Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,262 முறை படிக்கப்பட்டுள்ளது!

முஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:

அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில்  ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.

“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா,  துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும்.  அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு  மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)

மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு  பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.

இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.

அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!

முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது  ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.

நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!

அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.

முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!

முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு  முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.

குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.

பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”.  (ஆதாரம்: முஸ்லிம்)

முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.

முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)

ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது  நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.

வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய  நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.

நன்றி: மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி – சுவனத்தென்றல்.காம்
—–
முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை “பஞ்சா” என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர். மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது.

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும்.

குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும்.

அதாவது

1) முஹம்மது (ஸல்) அவர்கள்,

2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),

3) அலி (ரலி),

4) ஹஸன் (ரலி),

5) ஹுஸைன் (ரலி)

என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது.

இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து பெரும்பாலும் இந்த பண்டிகைகள் உயிரோட்டமற்று ஏதோ கடனுக்காக நடத்தப்படுகின்றன. ஷியாக்களால் உருவாக்கப்பட்டு அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசாங்கமும் இதை முஸ்லிம்களின் பண்டிகையாகவே கருதுகிறது. இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்கதினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸைன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல. (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன்(ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு மற்ற அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்.

ஊர்வலம் என்ற பெயரில் கொட்டு மேளதாளங்களுடன் செல்வதால் பல சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற அறியாமையினால் செய்யும் செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன. அன்பிற்குறிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது. அதற்குப்பின்னால் ஏற்படடுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக.

நன்றி: இப்னு அஹ்மது – இஸ்லாம்கல்வி.காம்