Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,014 முறை படிக்கப்பட்டுள்ளது!

எட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி !

avl12உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.

‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை  இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யா ஆகியோரிடம் முன் வைத்து பேசினோம். இருவரும் வரிசைப்படுத்திய எட்டு சவால்கள், இங்கே… பெற்றோர்களின் கவனத்துக்காக இடம் பிடிக்கின்றன.

1. தனிமை: ‘நோபல்’ பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ‘ஒரு காலத்தில் நியாயத்தைக் கருதி உருவாக்கி வைக்கப்பட்ட உறவுகள், இன்று லாபம் கருதும் உறவுகளாக சுருங்கிவிட்டன’ என்று வேதனையுடன் சொல்லியுள்ளார். இன்றைய குழந்தை, தான் யாருடன் விளையாடுவது என்று தீர்மானிப்பதில்கூட லாபம், சுயநலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ‘இன்னாருடன் சேர்ந்து விளையாடினால்தான் என் குழந்தை நல்லவனாக வளருவன்’ என்ற கற்பிதத்தில் ஒவ்வொரு குழந்தையின் நட்பு வட்டமும் பெற்றோர்களால் கண்காணிக்கப்படுகிறது, சுருக்கப்படுகிறது.

பல வீடுகளில் சி.டி-க்களும் கார்ட்டூன்களுமே குழந்தைகளின் தோழமை ஆகின்றன. இப்படித் தனிமையில் வளரும் குழந்தைகள், எப்படி சோஷியலைஸ்டாக வளர முடியும்? எனவே, நண்பர்கள், உறவினர்கள் என சமூகத்திடம் பழகவிட்டு  வளர்த்தெடுங்கள் குழந்தைகளை.

2. மலையேறிப்போன விளையாட்டுப் பொழுதுகள்: குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடிய காரணத்தால்… சாதிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன. ஆனால், இன்று ஓர் குழந்தை குழுவாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதைவிட, அந்தக் குழந்தை விளையாடுவதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. ‘விளையாடுற நேரம் அந்த கணக்கைப் போட்டுப் பாரு’ என்பது போன்ற பெற்றோர்களின் சுயநலம் சார்ந்த தவறான புரிதலால், குழந்தைகளால் தங்கள் இயல்புக்குரிய விளையாட்டை அனுபவிக்க முடிவதில்லை.

பாரதி சொன்ன ‘ஓடி விளையாடு பாப்பா’வை தான் மருத்துவர்களும் சொல்கிறார்கள். உடல், மன ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தை வளர, அடுத்த முறை… ‘விளையாடச் செல்கிறேன்’ என்று கேட்டால், மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள்.

3. முதலீடாகும் குழந்தைகள்: ‘உனக்கு நான் எல்.கே.ஜி-க்கு பத்தாயிரம் செலவு செய்தேன், ஐந்தாம் வகுப்புக்கு 20 ஆயிரம் செலவு செய்தேன், எட்டாம் வகுப்புக்கு 30 ஆயிரம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றே பெரும்பாலான பெற்றோரும், குழந்தைக்காக செய்யும் கடமை என்பதை உருமாற்றி… குழந்தை மேல் செய்திருக்கும் முதலீடு என்கிற எண்ணத்தை குழந்தையின் மனதில் விதைக்கிறார்கள்; அந்தக் குழந்தைக்கு… முதலீட்டுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள். இந்த இன்வெஸ்ட்மென்டை மதிப்புமிக்க பொருளாக மாற்றுவது போல்தான் கொடுக்கப்படுகின்றன ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸ்’ என்கிற நடனம், இசை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு கிளாஸ் போன்றவை. அன்பை முதலீடு செய்யுங்கள் குழந்தை மேல்… பதில் அன்பு கிடைக்கும்!

4. பெரிய மனுஷத்தனம்: குழந்தையின் திறமை, அறிவு ஆகியவற்றை, அது வாங்கும் மார்க்கை வைத்தே மதிப்பிடுகிறார்கள் வீடு மற்றும் பள்ளியில். அதாவது குழந்தையின் பெர்ஃபார்மென்ஸை வைத்தே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் நாம்தான் ‘நம்பர் ஒன்’னாக இருக்க வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கும்போது, அதன் வயதுக்கும் இயல்புக்கும் மீறிய அறிவைத் தேடி அலைகின்றன. அதனால்தான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை மூன்றாம்  வகுப்புப் படிக்கும் குழந்தை போல் பெரிய மனுஷத்தனமாகப் பேசுகிறது. இந்த பெரிய மனுஷத்தனம் சில சமயங்களில் வன்முறையாக உருவெடுக்கிறது. ‘எம்பொண்ணு பெரிய மனுஷி மாதிரி பேசுவா..!’ என்று பெருமைப்படும் பெற்றோர், ஒரு கணம் நிறுத்தி சிந்தியுங்கள்.

5. வடிகட்டப்படாத செய்திகள்: வரவேற்பறையில் டி.வி, படுக்கை அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போனில் செய்தி எனத் தகவல் தொடர்பு சாதனங்கள் நொடிக்கு நொடி பல்லாயிரம் செய்திகளை கொட்டிக் கொண்டே இருக்கின்றன. பெரியவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு சங்கிலியில், பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் விஷயங்களே அதிகம் கிடைக்கின்றன. ஒரு குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தகவல்கள் அனைத்தும் அந்தக் குழந்தையையும் சென்று சேர்கின்றன. சீரியலில் வரும் இரண்டாம் தாரம் பற்றிய கதை, ஒரு மூன்றாம் வகுப்புச் சிறுமிக்கு எதற்குத் தேவை என்பது பற்றி யோசிப்பதில்லை. அதனால் ஒரு குழந்தை தன் வயதுக்கும், மனதுக்கும் தேவைஇல்லாத விஷயங்களைக் கற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தையின் அன்பான, பண்பான இயல்புகள் நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்படுகின்றன. மீடியாக்களுக்கு தணிக்கை கொண்டு வருவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கும் என்று காத்திருக்காமல், முடிந்தவரை முடக்கிப் போடுங்கள் தொலைக்காட்சிகளை.

6. ஒப்பீடு: ‘நீ மட்டும் இந்த வருஷம் ஒழுங்கா பரீட்சை எழுதி, ஃபர்ஸ்ட் குரூப் வாங்கலேனா… உன் லைஃபே அவ்வளவுதான்’ என்பது போன்ற உணர்வுப்பூர்வமான தாக்குதலை எதிர்கொள்ளாத குழந்தைகளே இன்று இல்லை. ‘பக்கத்து வீட்டு சுரேஷ் மேத்ஸ்ல சென்டம் வாங்கியிருக்கான். நீ இன்னும் 80 மார்க்லயே நில்லு’, ‘சுனிதா என்ன அழகா டான்ஸ் ஆடுறா… நீயும்தான் இருக்கியே’ என்பது போன்ற ஒப்பீட்டுத் தாக்குதலுக்கு ஆளாகாத குழந்தைகள் யார் இருக்கிறார்கள்? வீட்டுக்கு வீடு நடக்கும் இந்தத் தாக்குதல் மனதளவில் ஓர் குழந்தையை நிறையவே காயப்படுத்துகிறது. ‘நாம் எதற்குமே லாயக்கு இல்லையோ’ என்ற தாழ்வு மனப்பான்மையையும், ‘அவனால்தான இந்தத் திட்டு’ என்கிற பொறாமை மனப்பான்மையையும் வளர்க்கிறது. இது நாளடைவில் வன்முறைக்கு வழி செய்யும். ஒப்பீட்டுத் தாக்குதல் குழந்தைகளை எந்தளவுக்கு பாதை மாற்றுகிறது என்பதை உணருங்கள்.

7. மாறிவரும் கலாசாரம் – உணவு: தொழில்நுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கத்தாலும் பூமி பந்து சிறு உருண்டையாகிவிட்டது. நூடுல்ஸ், உலகக் குழந்தைகளின் உணவாகிவிட்டது. சர்வதேச பிராண்ட் நொறுக்குத் தீனிகள், ஹோட்டல்ஸ், கூல்டிரிங்ஸ் என உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் வந்துவிட்டது. நம் சீதோஷண நிலைக்குப் பொருத்தம் இல்லாத உணவு, அதிக கலோரி கொண்ட உணவு, அந்த அதிக கலோரியை வெளியேற்ற வழி இல்லாத வாழ்க்கை முறை என பல்வேறு காரணங்களால் சிறு குழந்தைக்கும் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, ரத்த அழுத்தம் என படுத்துகிறது. அதே நேரம், ‘சத்துக் குறைபாடு தேச அவமானம்’ என பிரதமரே சொல்லும் நிலை. குழந்தைகளின் உணவையும் ஆரோக்கியத்தையும் பொருத்தத் தெரிந்தவர்களே… சிறந்த பெற்றோர்.

8. பாதுகாப்பு: சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தூரம், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் தனித்து இருக்கும் குழந்தைகள் என பல்வேறு காரணங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் தனித்து இருக்கும் குழந்தைகளிடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், சீண்டல்களும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. இதனை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறுப்பினர்களாக இருப்பதால், அது சரியா… தவறா என்ற குழப்ப மனநிலைமையில் இருப்பது குழந்தைகளின் பெரும் பெரும் சவலாக இருக்கிறது.

வளரும் சூழ்நிலையும், மீடியாவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்குப் பாலுறவு குறித்து பல தவறான புரிதல்களை கற்பித்து உள்ளன. இதனால், பள்ளிக் குழந்தைகளிடம் கூட கர்ப்பக்கலைப்பு நடந்துள்ளது என்கிற அதிர்ச்சிகரமன தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘குட் டச்… பேட் டச்’ என ஐந்து வயதில் இருந்தே கற்றுக்கொடுங்கள் தற்காப்பு விஷயங்களை.

”ஒரு கலாசார – பொருளாதார – சமூக மாற்றத்தில் பாஸிட்டிவ் ஆன விஷயங்களும், நெகட்டிவான விஷயங்களும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த பாஸிட்டிவ் – நெகட்டிவ் விஷயங்களில் எது தேவை, தேவையில்லை என்பதில் முதலில் பெற்றோர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் மட்டுமே குழந்தைகள் குழந்தைகளாக வளர முடியும். அதற்கு, குழந்தைகளுடன் உரையாட வேண்டும்!” என்கிறார் நடராசன் நெத்தியடியாக!

ஆம்… குழந்தைகளுடனான பெற்றோர்களின் குவாலிட்டி நேரங்களே இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை, வழிகாட்டலை அவர்களுக்கு வழங்கும்!

நன்றி: அவள்விகடன்.