Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,525 முறை படிக்கப்பட்டுள்ளது!

வஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்?

குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் என்று சொல்லுகிறவர்களைப் பார்த்து அல்லது தவ்ஹீத்வாதிகள் என்று பேசுபவர்களைப் பார்த்து வஹ்ஹாபிகள் என்று கூறப்படும் போது இந்த பெயர் எப்படி வந்தது இதன் அர்த்தமென்ன என நாம் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும்.

இந்த பெயரின் அர்த்தமென்ன?

இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய அழகு திருநாமங்களில் ஒன்றாகும்.வஹ்ஹாப் (வள்ளல்) பார்க்க குர்ஆன் 3:8,38:9,38:35 ‘வஹ்ஹாபி’ என்றால் ‘அல்வஹ்ஹாப்’ என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள்படும். உண்மையில் இப்படி நம்மைப் பார்த்து யாரவது அழைத்தால் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

(பாய் காபி சாப்பிடுகிறீர்களா டீ சாப்பிடுகிறீர்களா? என்று அன்போடு கேட்க வேண்டும்) ஏனென்றால் நம்மைப் பார்த்து இவர்கள் அல்லாஹ்வை சேர்ந்தவர் என்று சொல்வது சாதரணவிஷயமா?

இந்த பெயர் எப்படி தவ்ஹீத்வாதிகளை குறிக்கும் சொல்லாக மாறியது?

முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) – (அப்துல் வஹ்ஹாபுடைய மகன் முஹம்மத்) என்பவர் மிகப்பெரிய அறிஞர். சவூதியில் ரியாத்தை சேர்ந்தவர்.

இஸ்லாமிய உலகில் (அக்கீதா) அடிப்படைக் கொள்கையில் மிகப்பெரிய சரியான மாற்றத்தை ஏற்ப்படுத்தியவர். அவர்கள் வாழ்ந்த காலக் கட்டத்தில் அதாவது 18ம் நூற்றாண்டு(கி.பி 1700) ஹிஜ்ரி கணக்குப்படி1000 மாவது ஆண்டு இந்த காலப்பகுதியில் இமாம் அவர்கள் தோன்றிய காலப்பகுதியாகும். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை பாதுகாப்பது என்று பொறுப்பெடுத்திருக்கிறான். இப்படி நபிமார்கள் ஒவ்வொருவரும் தொடராக ஒருவர் வந்து சென்றததற்குப் பின்னால் சமூகம் மீண்டும் தவ்ஹீதை விட்டும் மார்க்கம் ஏவியிருக்கின்ற எனைய அசலான கடமைகளை விட்டும் தூரமாகின்ற போது அடுத்த இறைத்தூதர்களை இறைவன் அனுப்பிக் கொண்டே இருந்தான். இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வருவதில்லை. வரவும்முடியாது

ஆனால் சமூகம் சரியான மாற்றத்திலேயே இருப்பார்களா என்றால் இல்லை. காலம் செல்ல செல்ல மக்கள் சரியான கொள்கைகளிலிருந்து மாற்றமடைந்துக் கொண்டே இருப்பார்கள். ஆக முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு இறைத்தூதுத்துவோம் முற்றுப் பெற்றால் வரலாற்றிலே அவர்களுக்குப் பின்னால் ஏற்ப்படுகின்ற சீர்கேடுகளை யார் சீர்ப்படுத்துவது யார் சமூகத்தை வழிநடத்துவது அல்லாஹ் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏதோ அடிப்படையில் ஒரு சீர்த்திருத்தவாதியை ஏற்ப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறான்.

இது இஸ்லாமிய வரலாற்று ரீதியான உண்மை.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தின் தூணாக விளங்கினார்கள். அவர்களின் காலப்பகுதியில் அடிப்படைக் கொள்கை சம்பந்தமாக நிறைய குழப்பங்கள் தோன்றிய போது இமாமவர்கள் அதற்கு முகம் கொடுத்து சரியான இஸ்லாத்தை நிறுவினார்கள். எனவேதான் அவர்களை நாம் இமாம் சுன்னத் வல் ஜமாத் என்கிறோம் (அஹ்லே சுன்னத்தின் தலைவர் என்று பொருள்) அதற்கு முன்பு முஹம்மது நபி (ஸல்) மரணத்திற்குப் பின்னால் அபுபக்கர் (ரலி) அவர்களைக் கொண்டு இறைவன் இந்த இஸ்லாத்தை பாதுகாத்தான். இந்த அடிப்படையில் ஹிஜ்ரி 1100 பகுதிகளிலேயே இமாம்.முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களை ஒரு சீர்த்திருத்தவாதியாக இறைவன் உருவாக்கினான்.

அவர்கள் தோன்றிய காலப்பகுதி விரிவாக

இமாவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 1115ல் நஜ்தியிலே(இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள அல் உயைனா என்ற ஊரில் பிறந்தார். அது இப்போது ரியாத்திலிருந்து வடமேற்கில் 70 கிலோ மீட்டர்க்கு அப்பால் இருக்கிறது.

அவர்கள் பிறந்த காலப்பகுதி எப்படி இருந்தது என்றால், இருளான காலப்பகுதியாக இருந்தது. மக்களிடம் பழைய அறியாமைக் கால பழக்கவழக்கங்களைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஹிஜ்ரி 900க்குப் பிறகு உலகளாவிய இஸ்லாமிய உலகம் உறங்கிக் கொண்டு இருந்தது. எல்லா விஷயங்களிலும் அறிவுத்துறையில், அரசியல்துறையில், பொருளதாரத்துறையில் ஏனைய மார்க்கத்துறையில் அனைத்திலும் விழ்ச்சியில் இருந்த சமூகத்தை தட்டி எழுப்பியவர் ஒருவர் இருப்பாரென்றால் அவர்தான் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப்(ரஹ்)

அவர்கள் வெறும்(இணைவைப்பை) ஷிர்க்கை மட்டும் விமர்சிக்கவில்லை அனைத்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தினார்கள்.

கப்றுகளை,குகைகளை, மரங்களை வணங்கக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர். அதேபோன்று சூனியம் தலைதூக்கியிருந்தது போதை வஸ்துக்களின் பிடியில் மக்கள் இருந்தனர். இக்காலக்கட்டத்தில் பிறந்த இமாமவர்கள் சிறுவயதிலேயே ஒரு தேர்ச்சியுள்ள நுணுக்கமான ஆற்றல் உள்ளவராக வளர்கிறார் சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்திருந்தார் அவருடைய தந்தையும் ஒரு பெரிய காரி(நீதிபதி) குர்ஆனை மனனம் செய்துயிருந்த மார்க்க அறிஞர். முதலில் இமாமவர்கள் தனது தந்தையிடம் கல்வி பயின்றார்கள். சிறுவயதிலேயே நிறைய விஷயங்களை தந்தையிடம் கற்றுக் கொண்டார்கள்

இந்த சூழலில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது 13 ஆம் வயதில் ஹஜ் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுடைய தந்தையும் அனுமதி அளித்து ஹஜ்க்கு அனுப்பி வைக்கிறார். அக்காலங்களில் ஹஜ் செய்வதென்றால் மிகவும் சிரமான காரியம். நீண்டபயணம் செய்ய வேண்டும். ஆனால் இமாமவர்கள் இதுபோன்ற பயணங்களின் ஊடாக சரியான இஸ்லாத்தை கற்றுக் கொண்டார்கள்.

அக்காலத்தில் மக்காவிலே நான்கு மிகாரபுகள்(தொழுகைக்காக இமாம் நிற்கும் இடம்) கஃபாதுல்லாவை வளைத்து இருந்தது. எந்த அளவுக்கு அந்த சமகால மக்களிடம் மார்க்கத்தைப்பற்றிய தெளிவில்லையென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் தனிதனியாக தொழகை இடங்கள் இருந்தன. ஒரு வக்து தொழகையை நான்கு தடவை நிறைவேற்றப்படும். அதாவது ஹஜ் வந்த ஹாஜிகளை ஹனபி,ஷாபி, மாலிக்கி, ஹம்பலி என்று நான்கு பிரிவுகளாக பிரித்து தனி தனி பிரிவினரின் இமாம்களோடு தொழுகை நடக்கும்.

(இதை பிற்காலங்களில் வஹ்ஹாபி இமாமவர்கள் ஒரே தொழுகையாக்கி மற்ற தவறான பழங்கங்களை ஒழித்தார்கள். இன்றும் இதே நிலை தொடர்வதற்க்கும் வஹ்ஹாபி இமாம் அவர்களே காரணம்) இன்னும் மக்காவிலே தாஃய்ப்பிலே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கப்ர் கட்டி வைத்திருந்தனர். அங்கு பெரிய மினார கட்டி அதை ஹஜ்க்கு வருபவர்கள் எல்லாரும் தொட்டு முத்தமிடுவதும், அவர்களிடம் பிரார்த்திப்பதும்,
தேவைகளை கேட்பதும் அதே மாதிரியே மக்காவிலே ஹதீஜா (ரலி) அவர்களுடைய கப்ர் என்று ஒன்றும் இருந்தது. இவையெல்லாம் அன்றைய மக்களிடம் பிரபலமானவை. இது போன்று மக்காவை சுற்றி ஏகப்பட்ட தர்ஹாக்கள் இருந்தன. அக்காலகட்டத்தில் உலமாக்கள் கூட எந்த அளவுக்கு தெளிவில்லாமல் இருந்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் 13ம் வயதில் ஹஜ்க்கு வந்திருந்த போது மக்காவில் காஃபாவில் ஒரு உலமா இஸ்லாமிய பயான்(சொற்பொழிவு) நடத்திக்கொண்டிருந்தார். ஆழமான அறிவுள்ள அழைப்பாளரான அவர் சிறந்த முறையில் ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பயான் செய்து கொண்டிருந்தார். அந்த சொற்பொழிவாள் ஈர்க்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் முழுபயானையும் கேட்கிறார்கள். அழகான பேச்சாக இருக்கிறது ஆனால் பேச்சை முடித்து விட்டு எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்திரிக்கிறார். ஹதீஸ் குர்ஆன் அடிப்படையில் பேசிய அவர்கூட சரியான இஸ்லாத்தை விளங்காமல் யாஅல்லாஹ் என்று அழைப்பதற்கு பதில் யா காஃபதுல்லாஹ் என்று அழைக்கிறார்.

இதனைக் கண்ட அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மிக நுணுக்கமாக இவர் பெரிய அறிஞராக இருக்கிறாரே இவரிடம் எப்படி அவர் செய்த தவறை சுட்டிக்காட்டுவது என்று யோசித்துக் கொண்டே அவரிடம் சென்று உங்களிடத்தில் நான் எனக்கு தெரிந்த சின்ன சின்ன அல்குர்ஆன் வசனங்களை ஓதி காட்டுகிறேன் நான் சரியாக ஓதுகிறேனா என்பதை நீங்கள் சரி பார்த்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். ஏனென்றால் அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அப்போது சிறுவர். உடனே அந்த அழைப்பாளர் தாராளமாக நான் சரிபார்த்து சொல்கிறேன் என்றவுடன் சரி நான் குல் அவூது பி(B)ரப்பி(B)ன்னாஸ் சூரத்துன்னாஸிருந்து தொடங்கி ஒவ்வொன்றாக ஓதி காண்பிக்கிறேன் நீங்கள் தவறு இருந்தால் சரி பண்ணுங்கள் என்றார். அவரும் சரி ஒதுங்கள் என்றார் உடனே இமாமவர்கள் சூரத்துன்னாஸ், சூரத்துல் ஃபலக்,இக்லாஸ், தப்பத், அந்நஸ்ர், இப்படி ஒவ்வொன்றாக ஓத தொடங்கி இந்த சூரத்துல் குரைஷ் என்ற சூரா வந்தவுடன் நாம் எப்படி ஓதுவோம்

லிஈலா(F)பி குரைஷ்
ஈலா(F)பிஹிம் ரிஹ்ல(த்)தஷ் ஷி(த்)தாயி வஸ்ஸை(F)ப்
(F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத்
என்றுதான் தொடராக ஓதுவோம் அவர்கள் எப்படி ஓதினார்கள் என்றால்

ர(B)ப்ப ஹாத என்பதை விட்டுவிட்டு (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்று ஓதினார்கள் உடனே அதனை உலமா சுட்டி காட்டீனார்கள் (F)பல்யஃ(B)புதூ (B)பைத் என்றால் என்ன அந்த வீட்டை அவர்கள் வணங்கட்டும் என்று பொருள்.

(F)பல்யஃ(B)புதூ ர(B)ப்ப ஹாதல்(B)பைத் என்றால் இந்த வீட்டின் இரட்சகன் எவனோ அவனை வணங்கட்டும் என்று பொருள்.

அல்லாஹ் இந்த வசனத்தில் என்ன சொல்கிறான் காஃபாவை யாரும் வணங்க வேண்டாம் அதை எவன் படைத்தானோ அவனை வணங்கட்டும் என்று சூரத்துல் குரைஸில் அல்லாஹ் சொல்லுகிறான். எனவே தான் இஸ்லாத்தை விளங்கிய எந்த முஸ்லிமும் காஃபாவை வணங்குவதில்லை

இமாமவர்கள் (F)பல்யஃ(B)புதூ (B)பைத் இந்த வீட்டை வணங்கட்டும் என்று வேண்டுமென்றே ஓதினார் உடனே அந்த உலமா தவறாக ஓதுகிறாய் அது எப்படி வீட்டை வணங்குவது காஃபாவை வணங்கக் கூடாது என்கிறார். உடனே இமாமவர்கள் உங்களுடைய செயலில் அப்படித்தானே பார்த்தேன் நீங்கள் எழுந்திருக்கும் போது யா காஃபதுல்லாஹ் என்று எழுந்தீர்களே அதுமட்டும் சரியா என்று கேட்டார்கள். உடனே அவர் அன்றுதான் அவர் தன்னுடைய தவறை உணர்ந்து சரியாக விளங்கிக் கொண்டார்.

முஹம்மது இப்னு அப்துல் வஹாப் அவர்கள் ஒரு சாதாரண அறிஞர் அல்ல. இமாமவர்கள் குர்ஆன் தப்ஸீரில் எராளமான விளக்கங்கள் எழுதியுள்ளார்கள் . கல்வி கற்பதற்காக மக்காவை அடுத்து மதீனாவுக்கு சென்றார்கள். மதீனாவில் சில வருடங்கள் கல்வி கற்றார்கள். பிறகு (பஷார) ஈராக் நாட்டிற்கு சென்று கல்வி கற்றார்கள். அக்காலங்களில் பண்பாட்டில் கல்வியில் ஈராக் சிறந்து விளங்கியது ஈராக்கில் கல்வி கற்று முடித்து விட்டு லக்‌ஷா (இன்றைய பாலஸ்தீனின் உள்ள காஸா) சென்று அங்குள்ள மார்க்க அறிஞர்களிடமும் கல்வி கற்றார்கள். இவ்வாறு பல நாடுகளில் சுற்றுப் பயணங்களில் வாயிலாக இமாமவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார்கள்.

மார்க்கத்திற்கு விரோதமான பல நாடுகளில் நிவவிய நூதன பழக்கவழக்கங்களையும் தெரிந்துக் கொண்டார்கள். இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையிருந்து விலகி வாழ்ந்ததை அனுபவப் பூர்வமாக கண்கூடாக பார்த்து தெரிந்துக் கொண்டார்கள். தனது 25ஆவது வயதில் கல்வி சுற்றுலா முடித்துக் கொண்டு தன்னுடைய தந்தையிடத்தில் வந்தார்கள். ஆனால் அவருடைய தந்தை உயைனா என்ற இடத்திலிருந்து ஹிஜ்ரத்(நாடு துறந்து) செய்து ஹுரைனிலா என்கிற ஊரில் இருந்தார்கள். ஏனென்றால் உயைனா பகுதியில் இருந்த அதிகார வர்க்கத்திடம் மார்க்க விஷயமாக முரண்பட்டு சென்றிருந்தார். ஹுரைனிலா என்ற பகுதியில் இருந்து கொண்டு தான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தனது முதல் அழைப்புப் பணியை தொடங்கினார்கள்.

சரியான இஸ்லாத்தை சொன்னவுடன் பிரச்சனை ஆரம்பிக்கிறது. நபிமார்கள் வரலாற்றிலேயே இதனை நாம் பார்க்கலாம். ஆரம்பத்தில் தவ்ஹீதை சொல்லும்போது பிரச்சனைகள் ஏற்ப்பட்டன. அதே போல இமாமவர்கள் பிரச்சாரம் செய்த ஹீரைனிலா பகுதியில் பிரச்சனை ஆரம்பிக்கிறது. உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்ப்படுகிறது மறுபடியும் ஹுரைனிலா என்ற ஊரிலிருந்து தனது சொந்த ஊரான உயைனாவிற்கு வந்தார்கள். உயைனாவிலுள்ள அமீர் (ஆட்சியாளர்) அவர்களோடு இமாமவர்களுக்கு நல்ல நெருக்கம் ஏற்படுகிறது. அமீரின் உதவியோடு தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.

அந்த பகுதியில் (ரியாத்தில்) ஒரு மரம் இருந்தது அது பிள்ளை தரும் மரம்,என்று நம்பிக் கொண்டிருந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அந்த மரத்திடம் வந்து பிரார்திப்பார்கள்.

அதேபோன்று ஸயித் இப்னு கத்தாப் என்ற பெயருள்ள சஹாபி, உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார் யமாமா யுத்தம் நடந்தபோது (யமாமா என்பது ரியாத்திற்கு அருகிலிருந்த ஒரு ஊர்) அதிலே கலந்து கொண்டு இறைவழியில் ஸாயித் இப்னு கத்தாப் அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் தர்ஹா கட்டி பெரிய மினராவை எழுப்பி வணங்கிக் கொண்டிருந்தனர்.

அதேபோன்று மிரர் இப்னு அஸ்வர் என்ற பெயருடைய சஹாபிக்கும் கப்ர் கட்டி வைத்திருந்தனர். இமாமவர்கள் தொடர் பிரச்சாரத்தின் மூலமாக மனமாற்றத்தை ஏற்ப்படுத்தி அமீரிடம், இந்த தர்ஹாக்களை உடைக்க வேண்டும் ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அமீர் (அப்பகுதி ஆட்சியாளர்) மறுத்துவிட்டார். அல்ஜீபைலா என்கிற அந்த தர்ஹாவுக்கு அருகில் இருக்கின்ற மக்கள் என்னை சும்மா விடமாட்டார்கள் அதனால் வேண்டாம் என்றார். இமாமவர்கள் நான் இன்னும் அவர்களிடம் பிரச்சாரம் செய்து சரியான இஸ்லாத்தை சொல்லி சம்மதிக்க வைக்கிறேன் என்று சொன்னார்கள். ஷிர்க்கினால் ஏற்படும் பாரதூரமான கேடுகளை விளக்கி அமீர் அவர்களையும் சம்மதிக்க வைத்து, அமீருடைய 600 படைவீரர்களோடு இமாமவர்கள் அந்த தர்ஹாவை உடைக்க சென்றபோது, ஜீபைலா பகுதியில் அறியாமை பழக்க வழக்கங்களில் பிடிவாதமாக இருந்த மக்கள் ஒடி வந்து இமாமவர்களை தாக்க வந்தபோது, அமீரின் படையைக் கண்டு பின்வாங்கினார்கள். இப்போது யார் உடைப்பது எல்லோரும் தயங்கினார்கள் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஆழமான பிராச்சரம் செய்திருந்தும் மக்களிடம் ஊசலாட்டம் இருந்தது. யாரும் உடைக்க தயாராகவில்லை கப்ரிலே கைவைத்தால் ஏதாவது நடந்து விடுமொ என்று பயந்தார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சொந்த மறுமகன் அலி (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மண்ணை விட்டு ஒரு ஜான் அளவுக்கு உயரமாக எங்கு கப்ர் கட்டப்பட்டு இருந்தாலும் உடைத்துவிட்டு வாருங்கள் என்று அவர்களுடைய காலத்தில் கட்டளை பிறப்பித்தார்கள். அலி(ரலி) அவர்களும் அனைத்து கப்ர்களையும் உடைத்தெறிந்தார்கள்.

இந்த முன்மாதிரியை இமாம் அவர்கள் சொல்லிக் காட்டிவிட்டு, சரி நான் உடைக்கிறேன். நான் முதலில் ஆரம்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு உடைத்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை கவனித்த மக்கள் அனைவரும் சேர்ந்து உடைத்தார்கள். இமாமவர்கள் இதோடு முடங்கி விடாமல் அந்த பிள்ளை தரும் மரத்தையும் வெட்டிச் சாய்த்தார்கள். இவர்கள் செய்த சீர்திருத்த பணி மற்ற பகுதிகளுக்கும் பரவியது. ஆனால் இமாமவர்களால் உயைனாவிலும் இருக்க முடியவில்லை.

ஏனென்றால் உயைனா பகுதியை அட்சி செய்த அமீர் அல் அக்ஸாவில் இருக்கின்ற அமீரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார். அக்ஸா பகுதியிலுள்ள அமீர் இவருக்கு செய்தி ஒன்று அனுப்பினார். முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் நமது பகுதியில் புதிய விஷயங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார் கப்ர்களையெல்லாம் உடைக்குமாறு சொல்கிறார் எனவே இவரை கொன்றுவிடுங்கள் என்று கட்டளை இடுகிறார். உயைனா பகுதி அமீர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை கூப்பிட்டு சொன்னார்கள், எனக்கு உங்களை கொன்றுவிடுமாறு கட்டளை வந்திருக்கிறது ஆனால் உங்களை கொல்ல விரும்பவில்லை. உங்களுடைய சீர்திருத்த பணிகளைப் பற்றி எனக்குத் தெரியும் நீங்கள் தயவுசெய்து இந்த ஊரைவிட்டு சென்று விடுங்கள் என்றார். இமாமவர்கள் அவரை பார்த்து கேட்டார்கள் நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள் நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கை லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அசல் தன்மையாகும். அது சொல்லுகிற கொள்கையாகும் இந்த கொள்கையை நான் சொல்வதற்கு நீங்கள் எனக்கு உதவி செய்தால் உங்களின் ஆட்சியை அல்லாஹ் திடப்படுத்துவான். உங்களுக்கு கண்ணியத்தை தருவான். சகல வசதிகளையும் தருவான். அல்லாஹ்வுக்கு மட்டும் பயப்படுங்கள் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அமீர் அவர்களோ முடியாது பாலஸ்தீன பெரிய அமீர் படையோடு வந்தால் என்னால் சமாளிக்க முடியாது போராட முடியாது தயவு செய்து போய்விடுங்கள் என்றார். தனது சொந்த ஊரைவிட்டே இமாமவர்கள் ஹிஜ்ரத் போக வேண்டிய சூழல்

இதன் பிறகு இமாமவர்கள் எங்கு சென்றார்கள். தனது அழைப்புப் பணியை எவ்வாறு தொடர்ந்தார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சென்ற பதிவில் உயைனா பகுதி ஆட்சியாளர் தன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அப்துல் வஹ்ஹாப் அவர்களை வெளியேற்றியே தீருவது என்று முடிவெடுத்து வெளியேற்றியதையும், இமாமவர்களின் வார்த்தைகள் அவரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் பார்த்தோம்.

என்னதான் அந்த ஆட்சியாளர், இமாமை ஊரைவிட்டு வெளியேற்ற முற்பட்டபோதும், இமாமவர்களின் சத்தியப் பணியைக் கண்டதன் விளைவாக, அவரைப் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பக்கத்து ஊரான அஃத்திரையா என்கிற பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்.

அஃத்திரையா என்பதும் ரியாத்தை சேர்ந்தது தான். அக்காலத்தில் சவூதி பல குட்டி பிரதேசங்களாக பிரிந்து கிடந்தது. முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் அஃத்திரையாவுக்குள் முதன்முறையாக நுழைகிறார்கள். இமாமவர்களுக்கு எதிரிகள் இருந்த அளவுக்கு ஆதரவாளர்களும் இருந்தனர். அஃத்திரையா பகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இமாமவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அஃத்திரையா பகுதியை முஹம்மத் இப்னு சவூத் என்பவர் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். இவருடைய பரம்பரையை சேர்ந்தவர்களைத்தான் சவூதியா என்று சொல்கிறோம். சவூதி நாட்டையும் இவர்களுடைய பெயரைச் சொல்லித்தான் அழைக்கிறோம்.

முஹம்மது இப்னு சவூதிடம் இமாமவர்களின் ஆதரவளர்கள் குழு ஒன்று சென்று, உயைனாவில் இமாம் அவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ எழுச்சியை எடுத்துரைத்து, நமது பகுதியில் இவர் பிரச்சாரம் செய்தால் இறைவனின் உதவி கொண்டு சீர்திருத்தம் ஏற்படலாம். எனவே இமாமுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்து ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

முஹம்மது இப்னு சவூத் அவர்களும் இந்த பணியின் அவசியத்தை உணர்ந்திருந்ததால் இமாமுடைய ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களை நேரடியாக அழைத்துப் பேசி இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் மன்னரிடம், நான் கொண்டு வந்திருக்கிற இந்த கொள்கையை சரியான முறையில் பிரச்சாரம் செய்ய நீங்கள் உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுடைய ஆட்சியை உறுதிப்படுத்துவான், உங்களுக்கு வெற்றியைத் தருவான், உங்களுடைய ஆட்சியை அல்லாஹ் விரிவாக்கி தருவான், உங்களை கண்ணியப்படுத்துவான் என்றார்கள்.

மன்னரும் அதற்கு சரி நான் உங்களுடைய பணிகளுக்கு தோள் கொடுக்கிறேன். நான் உங்களோடு இருக்கிறேன், உங்களுக்கு முழு உதவியும் செய்கிறேன். ஆனால் அல்லாஹ் ஏகத்துவ மாற்றத்தை இந்த பகுதியில் உருவாக்கி நீங்கள் பெரிய அந்தஸ்த்தை அடைந்தால் இந்த ஊரை விட்டும் செல்லக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார். இமாமவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு மன்னர் இமாமவர்களை அரசாங்க பிரதிநிதியாக்கி தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இஸ்லாமிய பிராச்சரத்தை முழுவீச்சில் செய்ய அனுமதி கொடுத்து முழு ஒத்துழைப்பையும் பூரண சுதந்திரத்தையும் வழங்கினார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், நான்கு கலீஃபாக்கள் ஆட்சிக்காலத்திலும் எவ்வாறு ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றாக இருந்து இணைந்து செயல்பட்டதோ அதே சூழல் மறுபடியும் ஏற்பட்டது. ஆன்மீக தலைமையும் அரசியல் தலைமையும் ஒன்றிணைந்ததால் இமாமவர்களின் பிரச்சாரம் சூடுபிடித்து முழு வீச்சில் நடக்கிறது.

முஹம்மது இப்னு சவூத் அவர்களின் ஆட்சியும் விரிவடைந்து கொண்டே சென்றது. மன்னர் சவூத் மக்கா, மதீனா மற்றும் சிதறிக்கிடந்த மற்ற சிற்றரசுகளையும் கைப்பற்றி இன்றைய சவூதி நிலப்பரப்பைக் கடந்து ஈராக் வரை வெற்றி பெற்றுக்கொண்டே செல்கிறார். இமாமவர்களும் மன்னருக்கு ஈடு கொடுத்து, அழைப்புப் பணி மட்டும் செய்யாமல் மன்னரின் சிறந்த போர்ப்படை தளபதியாகவும் இருந்தார்கள். படைவீரர்களுக்கு பயிற்சியளிப்பது, வெற்றி பெற்ற பகுதிகளில் கவர்னர்களை நியமிப்பது, மக்களை எகத்துவ கொள்கையின் மூலம் ஒரே குடையின் கீழ் ஒன்று படுத்துவது, ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இஸ்லாமிய ஆட்சியை பலப்படுத்துவது என்று பம்பரமாக சுழன்று முழு அரேபியாவிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

இதனைக் கண்ட அன்றைய வல்லரசுகளான பிரித்தானியா மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்கள், கஃலீபாக்கள் காலத்திய தூய இஸ்லாமிய அரசியல் முறைப்படி நடக்கின்ற ஆட்சியை பரவவிட்டால் நமக்குதான் முதல் ஆபத்து என்பதை உணர்ந்து, பிரான்ஸின் மறைமுக அடிமையாக கிடந்த உஸ்மானிய சம்ராஜ்ஜியத்தின் 2 வது சுல்தானிடம், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிராச்சரத்தையும் அதற்கு துணைபுரிகின்ற ஆட்சியாளர்களையும் இப்படியே விட்டு வைத்தீர்கள் என்றால் உஸ்மானிய சாம்ராஜ்ஜியம் அவர்களால் வீழ்த்தப்படும், துருக்கியை வஹ்ஹாபிகள் கைப்பற்றி விடுவார்கள். அதனால் நீங்கள் முந்திக் கொண்டு சவூதியை கைப்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார்கள். துருக்கிய ஆட்சியாளரும் அதனை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு சவூதியின் மீது படையெடுத்தார். சவூதியில் நடந்த பல போர்களுக்கு பிறகு ஹிஜ்ரி 1240ல் இமாமவர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸ்லாமிய அரசமைப்பு முற்றாக அழிக்கப்பட்டது.

ஆனால் இமாமவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏகத்துவ புரட்சியை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னாட்களில் வாளால் சாதிக்கமுடியாததை இந்த கொள்கை சாதித்தது. ஆம், சூஃபிஸ கொள்கை கொண்ட துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர்.

இமாமவர்களை பெருங்கூட்டம் ஒன்று எவ்வாறு ஆதரித்ததோ அவ்வாறே பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்க்கவும் செய்தது. இதை இமாமவர்கள் வாழ்ந்த சமகாலத்தின் வரலாற்றுப் புத்தகங்களை படித்தால் இன்னும் உங்களுக்கு தெளிவாக விளங்கும். அவர்கள் காலத்து இஸ்லாமிய சமூகம் ஷிர்க்கிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி போய் இருந்தது. சவூதியில் மாத்திரமல்ல முழு இஸ்லாமிய உலகமும் இதே நிலையில்தான் இருந்தது. அரபு நாடுகளை ஆய்வு செய்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அறிஞர்கள் அனைவரும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை மிக மிக மோசமான காலகட்டம் என்றே குறிப்பிடுகின்றனர். அந்தளவுக்கு முஸ்லிம்கள் மாற்றுக் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

சமகாலத்தில் வாழ்ந்த மாற்று மத அறிஞர் ஒருவர் – ‘சூஃபிசத்தை பின்பற்றிய உஸ்மானிய சாம்ராஜ்யம் மட்டும் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால், இமாமவர்கள் விட்டுச்சென்ற புரட்சிகர சமூகப் பணி தொடர்ந்து சீராக நடந்து இன்று அசைக்க முடியாத பெரிய வல்லரசாக இஸ்லாமிய சமூகத்தின் கட்டமைப்பு இருந்திருக்கும்’ என்று எழுதுகிறார்.

சஹாபாக்கள் காலத்தில் எவ்வாறு இஸ்லாம் வேகமாக வளர்ச்சி பெற்றதோ அதுபோல் இமாமவர்களின் காலக்கட்டத்திலும் தூய இஸ்லாம் எழுச்சி பெற்றது.

ஹிஜ்ரி 1200 க்கு பிறகு ஏற்பட்ட ஏகத்துவ புரட்சிக்கு ஆரம்ப புள்ளியாக இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தான் இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை.

இறுதியாக, ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்திய முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ஹிஜ்ரி 1115 ல் பிறந்து ஹிஜ்ரி 1206 ல் மரணித்தார்கள்.

நன்றி: தமிழ் இஸ்லாமிக் மீடியா