Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,302 முறை படிக்கப்பட்டுள்ளது!

தமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்!

தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது. “மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்’ என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், “அசைன்மென்ட்’ மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழிக்கு எதிரான, அரசின் இந்த நடவடிக்கைக்கு, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், “அசைன்மென்ட்’ மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரி களில் வெளியிடப்பட்டு உள்ளன.

மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர்சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 80சதவீதம் பேர், அவர்களது, “அசைன்மென்ட்’களையும், பல்கலை தேர்வுகளையும், தமிழ் வழியில் தான் எழுதுகின்றனர். இப்போது, திடீரென, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது’ என்றார்.

இது குறித்து, மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:அனைத்து பல்கலை
துணைவேந்தர்களிடமும் விவாதித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்றுத் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்பு பெறவும், இது உதவும்.

ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.

சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் கூறியதாவது:பல ஆண்டுகளாக, மாணவர்கள், தேர்வை, தமிழ் வழியில் எழுதி வருகின்றனர். இதை, பல்கலையும் அனுமதித்துள்ளது. இப்போது, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். பெரிதுபடுத்துவதற்கு இதில் ஒன்றும் இல்லை.நமது மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழியை படிப்பதில்லை. இதனால், அவர்கள், வேலை வாய்ப்பு என்று வரும் போது, தமிழகம் என்ற எல்லைக்குள், அவர்களது நடவடிக்கை முடங்கி விடுகிறது. இதுவே, ஆங்கில அறிவு இருந்தால், தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களிலும், நமது மாணவர்களால், வேலை வாய்ப்புகளை பெற முடியும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.

சென்னை, நந்தனம் அரசு கல்லூரி முதல்வர் பிரபு கூறுகையில், “”தமிழ் வழியில் படிக்கும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழகத்திற்குள், 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் தான் கிடைக்கின்றன.

ஆனால், ஆண்டுக்கு, 7 லட்சம் மாணவர்கள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனில், ஆங்கில அறிவு அவசியமாக உள்ளது,” என்றார்.

அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவுவரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர்சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர் கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு, மாணவர்கள் மத்தியில், வேறுபாட்டை ஏற்படுத்தும்,” என, அகில இந்திய பல்கலை, ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை, மாநில கல்லூரி மாணவர்சரவணகுமார் கூறுகையில், “”ஒவ்வொரு செமஸ்டரிலும், ஐந்து தேர்வுகளை, தமிழ் வழியில் தான் எழுதுகிறேன். ஆங்கில தேர்வை எழுதுவதற்காக மட்டும், ஓரளவு தயாராக வேண்டியுள்ளது. பள்ளியில், நான் ஆங்கிலம் படிக்கவில்லை. இப்போது, திடீரென, எல்லாமே ஆங்கிலம் தான் என்று கூறுவது, மிகவும் கடினமாக உள்ளது,” என்றார்.