எதிர் தரப்பில் விளையாடுகிறவர்களின் எல்லா காய்களையும் வெட்டியும்கூட தோற்றுப் போகிறவர்கள் இருக்கிறார்கள். சில காய்களை மட்டுமே வெட்டி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள்.
விளையாட்டு என்பது விளையாடி பொழுதைக் கழிப்பதற்கு மட்டுமல்ல. உடலால், மனதால், நம்மை மேம்படுத்திக் கொள்வதற்காகவும்தான்.
வெற்றிக்காக நாம் படிக்க வேண்டிய பாடங்கள் விளையாட்டிலும்கூட இருக்கிறது. செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இங்கே…
சதுரங்கம்
வெற்றியாளர்களே முதலில் துவங்குகிறார்கள்
சில நேரங்களில் யார் விளையாட்டை துவக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து விளையாட்டின் போக்கே மாறிவிடும். இது சதுரங்கத்தை போலவே உங்கள் வாழ்க்கைக்கும் பொருந்தும். எனவே வாழ்க்கையிலும் உற்சாகமாக முதலடி எடுத்துவைக்கிற நபராக எப்போதும் இருங்கள்.
சமமான எதிர்வினை உண்டு
செஸ் விளையாட்டில் நாம் நகர்த்தும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அதற்கு தகுந்த சமமான எதிர்வினை உண்டு. வாழ்க்கையிலும் அப்படித்தான்.
ஏன், நாம் பேசும் வார்த்தைகளுக்குகூட அதேபோன்று சமமான எதிர்வினை உண்டு. விளையாடும்போது இருக்கும் இந்த நிதானம் பேசும்போது பலருக்கு இருப்பதில்லை. நாம் இதைச்சொன்னால் அவர்கள் என்ன நினைப்பார்கள் பதிலுக்கு என்ன பேசுவார்கள் என்பதை யோசிப்பதில்லை. இனி சதுரங்கக்காய் நகர்த்துவது போல வார்த்தைகளையும் கவனமாகப் பேசுங்கள்.
வீழ்த்துவதில் இல்லை பெருமை
மந்திரியை வெட்ட அவசரப்பட்டு, சுலபமாக தனது ராணியை இழந்துவிடுவார்கள் சிலர்.
வாழ்க்கையிலும்கூட சிலர் மற்றவர்களை பலவீனப்படுத்துகிற அவசரத்தில் தங்கள் பலங்களை இழந்துவிடுகிறார்கள். மற்றவர்களை கேவலமாகப் பேசி மற்றவர்களை இழிவு படுத்துகிறோம் என்று நினைத்து நம் கம்பீரத்தை இழந்து விடுகிறோம். இல்லையா ?
எதிர் தரப்பில் விளையாடுகிறவர்களின் எல்லா காய்களையும் வெட்டியும்கூட தோற்றுப் போகிறவர்கள் இருக்கிறார்கள். சில காய்களை மட்டுமே வெட்டி வெற்றி பெறுபவர்களும் இருக்கிறார்கள்.
அடுத்தவர் காயை வெட்டுகிற அவசரத்தில் தனக்கு உள்ள ஆபத்துக்களை பல சமயங்களில் கவனிப்பதில்லை. தான் வெற்றி பெறுவதைப் பற்றி யோசிக்காமல் மற்றவர்களை வீழ்த்துவதற்கு மட்டும் முயல்பவர்கள் தவறாது படிக்க வேண்டிய பாடம் இது.
உங்களை உங்களுக்கு ஆளத்தெரியுமா ?
சதுரங்கத்தில் ஒவ்வொரு காய்க்கென்றும் தனித்தனி பவர் உண்டு. அது தெரிந்தால்தான் ஆட்டத்தை சிறப்பாக ஆடமுடியும். உங்கள் சக்தி என்ன என்று உங்களுக்கு தெரியுமா? சதுரங்கத்தின் காய்களுக்கு இருப்பது போல உங்களுக்கும் பலவிதமான சக்திகள் உண்டு. அவற்றை நெறிப்படுத்துவதன் மூலமே உங்கள் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ராஜாவுக்கு ஏன் பவர் இல்லை?
சதுரங்கத்தில் ராஜா வேஸ்ட் என்று நினைப்பவர்களும் உண்டு. காரணம் மற்ற எல்லா காய்களையும்விட ராஜாவிற்கு நகரும் திறன் மிக மிகக் குறைவு. அதனால்தான் இப்படி ஓர் எண்ணம்.
உண்மையில் ராஜாவிற்காகத்தான் ஆட்டமே. செயல்பட்டால்தான் என்றில்லை. செயல்பட வைப்பதுதான் பவர். எல்லா பவரையும் தன்னிடமே வைத்துக்கொண்டால் என்ன நடக்கும்? ராஜா சேவகனாகி விடுவார். உங்களின் வெற்றிப்பாதையில் அனைத்துச் செயல்களையும் நீங்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தேவைக்கேற்ப செயல்களை பகிர்ந்தளிப்பதால் வெற்றி விரைவிலேயே கிடைக்கும்.
நீங்கள்தான் ராஜா
எந்தக் காயை இழந்தாலும் ராஜாவை இழக்கும்வரை ஆட்டம் முடிவதில்லை. ராஜாவை இழந்தால்தான், விளையாடியவர் தோற்றவர் ஆவார். ஆகவே, இந்த விளையாட்டில், ராஜா உண்மையில் நீங்கள்தான்.
பெரும்பாலும் நம் வாழ்க்கை விளையாட்டிலும்கூட உங்களிடம் உள்ள அனைத்தையும் இழந்தால்கூட நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தோற்பவர் இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள்தான் ராஜா.
நன்றி: – அனுராஜன் – நமதுநம்பிக்கை