Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,744 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரமளான் இரவு வணக்கங்கள்

புனித ரமளான் மாதத்தில் தனியாக விஷேசமான வணக்கங்கள் ஏதேனும் உள்ளனவா? உள்ளன என்றால் அவை யாவை? இதனை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும். ஏனெனில் புனித ரமளானில் நாம் செய்யும் ஒவ்வொரு நல்லமல்களுக்கும் ஒன்று முதல் 700 மடங்கு நன்மைகளை இறைவன் தருவதாக நபி(ஸல்) அவர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு மகத்துவமிக்க முக்கியமான இத்தினங்களில் நாம் செய்யும் செயல்களின் அடிப்படை நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தவை தானா என அறிந்து செய்வது மிகவும் அவசியமானதாகும்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு வணக்கத்தைச் செய்ய வேண்டுமெனில் அதனை நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க வேண்டும். இல்லையேல் அது வணக்கமாக இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வணக்கத்தில் ஃபர்ள், சுன்னத் என இரு வகைகள் இருக்கின்றன. இதில் ஃபர்ள் முஸ்லிம்கள் அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற இறைவனால் கட்டளையிடப்பட்டவையாகும். சுன்னத் என்பது நபி(ஸல்) அவர்கள் கட்டாயக் கடமையல்லாத அமல்களாக செய்துக் காட்டியவைகளாகும்.

புனித ரமளான் மாதத்தில் நோன்பு வைப்பதும், நாள் தோறும் ஐவேளை தொழுவதும் கட்டாயக் கடமைகளாவன. இவையன்றி சுன்னத்தான வணக்கங்களாக ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்கு முன்னும் பின்னும் சில தொழுகைகளை நபி(ஸல்) தொழுது காண்பித்துள்ளார்கள். இவையன்றி ரமளான் மாதத்தில் பிரத்தியேகமான எந்த ஒரு வணக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டித் தரவில்லை(“இஃதிகாப் தவிர”).

புனித ரமளான் இரவு வேளைகளில் நின்று வணங்குவதற்கு நபி(ஸல்) அவர்கள் அதிகமாக ஆர்வமூட்டியுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் உள்ளன. ஆயினும் ரமளானில் செய்வதற்கென்று நபி(ஸல்) அவர்கள் பிரத்யேகமான வணக்கம் எதையும் கற்றுத் தரவில்லை. அவர்களும் பிரத்யேகமாக எந்த வணக்கத்தையும் செய்யவில்லை

இன்று முஸ்லிம் சமூகத்தில் ரமளான் மாதத்தில் மட்டும் தொழ வேண்டிய தொழுகையாக பாவித்து தராவீஹ் என்ற தொழுகை முஸ்லிம்களில் பெரும்பாலோரால் தொழப்படுவதை காணமுடிகிறது. இவ்வாறான ஒரு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டியிராத பட்சத்தில் அதனைத் தொழுவதால் நன்மை கிடைக்குமா என்ற கேள்வி ஒரு புறமிருக்க நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு வணக்கத்தை இஸ்லாத்தின் பெயரில் செய்து இஸ்லாத்தில் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தும் ஒரு மாபெரும் குற்றத்தை செய்தவர்களாக ஆகும் அபாயமும் இருக்கிறது. எனவே தான் இம்மாதத்தில் அவ்வாறு விசேஷமான தொழுகைகள் ஏதாவது உண்டா என அறிய வேண்டியது அத்தியாவசியமாகிறது.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘என் கண்கள்தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) நூல்கள்: புகாரி, 3569. முஸ்லிம், 1343.

ரமளானில் விசேஷமான தொழுகை ஏதும் உண்டா என்பதை அறிந்து கொள்வதற்காக அபூஸலமா அவர்கள் கேள்வி கேட்கின்றார். ரமளானுக்கென்று விசேஷமான தொழுகை ஏதுமில்லை என்று ஆயிஷா(ரலி) அவர்கள் விடையளிக்கின்றனர். சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் தொழுவது தான் சிறந்தது என அறிவுறுத்திய நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான இரவு வணக்கத்தை அவர்களின் மனைவியர் தவிர மற்றவர்கள் அதிகம் அறிந்திருக்க இயலாது.

ரமளான் அல்லாத நாட்களில் நபி(ஸல்) அவர்கள் என்ன தொழுதார்களோ அதைத்தான் ரமளானிலும் தொழுது வந்துள்ளனர். அதைவிட அதிகமாக எதையும் தொழுததில்லை என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.

இத்தொழுகையானது இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடும் இரவுத் தொழுகையான (ஸலாத்துல் லைல்) தஹஜ்ஜுத் தொழுகை பற்றியதாகும். அதைத் தான் இன்று ரமளானின் இரவுகளில் தராவீஹ் தொழுகை என்ற பெயரில் பரவலாக முஸ்லிம்கள் தொழுது வருகின்றனர். சிலர் தராவீஹ் தொழுகை வேறு தஹஜ்ஜுத் தொழுகை வேறு என்றும் தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்திற்கே உரிய விசேஷமான தொழுகை என்றும் விளக்கம் கூறுகின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வாதமாகும். ஏனெனில் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியே ரமளான் தொழுகை பற்றித்தான். கூரிய மதி படைத்த அவர்கள், ரமளானில் விஷேசத் தொழுகை கிடையாது என்பதை “ரமளானிலும் அல்லாத காலங்களிலும்” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதை இங்கே கவனிக்க வேண்டும்.

இந்த பதினோரு ரக்அத்கள் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகைதான் என்றும் தராவீஹ் தொழுகை ரமளானில் தொழும் விஷேச தொழுகை என்றும் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ரமளானுக்கு என்று தனியாக தொழுகைகள் இல்லை என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன

ரமளான் இரவுத் தொழுகை
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை நபி (ஸல்) எங்களுக்குத் தொழுகை நடத்த வில்லை. இருபத்தி மூன்றாம் நாள், இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழ வைத்தார்கள். அதன்பிறகு (சில நாட்கள்) தொழ வைக்கவில்லை. ரமளானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தம் குடும்பத்தினரையும், மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவுக்கு நீண்ட நேரம் தொழ வைத்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா).

ஸஹர் நேரம் தவறிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அவர்கள் தொழுகை நடத்தியுள்ளார்கள், இஷா முதல் ஸஹர் வரை நபியவர்கள் ஒரேயொரு தொழுகையை தொழுதிருக்கிறார்கள் என்றால் அது தஹஜ்ஜுத் தொழுகைதான் என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவையில்லை. ஏனெனில் நம்மைப் பொருத்தவரை சுன்னத்தான தஹஜ்ஜுத் தொழுகை என்பது நபிகள் நாயகம் அவர்கள் தவறாமல் (ரமளான் அல்லாத காலங்களிலும்) நிறைவேற்றி வந்த ஒரு தொழுகையாகும். இந்தத் தொழுகையை விடுத்து நபி(ஸல்) அவர்கள் மற்றொரு சிறப்பான தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள் என எவரும் கூற முன் வரமாட்டார்கள்.  இதிலிருந்து ரமளானுக்கென்று தனியாக ஒரு தொழுகையை அவர்கள் தொழவில்லை என்பதை இது தெளிவாக விளக்குகிறது.

உமர்(ரலி) அவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமளானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம். மக்கள் பல்வேறு குழுக்களாக இருந்தனர். சிலர் தனியாகவும், வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர். உமர்(ரலி) அவர்கள் “இவர்களை ஒரே இமாமின் பின்னே தொழுமாறு நான் ஏற்பாடு செய்வது நல்லது” என்று எண்ணி அவ்வாறு செயல்படுத்தினர். உபை பின் கஃபு (ரலி) அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள். பின்பு மற்றோரு இரவு பள்ளிக்கு வந்து மக்கள் ஒரே இமாமைப் பின்பற்றித் தொழுவதைக் கண்டார்கள். “இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது. இப்போது தொழுதுவிட்டுப் பிறகு உறங்குவதைவிட உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி ).

உமர்(ரலி) அவர்களின் இந்தக் கூற்றும் ரமளானுக்கு என்று விஷேசத் தொழுகை எதுவும் கிடையாது என்பதை அறிவிக்கிறது. “இப்போது தொழுதுவிட்டு உறங்குவதைவிட, உறங்கிவிட்டு இரவின் இறுதியில் தொழுவது சிறந்தது” என்ற அவர்களின் கூற்றிலிருந்து இத்தொழுகை இரவின் இறுதிப்பகுதியில் நபிகள் நாயகம் தொழுது வந்த தஹஜ்ஜுத் தொழுகை என்பதனையும் விளங்கலாம். “இரவின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே தொழுகைதான். ஆரம்ப நேரம் ஒரு தொழுகை, இறுதி நேரம் ஒரு தொழுகை” என்று இரண்டு தொழுகைகள் கிடையாது என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அன்றாடம் இரவு தொழுதுவரும் தஹஜ்ஜுத் தொழுகைதான் ரமளானிலும் உள்ளது. ரமளானுக்கென்று தனித் தொழுகை எதுவும் கிடையாது என்பது இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது.

மேற்கண்ட ஹதீஸில் உமர்(ரலி) அவர்கள் உபைத் பின் கஃப் (ரலி) அவர்களை இமாமாக நியமித்ததாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக மற்றொரு ஹதீஸில்,

உபைத் பின் கஃப் (ரலி) அவர்களையும் தமீமுத் தாரி (ரலி) அவர்களையும் மக்களுக்கு 11 ரக் அத்துகள் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: முஅத்தா).

உமர் (ரலி) அவர்கள் 11 ரக் அத்கள் தொழ வைக்குமாறு இமாமை நியமனம் செய்தது 20 ரக்அத் கொண்ட தராவீஹ் என்ற தனித்தொழுகை கிடையாது என்பதைத் தெளிவாக்குகிறது.

அப்படி என்றால் ரமளானுக்குரிய சிறப்பு என்ன என்ற கேள்வி எழலாம். எல்லா நாட்களிலும் இந்தத் தொழுகையைத் தொழவேண்டும் என்றாலும் ரமளானில் இந்தத் தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. “யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்நோக்கியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன” என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

இது போன்ற ஹதீஸ்கள் யாவும் ரமளானில் நின்று வணங்குவதில் ஆர்வமூட்டுகின்றன. நபி (ஸல்) அவர்கள் பதினோரு ரக் அத்துகளைக் கொண்டு சில வேளைகளில் இரவு முழுவதும் நின்று வணங்கியுள்ளதால் அவ்வாறு வணங்குவதையே அது குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் 11 ரக் அத்துகளே நின்று வணங்கியுள்ளதால் அதையே நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்

இரவுத் தொழுகையின் நேரம்
இந்தத் தஹஜ்ஜுத் தொழுகையின் நேரம் இஷா முதல் ஃபஜர் வரையிலும் ஆகும். இரவின் கடைசி நேரத்தில் தான் தொழ வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. எனினும் இரவுத் தொழுகையைப் பொறுத்தவரை தூங்கி எழுந்து தொழுவதே சிறப்பானதாகும். இரவில் தூங்கி தொழுகைக்கு எழுவதில் பல சிறப்புக்களும் பயன்களும் உள்ளன. திருக்குர்ஆனில் இறைவன்,

நிச்சயமாக இரவில் (தொழுகைக்காக) எழுவது மனமும், நாவும் இணைந்திருக்க மிக்க ஏற்றதும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும். (அல் குர்ஆ ன் 73:6) என்று கூறுகிறான். ஏற்றுக் கொள்ளப்படும் தொழுகைக்கு மனம் ஒருநிலையில் இறைவனை நினைத்திருப்பது அவசியமானதாகும். இரவில் தூங்கி எழுந்து தொழுபவருக்கு இது சாத்தியமாகின்றது.

மேலும்,

இரவின் மூன்றாம் பகுதியில் ஏழாம் வானத்திலிருந்து பூமியின் (முதல்) வானத்திற்கு இறங்கி வந்து, “என்னிடம் கேட்பவர் யார்? கேட்பவருக்கு கொடுக்க நான் காத்திருக்கிறேன்” என இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதிலிருந்து தூங்கி எழுந்து இரவின் பிற்பகுதியில் தொழுவதின் சிறப்பை மேற்கண்ட குர்ஆன்-ஹதீஸ் சான்றுகளில் இருந்தே இதனை நாம் அறிந்து கொள்ள இயலும்.

தனியாகவும் தொழலாம், ஜமாஅத் ஆகவும் தொழலாம்:

நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இந்தத் தஹஜ்ஜுத் தொழுகையை ஒரு ரமளானில் ஜமாஅத்துடன் தொழுதுள்ளனர். இதனால் மூன்று நாட்கள் மட்டுமே ஜமா அத்தாக தொழ வேண்டும் என்று கருதி விடமுடியாது. ஏனெனில், மூன்று நாட்களுக்குப் பின் ஜமாஅத்தை அவர்கள் விட்டு விட்டதன் காரணத்தை அவர்களே தெளிவாக்கியுள்ளார்கள்.

மூன்று நாள் ஜமாஅத்தாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தொழுகையை தொழ வைத்ததைக் கேள்விப்பட்ட மதீனாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவரும் நான்காம் நாள் மஸ்ஜிதுந்நபவியில் பெருமளவில் கூடிவிட்டனர். ஆனால் ஃபஜ்ருத் தொழுகை நேரம்வரை நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்க வரவில்லை. பின்னர் ஃபஜ்ருத் தொழுகை முடிந்தபின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடியிருந்தவர்களை நோக்கி, “இத்தொழுகை கடமையாகக் கருதப்பட்டுவிடுமோ என்று அஞ்சியே நான்காம் நாள் ஜமாஅத் தொழுகை நடத்த நான் வரவில்லை” என்று கூறினார்கள். எனினும் இத்தொழுகையை ஜமாஅத்துடன் தொழ எந்தத் தடையும் இல்லை.

நபி (ஸல்) அவர்களது காலத்திற்குப் பின் மார்க்கத்தில் எதுவுமே கடமையாக முடியாது என்பதால் எல்லா நாட்களும் ஜமாஅத்தாக தொழலாம். எனவே தஹஜ்ஜுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவது நபி வழிக்கு மாற்றமானதன்று. ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்காலத்தில் மக்கள் கடமையான தொழுகைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக முக்கியத்துவத்தை ரமளான் இரவு நேரத்தில் பள்ளியில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு கொடுக்கின்றனர். கடமையான தொழுகைக்குப் பள்ளிக்கு வருவதில் அசட்டையாக இருந்தாலும் இத்தொழுகைகளை தவறவிடாமல் மிக்க சிரத்தையுடன் தொழுவதற்குப் பள்ளிக்கு விரைகின்றனர்.

இத்தகைய மனோபாவம் மாற்றப்பட வேண்டியதாகும். கடமையான தொழுகையில் அசட்டையாக இருந்து கொண்டு மற்ற எந்த அமல்கள் செய்தாலும் அவை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை.

பல நபி மொழிகள் மற்றும் செய்திகளிலிருந்து நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இதனைத் தனியாகவும், ஜமாஅத்தாகவும் தொழுதுள்ளனர். ஜமாஅத்தை இதற்கு வலியுறுத்தவில்லை என்பதால் ஜமாஅத்தாக தொழக்கூடாது என்று பொருள் கொள்ளாமல், ஜமாஅத்தாகவும் தொழலாம், தனியாகவும் தொழலாம் என்று பொருள் கொள்ள வேண்டும்

இரவுத் தொழுகையின் ரக்அத்கள்
நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய முதல் ஹதீஸின்படி தராவீஹ் அல்லது தஹஜ்ஜுத் தொழுகையின் ரக்அத்துகள் எட்டு மற்றும் வித்ரு மூன்று ரக்அத்கள் என்பது தெளிவாகிறது. வேறு சில ஹதீஸ்களில் இதைவிட அதிக எண்ணிக்கையும் மற்றும் சில ஹதீஸ்களில் இதைவிடக் குறைந்த எண்ணிக்கையும் கூறப்படுகின்றது. அந்த ஹதீஸ்களிலேயே அதற்கான விளக்கமும் கிடைக்கின்றது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் 20 ரக்அத்துகள் தொழுதார்கள் என்பதற்கோ மற்றவர்களை 20 ரகத்துகள் தொழ ஏவினார்கள் என்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லவே இல்லை.

வித்ருஒருரக்அத்தொழும்போதுஎட்டுரக்அத்துகளைப்பத்துரக்அத்களாகவும்நபி(ஸல்) அவர்கள்தொழுதிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவில்பத்துரக்அத்கள்தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள். பஜ்ரு உடையசுன்னத் இரு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதிமூன்று ரக்அத்களாகும்
என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்கள்வித்ருதொழுகையை ஒன்பது ரக்அத்கள் தொழுதால்அத்துடன் போதுமாக்கிக்கொள்வார்கள். தனியாக எட்டு ரக்அத்கள் தொழுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அப்போது எட்டு ரக்அத்கள் தவிர அதற்குமுந்தைய ரக்அத்தில் உட்காரமாட்டார்கள். அதன்பின் ஒன்பதாம் ரக்அத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தநிலையில் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆகமொத்தம் பதினொன்று ரக்அத்துக்களாகும். நபி(ஸல்) அவர்கள் வயோதிகம் அடைந்த பிறகு ஏழு ரக்அத்துகள் தொழுது விட்டு பிறகு உட்கார்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். ஆகமொத்தம் ஒன்பது ரக்அத்துகள்
என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது. வேறொரு விதமாகவும் அவர்கள் இதே எண்ணிக்கையை தொழுதுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள்எட்டுரக்அத்துகள்தொழுவார்கள். பின்னர்ஒருரக்அத்வித்ருதொழுவார்கள். முதுமைஅடைந்தபோதுஒருரக்அத்வித்ருதொழுவார்கள். பின்னர்உட்கார்ந்துஇரண்டுரக்அத்கள்தொழுவார்கள்
என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.

மிக அதிகமாக அவர்கள் பன்னிரண்டு ரக்அத்களும் தொழுதிருக்கிறார்கள். அதன் பிறகு வித்ரு தொழுதிருக்கிறார்கள். (13 ரக்அத்கள்)
நபி(ஸல்) அவர்கள்இரண்டுரக்அத்கள், பின்இரண்டுரக்அத்கள், பின்இரண்டுரக்அத்கள், பின்இரண்டுரக்அத்கள், பின்இரண்டுரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், பின் வித்ரு தொழுவார்கள் (13 ரக்அத்கள்)(சுருக்கித்தரப்பட்டுள்ளது)
என்று இப்னுஅப்பாஸ் (ரலி) அறிவிக்கக்கூடிய ஹதீஸ் நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.

மற்றோர் அறிவிப்பில் மொத்தம் பதின்மூன்று ரக்அத்கள் (ஃபஜ்ர் சுன்னத் நீங்கலாக) தொழுததாக உள்ளது. இதன் மூலம் பனிரெண்டு ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழும்போது வித்ரு ஒரு ரக்அத் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

பனிரெண்டு ரக்அத்களை அவர்கள் தொழுத விபரம் விரிவாகவும் இன்னொரு ஹதீஸில் கூறப்படுகிறது. (13 ரக்அத்கள்)
முதலில் இரண்டு ரக்அத்களை சிறிய அளவில் தொழுவார்கள். பின்னர் நீண்ட, மிக நீண்ட அளவில் இன்னும் இரண்டுரக்அத்கள் தொழுவார்கள். அதைவிடவும்சிறியதாகஇன்னும்இரண்டுரக்அத்கள்தொழுவார்கள். பின்புஇரண்டுரக்அத்கள்தொழுதுவிட்டுஒருரக்அத்வித்ருதொழுவார்கள் (13 ரக்அத்கள்)
என்று ஸைத் இப்னு காலித் அல் ஜுஹனீ(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.

வித்ரையும் சேர்த்து நபி(ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை. குறைந்த பட்சம் வித்ரையும் சேர்த்து ஒன்பது ரக்அத்களுக்கும் குறைவாக இரவில் தொழுததில்லை. இந்த எண்ணிக்கையை விடக் குறைப்பதும், இதைவிடக் கூட்டுவதும் நபி வழிக்கு மாற்றமானதாகும்.

20 ரக்அத்களும், வித்ரு மூன்று ரக்அத்களும் என்று வாதிடுவோர்களுக்கு நபி வழியில் ஒரு ஆதாரமும் இல்லாத போது, உமர்(ரலி) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அவர்கள் 20+3 ரக் அத்கள் தொழுததாக, அல்லது தொழ வைத்ததாக – தொழும்படி ஏவியதாக கதை புனைந்துள்ளனர். உமர்(ரலி) அவர்கள் இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்பதற்கோ, தொழ வைத்தார்கள் என்பதற்கோ ஒரு ஆதாரமும் இல்லை.

உபை இப்னு கஃபு(ரலி), தமீமுத்தாரி (ரலி) ஆகிய இரு நபித் தோழர்களையும் பதினோருரக்அத் தொழ வைக்குமாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டதாகத்தான் சான்று உள்ளது. (முஅத்தா) இப்படி உமர்(ரலி) அவர்கள் 11 ரக்அத்கள் தொழ வைக்கக் கட்டளையிட்ட செய்தி தெளிவாக இருக்கும் போது, நபி வழிக்கும் இதுவே பொருத்தமாக அமைந்திருக்கும் போது இதை ஏற்பதே அறிவுடைமையாகும்.

உமர்(ரலி) காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுதார்கள் என்ற கருத்தில் வருகின்ற செய்திகள் யாவும் குறைபாடுடைய செய்திகளாகும். ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை ஏற்றுக் கொண்டால் கூட அவர்களின் தெளிவான கட்டளை 11 ரக்அத்கள் என்பதைப் பறை சாற்றும் போது அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதை எப்படி ஏற்க இயலும்? அவர்களின் மேற்கண்ட கட்டளை இல்லாவிட்டால் வேண்டுமானால் அவர்களின் காலத்தில் நடந்ததை அவர்கள் நடத்தியதாக நம்ப இடமிருக்கும். அவர்களின் கட்டளை, அவர்களின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படுவதற்கு மாற்றமாக இருக்கும்போது எப்படி உமர்(ரலி) அவர்களுடன் இதை சம்பந்தப் படுத்த முடியும்?

தவறான கருத்துகள்:
•        எட்டு ரக்அத்கள், வித்ரு மூன்று ரக்அத்கள் தொழுவதற்குப் பதிலாக 20 ரக்அத்களும் வித்ரு மூன்றும் தொழுவது.
•        இந்த தொழுகையில் முழுக் குர்ஆனையும் ஓதியாக வேண்டும் என்று நம்புவது; அதற்காகநிறுத்தி நிதானமாக ஓதாமல் அவசர அவசரமாக ஓதுவது.
•        சபீனா என்ற பெயரில் ஒரே இரவில் முப்பது ஜுஸ்வையும் ஓதி குர்ஆனுடன் விளையாடுவது.
•      தமாம் செய்தல் என்ற பெயரில் தொழுகையில் இல்லாத வாசகங்களை தொழுகையினூடே சேர்ப்பது. ஒவ்வொரு, இரண்டு ரக்அத்களுக்கு இடையே

குறிப்பிட்ட சில திக்ருக்களை கூறுவது. தமிழகத்தின் சில ஊர்களில், இவ்வாறு சில திக்ருகளை குறிப்பிட்ட சிலர் பெருங்குரலெடுத்து ஓதுவதும் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும் நடக்கிறது.

ரமளான் இரவுகளில் இஷாவுக்குப் பின், ஃபஜ்ருக்கு முன் குறைந்த பட்சம் 7, அதிக பட்சம் 13 ரக்அத்கள் தொழுவது தான் சுன்னத் (நபிவழி) என்று கூறுங்கள். 20 ரக்அத் தொழுவதற்கு ஆதாரப்பூர்வ நபிவழியில் அடிப்படை இல்லை.

7 முதல் 13 வரை ரக்அத் எண்ணிக்கையையே செயல்படுத்துங்கள்; அவை முடிந்தபின் அவரவர் வீடுகளில் இயன்றவரையில் தொழுங்கள்.
உபரியான (நஃபிலான) தொழுகைக்கு எண்ணிக்கை நிர்ணயம் செய்யாதீர்கள். (2, 2, ………. ரக்அத்கள் தொழுவது)

அல்லாஹ் மிக அறிந்தவன்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்