9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் “துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.
“……மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும். எந்த ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் – ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு – கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் – வேலாயுதன் பணிக்கச்சேரி – பக்கம் 70)
“துஹ்பத்துல் முஜாஹிதீன்” என்ற நூலில் வரும் மேல் குறிப்பிட்டுள்ள வாசகங்களையே எல்லோரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். “மலபாரில் முதன்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்” என்ற முதல் வாசகத்திற்கும், பிறகு வரும் வாசகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பாராவின் துவக்கத்தில் மேல்குறிப்பிட்ட முதல் வாசகத்தை முடித்துவிட்டு அதே பாராவிலேயே பிற வாசகங்களையும் கொடுத்துள்ளார்.
அவருடைய மலையாள மொழிபெயர்ப்பு நூல்களில் (வேலாயுதன் பணிக்கச்சேரி பக்.57-70, கே.மூஸ்ஸான் குட்டி மெளலவி பக்.8-14) சேரமான் பெருமாள் (கி.பி.825) மக்கா சென்றதையும், மாலிக் இபுனுதினார் கேரளாவில் வந்து பள்ளிவாசல்கள் கட்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறிவிட்டு, ‘மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்’ என்ற அந்த வரலாறை முடிக்கிறார். ஆனால் அன்றைய (கி.பி.1583-ல் இறப்பு) வழக்கமாக இருக்கக்கூடும், அல்லது தவறுதலாகவும் இருக்கலாம், வேறு ஒரு கருத்தை சொல்லும் பாராவின் முதல் வாசகமாக இது வந்துவிட்டது. ஒரு பாராவிலுள்ள கடைசி வாசகம் தவறுதலாக அடுத்த பாராவின் முதல் வாசகமாக அச்சாகிவிட்டது. (அடுத்த இதழில் மொழிபெயர்ப்பு தருகிறேன்)
சேக் சைனுத்தீன் மகுதூம் அவர்களுடைய கருத்துப்படி கி.பி.825-க்குப் பிறகுதான் இஸ்லாம் இங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறிஞர் வாழ்ந்த காலம் 16வது நூற்றாண்டு. எந்தவித வரலாற்றுத் தடயங்களும் கிடைக்க வாய்ப்பில்லாத காலம். அதனால் தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பின் இஸ்லாம் இங்கு தோன்றிய ஆண்டைப் பற்றி தமக்கு திட்டவட்டமாக சொல்ல இயலாது என்று குறிப்பிடுகிறார். ஹிஜிரி 200க்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவருடைய சொந்தக் கருத்தல்ல. பெரும்பான்மையோரின் கருத்து என்று கூறுகிறார்.
சேக் சைனுத்தீன் வரலாற்று ஆசிரியர் அல்ல, ஒரு மார்க்க அறிஞர். கி.பி.1498 முதல் 1582 வரை போர்ச்சுகீசியர் கேரளாவில் அவிழ்த்து விட்ட நீசச் செயல்களைக் கண்டு குமுறி அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதம் ஏந்திவர முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், பிஜப்பூர் சுல்தானான அலி ஆதில்ஷா உடைய உதவி பறங்கிகளுக்கெதிராக சாமூதிரிக்கு கிடைக்க செய்வதற்காகவும் இயற்றியதாகும் இந்நூல். (மகுதூம் நூல்கள் – பேராசிரியர் எ.பி.பி.நம்பூதிரி, ‘மாத்தியமம்’ மலையாளம் ஆண்டு மலர் – 1988 பக்.62)
இது வரலாற்று நூலாக எழுதியது அல்ல. ஆனால் அன்றைய வரலாற்று உண்மைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அவருக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளாரே தவிர, இதை ஒரு வரலாற்று நூலாக் எழுதவில்லை என்பதுதான் உண்மை.
துஹ்பத்துல் முஜாஹிதீன்(ரஹ்) அவர்களுடைய ‘துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்’ (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்று கூறுகின்றனர்.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் “பள்ளி பாண பெருமாள்” என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் “இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் “சேரமான் பெருமாள்” என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.
இதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.
“ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது.” (தென் இந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.
“இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது”
திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:
கேரளாவிலுள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.
எழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது ‘தடை’ எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.
பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் “கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.
தொடரும்..
நன்றி: தோப்பில் முஹம்மது மீரான் – மக்கள் உரிமை வாரஇதழ்