மழைக் காலம்… குளிர் காலம்… என்று வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால்தான் திருப்தி! அது, முழுக்க முழுக்க நம் உடலுக்கு நன்மை தருவதாக இருந்தால்… டூ இன் ஒன் மகிழ்ச்சிதானே! இதோ… சுண்டியிழுக்கும் சுவை ப்ளஸ் ஆரோக்கிய குணம் இரண்டும் கொண்ட 30 வகை சூப்கள் இங்கே அணிவகுக்கின்றன.
”பசியைத் தூண்டும் குணம் கொண்டது சூப். இவற்றையெல்லாம் வீட்டிலேயே தயாரித்து நீங்கள் பரிமாறினால், சுவைத்துப் பார்த்து உங்களைப் பாராட்டுவதுடன், நீங்கள் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்” என்று உத்தரவாதம் தருகிறார் ‘சமையல் கலை நிபுணர்’ உஷாதேவி. அவருடைய ரெசிபிகளை அழகு மிளிர அலங்கரிக்கிறார் செஃப் ரஜினி.
ஃபிரெஞ்சு ஆனியன் சூப்
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 4, வெண்ணெய் – 50 கிராம், வெள்ளை வெங்காயம் – 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் – 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர், சர்க்கரை – சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை: ‘மைக்ரோவேவ் அவன்’-ஐ ‘ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
குறிப்பு: ‘மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.
காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி – தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு – 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை – ஒன்று, தைம் இலை – ஒரு டீஸ்பூன், பாஸில் இலை – ஒரு டீஸ்பூன், மிளகு – 3 டீஸ்பூன், லவங்கம் – 2, பட்டை – ஒன்று, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 – 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெண்டைக்காய் சூப்
தேவையானவை: வெண்டைக்காய் – 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் – ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.
தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காய்கறி சூப்
தேவையானவை: பீன்ஸ் – 10, கேரட் – ஒன்று, கோஸ் – 50 கிராம், வெங்காயம் – ஒன்று, பூண்டு – ஒரு பல், வெண்ணெய், மைதா மாவு (அ) சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பால் – ஒரு சிறிய கப், நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து மேலும் வதக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, காய்கறிகள் வெந்தவுடன் சோள மாவு (அ) மைதா மாவை பாலில் கரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து, இறக்கி பரிமாறவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாதாம் சூப்
தேவையானவை: பாதாம் – 50 கிராம், வெங்காயம் – ஒன்று, செலரி, பாஸில் இலை – சிறிதளவு, காய்கறி வேகவைத்த தண்ணீர் – அரை லிட்டர், பால் – ஒரு கப், பாதாம் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும். ஒரு பாத்திரத்தில், உரித்த பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும். வெந்தவுடன் இறக்கி, மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இதனை அடுப்பில் வைத்து, மிக சிறு தீயில் சிறிது நேரம் கிண்டி, அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும். இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே வறுத்த பாதாமை நறுக்கி சேர்த்துப் பரிமாறவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காளான் கிரீம் சூப்
தேவையானவை: காளான் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய பூண்டு – 2 பல், பிரிஞ்சி இலை – ஒன்று, தைம் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – சிறிதளவு, வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, வொயிட் சாஸ் – 100 மில்லி, வெண்ணெய் – உப்பு – தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு: வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், மைதா – 3 டேபிள்ஸ்பூன், பால் – அரை லிட்டர், உப்பு – சிறிதளவு.
செய்முறை: அடி கனமான கடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் மைதாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். பின் அடுப்பை அணைத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கட்டியில்லாமல் கரைத்து மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இதில் சிறிதளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால்… வொயிட் சாஸ் ரெடி.
வேறொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து, சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். நன்கு வதங்கும்போது பூண்டு, பிரிஞ்சி இலை, தைம் இலை சேர்த்து வதக்கி, நறுக்கிய காளானை சேர்த்து வேகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்த்து கொதி வந்தவுடன்… வொயிட் சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, பரிமாறவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மூங்கில் ரைஸ் வெஜ் சூப்
தேவையானவை: மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) – ஒரு கப், கேரட் – ஒன்று (நறுக்கவும்), வேக வைத்த பட்டாணி – ஒரு கப், பீன்ஸ் – 5 (நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 2 பல், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு,
செய்முறை: மூங்கில் ரைஸில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
கடாயில் வெண்ணெயை காயவைத்து… பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் ரைஸை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பானிபூரி சூப்
தேவையானவை: சிறு பூரி – 10 (டிபார்ட்மென்ட் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), உருளைக்கிழங்கு – 100 கிராம் (வேக வைத்து எடுத்து வைக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது), பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன், வேக வைத்த பருப்புத் தண்ணீர் – 2 கப், புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு – 2 டீஸ்பூன், பூண்டு – ஒரு பல், க்ரீம், ஓமப்பொடி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்புத் தண்ணீர், புளிக் கரைசல், வெல்லம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். இதனுடன் கறுப்பு உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கிப் போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பூரியை நொறுகிப் போட்டு, ரெடி செய்த சூப்பை ஊற்றி, மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எலுமிச்சை சூப்
தேவையானவை: எலுமிச்சம் பழம் – 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர், பச்சை மிளகாய் – காரத்துக்கேற்ப, இஞ்சி – சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்ஸ்டோன் சூப்
தேவையானவை: கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 100 கிராம், வெங்காயம் – 2, பிரிஞ்சி இலை – ஒன்று, செலரி, தைம் இலை, பாஸில் இலை (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), துருவிய சீஸ் – சிறிதளவு, டர்னிப் – ஒன்று, தக்காளி – 3, பூண்டு – 2 பல், ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாஸ்தா – ஒரு கப் (வேக வைத்தது), உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை தோலுரித்து, மிக்ஸியில் அரைத்து தனியே வைக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை நன்கு வறுக்கவும். அதனுடன் தைம் இலை, பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், டர்னிப் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, வெந்தவுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். வேக வைத்த காய்கறி தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, பாஸில் இலை, வேக வைத்த பாஸ்தா சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கி, அதன் மேல் துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மிளகு சூப்
தேவையானவை: துவரம்பருப்பு – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, உருளைக்கிழங்கு – ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் – அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் – அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு – 3 பல், கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் – தலா 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, மிளகு – 2 டீஸ்பூன், கொத்தமல்லி – 3 டீஸ்பூன், மஞ்சள் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 10, சோம்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை: கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஹாட் அண்ட் சோர் சூப்
தேவையானவை: கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை – தலா ஒன்று, வினிகர் – கால் கப், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 12, அஜினமோட்டோ – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடித்த மிளகாயை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். இதில் மீதமுள்ள வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்து கொதிக்க வைக்கவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கட்டி விழாமல் கொதிக்கவிடவும். இறக்கும்போது மறுபடியும் அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி… மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு முட்டையை அடித்து கலக்கி இதில் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆஸ்பரகஸ் சூப்
தேவையானவை: ஆஸ்பரகஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – அரை டின், கிரீம் – ஒரு கப், மைதா மாவு, வெண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெயை சூடாக்கி, உருகியதும் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி, உப்பு, ஆஸ்பரகஸ் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பரிமாறும்போது கிரீம் சேர்க்கவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உருளைக்கிழங்கு சூப்
தேவையானவை: வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு – ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் – தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆவகாடோ கார்ன் சூப்
தேவையானவை: ஆவகாடோ (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒன்று, உதிர்த்த ஸ்வீட் கார்ன் – ஒரு கப், பூண்டு – 2 பல், காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள், எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு – தேவையான அளவு,
செய்முறை: ஆவகாடோவை தோல் சீவி, அதில் உள்ள கொட்டையை எடுத்துவிடவும். மிக்ஸியில்… ஆவகாடோ, காய்கறி தண்ணீர், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, கார்னை போட்டு சிறிது நேரம் வதக்கவும். இதில் அரைத்த ஆவகாடோ கலவையை சேர்த்து வதக்கி, தேவைப்பட்டால் காய்கறி வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து… அதில் மிளகுதூள் சேர்த்து இறக்கி… பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
குறிப்பு: ஆவகாடோ பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப் பை சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். கொலஸ்ட்ரலைக் குறைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தக்காளி சூப்
தேவையானவை: தக்காளி – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை – தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி… அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி – வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி… உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்.
நன்றி அவள்விகடன்