Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,568 முறை படிக்கப்பட்டுள்ளது!

தோப்பில் முஹம்மது மீரான்

தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்கள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின் ஊடான பயணம் அவருக்கு இலகுவாய் இருக்கிறது. நாவல்களைப்போலவே தோப்பிலின் பேச்சிலும் மலையாளம் கலந்திருக்கிறது. ஊரிலிருந்து வெளியேறி 20 ஆண்டுகள் மேலாகியும் தோப்பில் இன்னும் தேங்காய்பட்டின மனிதராகவே இருக்கிறார்.

தோப்பில் முகம்மது மீரானுக்கு சாகித்ய அகாடமி பரிசு 1997 ஆம் ஆண்டு ‘சாய்வு நாற்காலி’ நாவலுக்காக வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் ஒரு காலை நேரத்தில் அவர் வீட்டு முன்னறையில் இப்பேட்டி பதிவு செய்யப்பட்டது. அறையில் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை காண்பித்து மீரான் சிரித்துக்கொண்டே சொன்னார். “நான் பெரும்பாலும் புத்தகங்களை படிப்பதில்லை. தமிழ்வாசிப்பது சிரமம். ஆனாலும் நண்பர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டேயிருப்பதால் குவிந்துவிட்டது

கே: உங்கள் இளமைக் காலத்தில் நிகழ்ந்த என்ன மாதிரியான விஷயங்கள் உங்களை எழுத்தாளராக மாற்றியதுன்னு நினைக்கிறீங்க?

  தோப்பில் முகம்மது மீரான்: என் அப்பா கடந்த கால விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அப்பாவுக்கும், மற்ற குடும்பங்களுக்கும் பணக்கார மேல்தட்டுவர்க்க மக்களால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி சொல்வார். எங்களுக்கு எப்போதும் உயர் வர்க்கத்தினரால் துன்பம் ஏற்பட்டது. தற்பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலையில் மூன்று தலைமுறை எங்களுக்குள்ளே இருந்துகொண்டே இருக்குது. இதற்குள் இருந்து ஒரு கலகக்காரன் உருவாகத்தான் செய்வான். நான் ரொம்ப அடிமட்டத்துல இல்லைன்னாலும் அடிமட்ட மக்களின் அனுபவம் எனக்கு கிடைச்சுப்போச்சு. எனக்குள் ஒரு கலக மனோபாவம் இருந்தது. அநீதிக்கு எதிரா போராடனும்னு ஒரு சுயமே உருவாச்சிது. எப்பவுமே ஒரு சமூகத்தை, இன்னொரு சமூகம் ஒடுக்கனும்னு நினைக்கும்போது, ஒடுங்கின சமூகத்தில் ஒரு கலக உணர்ச்சி உண்டாகும். இந்த கலக உணர்ச்சி கலையா வெளிப்படலாம். சமூகப் புரட்சியாளர்கள் உருவாகலாம். சிலர் கலைஞராகவும் வரலாம். நான் இந்த துறைக்கு வர அதுதான் காரணம், முதலாளி வர்க்க மனோபாவத்தோடதான் நம்ம எதிர்ப்பு. ஒரு தனிப்பட்ட முதலாளியோட எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

  கே: உங்க நாவல்கள் பெரும்பாலும் தேங்காய் பட்டனத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?

  மீ: அங்க, எங்களைப் பெரும்பாலும் திருமணத்துக்குக் கூப்பிடமாட்டாங்க. நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்.

  கே: ஒரு புத்தகத்தின் சமர்ப்பணத்தில் ‘என்னை மகனாக வளர்த்த இன்னொரு அம்மாவுக்கு’ன்னு சொல்லி இருக்கீங்க.

  மீ: அந்த அம்மாதான் என்னை வளர்த்தது. அப்பாவோட முதல் மனைவி. எங்க அப்பா முதல்ல ஒரு கல்யாணம் பண்ணிச்சு, குழந்தைகள் இல்லை. பிறகு ரெண்டாவது திருமணம். அதுதான் என் அம்மா. அதில் 13 குழந்தைகள். 9 பேர் இருக்கோம். நாலு பேர் இறந்திட்டாங்க. அந்த அம்மாவை பற்றிய விவரம் நான் ‘உம்மா’ என்ற ஒரு சிறு கதையில சொல்லியிருக்கேன். கிட்டத்தட்ட 12 வயது வரைக்கும் அவங்கதான் என் அம்மான்னு நினைச்சுட்டு இருந்தேன்.

  கே: உங்கள் அப்பா, அம்மா சொன்ன கதைகள் உங்கள் எழுத்தை, பாதிதித்திருக்கிறதா?

  மீ: கடலோரக் கிராமத்தின் கதைகளை முழுசா சொல்லித்தந்தது என் அப்பா. அவர் சொல்லும் போதே ஒரு படம் மனசுல கிடைக்கும். ஒரு அப்பாவும் பிள்ளைக்கும் உள்ள உறவைவிட அவரு ஒரு கதை சொல்பவராகவும் நாங்க அதை கேட்பவருமாகவும் இருந்து தினமும் கதை கேட்போம். கடலோரக் கிராமங்களை பத்தி, அப்பு சொன்னது, அவங்க குதிரைல போனது எல்லாம் என் மனசுல பதிஞ்சது. படத்தைப் பார்த்து வரைஞ்ச மாதிரி ‘கடலோரக் கிராமத்தின் கதை’ எழுதினேன். அப்பா சொன்ன கதையை அப்படியே உருவாக்கினதாலதான் அது வெற்றிகரமாய் அமைந்தது.

  கே: உங்களது ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கும். கதாபாத்திரங்கள், அவங்களோட படிப்பின்மை, படிக்காததுனால ஏற்படும் மூட பழக்கங்கள். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிச்சுதா.

  மீ: முதல்ல பள்ளிக்கூடத்துக்கு போனதும், படிச்சதும் எங்கள் தலைமுறைதான். எங்க அப்பா, அம்மால்லாம் படிக்காதவங்க. நான் ஒரு கதை எழுதினா அதை திருத்தி தர ஆள் கிடையாது. சொன்னா கேக்குறதுக்கு ஆள் கிடையாது. ஏன்னா இன்னும் அந்த உணர்வு அங்க போய்ச் சேரலை. இந்த படிப்பு நமக்கு தேவையில்லை. இது உலகக் கல்வி. நம்ம மறுமைகுல கல்விதான் படிக்கனுன்னு சொல்லி அரேபி படிக்க தெரியுமா. ஆண்டவனே என் வாயால, மலையாளம் பேச வைக்காதே. அரபிதான் நாம பேசனும். இப்ப, பிராமணன் சமஸ்கிருதம் பேசறாங்கனு சொல்லறோம் பாத்தீங்களா. இதே போல அன்னிக்கு முஸ்லீம்கள் எங்க வாயால அரபிதான் பேசுவோம்னாங்க. அந்த தலைமுறைக்கு கடைசி கன்னி நான்.

  அது என்னை பாதிச்சது. என்னை பள்ளிக்கூடத்துக்கு போகவிடாம, புத்தகம் வாங்கி கொடுக்காம, சிலேட் வாங்கி தராம பள்ளிக்கூடத்துக்கு கட்டணம் தராம என பல சங்கடங்கள். யாருக்குமே அதில் விருப்பமில்லை. கல்வி பற்றிய சிந்தனையே என் தந்தைக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கிடையாது. இந்த சூழலில் இருந்துதான் நாங்க படிச்சோம். எங்க ஊருல அப்ப யாருமே எஸ்.எஸ்.எல்.சி. பாசானது கிடையாது. நான் கூட எஸ்.எஸ்.எல்.சி. நாலு தடவை பெயில் ஆனேன். நான் எதிலே படிச்சேன்னு கூட என் அப்பாவுக்கு தெரியாது. அவர் பள்ளிக்கு கல்லூரிக்கு வந்தது கிடையாது. நாங்களே சுய முயற்சியிலேயே போய் சேர்ந்தோம். அப்ப, ரெண்டு ரூபா ஒரு ரூபான்னு கட்டணம் உண்டு. அபராதத்தோடதான் எப்பவும் பீஸ் கட்டறது. காசு தரவே மாட்டார் அப்பா. நீ படிக்கவேண்டா நா பணம் தரமாட்டேன்னு சொல்வார். பின்ன நான், மண்ணு சுமந்து தாரேன் கல்லு சுமந்து தாரேன் அப்படினு வேலை செய்து கொடுக்கும் போது பிப்ரவரி மாச பணத்தை ஜூன் மாசம் தருவாரு. அதுகூட படிக்கனும்கிற வெறித்தாக்கத்தினால படிக்கலை. எனக்கு உள்ளே இருந்து ஒன்று படிக்கச் சொல்லி தூண்டிச்சு. நாங்க படிச்ச நேரத்தில ஆசிரியர்கள் எங்களை ரொம்பவும் கவர்ந்தாங்க. பாடங்கள் கவிதைகள் எல்லாம் சொல்ற நேரத்துல, அவங்க பாடக்கூடிய இனிமையில சொக்கி போயிருவேன். அவங்க சிலநேரம் கதைகள், நாவல்கள் பற்றி கதையா சொல்வாங்க. நமக்கு தோணும் தகழி சிவ சங்கர பிள்ளை போல ஆகனும்னு.

  இதுக்குப் பின் நான் கல்லூரிக்குப் போறேன். பி.ஏ. மலையாள இலக்கியம் படிச்சேன். அப்ப நான் கல்லூரிக்கு போனது வாசிக்கத்தான். கல்லூரியில் இருந்த எல்லா மலையாள புஸ்தகங்களையும் படிச்சேன். என்னை லைப்ரரி உள்ளே விட்டுடுவாங்க. மத்த மாணவர்களை உள்ளேவிட மாட்டாங்க.

  ஒரு ஆசிரியருக்கு என்ன சலுகை இருந்ததோ அத்தனையும் எனக்கு இருந்தது. நான் விரும்பின புஸ்தகத்தை எடுத்துட்டு வரலாம். இது என்னோட வாசிப்புக்கு ரொம்ப உதவியா இருந்தது.

  கே: கல்வி என்கிற விஷயம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்னு நினைக்கிறீங்களா?

  மீ: கல்வி இருப்பதினால, நிறைய விஷயங்களை நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம். நம்ம ஊருல ஒரு விஷயம் நடக்குது. கிழவெண்மணியில், கையூரில என்ன நடந்தது என சுட்டிக்காட்ட முடியுது. பீகாரில 75 பேரை சுட்டுக் கொன்னாங்க. பத்திரிகையும் கல்வியும் இருக்கிறதுதான் அந்த விஷயத்த தெரிஞ்சுக்க முடியுது. அதோட நம்ம சமூகத்தில என்ன நடக்குன்னு ஒப்பிட்டு பாக்க முடியுதில்ல.

  கே: போன தலைமுறையில இருந்த வாசிப்பு பழக்கம் இந்த தலைமுறைக்கு இல்ல. தொலைகாட்சி, இன்டர்நெட் மற்றும் பிற பொழுதுபோக்கு சாதனங்களால வாசிப்பு பழக்கம் குறைஞ்சிட்டு போறதா கருதப்படுகிறது. நீங்களே புத்தக வெளியீட்டாகவும் இருக்கீங்க. இது பற்றி என்ன நினைக்கிறீங்க?

  மீ: புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்’ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்’ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம் டி.வி.யிலே கிடைக்காது. டால்ஸ்டாய் நாவலை படிக்கிற இன்பம் டி.வி.யிலே கிடைக்குமா?

  கே: ஆனால் ஒரு சிறந்த வாசகன் உருவாகும் சூழலை இது பாதிக்கலைன்னு நினைக்கிறீங்களா?

  மீ: மூணு பிரிவு இருக்கு. ஒன்னு வந்து வாசகன். ரெண்டு ரசிகன். மூணு சக்ருதையன். சக்ருதையன் ஒரு சமஸ்கிருத சொல். படைப்பாளிக்கு ஒத்த மனமுடையவர்களை சக்ருதையன்னு சொல்லலாம். ஒரே பாதையிலே ரெண்டு பேரும் போறாங்க. படைப்பிலே முதலில் மௌனங்கள் இருக்கு. இடைவெளிகள் இருக்கு. தேடல் இருக்கு. இந்த மௌனங்களை சப்தமாக்கிறான் சக்ருதையன். இந்த இடைவெளியை நிரப்பறான். தேடல் அவன் மனசில் உருவாகுது. சக்ருதையன் அவனா உருவாகிறான், அவன் பிறப்பால் கலைஞன். சக்ருதையன் என்ற கலைஞனும்ம படைப்பாளி என்ற கலைஞனும் எங்க சங்கமிக்கிறாங்களோ அங்கதான் படைப்பு நிறைவு பெறுது. அதுவரை ஒரு படைப்பு முழுமை அடையாது. மனசுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே பாலத்தை இவன்தான் கட்டறான். ஒரு படைப்புக்கு தேவை சகருதையன். வாசகனும், ரசிகனும் விற்பனைக்குத்தான் தேவை. இந்த சகருதையனை டி.வி. மற்றும் எந்த ஊடகத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.

  கே: உங்களை பாதிச்ச, எழுத தூண்டிய எழுத்துகள்னு யாரை சொல்ல விரும்புறீங்க?

  மீ: பஷீரின் படைப்புகளை படிச்சேன். அவரைபோல எழுதணும்னு அவரோட மொழி என்னை ஊக்கப்படுத்தியது. இப்ப உள்ள மலையாள இலக்கிய சூழலை பார்க்கும்போது தமிழ் சூழல் சிறப்பா இருப்பதாக எனக்குத் தோணுது. அங்க சிறுகதைகள் ரொம்ப மட்டமாகதான் இருக்கு. ஒரு சில நல்ல கதைகள் அப்பப்ப வருது. `வானப் பிரஸ்தம்’ ஒரு உதாரணம். என்னைப் பொருத்தவரை ஜெயமோகன் ஒரு சிறந்த சிறுகதை எழுதுபவர். அவரை தென் இந்தியாவிலேயே சிறந்த எழுத்தாளர் என சொல்லுவேன். வண்ணதாசன் எழுத்து ரொம்ப நல்லா இருக்கு. சுந்தர ராமசாமியோட கதைகள் ஒரு சில நல்லா இருக்கு. நல்லா நகைச்சுவையா போகுது. `காலச்சுவடு’ல வெளிவந்த `இருக்கைகள்’ ஒரு உதாரணம். நல்ல நாவல்னு சொல்லனும்னா சுந்தரராமசாமியோட `புளியமரத்தின் கதை’ பிடிக்கும். `பள்ளிகொண்டபுரம்’ எனக்குப் பிடிச்சது. ஜானகிராமனோட `அம்மா வந்தாள்’கிற கதை படிச்சேன். நல்லா இருக்கு. அப்புறம் பாவண்ணனோட `பாய்மரக்கப்பல்’ ரொம்ப பிடிச்சது. இளைய தலைமுறை எழுத்தாளர்களைப் பத்தி சொல்லனும்னா இமயம் கதை படிச்சேன். ஒரு அஞ்சு ஆறு அத்தியாயம் படிச்சேன். வெறும் முற்போக்காத்தான் எனக்குப் படுது. சாவடியை பத்தி 18, 20 பக்கத்துல சொல்கிறார். தகவல் என்றும் கலையாகாது. இளைஞர்களில், தலித் இலக்கியத்தை எடுத்துக்கிட்டமின்னா, எடுத்த உடனே இது ஒப்பேறாத கேஸ்னு முத்திரை குத்தி மூடி வைக்க வேண்டியதுதான். இதனால் எல்லார் புத்தகங்களையும் வாசிக்க முடிவதில்லை. சில புஸ்தகங்களை வாசிப்பது பெரிய தண்டனை.

  கே: தமிழ் இலக்கிய Êசூழலில் நடைபெற்றுவரும் அரசியல் பற்றி…

  மீ:  மலையாள மக்கள் அளவுக்கு இங்கு மனங்கள் பக்குவபட்லை. படிப்பாளிகள் இருவர் மேடையிரே ஒருநாள் ஏசி பேசுவாங்க. மறுநாளே இருண்டுபேருமே ஒரு வீட்டிலே இருப்பாங்க. இது கேரளாவிலே. சுந்தர ராசாமியோட எனக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனால் உறவுன்னு ஒன்னு இருக்கு. கருத்துக்கள் ஏன் உறவை பாதிக்குது. சிலர் சொல்வாங்க. நான் நாகர்கோவிலுக்கே வரமாட்டேன்னு. ஏன்னா அங்கே சுந்தர ராமசாமி இருக்கறார். இந்த மனோபாவம் மாறனும். நாம இவரை இன்னும் அங்கீகரிக்க காரணம் அவர் நம்ம மூத்த தலைமுறை. நான் முதல்ல படித்த இரண்டு புத்தகத்திலே அவர் புத்தகம் ஒன்று. எனக்கு பழைய காலத்து இலக்கியம் ஒன்னும் தெரியாது. புதுமைபித்தனோடத இன்னும் படிக்கவில்லை. பாரதியாரோடது கேட்டதோட சரி.

  கே: உங்களுடைய நாவல்கள் உங்கள் இளம் வயதிலேயே எழுதி வைக்கப்பட்டதுதான் என்று சொல்லப்படுகிறது?

  மீ: என்னுடைய மூன்று நாவல்கள் முன்னமே எழுதிவைச்சதுதான். `சாய்வு நாற்காலி’தான் கடைசியா வந்தது. `கூனன் தோப்பு’ 1967-=-68-ல எழுதினது. 93-ல் தான் வெளியிட்டேன். இடையில் நான் எழுதாமலேயே இருந்தேன். எங்க அப்பா இறந்த பிறகு, ஊரிலே நிறைய பிரச்சனைகள் வந்தது. எங்க அப்பா சொன்ன அதே பிரச்சனைகள் திரும்ப வந்தது. அண்ணன் குடும்பத்தில் ஊர் விலக்கு போட்டாங்க. அப்ப கடலோர கிராமத்தின் கதை-ல வர விஷயங்கள் அதே தோரணையில் நடந்தது. எங்க அப்பா முன்பு நடந்ததாக சொன்ன பிரச்சனைகள் திரும்ப வரத்தானே செய்யுது என்று சொல்லிக்கிட்டு, எனக்கு டக்குனு ஸ்ட்ரைக் ஆகி `கடலோர கிராமத்தின் கதை’ எழுதினேன். நம்ம நண்பர் ஒருத்தர் முஸ்லீம் முரசு பத்திரிகையிலே பொறுப்பேற்றார். அவர்கிட்ட அப்படியே போடனும்னு கன்டிசனோட கொடுத்தேன். ஆனா அதுவும் பத்து வருசம் வரை வெளியாகாமலேயே இருந்தது. அப்ப என் கண் முன்னே முஸ்லிம் வாசகர்கள் தான் இருந்தாங்க. மற்றவர்களை எனக்கு தெரியாது. எந்த படைப்பாளியையும் தெரியாது. தமிழ் எழுதுவதற்கு ஓடாது. நான் சொல்ல சொல்ல இன்னொரு ஆள் எழுதுவாரு. எழுதினத திருப்பி படிக்கலை. `கடலோர கிராமத்தின் கதை’-ல பிழைகள் வந்தது.

  இப்படியா `கடலோர கிராமத்தின் கதை’ தொடரா வெளிவந்து பத்து வருசத்துக்கு பிறகு வெளியிட்டேன். முதல்ல யார் வெளியீடுவது வாங்குவது என்பது பற்றியல்லாம் நான் நினைச்சு பார்க்கல. அப்ப நான் ஒரு விளம்பரம் கொடுத்தேன். இப்படி `கடலோர கிராமத்தின் கதை’-னு ஒரு புத்தகம் வருது. யார்கெல்லாம் புத்தகம் வேணும்னு மட்டும் எழுதினா போதும். காசை புத்தகம் வாங்கி விட்டு கொடுத்தால் போதும். நாலே நாலு லட்டர்தான் புத்தகம் வேணும்னு வந்துச்சு. இந்த நாலு பேரை நம்பி புத்தகம் போடைரயானு சொல்லி போடாமலே விட்டுட்டேன். அப்புறம், 87=-88ல, 5,000 ரூபாய்க்கு புத்தகம் போட்டேன். அப்ப தொழில் நல்லா பண்ணிக்கிட்டு இருந்த ஒருத்தர் உதவி பண்ணுறேனு சொன்னார். அதனால அத நானே வெளியிட்டேன். ஆனால் வெளியிடுறதுக்கான சம்பிரதாயங்கள் எனக்குத் தெரியாது. அப்பத்தான் சுந்தர ராமசாமியை எனக்கு தெரிஞ்சுது. ஒரு ஜவுளிக் கடைக்காரர் தகழியோட புத்தகத்தை தமிழில் கொண்டு வந்திருக்கார்னு அறிஞ்சேன். என்னையும் அவருக்கு அறிமுகம் படுத்தி வைத்தாங்க. நானும் வெளியீட்டு விழாவுக்கு கூப்பிட்டேன். அவர் நம்மளை கண்டுக்கிடாம புத்தகம் கொடுத்தவுடனே அதுக்கான பைசாவை மட்டும் கொடுத்தார். ஏதோ சூழ்நிலையினாலே வரமுடியாதுன்னு சொன்னார். நானும் அதை கண்டுக்கிடலை. ஏனா எனக்கு அவரைப்பற்றி அதிகம் தெரியாது. நீலபத்மநாபனை வெளியீட்டுவிழாவுக்கு அழைத்தேன். அவரையும் அப்பதான் தெரியும். அந்த வெளியீட்டு விழா மேடையிலே 70 புத்தகம் வித்துச்சி. அதுக்கப்புறம் ஒரு புத்தகமும் விற்கலை. மேடையிலே தேங்காய் பட்டணத்தோட வரலாறைப் பற்றி யாரோ பேசினாதால, வரலாறுன்னு நினைச்சி நிறைய பேர் வாங்கினாங்க. மறுநாள் போட்டானுங்க சண்டை. தங்கள் புரோகிதர் வர்க்கத்தை ரொம்ப புனிதமா நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. அத நான் தோலுரிச்சி காண்பிச்சிட்டேன். ஊருக்குள்ள பயங்கர எதிர்ப்பு. புத்தகத்தை எரிக்கனும்னு சுடனும்னு அங்க பயங்கர கிளர்ச்சி. அப்ப அங்க இரு அரேபிய மதம் சார்ந்த புத்தக கடையில் அந்த புத்தகம் கொஞ்சம் விக்கறதுக்காக வைச்சிருந்தான். ஊருமக்கள் திரண்டுபோய் புத்தகத்தை விற்கவிடலை. புத்தகமெல்லாம் கட்டுக்கட்டாய் இருந்திச்சி. என்னசெய்யனும்னே எனக்கு தெரியல. உண்மையிலே தீ வைச்சி சுடனும்னுதான் நினைச்சேன். யாரோ ஒரு முஸ்லீம் பையன் ஒரு கேளரா பல்கலைக்கழகத்திலே கொண்டுபோய் இருக்கான். அதை அங்கே இருந்த யாரோ படிச்ச உடனே நல்லாயிருக்கேன்னு சொல்லி அதை பாடப்புத்தகமா ஆக்கிட்டான். பாடபுத்தகம் ஆக்கினது எனக்கு தெரியாது. அப்போ ஒரு ஆள், புத்தகம் வித்து தந்தாரே அந்த கல்லூரி பேராசிரியர் சொன்னாரு “மீரான், நீங்க முஸ்லீம் யாருக்கும் கொடுக்க கூடாது”ன்னாரு. எப்படியும் புத்தகத்தை காலிபண்ணணும்னு சொல்லி எப்போதும் யாரை பார்த்தாலும் சும்மாவே தூக்கிகொடுக்கிறது. என் பெஞ்சாதியோட சொந்தகாரங்களுக்கு ஒன்னு ஒன்னு. சனியன் காலியாகட்டும்னு நினைச்சேன். அவர் சொன்னாரு இந்த புத்தகங்களை பூராம் முஸ்லீம் அல்லாதோருக்கு கொடுக்கனும்னு. கொஞ்சம் விலாசம் வாங்கி எல்லாருக்கும் இலவசமாய் 400 புத்தகங்களை அனுப்பினேன். வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவங்களுக்கெல்லாம் இலவசமாய் அனுப்பினேன். அது போய் உடனே `கிளிக்’ ஆகிடுச்சி. `கலை இலக்கியப் பெருமன்றம்’ அவார்டு கொடுத்தாங்க. அப்பதான் உணர்ந்தேன். என் புத்தகத்துக்குள்ளே ஏதோ விஷயம் இருக்குன்னு. கேரள பல்கலைக்கழகத்திற்கும், பாரதி பல்கலைக்கழகத்திற்கும் 16, 16 என 32 புத்தகத்தை அனுப்பிவிட்டேன்.

  அப்ப சிலர் என்ன பிரச்சாரம் செய்தாங்கன்னா `தங்களை’ பற்றி எழுதினதாலதான் மத்தவங்க இதை தூக்கினாங்க. “எனக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால் அதை நிறுவனமா ஏத்துக்கமாட்டேன். ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகை பண்ணுவேன். குரான்ல சொன்னதையும் நபிகள் சொன்னதையும் நான் எதிர்க்கமாட்டேன். மாற்றும் சொல்லமாட்டேன். சமுதாயத்தை மட்டும் விமர்சனம் பண்ணுவேன். இஸ்லாம் ஒரு நிறுவனம் அல்ல. மார்க்ஸிசம்கிற கோட்பாடு எப்படி நிறுவனம் ஆச்சுதோ அப்படியே இஸ்லாமும் புரோகிதர்களால நிறுவனமாகி சிரழிஞ்சிடுச்சி.

  கே: நீங்கள் முறையாக பயின்றது மலையாளம்தான். வாசிப்பதும் தொடர்ந்து மலையாளம்தான். பின் ஏன் தமிழை எழுதுவதற்கு தேர்ந்து எடுத்தீங்க.

  மீ: நான் படிச்சது மலையாளம். தாய்மொழி தமிழ். வீட்டில் தமிழ்தான் பேசினேன். மலையாளம், முறையாக படித்தாலும் அது ஒரு அந்நிய மொழிதான். ஆனாலும் எல்லா நாவலும் முதலில் எழுதியது மலையாளத்தில்தான். மலையாளத்தில் எழுதிய பிறகு மலையாள நாவல்களாகவும் அது இல்லை. தமிழ் நாவலாகவும் இல்லை. நான் மலையாளத்தை இலக்கணத்தோட முறையாக படிச்சதுனால அது என்னை கட்டுப்படுத்திச்சி. அதை மீற என்னால முடியல. அதனால சில மக்களோட உணர்ச்சிகளை சொல்லாக மாற்ற மலையாளம் இடம் தரலை. பஷீருக்கு முடியும். தகழிக்கு முடியும். இல்ல வேற ஒருத்தருக்கும் முடியும். அது அவங்களோட தாய்மொழி. நான் சொல்லக்கூடிய விஷயம் முழுவதும் தமிழ் கலாச்சாரத்தோடதான் இருக்கு. ஆனால் தமிழனுக்கு அது மலையாள கலாச்சாரமாக தோணலாம், மலையாளிக்கு அது தமிழ் கலாச்சாரமாக தோணலாம். அதுரெண்டுங்கட்டான் கலாச்சாரம்.

  மலையாளத்தில் நான் என் மனசில என்ன நினைச்சிகிறேனோ அதை கொண்டுவர முடியலை. அப்பதான் தமிழ் நல்லா பேச தொடங்கினேன். எழுதுவதற்கு மூணு நாலுபேர் கிடைச்சாங்க எழுதிக்கிட்டிருக்கப்ப மக்களோட சொல்லை போடும் போதுதான், ஒரிஜினலான எபக்ட் கிடைச்சது. இது என்னோட தாய்மொழி. அந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய சொற்கள் எனக்கு மனப்பாடமா தெரியும். அதனால நமக்கு தமிழ் மொழிதான்னு முடிவு பண்ணினேன். நம்ம தாய்மொழியில் எழுதினால்தான் மொழி நம்ம பின்னால் வரும். மலையாளத்தில் எழுதினால் மொழிக்கு பின்னால நாம ஓட வேண்டியிருக்கு. படைப்பாளி எப்போதுமே மொழிக்கு பின்னாடியே ஓடக்கூடாது. இவன் பின்னால மொழி வரனும். அது எந்த சட்டதிட்டத்திற்கும் உட்பட்ட மொழியாக இருந்தால் பல தடங்கல் ஏற்படும். அதனால இவனுக்கே உரிய மொழியில எழுதனும். நான் மொழியை கடந்து நிற்க காரணம் தமிழோட சட்ட திட்டங்கள் தெரியாது. தெரியாததுனால என்னால மீற முடியும்.

  கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள். எப்பவுமே எந்த சொற்கள் மக்களிடையே உணர்ச்சிளை வெளிப்படுத்துமோ அந்த சொற்களை அதேபடி இலக்கியத்தில் கொண்டு வருவோமேயானால் மனசில பல அதிர்வுகளை ஏற்படுத்த இயலும். எந்தசொற்கள், அதிர்வுகளை ஏற்படுத்தலையோ அது கரையேறாது. உதாரணத்திற்கு, தினமும் நம்ம காகத்தை பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் அல்ல. அது ஒரு அருவருப்பான பொருள் இல்ல. யாராவது காக்கையை அப்படியே பார்த்துகிட்டேவா இருப்போம். இல்லை. இந்த காக்கை, ஒரு கலைஞன் வரைவானேயானால் கொஞ்ச நேரம் பார்க்கலாம். என்னன்னா ஏதோ ஒரு இது நம்ம மனசுல வீணை கம்பியை தட்டுது. நான் ஹைதராபாத் மீயூசியம் போனேன். அங்கே ஆர்ட் மீயூசியம் ஹேலரியில ஒரு படம் இருக்கு. `மெர்சென்ட் ஆப் வெனிஸ்’ல வர வெனிஸ் நகர தெருவை வரைஞ்சி வச்சிருக்காங்க. உண்மையில நான் அப்படியே நின்னுட்டேன். என்னை பிறகு இழுத்துதான் கொண்டு வந்தான் அந்த கைடு பிரமிச்சு போனேன். நான் ஏதோ ஒரு வெனிஸ் நகரத்து தெருவிலே நிற்கிறது போல உணர்ந்தேன். இது எப்படி ஏற்பட்டது. காரணம் என்னன்னா கண்ணுக்கு புலப்படாத, மனசுக்கு சிந்தனைக்கு எட்டாத ஏதோ ஒரு தன்மை நம்மை அதோட இழைக்குது. அது வந்து ஓவியம் மூலம், இசை மூலம், சொற்கள் மூலம். இயற்கையில் பலப்பல வண்ணங்கள் இணைந்து இருப்பது போல, சொற்களால் கோர்வைன்னு ஒன்று இருக்கு. இது தானாக விழனும். விலங்கிடாத மொழியா இருக்கனும். எல்லார்கிட்டேயும் என்ன சொல்வேனா, மீரானுக்கு மொழினா அதை விட்டுறனும். அதுல இலக்கணம் பார்க்காதீங்க. மரபு பார்க்காதீங்க. சொல் பாக்காதீங்க. தமிழானு பாக்காதீங்க. இது மீரானோட மொழி. இது இப்படித்தான் இருக்கும்னு நெனச்சிட்டு படிங்க அதான் நல்லது.

கே: எழுதுவதற்கான மனநிலை உங்களுக்கு எப்படி உருவாகுது?

  மீ: எனக்கு எப்ப எழுதனும்னு தோணுதோ அப்ப எழுதுவேன். எனக்கு ஒரு கட்டாயம் ஏற்படும். அதற்கப்புறம்தான் எழுதனும்னு தோணும். எனக்கு எழுதுவதற்காக திட்டம் இருக்கு. ஆனா அதை எப்ப எழுதனும் எப்படி எழுதனும் என்பது நேரத்திற்கு ஏற்ப மாறும். நான் ஒரு புதிய முறையில் எழுதலாம்னு திட்டமிட்டிருக்கேன். ஆனா அதுல எப்படி வெற்றி பெறப்போறேன் தெரியலை. இதுவரை சொல்லாத பாணியில ஒரு கதையை சொல்லனும். என் வாழ்க்கையோட முதல் பகுதியை மையமா வைச்சு எழுதலாம்னு இருக்கேன். சுயசரிதமாக அல்ல. நம் சுயசரிதை கதையாகாது என் சுயசரிதையை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருத்தருடைய வாழ்க்கை கதையாகாது. சமூகத்தோட சில விஷயங்களை உள்வாங்கனும். அதை நம்மளா மாத்தனும். அதோட நம்ம அனுபவங்களையும் கலக்கனும். திரும்ப அதை வெளிப்படுத்தும்போது, அது வேற ஒண்ணா வெளி வருது. அந்த வேற ஒண்ணுதான் கதை. நான் கக்கூஸ் போறது, ஒண்ணுக்கு அடிக்கிறது நான் சோறு திங்காததில்ல கதையே இல்லை. இதிலே தேர்வுனு ஒன்று இருக்கு. எனக்கு வாழ்க்கைல நீண்ட அனுபவம் இருக்கு. அதையெல்லாம் கலையா ஆக்க முடியுமா. உங்களை பார்த்து நான் எழுதுவது, என்னை பார்த்து நீங்க எழுதுறது, உங்களைப் பார்த்து அவர் எழுதுறது. இவங்களையெல்லாம் படைப்பாளின்னு எப்படி சொல்ல முடியும்.

  கே: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீங்க. அதன் செயல்பாடுகள் பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க.

  மீ: சாகித்ய அகாடமி, விருது தேர்வில் வெளியீட்டாளர்கள் தலையீடு ஜாஸ்தி. சிலர் சபலங்களுக்கு உட்பட்டு போறாங்க. அதுக்கு கூட படைப்பாளிகள் காரணம் அல்ல. வெளியீட்டாளரோட வணிக நோக்கம், அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சதுனா, என்ன இவனுக்கு 2000 புஸ்தகம் அதிகமா விக்கும். அந்த ஒரே நோக்கத்துக்காக படைப்பாளியும் பல நேரங்களில் பல செயல்களிலும் உட்படறாங்க. இதனால் வெளியீட்டாளர்கள் தலையீட்டை தடுக்கனும். ஏன்னா நல்ல படைப்புக்கு அங்கீகாரம் கிடக்க இவன் தடையா இருக்கான்.

  கேரள, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் மாநில சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுது. தமிழ்நாட்டுல கேட்டா தமிழ் வளர்ச்சி கழகம் இருக்கும்பாங்க. இப்பொழுது தமிழ் சாகித்ய அகாதமின்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க. அங்க என்னடானா பழம் தமிழன்மார், புழுத்து, பழுத்து கிடக்காங்க. தமிழுக்கு சம்மந்தமில்லாத மி.கி.ஷி. அதிகாரியை கொண்டு போயி உட்கார வைச்சிருக்கான். நல்ல படைப்புகள் வெளி வரலை. நல்ல பல படைப்புகள் அச்சில இருக்கு. அச்சுக்குள்ளேயே இருக்கு. நிறைய எண்ணம் விற்பனை ஆகாம இருக்கு. புரபஸரை மாதிரி பழைய பாட்டம் பாடிக்கிட்டு நிறைய பேர் இருக்காங்க. நவீன இலக்கியம் பத்தி கண்ணை திறந்து கூட பார்க்கறதில்லை. போ வருஷம் யாருக்கு சாகித்ய அகாடமி கிடைச்சதுனா அவனுக்கு தெரியாது. இந்தாளை எப்படி நாம சாகித்ய அகாடமி தலைவரா ஆக்க முடியும். சாகித்ய அகாடமி தலைவர் ஆகனும்னா பல தகுதிகளை எதிர் பார்க்கிறாங்க. அது இங்க நிறைய பேருக்கு இல்லவே இல்லை.

நன்றி: தீராநதி.