Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,108 முறை படிக்கப்பட்டுள்ளது!

அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா

மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) ஜாமி வுல் உமவீ மஸ்ஜித் இமாமாகவும், தாருல் ஹதீதுஸ்-ஸகரிய்யா பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இவரின் பாட்டனார் அபுல் பரகாத் மஜ்துத்தீன அப்துஸ்ஸலாம் இப்னு தைமிய்யா (ஹி-652) ஹன்பலி மத்ஹபின் சிறந்த மார்க்க மேதையயாகவும் விளங்கினார். ஆறு ஆண்டுகள் பக்தாதில் கல்விச்சேவை புரிந்த இவர் எழுதிய ஹதீதுத்தொகுப்பாகிய அல்மந்திகிய்யு மின் அஹாதீதுல் அஹ்காம் என்ற நூலும், அல்-வஸிய்யத்துல் ஜாமிஆவும் இவரின் புகழ் வாய்ந்த நூல்களாகும்

இளமை
இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டுவிட்டார். இமாம் ஸீபவைஹின் இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறு வயதிலேயே அபார நினைவாற்றலைப் பெற்றிருப்பதை அறிந்த ஓர் அறிஞர் இவரது பலகையில் 13 நபிமொழிகளை எழுதி அதனை ஒரு தடவை படித்ததும் மனனமாகச் சொல்லுமாறு கேட்டார். அடுத்த கணமே ஒப்புவித்த இவரிடம் மீண்டும் ஒருமுறை அதே போல் வேறு சில நபிமொழிகளை எழுதிச் சோதித்தார். முன்புபொலவே இதிலும் சிறுவர் வெற்றியடைந்ததும் இச்சிறுவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பின் இவர் உலகில் ஒப்பாரும் மிக்காருமின்றி சிறந்த அறிஞராக விளங்குவார் என்று முன்னறிவுப்புச் செய்தார்.

நினைவாற்றல்
இவர் அறிந்த ஒன்றை ஒருபோதும் மறந்ததில்லை. இவர் 200க்கு மேற்பட்ட ஹதீஸ் கலை இமாம்களிடம் பாடம் பயின்றிருக்கிறார். இவருக்கு ஹதீதுக்கலையில் இருந்த அறிவாற்றலைக் கண்டு அறிஞர் இப்னுல் வர்தீ”குல்லு ஹதீதின் லா யஃரிபு ஹு இப்னு தைமிய்யா ஃபலைஸ பிஹதீஸின்” – “இப்னு தைமிய்யா அறியாத ஹதீஸ் ஹதீஸே அல்ல” என்று போற்றுகின்றார்.

திருக்குர்ஆன் பற்றி தாம் ஒரு நூறு விளக்கவுரைகள் படித்துள்ளதாகவும் ஏதேனும் ஒரு திருவசனத்திற்கு விளக்கம் தெரியவில்லையாயின் தாம் காடுகளுக்குச் சென்று தம் தலையை தரையில் வைத்து ஸுஜூது நிலையில் , இறைதூதர் இப்றாஹீம்(அலை)அவர்களுக்கு வழி காட்டிய இறவா!எனக்கும் இந்த திருவசனத்திற்கு தெளிவைத் தருவாயாக என்று இறைஞ்சி வந்ததாகவும் இவர் கூறுகின்றார்.

பிரச்சாரம்
கி.பி.1282ல் தமது 22-வது வயதில் இவரின் தந்தையார் இறந்ததும் அவர் வகித்த பேராசிரியர் பதவியில் நியமிக்கப்பட்டார். பதவி ஏற்றதும் இவர் ஆற்றிய முதற் சொற்பொழிவே மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. “அவ்வாண்டில் நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சி” என்று அதனை வரலாற்றாசிரியர் இப்னு கதீர் வர்ணிக்கிறார்.

அப்பதவியில் பதினேழு ஆண்டுகள் இருந்து பணி புரிந்தார். தமது வகுப்புகளிலும் மக்கள் மன்றங்களிலும் இஸ்லாத்தின் தூய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் துணிவுடன் எடுத்துரைத்தார். “பித்அத்”என்னும் அனாச்சாரங்களையும் இஸ்லாத்திற்-கெதிரான பொய்பிரச்சாரங்களையும் முறியடிப்பதில் முனைப்புடன் செயல்பட்டார். இவரிடம் இறைவனின் சில இயல்புகளையும் பண்புகளையும் பற்றிச் சிலர் கேள்வி கேட்க அவற்றிற்கு இவர் அளித்த ஆணித்தரமான பதில் ஷாபியாக்களையும், அஷ்அரியாக்களையும் கொந்தளித்துக் குமுறுமாறு செய்தது.

தீரச்செயல்
ஹி 699-ல் தார்த்தாரியர்கள் (சிரியா) திமிஷ்கின் மீது படையெடுத்து வந்தனர். அப்போது இவர் அவர்களை வாக்காலும் வாளாலும் எதிர்த்து நின்றார். மக்களை புறமுதுகிட்டு ஓடாது வீராவேசத்துடன் போர் புரியுமாறு தூண்டினார். உலமாக்கள், ஃபுகஹாக்கள் தலைமையில் மக்களை ஒன்று திரட்டி போர் பயிற்சி, அம்பெய்தும் பயிற்சி அளித்து போரிலே ஈடுபடுமாறு செய்து தாமும் கலந்து கொண்டார். இவரின் தீரச்செயல்களை வரவேற்று மக்கள் ஒத்துழைப்பு நல்கி பெரிதும் கௌரவித்தனர்.

துணிச்சல்
எகிப்து மன்னர் முஹம்மது காலாவூன் தார்த்தாரியர்களை எதிர்த்து நின்ற போதிலும் போரில் தோற்று வெருண்டோடினார். இக்காலை புதிதாக இஸ்லாத்தை ஏற்று மஹ்மூது என்னும் பெயர் சூடிய செங்கிஸ்கானின் பேரன் காஸானை சந்தித்து குர்ஆன் ஹதீஸ் போதனைகளை எடுத்தோதி முஸ்லிம்களின் உயிரை வீணேகொல்ல வேண்டாமென்று ஆணித்தரமாக வாதிட்டார். அப்போது இத்துணை பெரிய தைரியசாலியை இதுவரை நான் பார்த்ததில்லை என்று வியந்தார் காஸான். இவரை தம்முடன் உணவுண்ண காஸான் அழைத்தபோது அநியாயமாக கொள்ளையடிக்கப்பட்ட பொருளைத் தாம் உண்ணமுடியாது என இவர் மறுத்து விட்டார். அதன்பின் காஸான் தமக்காக பிரார்த்திக்குமாறு வேண்ட, இறைவா! காஸான் உன்னுடைய மார்க்கத்தை காப்பதற்காக வாளெடுத்திருப்பின் அவருக்கு உதவி செய்வாயாக. இல்லையேல் நீ விரும்பியவாறு செய்து கொள்! என்று பிரார்த்தித்தார். இதைக்கேட்டு அவருடன் சென்றவர்கள் நடுங்கிய பொழுது காஸான் அதற்கு ஆமீன் கூறிக்கொண்டிருந்தார். அதன்பின் தமது 300 பிரதானிகளை அழைத்து திமிஷ்கில் விட்டுவருமாறு மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.

சமயோசித ஆலோசனை
ஹி702 ரமளானில் மீண்டும் தார்த்தாரியர்கள் திமிஷ்கின்மீது படையெடுத்தபோது இவர் எகிப்து சுல்தான் இப்னு கலாவூனை படைதிரட்டி வருமாறும் அவருக்கு இம்முறை இன்ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்குமென்றும் இறைவன் மீது ஆணையிட்டுக் கூறி, துன்புறுத்தப்பட்டவனுக்கு இறைவன் உதவுவான் என்னும் பொருளில் வரும் திருமறையின் 22:60 வசனத்தை ஓதிக்காட்டினார். ரமளான் பிறை 2ல் நடைபெற்ற இப்போரில் முஸ்லிம்களை நோன்பை விட்டுவிடுமாறு கூறி நோன்பு திறக்க இவர் உணவும் வழங்கினார். இந்த ஃபத்வாவுக்கு ஆதாரமாக நாளை நீங்கள் எதிரியை எதிர்த்து நிற்க வேண்டியதிருக்கும். அப்போது நீங்கள் நோன்பில்லாதிருந்தால்தான் எதிரியுடன் வன்மையாகப் போராட முடியும். என்று நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கிக் கூறியிருப்பதாக இவர் சொன்னார். இப்போரில் இவர் கூறிய வண்ணமே எகிப்து சுல்தான் வெற்றி பெற்றார். தார்த்தாரியர் புறமுதுகிட்டு ஓடினர்.

சீர்திருத்தங்கள்
யூத கிறித்தவ சகவாசத்தால் முஸ்லிம்களிடையே ஊடுருவியிருந்த பழக்கவழக்கங்கள், அனாச்சாரங்கள், பித்அத்துகளை களைவதில் முழு மூச்சாக ஈடுபட்டார். திமிஷ்கின் அருகில் குலூத் நதி தீரத்தில் உள்ள ஒரு கற்பாறைக்கு மக்கள் தெய்வீகத் தன்மை கற்பித்து அங்கு இறையருள் வேண்டி சென்று வருவதைக்கண்ட இவர் கல்வெட்டும் தொழிலாளர் சிலரை அங்கு அழைத்துச் சென்று அதனை வெட்டி துவம்சமாக்கி அப்பழக்கத்திற்கு சாவுமணி கட்டினார்.

ஒருவர் நகங்களையும் தலை மயிரையும் நீளமாக வளர்த்து பறவைகளின் இறக்கைகளால் உடை அணிந்து கொண்டும், குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டும் ஆபாசச் சொற்களை வீசிக்கொண்டும் ஹிப்பியைப் போல் திரிவதைக் கண்ட இவர், அவனை அழைத்து பக்குவமாக உபதேசம் செய்து அவனை முழுமையாக மாற்றி புதுமனிதராக்கினார். மற்றொருவர் கனவுக்கு விளக்கம் கூறுவதில் வல்லவர் எனக்கூறி ஏய்த்துப் பிழைத்து வருவதைக் கண்டு அவ்வழக்கத்தை விட்டொழிக்குமாறு ஆணையிட்டார் இவர்.

மார்க்கத்திற்கு எதிரான பாத்தினீ, நுளைரீ, இஸ்மாயிலீ முதலான சில வகுப்பார் குன்றுகளிலும் காடுகளிலும் வாழ்ந்து இஸ்லாத்தின் விரோதிகளுக்கு உதவிவருவதைக் கண்டு மனம் கொதித்து சுல்தானின் படையுடன் அவர்கள் மீது போர்மேற்கொண்டார். காடுகளில் போய் அவர்கள் பதுங்கிக் கொள்வதை அறிந்த இவர் காடுகளிலிருந்த மரங்களை வெட்டி வீழ்த்துமாறு கூறி பனூ நதீர்கள் மீது நபி (ஸல்)அவர்கள் படையெடுத்துச் சென்றபோது இவ்வாறு செய்துள்ளார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

சத்திய முழக்கம்
இவ்வாறு எங்கெல்லாம் ஆகாப் பழக்கங்களைக் கண்டாரோ அங்கெல்லாம் துணிச்சலோடு சென்று அவற்றை அகற்றினார் இவர். இதனால் இவருக்குப் பல எதிரிகள் ஏற்படலாயினர். குர்ஆன் ஹதீஸின் படி முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டுமென்று இவர் முழங்கி வந்தது இவருக்குப் பல ஆதரவாளர்களைத் தேடித்தந்த போதினும் அதைவிட அதிகமாக எதிரிகளையும் உண்டு பண்ணியது. எனினும் தமது சத்தியப்போதனைகளிலிருந்து ஒருபோதும் இவர் பின்வாங்கவே இல்லை. இப்னு அரபியின் வஹ்தத்துல் உஜூது கொள்கையை இவர் வன்மையாக தாக்கிய பொழுது இவரை எகிப்துக்கு வருமாறு சுல்தானிடமிருந்து கண்டிப்பான கட்டளை வந்தது. மர்க்கவிற்பன்னர்கள், அரசாங்க அதிகாரிகள் நிரம்பிய அம்மன்றத்தில் இவரது நியாயமான வாதத்தை யாரும் கேட்கத்தயாராக இல்லை. இவரையும் இவரது சகோதரர்களான ஷர்புத்தீன் அப்துல்லாஹ்வும், ஸைனுத்தீன் அப்துர்ரஹ்மானும் சிறையில் தள்ளப்பட்டனர்.

சிறையிலும் கொள்கைப்பிரச்சாரம்
சிறையிலும் இவர் தம் கொள்கைப் பிரச்சாரத்தை விடவில்லை. இவர் சென்ற சில நாட்களில் சிறைக் கூடம் முழுவதும் பிரச்சார மடமாக காட்சிவழங்கியது. இவரின் மாணவர்களாக மாறிய கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பொழுதுகூட விடுதலை வேண்டாமென்று கூறிச்சிறையிலேயே இவருடன் இருந்து கொண்டார்கள். இவர் தம்முடைய பிரச்சாரத்தை விட்டுவிடுவதாகக்கூறின் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.  அதற்குப்பதிலாக இச்சிறையே எனக்குப் போதுமானது என்று கூறிவிட்டார் இவர்.

சூபித்துவ-தரீக்காக் கொள்கைகளை உடைத்தெறிந்தார்

ஹிஜ்ரி 707 ரபீவுல் அவ்வல் 23ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட இவர் கெய்ரோவிலுள்ள மத்ரஸா ஸாலிஹிய்யாவிலும் ஏனைய கல்விக்கூடங்களிலும் சொற்பொழிவாற்றினார். பிற்காலத்தில் தோன்றிய சூபித்தத்துவம் இந்தோ-கிரேக்க தத்துவமேயாகும் என்றும் அது ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் கூறினார். சூபிகளெல்லாம் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்க, ஷெய்கு இப்னு அதாவுல்லாஹ் இஸ்கந்தரி என்னும் சூபி வழக்குத்தொடர இவர் ஷவ்வால் மாதம் 8ஆம் நாள் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். இதன் பின் விடுதலை செய்யப்பட்ட இவர், அங்கு நிலவி வந்த ஸப்யீனிய்யா தரீக்காவை உடைத்தெறிந்து அதில் சேர்ந்திருந்த பலரைத் தம் கொள்கையை ஏற்குமாறு செய்தார்.

எதிரிகளுக்கும் மன்னிப்பு
ஹிஜ்ரி 709ல் நாஸிர் இப்னு கலாவூன் அரியணை ஏறியதும் இவரை கெய்ரோ வரவழைத்து மிகவும் மரியாதையுடன் வரவேற்றார். இவரது எதிரிகளுக்கெல்லாம் தலைவெட்டும் தண்டனை விதிப்பதாக சுல்தான் கூறிய போது அவர்களையெல்லாம் எப்போதே மன்னித்துவிட்டேன் என்று கூறினார். இதன் பிறகு இவருடைய விரோதிகள் இவரது பிச்சார வேகத்தைத் தடைசெய்ய முடியாது போகவே இவரை அடித்து உதைத்து உடலில் பலத்த காயத்தை ஏற்படுத்தியனார்கள். அப்போது பழிவாங்க எண்ணிய தமது ஆதரவாளர்களிடம் அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம் எனத் தடுத்துவிட்டார். இவ்விதம் தனக்குத் துன்பங்கள் விளைவித்த எதிரிகள் அத்தனைபேரையும் மன்னித்த நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

போர்படையில் பங்கேற்பு
ஹிஜ்ரி 712ல் தார்த்தாரியர்கள் திமஷ்கின்மீது படையெடுத்து வந்தபோது சுல்தானுடன் படையில் சேர்ந்து இஸ்லாத்திற்காக வீரப்போர் செய்து உயிர் நீக்க வீரும்புவதாகக் கூறி போரிடச்சென்றார்.

பிரச்சாரத்தில் முழுக்கவனம்
மார்க்க விசயங்களில் கவனம் செலுத்திய இவர் மூன்று தலாக் விசயத்தில் – ஒரே நேரத்தில் கூறும் மூன்று தலாக் செல்லுபடியாகாது என்று – கூறிய கருத்து மார்க்க அறிஞர்களின் எதிர்ப்பை மீண்டும் ஈட்டித்தந்தது. இதனால் சிறையில் தள்ளப்பட்டு ஐந்து மாதங்களும் பதினெட்டு நாட்களும் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஹிஜ்ரி 721 முஹர்ரம் 10ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார்.

கப்று வணக்கத்திற்கு எதிராகக் குரல்
ஹிஜ்ரி 726 வரை மத்ரஸா ஹன்பலிய்யாவிலும், கஸ்ஸாஸீனிலிருந்த தமது சொந்த பாடசாலையிலும் குர்ஆன், ஹதீஸ் வகுப்புகள் நடத்தி வந்தார்கள். இந்தவேளையில் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பெரியார்களின் கப்ருகளுக்கும், நபி(ஸல்) அவர்களுடைய கப்குக்கும் தரிசிப்பதையே நோக்கமாகக் கொண்டு செல்லக்கூடாது என இவர்கள் வழங்கிய ஒரு ஃபத்வாவை வைத்து எதிர்பாளர்கள் பெரும் கிளர்ச்சி செய்யவே மீண்டும் ஹி.726 ஷஃபான் 7ஆம் நாள் இவர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதை அறிந்ததும் நான் எதிபார்த்தது நடந்து விட்டது. மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதனால் எனக்கு மிகுந்த நன்மையே ஏற்படும் என்று புன்முறுவலோடு கூறினார்.

சிறையிலிருந்தே நாடுமுழுவதும் எழுத்துப்பிச்சாரம்
திமிஷ்கில் இவர் சிறையில் தள்ளப்பட்டபோது இவரது சகோதரர் அப்துர்ரஹமான் இப்னு தைமிய்யாவும் மாணவர் ஹாபிள் இப்னு கைய்யூமும் உடனிருந்தனர். சிறையில் வைத்து இவர் எழுதியவை யாவும் பிரதி செய்யப்பட்டு நாடு முழவதும் பரத்தப்பட்டன. இதையறிந்த அரசாங்கம் அவையாவையும் பறிமுதல் செய்தது. இவரிடம் இருந்த கையெழுத்துப் பிரதிகளும் இவர் எழுதப்பயன்படுத்திய காகிதம், எழுதுகோல் மைக்கூடு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டன. ஆனால் இவரோ அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாது தமக்குக் கிடைத்த காகிதங்களில் தமது கருத்துகளை கரிதுண்டால் எழுதி வந்தார். இப்போராட்டத்தை இவர் ஒரு ஜிஹாத் என்றே கருதினார்.

சீர்திருத்தச் செம்மலின் மறைவு
சிறையிலிருக்கும் போது திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியதோடு எண்பது தடவை ஓதி முடித்தார். எண்பத்தொன்றாவது தடவை ஸூரத்துல் கமர் ஓதத்துவங்கி 54:54,55 வசனமாகிய இன்னல் முத்தகீன ஃபீஜன்னத்தின் வநஹர் ஃபீ மக்அதி ஸித்கின் இந்த மலீகின் முக்ததிர் நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள். மெய்யாகவே மிகவும் கண்ணியமிக்க இருப்பிடத்தில் ஆற்றல்மிக்க அரசனிடத்தில் (இருப்பார்கள்). என்ற வசனத்தை ஓதிவரும்பொழுது இவருடைய ஆவி உடலைவிட்டும் பிரிந்தது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 728 துல் கஃதா பிறை 2 இரவாகும். அப்போது இவருக்கு வயது 67. இவருடைய ஜனாஸா தொழுகையில் இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவருடைய ஜனாஸா தொழுகை பல்வேறு நாடுகளிலும், நெடுந்தொலைவிலுள்ள எமனிலும், சீனாவிலும்கூட நிகழ்த்தப்பட்டது.

புரட்சிகரமான நூல்கள்
இவர்கள் 500 நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். அவற்றுள் மஜ்மூஉல் பதாவா, (மஜ்மூஅத்துல் ஃபதாவா இப்னு தைமிய்யா 20 பாகங்களில் இன்றும் கிடைக்கின்றன) அல் வாஸிதிய்யா, தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி, நக்ளுல் மந்திக், மின்ஹாஜுஸ் சுன்னத்திந் நபவிய்யா. தப்ஸீர் இப்னு தைமிய்யா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவர்களின் மாணவர்கள்

  • 1. இமாம் ஹாபிள் இப்னு கையிமில் ஜவ்ஸிய்யா (ரஹ்)
  • 2. இமாம் ஹாபிள் அல்-முஃபஸ்ஸிர் இப்னு கதீர் (ரஹ்)
  • 3. இமாம் ஹாபிள் அல் முஹத்திஸ் ஷம்ஸுத்தீன் அத்தஹபீ (ரஹ்)
  • 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் எகிப்தில் தோன்றிய அல்மனார் சீர்திருத்த வாதிகளும் இவரைப் பின்பற்றியவர்களேயாவார்கள்.

(குறிப்பு: இவர்களின் சத்திய முழக்க வரலாறு பிரச்சாரகர்களுக்கு சிறந்த பாடமாகும் இத்துணை மாண்புக்குரிய பெருமேதையைத் தூற்றுவோரும் வரலாற்றில் உண்டு. இவர்களைப்பற்றிய பாடநூலோ அறிமுகமோ இந்திய மத்ராஸாக்கள் எதிலும் இல்லாதது வியப்புக்கும் வேதனைக்குமுரியதாகும்.)

நன்றி: அல்பாக்கவி.காம்