Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,880 முறை படிக்கப்பட்டுள்ளது!

மறுமணத்தை ஊக்குவிப்போம்!

[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]

உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.

ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.

இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.

கணவனை இழந்து மறுமணம் செய்ய முடியாமல் இல்லறத்திற்காக ஏங்கி நிற்கும் மனவேதனை ஒருபுறம், சமூகத்தவர்களால் தனக்கு ஏற்படும் அவமானம் மற்றொரு புறம். இதனால் சிலர் வாழ்நாள் முழுவதும் தான் வாழத்தான் வேண்டுமா? என தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலை. இன்னும் சிலரோ ‘இருப்பதைவிட இறப்பதே மேல்’ என தானாகவே அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். மற்றும் சிலரோ மறுமணம் செய்ய முடியாததால் இல்லறத்தை நோக்கி அலைபாயும் எண்ணங்களைத் தணித்துக்கொள்ள தவறான வழியில் வாழ்வைத்தேடி புதைகுழியில் விழுகின்றனர்.

இத்தனை இழிநிலைகளும் கணவன் இறந்தபின் வாழாவெட்டியாக உயிர் வாழ்வதால்தானே ஏற்படுகிறது! எனவே இதற்கெல்லாம் வழிகொடுக்காமல் கணவனுடன் சேர்ந்;;து உடன்கட்டை என்ற பெயரால், அவளையும் சாகடிக்கும் கொடுமையை இன்றும் அவ்வப்போது வடநாட்டின் சில இடங்களில் காணத்தானே செய்கிறோம். பெண்களின் வாழ்வுரிமையை திட்டமிட்டல்லவா பறிக்கிறது இக்கொடிய பழக்க வழக்கங்கள்!

ஆணும் பெண்ணும் ஒருமனதாக திருமணம் செய்து இல்லறத்தின் இன்ப துன்பங்களில் சமமாக பங்கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது கணவன் இறந்தால் மட்டும் பெண்ணாகிறவள் உடன்கட்டை ஏறவேண்டும். இதே மரணம் மனைவிக்கு முன்னதாக ஏற்பட்டால் எந்த கணவனாவது உடன்கட்டை ஏறியதாக எங்காவது கேள்வி பட்டிருக்கோமா? அவன் ஏன் மனைவியுடன் உடன்கட்டை ஏறப்போகிறான். மனைவி இறந்தவுடன் புதுமாப்பிள்ளை எனும் அங்கீகாரம்தான் அவனுக்குக் கொடுக்கப்படுகிறதே! பெண்ணினம் கொடுமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேறென்ன வேண்டும்?

கணவனை இழந்ததை தன் வாழ்வில் ஏற்பட்ட பெரிய இழப்பாகக் கருதி மற்றொரு திருமணத்தையும் முடித்துக் கொண்டு சமூகக் கொடுமைகளுக்கு எதிராக நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி பெறுவது ஒரு பெண்ணுக்கு கவுரவமா? அல்லது கொடுமைக்கார மனிதர்களுக்கு அஞ்சி கேழைத்தனமாக உயிரைக் கொடுப்பது கவுரவமா? இவை அனைத்திற்கும் முடிவு கட்ட வேண்டும்.

இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய கொடுமைகளுக்குச் சாவுமணி அடித்தது. ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.

இதுபற்றி அல்லாஹ் திருமறையில், ‘இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணையில்லா (ஆடவர் பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்ஸ’ (அல்குர்ஆன் 24:32)

மேலும் திருமறையின் 2 ஆவது அத்தியாயத்தின் 234 ஆவது வசனத்தில், ‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும். இந்த தவணை பூர்த்தியானதும் (தங்கள் நாட்டத்திற்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் முறைப்படி எதுவும் செய்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவனாக இருக்கின்றான்.’ என்று அல்லாஹ் அனுமதியளிக்கின்றான்.

இதுபோன்று விவாகரத்து செய்யப்பட்ட பெண்களையும் (கர்ப்பத்தை அறியும் மூன்று மாத) தவணைக்காலம் முடிந்ததும் மறுமணம் செய்துக் கொள்வதை தடுக்கக்கூடாது என்று அல்லாஹ் திருமறையின் 2:23 ஆவது வசனத்தில் எச்சரிக்கையும் செய்கின்றான். இத்திருமறையின் வசனத்திற்கு விளக்கமளிக்க வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களின் வாழ்வுரிமையை நிலைபெறச்செய்ய மறுமணத்தை செய்து கொண்டு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். இதனை வழிகாட்டியாக ஏற்ற உத்தம நபித்தோழர்களும் இப்புரட்சியைச் செய்துள்ளார்கள்.

இனிமேலும் பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கக்கூடாது. பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்தும் ஆணினத்தைப் போன்று பெண்ணும் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவள்தான். ஆண்களைப் போன்ற உணர்வகளும், வாழும் ஆசைகளும் அவளுக்கும் உண்டு என உணர்த்த வேண்டும்.

விதவைப் பெண்களை இழிவுபடுத்துபவர்களைச் சட்டம் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அவர்கள் மறுமணம் செய்து கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்திட உரிமை கொடுக்க வேண்டும். மேலும் உலகிலுள்ள அனைவரும் பெண்களின் உரிமைகளைப் பேணும் விஷயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வெண்டும். 

நன்றி : உண்மை ஆக்கம்: A.H. ஃபாத்திமா ஜனூபா