Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2013
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,054 முறை படிக்கப்பட்டுள்ளது!

மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது?

திகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம்.

முருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.

கண்முதலான அறிவுக்கருவிகளையும், கை முதலான செய் கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும் வகைபடுத்துகிறோம். மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம். மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது. மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.

கண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற கருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணை வேண்டும்.

புத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றது. அதில் பிறந்தது முதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்தது, அனுபவத்தால் கற்றது, பள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்து வைத்துக்கொண்டுள்ளது. மனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின் பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தியில் தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இரு பக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான் செய்கிறது.

மனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது. மனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக் கொள்ளலாம். தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும். அவை நிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புத்தி வெறும் நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கு என்றுதான் கொள்ளவேண்டும். எனவே சித்தம் எனும் அகக்கருவி மனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில் இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது.

மனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறது என்பதை அறிந்தோம். இத்தனை செயலும் யாருக்காக எனில் அது ஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம். ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ-புத்தியோ-சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை. கம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திட நினைவகம் இருந்தும், மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவு இருந்தும், சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில் ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும் அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறது. மனம், புத்தி, சித்தம், என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்கு ஆங்காரம் எனப்படும் “நானிருக்கிறேன், என்னுடையது” போன்ற செயல்கள் இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது.

இன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்று வேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறு பெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள். ஆங்காரம் என்பதை அவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள். கான்சியஸானது மூளையில் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புத்தி எனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள். மனம் என்பதை மென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும் அழைக்கிறார்கள். சித்தம் என்பதை ‘தாட்’ என்று சொல்கிறார்கள்.

உயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். மூளையை பாதிக்கும் கள் சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.

இது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள். மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள. இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன. மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல்கிறது. அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது. ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.

அறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூளையின் செயலும் கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது. நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது. அப்படியானால் மூளையில் மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும்.

வருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வு கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்பொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

மூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள். ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும் வளருகிறது? மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது. என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம். இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது. முடிவு என்று வருமோ தெரியவில்லை.

 

நன்றி:- முனைவர். க. மணி – கீற்று.காம்