Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2012
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,782 முறை படிக்கப்பட்டுள்ளது!

வாருங்கள் உலகை வெல்லலாம்-5

5.நேற்று என்பது உடைந்த பானை

சிறுவர்களே காலத்தை கண்ணாகப் போற்றுங்கள்!

எண்சாண் உடம்பில் சிரசே பிரதானம். அதைவிடச் சிறந்தது கண் என்பது பழமொழி. நமது உடம்பில் உள்ள உறுப்புக்களில் முதன்மையானது தலை என்றால், அந்தத் தலையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது கண்கள். கண்கள் இல்லை என்றால் இந்த உலகத்தை அதன் அழகை நாம் பார்க்க முடியுமா? உதிக்கும் சூரியனின் அழகை, பொங்கிப்பாயும் அருவியின் கும்மாளத்தை, வானத்தில் பறந்து திரியும் வண்ண வண்ணப்பறவைகளை, ஆயிரக்கணக் கணக்கான மலர்களை, அழகான குழந்தைகளை நாம் பார்த்து ரசிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

கண்பார்வை இல்லாதவர்களுக்கு வாழ்க்கை எத்தனை கடினமானது என்பதை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆகவே கண் என்ற உறுப்பு எத்தனை முக்கியமானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும்.

இதனால் தான் விஷயம் தெரிந்தவர்கள் காலத்தை கண்ணோடு ஒப்பிட்டனர். கண்கள் முக்கியமானவை என்பதை புரிந்து கொண்டோம் ஆனால் ஒருவகையில் சொல்லப் போனால் கண்களைவிட காலம் மிகவும் முக்கியமானது, விலை மதிக்க முடியாதது என்று கூட சொல்லலாம். தற்காலத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கண்பார்வையைக் கூட மற்றவர்கள் தரும் கண்தானத்தின் மூலமாக திரும்பப் பெற்று புது வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் காலத்தை தவறவிட்டால் அதனை எந்த தானத்தினாலும் ஈடு செய்ய முடியாது.

உதாரணத்திற்கு இன்று திங்கட்கிழமை என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த திங்கட்கிழமை போய்விட்டால் இதே நாள் திரும்ப வருமா? மற்றொரு திங்கட்கிழமை வரலாம். ஆனால் இந்த நாள், இந்த தேதி, இந்த வருடம் நமக்கு திரும்பக் கிடைக்குமா? நிச்சயமாக திரும்பி வராது.

 நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில்மேல் பூனை. இன்று என்பதே கையில் உள்ள வீணை என்று சொல்வார்கள்.

உடைந்த பானையை வைத்துக்கொண்டு சோறு சமைக்க முடியுமா? முடியாது. ஆகவே கடந்துவிட்ட நேற்றைக் குறித்து கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை. நாளை என்பது மதில்மேல் இருக்கின்ற பூனையைப் போன்றது. அது நமக்கு சாதகமாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். நாளை உயிரோடு இருப்போமா இல்லையா என்பதை யாரால் உறுதியாக சொல்லமுடியும்? ஆகவே நாளை என்பது நம் கையில் இல்லை.

எனவே இன்று என்பது நம் கையில் இருக்கின்ற வீணையைப் போன்றது. அந்த வீணையை பயன்படுத்தி இனிய இசையை மீட்டுங்கள். உங்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள் என்பது தான் இந்த அருமையான வாக்கியத்தின் கருத்து. நாளை செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் எண்ணிய செயல்களை இன்றே இப்போதே காலத்தின் அருமையை நன்றாக உணர்ந்து செயல்படுத்துங்கள் . அப்படி நடந்தால் வெற்றி உங்கள் விலாசத்தை விசாரித்துக் கொண்டு வரும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் காலத்தை கண்ணாகப் போற்றியவர்கள் தான். சில மணித்துளிகளையும் சிக்கனமானமாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்தியவர்கள் தான். தன்னுடைய காலத்தில் அக்கறை கொண்ட உழைப்பாளிகள், பிறருடைய காலத்தையும் கண்ணாகவே போற்றுவார்கள்.

நெப்போலியன் பகைவருடைய நாட்டு வரைபடத்தை ஊன்றிப் பார்ப்பதைப் போலவே, தன் கடிகாரத்தையும் ஊன்றிப் பார்த்தான். தனக்குக் கீழே வேலை பார்க்கும் அதிகாரிகளுக்குத் தானே முன்மாதிரியாக நடந்து கொண்டான். அவன் காலத்தை வீணாக்காமல், நடந்து கொண்டதைப் பார்த்து அவர்களும் கால விரயம் செய்வதைத் தவிர்த்தனர். அவனுடைய வெற்றிகளுக்கு முக்கிய காரணம் அவனுடைய காலந் தவறாத குணமே என்று சரித்திரம் கூறுகிறது.

நேரத்தின் மதிப்பு நாம் ஒவ்வொருவரும் அறிந்ததே. ஆனால் நம்மில் சிலர் அதன் அருமையை அறியாமல் வீணாக்குவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து மாணவச் செல்வங்களே விலகி நில்லுங்கள். நீங்கள் நேரத்தின் மதிப்பை அறிய வேண்டுமா?

  1.    ஒரு வருடத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை உங்களுடன் படித்து சென்ற வகுப்பில் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  2.    ஒரு மாதத்தின் மதிப்பு என்ன என்பதை டைபாய்டு காய்ச்சலில் படுத்து, தேர்வு எழுத முடியாமல் போன மாணவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  3.    ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை நடத்துகின்ற ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  4.    ஒரு நாளின் மதிப்பை தினக்கூலிக்கு வேலை செய்பவர்களிடம் கேட்டால், வேலை கிடைக்காத நாளில் கூலியும் இல்லை என்பதை விளக்கமாகச் சொல்லுவார்கள்.
  5.    ஓரு மணி நேரத்தின் மதிப்பு என்ன என்பதை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  6.    ஓரு நிமிடத்தின் மதிப்பு என்ன என்பதை ரயிலைத் தவறவிட்ட பயணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
  7.    ஓரு வினாடியின் மதிப்பை விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பியவரிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.
  8.    ஓரு மில்லி செகண்டின் மதிப்பு என்ன என்பதை ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை தவறவிட்ட விளையாட்டு வீராங்கனையிடம் கேட்டுப் பாருங்கள்.

எனவே பிள்ளைகளே நீங்களும் நேரத்தின் அருமையை உணர்ந்து செயல்படுங்கள். வெற்றி அடைவது உறுதி.

நன்றி:  வேணுசீனிவாசன் – அகல் விளக்கு