Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,348 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஷஅபான் மாதமும் முஸ்லீம்களும்

நம்மீது அருட்கொடைகளை பூர்த்தியாக்கி மார்க்கத்தை பரிபூரணபடுத்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! சாந்தியும் சமாதானமும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக!

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்;. (5:3)

அல்லது அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த்தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? (42:21)

அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; (28:50)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்த புதுமையான காரியம் நிராகரிக்கப்படும். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புஹாரி

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)கூறினார்கள். நூல் : முஸ்லிம்.

வேதத்தில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும் வழிகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களது வழியாகும் (மார்க்கத்தில்) புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு செயலும் பித்அத் ஆகும் ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். அறிவிப்பாளர்:ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்

மேலும் காண்க குர்ஆன் வசனங்கள் 3:31-32, 3:132, 4:14, 6:153, 7:33, 24:54, 24:63, 28:50, இது போன்ற அதிகமான வசனங்களும் நபி மொழிகளும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் திட்டமாக மார்க்கத்தை இந்த சமூகத்தின் மீது பரிபூரணபடுத்தி அவனது அருட்கொடைகளை பூர்த்தியாக்கி விட்டான் என்பதை விவரிக்கும் தெளிவான ஆதாரங்கள். சொல் செயல்களிலிருந்து இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் மார்க்க சட்டமாக்கிய ஒவ்வொன்றையும் தெளிவான முறையில் அறிவித்த பின்னரே நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். சொல் செயல்களிலிருந்து இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி மக்கள் செய்கின்ற ஒவ்வொரு புதுமையான பித்அத்களும் மறுக்கப்பட வேண்டும். அதன் நோக்கம் எவ்வளவு நன்மையாக இருந்தாலும் சரியே! நபி (ஸல்); அவர்களின் தோழர்களும் அவர்களுக்கு பின் வந்த இஸ்லாமிய அறிஞர்களும் பித்அத்களை வெறுத்தார்கள். அதை விட்டும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

குறிப்பாக ஷஅபான் மாதத்தில் 15வது இரவு விழா (பராஅத்) கொண்டாடுவது, பள்ளிவாசல்களையும், தெருக்களையும் மின் விளக்குகளால் அலங்கரிப்பது, அந்நாளில் நோன்பு வைப்பது, சிறப்பு தொழுகைகளை நடத்துவது, பள்ளிவாசலில் கூட்டாக அமர்ந்து ஃபாத்திஹா, மூன்று யாஸீன் ஓதுவது, கூட்டுப்பிரார்த்தனை செய்வது, அன்பளிப்புகளை வழங்குவது, தர்மங்கள் செய்வது, புத்தாடைகள் அணிவது, விருந்து வைபவங்கள் நடத்துவது… இது போன்ற அனைத்து செயல்களுக்கும் மார்க்கத்தில் உறுதியான எந்தவித ஆதாரங்களும் இல்லை. அந்நாளை சிறப்பிப்பது பற்றி வந்துள்ள அனைத்து ஹதீஸ்களும் பலஹீனமானவை இட்டுக்கட்டப்பட்டவை என்பதை அதிகமான மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இமாம் இப்னு ரஜப்(ரஹ்)அவர்கள் லதாயிஃப் அல் மஆரிஃப் என்ற நூலில் கூறுகின்றார்:

அதாஉ, இப்னு அபீ முலைக்கா, அப்துர்ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம், இமாம் மாலிக்கின் தோழர்களான மதீனாவின் ஃபுகஹாக்கள், ஹிஜாஸின் அதிகமான உலமாக்கள் (அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக!) ஷஅபான் மாதத்தின் 15வது இரவில் குறிப்பிட்டு இபாதத் செய்வதை வெறுத்திருக்கின்றனர். வழிகேடு என்பதில் ஒருமித்த கருத்தில் உள்ளனர்;. ஷஅபான் மாதத்தில் 15வது இரவு நபி ஸல் அவர்களோ ஸஹாபாக்களோ நின்று வணங்கியதாக அந்நாளில் நோன்பு நோற்றதாக எந்த ஆதாரமும் இல்லை.

இமாம் ஹாஃபிழ் அல் இராக்கி (ரஹ்)கூறுகின்றார்: ஷஅபான் மாதத்தில் 15வது இரவு குறிப்பாக தொழுவது வழிகேடு. ஆதாரம்:இமாம் இப்னு அல்ஜவ்ஸி(ரஹ்) அவர்களின் மவ்ழூஆத்

ஷாஃபி மத்ஹப் அறிஞர்கள் மத்தியில் 2 ஆம் ஷாஃபி என அறியப்படுகின்ற இமாம் நவவி (ரஹ்) அவர்கள் அல்மஜ்மூஃ என்ற புத்தகத்தில் கூறுகின்றார்கள்: ரஜப் மாதத்தின் முதல் ஜும்ஆ நாள் இரவு மஃரிபிற்கும் இஷாவிற்கும்; மத்தியில் 12 ரக்க அத்கள் தொழும் தொழுகையும் ஷஅபான் மாதத்தில் 15வது இரவு 100 ரக்க அத்துகள் தொழும் இந்த இரண்டு தொழுகைகளும் வழிகேடானவைகள் வெறுக்கப்படவேண்டியவகைள் ‘குவ்வத்துல் குலூப்’இ ‘யஹ்யா உலூமுந்தீன்’ போன்ற புத்தகங்களில் எந்தவிதமான ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் குறிப்பிடாமல் வந்திருப்பது யாரையும் ஏமாற்றிவிட வேண்டாம்.

நைலுல் அவ்தார் என்ற புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் இமாம் ஷவ்கானி (ரஹ்) தன்னுடைய அல்ஃபவாயிதுல் மஜ்மூஅ என்ற நூலில் கூறுகின்றார். ‘அலியே யார் ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் 100 ரக்கஅத்துகள் தொழுது ஒவ்வொரு ரக்கஅத்திலும் சூரத்துல் ஃபாத்திஹாவையும் சூரத்துல் இஃக்லாஸையும் 11முறை ஓதுகிறாரோ அவரின் எல்லா தேவையையும் அல்லாஹ் நிறைவேற்றுவான்;. இது இட்டுக்கட்டபட்ட ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர்கள் அறியப்படாதவர்கள்.

இறுதியாக…

குர்ஆன், ஹதீஸ் மற்றும் கண்ணியத்திற்குரிய இமாம்களின் கூற்றுக்களின் மூலம் ஷஅபான் மாதத்தின் 15வது இரவில் விழா (பராஅத்) கொண்டாடுவது பித்அத்தான வழிகேடான காரியம் என்பதை விளங்கி கொள்ள முடிகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தில் வணக்க வழிபாட்டிற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு

  1. அல்லாஹ்விற்காக அவ்வணக்கத்தை செலுத்த வேண்டும்.
  2.  நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவ்வணக்க வழிபாடு அமைய வேண்டும்.

இவ்விரண்டு அடிப்படையில் அமைந்தால் தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் முழுமையான கூலியை பெற்றுத்தரும். நன்மை என்று நினைத்து நபிவழிக்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு நரகம் செல்வதை விட்டும் நம்மை பாதுகாத்து கொள்வோம். சத்தியத்தை சத்தியமாக தெரிந்து அதை பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியமாக புரிந்து அதனை விட்டு விலகுவதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

உதவிய நூல்கள்: ஷேக் அப்துல்லா இப்னு பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபதாவா முஹிம்மா லிஉமூமில் உம்மா, ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் அவர்களின் அல் குத்பத்துல் மிம்பரிய்யா.

மௌலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி – இஸ்லாம்கல்வி

மேலும் அறிய‌

பராஅத் இரவு சம்பந்தமான ஹதீஸ்கள் பலவீனமானதா? – Audio/Video

ஷஅபான் மாத சுன்னத்துகளும், பித்அத்துகளும்! – Audio/Video

ஷஅபான் மாதத்தில் .. Video

“பராஅத்” இரவு ஹதீஸ்கள் எக்காரணங்களால் பலவீனப்படுகின்றன?

ஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்