Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,847 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேரம் பேசுதல்

இதுவும் ஒரு கலைதான்..

பேரம் பேசுதல்ங்கறது உண்மையிலேயே ஒரு கலை. சில பேர் அதுல ரொம்பவே கை தேர்ந்தவங்களா இருப்பாங்க. கடைக்காரங்க ஒரு விலை சொன்னா, டகார்ன்னு அதுல நாலுல ஒரு பங்கு விலையை, பொருளோட விலையா இவங்க சொல்லுவாங்க. தேர்தல் சமயத்துல மக்களோட இறங்கி வந்து பழகற அரசியல்வாதி மாதிரி கடைக்காரர் மெதுவா கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வருவார். நாலு ஓட்டு வெச்சிருக்கும் தெம்பிலிருக்கும் வாக்காளர் மாதிரி வாடிக்கையாளர் புடிச்ச புடியிலேயே இருப்பார். கடைசியில் “உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.. இதுக்கு மேல குறைச்சு வித்தாக் கட்டுபடியாகாதுங்க, இன்ன விலையே கொடுங்க”ன்னு பேரம் படியும். ஏதோ நிலாவுக்கே போயி அங்கே பாட்டி சுட்டு வெச்சுருக்கும் வடையை வாங்கியாந்த மெதப்புல வாடிக்கையாளர் நகர்வார்.

சமீபத்துல மும்பைக்குப் போயிட்டு திரும்பி வந்துட்டிருக்கறப்ப சிக்னல்கள்ல பொருட்கள் விக்கிற பையன் வெச்சிருந்த ஆல் இன் ஒன் சார்ஜரை எங்க டாக்சி ட்ரைவர் டகால்ன்னு அறுபது ரூபாய்க்குக் கேட்டார். அந்தப் பையரோ இருநூறு ரூபாயை விட்டு இறங்கி வரலை. பேரம் படியாம பொருளும் விக்கலை. வண்டி புறப்பட்டப்புறம், ‘இப்டி அறுபது ரூபாய்க்கு கேக்கறீங்களே எப்படி அந்தப் பையனுக்கு கட்டுப்படியாகும்?’ன்னு கேட்டாக்க, ‘எல்லாம் கட்டுப்படியாகும். அந்த சார்ஜரோட விலை உண்மையில் நூறு ரூபாய்க்குள்ளேதான்னு எனக்குத்தெரியும் அதான் அந்த விலைக்குக் கேட்டேன்’ன்னு பதில் வருது. கூடுதலா விலை சொல்லிட்டு அப்றம் குறைச்சுக்கற மாதிரி குறைக்கிறதுதான் இவங்க வியாபார தந்திரம். அண்ணாத்தை பேரம் பேசுன அழகைப் பார்த்துட்டு ஆண்களை விட பெண்கள்தான் நல்லா பேரம் பேசுவாங்கன்னு கேள்விப் பட்டிருந்த தகவலை மறுபரிசீலனை செய்ய வேண்டியதாப் போச்சுப்பா 🙂

தக்காளி கிலோ அஞ்சு ரூபாய்க்கு விக்கிற காலம் வந்தாக் கூட, “நாலு ரூபாய்க்கு வருமா?”ன்னு கேட்டு, அந்த ஒரு ரூபாயைக் குறைக்கிறதுக்காக ஒரு மணி நேரம் பேரம் பேசி, வாக்கு வாதம் செஞ்சு, கடைசியில் போனாப்போகுதுன்னு கடைக்காரர் விட்டுக் கொடுத்தாலும், “இவ்ளோ காய்கறி வாங்கியிருக்கேன், கொஞ்சம் கொத்தமல்லித் தழை கொடுத்தாத்தான் என்னவாம்?ன்னு பிச்சுப் பிடுங்கி வாங்கியாந்து சாம்பாரோ அல்லது ரசமோ வெச்சா அதோட ருசியே தனிதான். அப்பத்தான் அன்னிய சாப்பாடும் செரிக்கும். அதுவே, பேரம் பேசாம கேட்ட காசைக் கொடுத்துட்டு வந்தா, ஏதோ கடைக்காரர் நம்ம கிட்ட அதிக விலை வெச்சு வித்துட்ட மாதிரியே வீட்ல உள்ளவங்க லுக் விடுறது இருக்கே.. ஸ்ஸப்பா!!!

பொதுவா நாமெல்லாம் கோயிலுக்குப் போறப்ப, தரிசனம் முடிச்ச கையோட, “நீ எனக்கு இதையெல்லாம் தந்தா நான் உனக்கு இதையெல்லாம் காணிக்கையாத் தருவேன்”னுதானே பேரம் பேசுவோம். நம்மை விட நம்ம எதிராளிக்கு கூடுதல் லாபம் கிடைச்ச மாதிரி ஒரு தோணலை உருவாக்கணும். அதான் பேரத்தோட வெற்றி.

ஆனாலும் நம்ம மக்கள் எல்லா இடங்கள்லயும் பேரம் பேசுறது இல்லைதான். தங்க மாளிகைக்குள்ளே நுழைஞ்சு அவங்க சேதாரம், செய்கூலி, செய்யாத கூலின்னு எல்லாம் போட்டு முழ நீளத்துக்கு நீட்டுற பில்லை மறு பேச்சு இல்லாமக் கட்டிட்டு வெளியே வர்ற நாம வெளியே உக்காந்துருக்கற பழ வியாபாரி கிட்ட மட்டும் அடி மாட்டு விலைக்குக் கொடுக்கச் சொல்லிப் பேரம் பேசுறோம். பழ வியாபாரி கிட்டன்னு மட்டுமில்லை எப்பவுமே அடிமட்ட வியாபாரிகள் கிட்ட மட்டுமே பேரம் பேசுறதுதான் நம்ம வழக்கம். வழக்கம்ன்னு இருந்தா அதை மாத்திக்கப்டாது இல்லியா அதனால, பெரிய நகைக்கடைகள் துணிக்கடைகள்ல நாம பேரம் பேசுறதேயில்லை. அதுவே சின்ன அளவுல நடக்குற சில நகைக்கடைகள்ல அவங்க குடும்ப நண்பர்களுக்கு மட்டும் பேரம் பேசுற சலுகை வழங்கப்படுது.

கால்நடைகளை விக்கிறதுக்காக சந்தைக்குக் கொண்டாந்துருக்கறவங்க பேரம் பேசுற விதமே சுவாரஸ்யமாயிருக்கும். மத்த வியாபாரங்களை மாதிரி இது வாயால் பேசப்படறதில்லை. விக்கிறவர் வாங்குறவர் ரெண்டு பேரோட கைவிரல்களுக்கு மேல ஒரு துண்டைப் போட்டு மூடி மறைச்சுக்குவாங்க. துண்டுக்கடியில் எதிராளியின் விரல்களைப் பிடிச்சு, தொடுகையின் மூலம் விலை நிர்ணயிக்கப்படுது. இதுல அவங்க அடுத்தவங்களுக்குப் புரியாத மாதிரி சில சங்கேத குறிச்சொற்களையும் உபயோகப் படுத்துவாங்களாம்.

சிறு வியாபாரிகளில் காய்கனி விக்கிறவங்க பாடுதான் பரிதாபம். பெய்ஞ்சும் கெடுத்து பெய்யாமலும் கெடுக்கற மழை இவங்க வாழ்க்கையில் நல்லாவே விளையாடிருது. அதிக விளைச்சல் கண்டு மார்க்கெட்டில் சீப்படும்போது, அந்தப் பொருளோட விலை டகார்ன்னு குறைஞ்சு, போட்ட கொள்முதலாவது கிடைச்சுருமான்னு அவங்களை ஏங்க வெச்சுருது. அதுவே குறைவான விளைச்சல் சமயம் தட்டுப்பாடு ஏற்பட்டு, யானை விலை குதிரை விலைக்கு விக்க ஆரம்பிக்குது. சமீபத்துல கிலோ ஐம்பது ரூபாய்க்கும் மேல வெங்காயம் வித்ததை யாரும் மறந்துருக்க மாட்டீங்கதானே. இந்த மாதிரி சமயங்கள்ல வாடிக்கையாளர்கள் கிட்ட அதிகமாப் பேரம் பேசாம அவங்க கேட்ட விலைக்கு கொடுத்துட்டு வெறுங்கையோட நிக்க வேண்டியதிருக்கு.

“தீதீ.. இது கச்சா வியாபாரம். மத்த பொருட்கள் மாதிரி வெச்சிருந்தோ, விலை கூடுறவரைக்கும் பதுக்கியோ வெச்சு விக்க முடியாது. மிஞ்சிப்போனா மறு நாள் வரைக்கும் வெச்சுருக்கலாம், அவ்ளோதான். அப்படியும் விக்கலைன்னா எல்லாத்தையும் தூக்கிப் போடவேண்டியதுதான். வாடிப்போன காய்களையும் அழுகிப்போன பழங்களையும் யாரு வாங்குவாங்க சொல்லுங்க?.. அதனால கேட்ட விலைக்குக் கொடுத்துக் காலி செய்யறதைத்தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை. சில சமயம் கை நட்டம் ஆகும்தான். என்ன செய்யறது?”ன்னு எனக்குத் தெரிஞ்ச அந்தப் பழக்காரம்மா புலம்புனப்ப பாவமாத்தான் இருந்துச்சு.

அலைக்கற்றை, பீரங்கி, நில பேரங்களைத் தூக்கிச் சாப்பிடுற மாதிரியான, சமுதாயத்தையே சீரழிக்கிற மாதிரியான ஒரு பேரம் நம்ம சமுதாயத்துல ரொம்ப காலமாவே நடந்துட்டிருக்குது. காதல் திருமணமோ, பெத்தவங்க முடிவு செஞ்சு நடத்தி வைக்கிறதோ எதுவாயிருந்தாலும் சரி, வரதட்சணைங்கற பேரம் படிஞ்சாத்தான் நடக்கும். “எவ்ளோ செய்வாங்க?” என்ற மூலக் கேள்வியோடத்தான் பொண்ணு பார்க்கும் படலம் ஆரம்பிக்குது. அந்தப் பொண்ணோட தகுதிகளைவிட அவங்க வீட்டோட வசதி வாய்ப்புகளே அதிகம் பார்க்கப்படுது. இந்த வாய்ப்புகளும் பேரம் பேசறப்ப கணக்கில் கொள்ளப்படுது.

“’வசதியானவர்தானே.. இன்னும் ஒரு பத்துப் பவுன் போடலாமில்லே…’
‘வேற யாருக்குச் செய்யறீங்க.. எல்லாம் உங்க பொண்ணுக்கும் மருமகனுக்கும்தானே,..’
‘அவங்களுக்கென்ன ஆம்பிளைப் பிள்ளையா இருக்கு. எல்லாம் பொண் குழந்தைகளுக்குத்தானே. அதை இப்பவே செஞ்சுடட்டுமே. நாளைக்கு கொடுப்பாங்கன்னு என்ன நிச்சயம்..”.

இதெல்லாம் பேரத்துல தன்னோட கை ஓங்கியிருக்க மாப்பிள்ளை வீட்டாரால் சொல்லப்படும் பாயிண்டுகள். இதுவே பெத்தவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணாப் பொறந்துட்டா பேரம் பேசப்படறதில்லை. எல்லாமே நாளைக்கு தானா வந்து சேர்ந்துருமாம். இந்த பேரத்துல சில பொண்ணைப் பெத்தவங்களோட பங்கும் இருக்கறதை மறுக்கறதுக்கில்லை. வரதட்சணை கேக்கலைன்னா பையனுக்கு ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறவங்களும் இருக்கத்தானே செய்யறாங்க.

மனுஷனோட தினப்படி வாழ்க்கையில் அவன் பேரம் பேசாத இடமே இல்லைன்னு சொல்லலாம். பிறந்த குழந்தையை சொந்தக்காரங்க கிட்ட உடனே காட்டுறதுக்காக ஆஸ்பத்திரியிலும் பேரம் பேசப்படுதுன்னு சொல்லிக்கிறாங்க. அதுலயும் ஆண்குழந்தைன்னா தனி ரேட்டாம். இந்தப் பேரம் பேசும் படலம் அந்தக் குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடத்துக்குப் போயி படிக்க ஆரம்பிக்கறப்பயும், “நீ இவ்ளோ மார்க் எடுத்தா நான் உனக்கு இன்னது வாங்கித்தருவேன்”னு ஆசை காட்டுறவரையிலும், தொடருது. இதெல்லாம் லஞ்சமாச்சேன்னு நினைக்கலாம். அந்த லஞ்சம் எவ்வளவுங்கறதை நிர்ணயிக்கிறதுலதான் பேரம் இடம் பெறுது.

பொறந்து, வளர்ந்து, படிச்சு, வேலைக்குப்போயி, நல்ல சம்பளம் வாங்கி, கல்யாணம் கட்டிக்கிட்டு, குடும்பம் நடத்தி, தன்னோட சந்ததியைப் பெருக்கி, வேலையிலிருந்து ஓய்வு கிடைச்சு, கடைசியில் இறுதியாத்திரை வரைக்கும் ஒவ்வொரு கட்டத்துலயும் கூடவே வர்றதுனால, உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியா மனுஷனோட அத்தியாவசியங்களில் ஒண்ணா பேரம் பேசும் கலையையும் சேர்த்துக்கலாமா??..  ஏன்னா, வாயுள்ள புள்ளைதான் பிழைக்கும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.

நன்றி:-அமைதிச்சாரல்