Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,026 முறை படிக்கப்பட்டுள்ளது!

குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும்

பொருளாதாரம்..! மனித வாழ்வைப் பல கட்டங்களில் முன்னேற்றி நகர வைத்து அல்லது பின்னோக்கி வீழ்ச்சியை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு வீட்டினதும் நாட்டினதும் தலைவிதியை மாற்றியமைப்பதற்குப் பொருளாதாரத்தின் தேவை அளப்பரியதாகும்.

மனிதனின் அடிப்படை தேவை,குடும்ப நிறைவு, தளர்வான எண்ண ஓட்டங்கள், ஆரோக்கியமான சிந்தனைகள் முன்னேற்றகரமான தேடல்கள் என்பனவற்றுக்கு நெருக்கடியற்ற நிதியானது முக்கிய அங்கம் வகிக்கும் அதே நேரம், பொருளாதார நிறைவானது உள ஆராக்கியத்துக்கும் துணை செல்கின்றன.

மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துள்ள பொருளாதாரமானது மகிழ்ச்சியையும் துன்பத்தையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. பொருளாதார செழிப்போ அல்லது அதன் வீழ்ச்சியோ இரண்டுமே குடும்ப வாழ்க்கை வட்டத்தில் சிக்கல்களையும் நெருக்கடியையும் தோற்றுவிக்கும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

சாதாரணமாக ஒருவரது தேவைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் வளர்ந்து கொண்டேதான் செல்லுமே தவிர தேவைகள் இவ்வளவுதான் என்ற வரையறையோ முற்றுப் புள்ளியோ இல்லை என்றே சொல்லலாம். என்றாலும் உழைப்புக்கு மேலான செலவுகள்தான் (குருவி தலையில் பனங்காயை வைத்தது போல்) பெரும்பாலான குடும்பப் பொறுப்பாளிகளுக்குப் பல நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது.

“எவ்வளவு உழைத்தாலும் போதாது”, “பணத்தில் என்ன பெறுமதி உள்ளது” இதுதான் இன்றைய வாய்ப்பாடாகவும் யாதார்த்தத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது. உண்மைதான். சம்பாதிக்கும் கணவன்மார்களுக்கும் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் தடுமாறும் மனைவிமார்களுக்குமே இந்தத் தன்மை புரியும்.

கூர்ந்து நோக்கினால் மனித வாழ்க்கையானது வெள்ளைத் தாளைப் போன்றது. அழகான முறையில் “ஹோம் பட்ஜட்” (Home Budget) செய்வதற்கு பொருளாதார ஸ்திரத்தன்மை அவசியமானது. (சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம்) எமது யாதார்த்த வாழ்க்கையில் எதுவும் வேண்டாம் என்று சொல்வதனை விட இன்னும் வேண்டும் என்ற வார்த்தையே அதிகமாக உள்ளது. ஆனால், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதிய உழைப்பு வருமானம் கைகொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தில் குழப்பம் சூழ்ந்த ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவாகிறது. டென்ஷன், மன வேதனை அதிகமாகி எதிர்பாரத்த பொருளாதார வருமானம் நிறைவு பெறாத பட்டசத்தில் குடும்பத்தில் விரிசல்.. கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை. தர்க்கம் என போய் பிரிவு ஏற்படுவதும் உண்டு.

பெற்றோர், பிள்ளைகளுக்கிடையில் ஒரு முறுகலான சூழ்நிலை ஏற்படவும் ஏதுவாகிறது.வறுமையும் பொருளாதாரப் பிரச்சினையும் வயிற்றையும் மனதையும் நெருக்கடிக்குள்ளாக்கும் போது குடும்பத்தில் ‘அன்பும் பாசமும் நேசமும் பந்திபோட்டு பரிமாறுகிறது’ என்ற யாதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட முறையில் யாராவது கூறமுடியுமா? ஒரு விதமான விரக்தி நிலைக்கு தள்ளப்படும் போதுதான் சட்டத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பான முறையில் பொருளீட்டி சம்பாதித்து, சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கும் வழி சமைக்கிறது. எப்படி சம்பாதித்தால் என்ன? பணம் வந்தால் போதும் என்ற நிலைப்பாடும் ஏற்பட்டு விடக் கூடாது. ஏனென்றால் தற்காலிக மகிழ்ச்சியானது நிரந்தர நிம்மதிக்கு முற்றுப் புள்ளி வைத்து விடும். அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள் (

Over expectation) வாழ்க்கையைக் குழி தோன்றிப் புதைத்து விடும்.ஒரு குடும்பத்தின் பொருளாதார வீழ்ச்சிக்குத் தொழில் பிரச்சினை, குடும் அங்கத்தவர்களின் பெருக்கம் வரவில் பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், எதிர்பாராத விபத்துகள், அனர்த்தங்கள் இவை போன்ற ஒரு சில காரணங்களாலும் ஒரு விதமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பொருளாதாரத்தின் நேர்மறையான, எதிர்மறையான தாக்கமானது உளவியல் ஆரோக்கியத்துக்கும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி குடும்பப் பொறுப்பை வகிப்பவர்கள் அதிக மன உழைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு அடி எடுத்து வைப்பதென்றாலும் பொருளாதாரத்தின் அனுமதி வேண்டும் என்ற ஓர் இறுக்கமான சூழ்நிலைதான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் கோலமிட்டுக் கொண்டிருக்கிறது.

கல்வியோ வியாபாரமோ திருமணமோ எதுவென்றாலும் பணமுதலீடு தேவை. என்றாலும் முழு சமுதாய வர்க்கமும் வறுமையின் மடியில் அகப்பட்டுள்ளது என்றும் சொல்லி விட முடியாது. ஆடம்பரச் செலவுகள், வீண் விரயங்கள் என்று இன்னொரு பக்கம் சொகுசாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை மாடிகள் கட்டுவது? எத்தனை கார்கள் வாங்குவது? எனக் கணக்குப் போட்டு பணத்தைக் கரைக்க வழி தேடும் பணக்கார வர்க்கமும் இல்லாமல் இல்லை.

கல்வி கற்பதற்கு ஏங்கி அல்லல்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகும் அடிமட்ட வர்க்கம் ஒருபுறம், கல்வியைக் காலடியில் வைத்து பேரம் பேசும் பணக்கார வர்க்கம் மறுபுறம். இப்படியாகப் பொருளாதார முகம் பல கோணங்களில் சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் தொடர்ச்சியான வருமான மூலங்கள்தான் குடும்பத் தலைவிதியை நிர்ணயிக்கிறது என்ற நோக்கில் கண்விழிப்பு முதல் கண்ணயரும் வரை உழைப்பு,சம்பாத்தியம், ஓட்டம் என்ற ரீதியில் மூளையைச் செலவு செய்து கொண்டிருந்தாலும் குடும்ப வாழ்வில் பல பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்து விடும். குடும்ப நிர்வகிப்புக்குப் பணம் அத்தியாவசியம் என்றாலும் மனைவி, பிள்ளைகளுடன் தொடர்பாடல் (Communication) நெருக்கம் அதை விட அவசியமாகிறது. இவைகள் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் அதிகளவில் முரண்பாடுகள், பிணக்குகள் தோன்ற ஆரம்பிக்கும்.அதேநேரம், குடும்பத்தின் தேவைகள், எதிர்பார்ப்புகள், பொருளாதார வசதி வாய்ப்புகள் வீடு தேடி வரும் என்றோ, கடன் வாங்கிக் காலத்தை ஓட்டலாம் என்றோ மனப்பால் குடிக்கக் கூடாது. சுயமாக உழைக்க வேண்டும். தேக ஆராக்கியமாக இருக்கும் போதே உழைக்க வேண்டும். வயோதிபத்துக்கு முன்னரே உழைக்க வேண்டும். மனைவி, பிள்ளைகள், குடும்ப அங்கத்தவர்கள் அழகான முறையில் சந்தோஷமாக வாழ வைப்பதற்குக் குடும்பத் தலைவனே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். அது அவனது கடமையும் கூட. மனைவியோ பிள்ளைகளோ மற்றவர்களிடம் கையேந்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் குடும்பத் தலைவன் ஒரு மானமுள்ளவனாக இருக்கமாட்டான். “கொன்றால் பாவம் தின்றால் போச்சு” என்ற நிலைப்பாடு உள்ளவனாகத்தானிருப்பான்.

எது எப்படியாயினும் வரவுக்கு ஏற்ற செலவு என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியது ஒன்றாகும். குடும்பத்தில் திட்டமிட்ட பொருளாதாரப் பேணுதல் முறை சிறந்ததாகும். இல்லாவிட்டால் ஒரு பக்கம் உழைப்பு, இன்னொரு பக்கம் செலவு என நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டு விடும்.

ஆகையால், ஆரோக்கியமான உடம்பு, நல்ல மனநிலை, குடும்ப நிர்வகிப்புக்கு எப்படி அவசியமோ பொருளாதாரத்தின் தன்னிறைவும் தடையற்ற வருமானமும் பிரச்சினைகளற்ற ஒரு சுமுகமான குடும்ப உறவாடலுக்கு பாலமைக்கும். எல்லாவற்றுக்கும் இறை நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் அவசியம்.

நன்றி :-    ஃபாத்திமா நளீரா  வீரகேசரி வாரவெளியீடு 17-02-2013