பிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன், தன் உடல் நிலை குறித்த, பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார்.தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.”குறைவான கலோரிகளை உடைய உணவை உட்கொண்டால், சர்க்கரையின் அளவை குறைக்கலாம்’ என, டாக்டர் அறிவுரை வழங்கினார்.இதையடுத்து ரிச்சர்டு, இணையதளத்தில், தீவிர தேடலில் ஈடுபட்டார்.
அப்போது, “குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், எட்டு வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்’ என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு, 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார். இதனால், ரிச்சர்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். “”முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்,” என, ரிச்சர்டு மற்ற நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கி வருகிறார்.
இது குறித்து, ரிச்சர்டு பின்பற்றிய உணவுப் பழக்க வழக்கம் குறித்த அட்டவணையை தயார் செய்த, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது: குறைந்த அளவிலான கலோரிகளை உடைய உணவை உட்கொள்வதின் மூலம், ரத்தத்தில், சர்க்கரையின் அளவில், தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்பட்டு, அதிலிருந்து, தேவையான சர்க்கரை பெறப்படுகிறது. இதன் மூலம், ரத்தத்தில், தேவையற்ற அதிகப்படியான கொழுப்பு நீக்கப்படுவதோடு, சர்க்கரையின் அளவையும் குறைத்து நடுநிலையை ஏற்படுத்தலாம். சர்க்கரையின் அளவு நடுநிலையை அடைந்ததும், சீரான உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதின் மூலம், மீண்டும் சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். ரிச்சர்டின் இந்த செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, பேராசிரியர் கூறினார்.
நன்றி: தினமலர்