந்து நிமிடங்களில் அந்த இடம் காலியாகி விடும். பள்ளி நடக்காத, சனி ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களிலெல்லாம் மாலை வேளைகளில் இந்த குழந்தைகளை கண்டு மகிழ்வது உதுமானின் ஒரு முக்கிய பொழுது போக்கு. பள்ளி விடுமுறை நாட்களில் நேரம் போவது அவருக்கு பெரும் சிரமமாக இருக்கும். எப்படா மீண்டும் பள்ளி திறப்பார்கள் என்று காத்திருப்பார்.

‘காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது!’ என பெருமூச்சிட்டார் உதுமான். அவரது குழந்தைகளை இதே போல் பள்ளிக்கு அழைத்துச் சென்ற நாட்கள் அவர் நினைவிலாடியது. காலை நேர வகுப்பென்றால் ஏழு மணிக்கெல்லாம் பள்ளிக்குள் இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் வீட்டிற்கு அருகில்தான் இருந்தது. ஐந்து நிமிட நடை தூரம்தான். பிள்ளைகளின் புத்தகப்பைகள்தான் எவ்வளவு கனமாக இருக்கும்! கொஞ்சம் தாமதமாகி விட்டால் அந்தப் பையையும் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக விரைவார்கள். உதுமானும் அவர்களுடன் சேர்ந்து ஓட வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் அவரை எதிர் பார்க்காமல் சாலையை கடக்க இறங்கி விடுவார்கள். மாலையில் பள்ளி முடியும் நேரத்தில் அம்மா சல்மா போய் அவர்களை அழைத்து வருவாள். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு குர்ஆன் வகுப்பிற்கோ, டியூஷனுக்கோ போக வேண்டி இருக்கும். சல்மாவுக்குத்தான் அதிக அலைச்சல்.

உதுமானின் இரு மகள்களில் மூத்தவள் படபடவென்று வெகுளித்தனமாக பேசுவாள். மனதில் ஒன்றையும் மறைத்து வைக்கத் தெரியாது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் அந்த வெகுளித்தனம் மட்டும் மாறவேயில்லை. அவள் கணவருக்கு சவுதி அரேபியாவில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. புனித நகரான மக்காவுக்கு அருகில் உள்ள ஜித்தாவில் வேலை என்றதும் உடனே குடும்பத்துடன் புறப்பட்டு விட்டார்கள். உதுமானும், சல்மாவும் ஹஜ் யாத்திரை சென்ற போது அவர்கள் வீட்டில் போய் தங்கி விட்டு வந்தார்கள். அவர்களும் குடும்பத்துடன் இரண்டு வருடத்திற்கொருமுறை சிங்கப்பூர் வருவார்கள். மற்றபடி வாரம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பார்கள்.

சின்னவள் மூத்தவளைவிட நான்கு வயது இளையவள். அமைதியான சுபாவம். படிப்பில் கெட்டி. கணிணி படிப்பில் ஆர்வம் கொண்டு படித்தாள். அவளுக்கு அமைந்த கணவரும் கணிணி வல்லுனர்தான். இருவரும் தற்போது கனடாவில் இருக்கிறார்கள்.

சின்னவள் பிறந்தபோது உதுமான் ஒரு நாணயமாற்று வியாபாரியிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சுற்றுலாப்பயணிகள் அதிகம் நடமாடும் இடத்தில் கடை இருந்தது. காலை எட்டு மணிக்கு போனால் இரவு ஒன்பது மணி வரை கை ஓயாத வேலை இருக்கும். சம்பளம்தான் போதுமானதாக இல்லை. ஆனால் கிடைத்த சம்பளத்தில் பொறுப்பாக குடும்பம் நடத்தும் திறமை சல்மாவிடம் இருந்தது.

இரண்டாவது மகள் பிறந்து மூன்று மாதமே ஆன நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. சல்மா மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாக டாக்டர் சொன்னபோது உதுமானுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாதாரணமாக சந்தோஷப்பட வேண்டிய ஒரு செய்தி அவருக்கு அதிர்ச்சி அளித்ததென்றால் அதற்கு காரணம் இருந்தது. அப்போதைய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இன்னொரு குழந்தையை பெற்று வளர்க்க தம்மால் முடியுமா என்ற கேள்வி அவர் முன் விசுவரூபமெடுத்து நின்றது. அது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரசவம் நடந்திருக்க, இன்னொரு கர்ப்பத்தை சுமக்க சல்மாவின் உடல்நிலை இடங்கொடுக்குமா என்பதும் அவரை மிக குழப்பத்தில் ஆழ்த்தியது.

மிகுந்த யோசனைக்கு பிறகுதான் உதுமான் அந்த முடிவுக்கு வந்தார். கர்ப்பத்தை கலைத்துவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. சல்மாவுக்கு இதில் உடன்பாடே இல்லை. வேறு எதற்காகவும் அவள் தன் கணவருடன் இந்தஅளவுக்கு வாதிட்டதேயில்லை. ஆனால் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

சல்மாவுக்கு இருமுறை பிரசவம் பார்த்த அதே டாக்டரிடம் அழைத்துச் சென்று விஷயத்தை கூறினார் உதுமான். அவர்கள் மேல் அக்கறை கொண்ட அந்த டாக்டர் கர்ப்பத்தை கலைக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். உதுமான் வ்¢டாப்பிடியாக இருந்ததால் வேறு ஒரு டாக்டரிடம் பரிந்துரை செய்து அனுப்பி விட்டார்.

இந்த டாக்டர் ஒரு சீனர். உதுமான் சொன்னதை காது கொடுத்து கேட்ட டாக்டர் அவர் மேல் அனுதாபப்பட்டதாகத்தான் தோன்றியது. அதன் பிறகு கர்ப்பம் கலைப்பதைப் பற்றி அவர் விளக்கமாகச் சொல்லி ‘நிறைய ரத்தமெல்லாம் வெளியாகும்’ என்று சொன்னபோது உதுமானுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. ‘யாரும் செய்யாததையா நாம் செய்கிறோம்’ என்று ஒருவாறு சமாதானம் செய்து கொண்டார்.

பிறகு ஆபரேஷனுக்கு நாள் குறிப்பதற்காக ஒரு நர்ஸிடம் அவர்களை அனுப்பி வைத்தார் அந்த டாக்டர். அந்த தமிழ் நர்ஸ் சல்மாவின் முகவாட்டத்தைக்கண்டு விஷயத்தை ஒருவாறு விளங்கிக்கொண்டார் போலிருக்கிறது. சல்மாவிடம் அவர் ஆறுதலான தொனியில் பேச்சுக்கொடுத்தார். உதுமான் அந்த உரையாடலில் குறுக்கிடவில்லை. சல்மாவுக்கு இத்தகைய இதமான பேச்சு தேவைதான் என்று அவருக்கு தோன்றியது. ஆபரேஷனுக்கு தேதி குறித்தபின் அவர் சொன்னார், “இது நீங்க கணவன் மனைவி எடுக்க வேண்டிய முடிவு. இதுல நான் மூன்றாம் மனுஷி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனா, நல்லா யோசனை பண்ணிக்குங்க. ஒருவேளை மாறுதலான முடிவு எதுவும் எடுத்தீங்கன்னா இந்த தேதியில வராமெயே இருந்திடலாம். தேதி குறிச்சுட்டமே என்பதற்காக வர வேண்டியதில்லை.” உதுமான் மனதில் இப்போது கலக்கத்துடன் குழப்பமும் சேர்ந்து கொண்டது.

இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளில் தகுந்த ஆலோசனை வேண்டி உதுமான் நாடிச்செல்வது மெய்தீன் மாமாவிடம்தான். அவரை தொலைபேசியில் அழைத்து பேசியபோது தன்னையறியாமலே உதுமானின் குரல் தழுதழுத்தது. “ரொம்ப மனசைப் போட்டு குழப்பிக்கிட்டு இருக்காதே! நாளைக்கு உன்னை ஒருத்தர் கிட்டே அழைச்சுக்கிட்டு போறேன். உன் குழப்பம் தீர ஆலோசனை சொல்றதுக்கு சரியான ஆள் அவர்” என்றார் மெய்தீன் மாமா.

அடுத்த நாள் அவர் உதுமானை அழைத்துச் சென்றது ஒரு பள்ளிவாசல் இமாமிடம். சாந்தமான தோற்றம் கொண்ட பெரியவர் அவர். அஸர் தொழுகை முடிந்த பிறகு அந்த அமைதியான சூழ்நிலையில் அவரைச் சந்தித்தார்கள் அவ்விருவரும். உதுமான் அவரது பிரச்னையை விளக்கியபோது குறுக்கிடாமல் பொறுமையுடன் அவர் கேட்டுக்கொண்டிருந்த விதமே அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘இவர் எனக்கு ஒரு நல்ல லோசனை சொல்வார்’ என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டது.

பிறகு அந்த இமாம் சொன்னார், “தம்பி, நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லனும்னா, நான் கேட்கிற சில கேள்விகளுக்கு நீங்க எதையும் மறைக்காம உண்மையான பதிலை சொல்லனும். டாக்டர் கிட்டேயும், வக்கீல் கிட்டேயும் எதையும் மறைக்கக் கூடாதுன்னு சொல்வாங்க இல்லியா, அது போலத்தான் இதுவும்.”

“சரி” என்றார் உதுமான்.

“கர்ப்பத்தை கலைக்கணும்னு நீங்க நினைக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்ன?”

“அது.. வந்து.. இப்பத்தான் ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி பிரசவம் ஆகியிருக்கு. உடனே மறுபடியும் கர்ப்பம்னா உடம்பு தாங்குமாங்கிற கவலைதான்!” தன் குரலில் தயக்கம் இருந்தது அவருக்கே தெரிந்தது.

“இன்னொரு கர்ப்பத்தை தாங்க முடியாதுன்னு டாக்டர் யாரும் சொன்னாங்களா?”

“டாக்டர் அப்படி சொல்லலை. உண்மையைச் சொல்லப்போனா ‘கர்ப்பத்தை கலைக்காதீங்க’ன்னுதான் சொன்னாங்க”

சற்று நேரம் மவுனமாக அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இமாம் சொன்னார், “தம்பி! கொஞ்சம் நிதானமா யோசனை பண்ணிப் பாருங்க! உங்க மனைவி மேல நீங்க வச்சிருக்கிற அக்கறையினால ‘இன்னொரு கர்ப்பத்தை அவரால தாங்க முடியுமா?’ன்னு நீங்க கவலைப்படுறீங்க. ஆனா உங்களைவிட உங்க மனைவியின் உடல்நிலையைப் பற்றி நல்லா தெரிஞ்ச டாக்டர் ‘கர்ப்பத்தை கலைக்க வேண்டாம்’னு அறிவுரை சொல்றாங்களே! அவங்க சொல்றதுதானே நியாயமா தெரியுது! அதுக்கும்மேலே உங்களோட கவலைக்கு குர்ஆன் விளக்கம் கொடுக்குது பாருங்க…”

‘இதற்கெல்லாமா குர்ஆன் விளக்கம் கொடுக்கிறது!’ என எண்ணினார் உதுமான்.

“அல்லாஹ் எந்த ஒர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை’. ஒரு பெண்ணால அடுத்தடுத்து இரண்டு கர்ப்பங்களை சுமக்க முடியாதுன்னா அப்படி ஒரு கஷ்டத்தை ஆண்டவன் எந்த பெண்ணுக்குமே கொடுத்திருக்க மாட்டான். சரிதானே?” என்று சொன்ன இமாம், உதுமான் யோசனை செய்யட்டும் என்பதற்காகவோ என்னவோ சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

உதுமானுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. இருந்தாலும் அவர் இந்த முடிவுக்கு வருவதற்கு முக்கியமான காரணமான பொருளாதார சூழ்நிலைக்கு இவரால் என்ன தீர்வு அளிக்க முடியும்?

அவரது எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டது போல் இமாம் கேட்டார், “வேறு ஏதாவது பிரச்னை இருக்கா?” மிக தயக்கத்துடன் அவர் தனது பொருளாதார சூழ்நிலையையும், இன்னொரு பிரசவம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை தன் வருமானத்தைக்கொண்டு சமாளிக்க முடியாது என்பதாலேயே இந்த முடிவுக்கு வர நேரிட்டதையும் சுருக்கமாக சொன்னார்.

“தம்பி! உங்க நிலைமை எனக்கு புரியுது. இதுக்கு நீங்க உதவி கேட்கவேண்டியது இறைவன் கிட்டேதான். அந்த இறைவன் சொல்கிறான், ‘வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்’. இன்னும் பிறக்கவில்லை என்றால்கூட கர்ப்பத்தில் இருப்பதும் ஒரு உயிர்தானே!. அதுவும் உங்கள் குழந்தைதானே!.”

இதற்கு மேல் உதுமானுக்கு வேறு எந்த விளக்கமும் வேண்டியிருக்கவில்லை. ஆபரேஷனுக்கு குறிப்பிட்டிருந்த தேதியில் அவர்கள் மருத்துவமனைக்கு போகவில்லை. சல்மாவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

****
வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. உள்ளே வந்தது உதுமானின் மகன் அப்துல்லாதான். பட்டமேற்படிப்பு முடித்து ஒரு அரசு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறான்.

பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த உதுமான், சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதை கூட இவ்வளவு நேரம் உணரவில்லை. அவரது அருகில் வந்து ஆதரவாக அவரது தோளில் கை வைத்த அப்துல்லா அவரது முகக்குறிப்பை அறிந்தவனாக, “என்ன வாப்பா, டாய்லட் போகணுமா?” என்றான். அவனது கணிணி பையை கீழே வைத்துவிட்டு, சில ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட ஸ்ட்ரோக்கின் விளைவாக கை,கால்கள் உணர்விழந்து, பேசும் சக்தி இழந்து சக்கர நாற்காலியிலேயே காலத்தை கழித்துவரும் அவரை, கழிவறைக்கு நாற்காலியுடன் தள்ளிச்சென்றான். கழிவறை அருகில் வந்ததும் ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அவரை இருகைகளிலும் தூக்கிக்கொண்டு கழிவறையுள் நுழைந்தான். ஏதோ சொல்ல முயன்று முடியாமல் தவித்த உதுமானின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது.

(‘நம்பிக்கை’ ஜூன் 05 இதழில் வெளியான சிறுகதை, சிறு மாற்றங்களுடன்..)

நன்றி: கேள்விகளும் பதில்களும்