Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,578 முறை படிக்கப்பட்டுள்ளது!

கை கால்களில் விறைப்பு (numbness)

 கை கால்களில் விறைப்பு எரிவு வலிகள் வருவது எதனால்?

‘இரும்பிலைதான் குசினிச் சாமான்களை எல்லாம் வாங்கி வைக்க வேணும் போலை கிடக்கு. சாப்பாட்டு பிளேட் கப் கிளாஸ் என்று ஒண்டும் மிச்சமில்லாமல் போட்டு உடைக்கிறாள்’
numbness
தனது மனைவிமேல்தான் அவருக்கு அவ்வளவு கோபம். அவளும் கோபக்காரியா? திரைப்படங்களில் காண்பது போல ஆவேசமான மனைவியா என்று எண்ணி அவளது முகத்தைப் பார்த்தேன். சாந்த சொரூபியாகத்தான் தோற்றமளித்தாள்.

சாந்தசெரூபி போட்டு உடைப்பது ஏன்?

விறைப்பு எரிவு வலிகள்

உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது புதினமானது அல்ல. கையை எங்காவது இசகு பிசகாக வைத்து தூங்கிக் காலை விழித்து எழுந்தவுடன் அவ்விடம் விறைந்தது போலவும், கூச்சம் போல அல்லது அதிர்வு போலவும் தோன்றுவதை உதாரணம் கூறலாம்.

tingling-in-fingertipsஆனால் இது கைகளில்தான் ஏற்படும் அல்ல. கைகளில் கால்களில் விரல்களில் மேல்கைகளில் தொடைப்புறத்தில் தோள் பட்டையில் என உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.

சுவாரஸ்யமான காரணங்கள்

மருத்துவ மாணவர்களாக இருந்த காலத்தில் Honeymoon palsy என விரிவுரையாளர் எனக் கற்பிக்கும்போது கிளர்ச்சியடைந்தோம். திருமணமான முதலிரவில் புது மனைவியுடன் கலந்து கலந்து களைத்து அவளும் சோர்ந்து உங்கள் கைளிலிலேயே தலை வைத்துத் தூங்கியிருப்பாள். காலையில் விழித்து எழும்போது உங்கள் பெருவிரலும், சுட்டி விரலும் நீட்டி மடக்க முடியாதபடி மரத்துக் கிடப்பதைக் கண்டு பதறுவீர்கள். ராசி அற்ற பெண் என மனதுள் திட்டுவீர்கள். இது median nerve நீண்ட நேரம் அழுத்தப்படதால் ஏற்பட்டதாகும். தானாகவே குணமாகும்.

இதே போன்றதே Saturday night palsy என்பதுவும் ஆகும். வார இறுதிநாள் போதையில் கதிரையின் கைப்பிடியில் கை போட்டபடி தூங்கிய பின் காலை விழிதெழும்போது radial nerve அழுத்துப்படுவதால் ஏற்படுவதாகும்.

வேறு பல காரணங்கள்

மேலே கூறிய கிளுகிளுப்பான காரணங்கள் தவிர, வேறு ஏராளமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும்போது மரப்பதற்கான சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.

முள்ளந் தண்டு எலும்புகள் தேய்ந்து, முண்நாணிலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்துவதாலும் ஏற்படும். கழுத்து எலும்புகளில் ஏற்படும் தேய்வானது கைகளில் எரிவு, மரத்தல் போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரும்.

sciatica-pain-patternsஅதேபோல நாரிப்பகுதி முள்ளந் தண்டு பாதிப்புறுவதால் ஏற்படும் வலி விறைப்பு போன்றவை கால்களில் வெளிப்படும்.

நரம்புக் கொப்பளிப்பான் பற்றி அறிந்திருப்பீர்கள். ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டும் கொப்பளங்கள் தோன்றும். இதனால்; வலி எரிவு போன்ற பாதிப்புகளை அந்த நரம்பின் பாதையில் மட்டுமே கொண்டுவரும். சிலரில் இந்த வலியானது கொப்பளங்கள் கருகி நோய் மாறிய பின்னரும் நீண்ட காலத்திற்கு தொடரும்.

சிலரில் பெருவிரல் சுட்டு விரல், நடுவிரல் அடங்கலான கைகளின் வெளிப்புறத்தில் வலி, விறைப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். இதை
Carpal tunnel syndrome என்பார்கள். இது மணிக்கட்டின் உட்புறம் ஊடாக உள்ளங்கை மற்றும் விரல்களுக்கு வரும் நரம்பு அழுத்தப்படுவதால் வருவதாகும். பொதுவாக மூட்டுவாதம், தைரொயிட் நோய்கள். அதீத எடை போன்றவை இருப்பவர்களில் அதிகமாக ஏற்படும்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பெண்ணுக்கு இருந்தது இந்த நோய்தான். அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். இவருக்கு அவ்விடத்தில் ஊசி போட நேர்ந்தது. வேறு சிலருக்கு நரம்பில் ஏற்படும் அழுத்ததைக் நீக்க சிறிய சத்திர சிகிச்சையும் தேவைப்படுவதுண்டு.

நீரிழிவு

‘எங்கை அப்பா ஒரு செருப்பை விட்டிட்டு வந்தனீங்கள்’ மனைவி நக்கலாகக் கேட்டதும் குனிந்து பார்த்தார் ஆம் ஒரு காலில் செருப்பைக் காணவில்லை. ஒரு காலிலிருந்த செருப்பு கழன்று விடுபட்டதை அறியாமல் நடந்து வந்திருக்கிறார். இதற்குக் காரணம் காலின் உணர்திறன் நரம்புகள் பாதிப்புற்றதுதான்.

கால்கள் மெத்தைபோல இருப்பதாக இவர்கள் சொல்லுவார்கள். தார் ரோட்டில் கால் வைத்தாலும் சுடாதளவு விறைப்பு உள்ளவர்கள் காலில் பெரும் புண்களோடு வருவார்கள். கோயிலிலும் கடற்கரையில் வெறும் காலுடன் நடக்குப்போது முள்ளு ஆணி கிளாஸ் துண்டு ஏதாவது குத்தி ஏறியிருக்கும். உள்ளுக்குள் கிடந்து சீழ்பிடித்து மனைந்தபின்தான் அவர்களுக்கே தெரியவரும்.

9-diet-dos-and-donts-for-diabetic-neuropathy-1கால்கள் மரத்துப்போவது மாத்திரமன்றி சிலருக்கு எரிவு உளைவு போன்ற வேதனைகளும் இருக்கலாம். விற்றமின் குறைபாடு, தொழுநோய் அடங்கலான பல்வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் அதிகமாகக் காண்பது நீரிழிவு நோயாளரில்தான்.

நீரிழிவாளர்களில் கால்களில் விறைப்பு வந்துவிட்டால் முற்று முழுதாக மாற்றுவது கஷ்டம். ஆரம்ப காலம் என அலட்சியப்படுத்தாது நீரிழிவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே இது வராமல் தடுக்கக் கூடிய ஒரே வழியாகும்.

பக்கவாதம்

பக்கவாதம் வரும்போது அங்கங்கள் செயலிழப்பது மட்டுமின்றி எரிவு, விறைப்பு போன்ற உணர்திறன் பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. அதேபோல வலிப்பு நோய் வருபவர்களிலும் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டு விறைப்பு எரிவு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு.

பக்கவாதம் போலவே தோன்றி மறையும் வாதம் எனவும் ஓன்று உண்டு. பக்கவாதம் போலவே கை கால்கள் செயலிழத்தல், மயக்கம் வருதல் போன்ற அறிகுறிகள் தோன்றி எந்தவித சிகிச்சையும் இன்றி தானே மறைந்து விடும். இதனை மருத்துவத்தில் Transient ischemic attack (TIA), அல்லது ‘mini-stroke’ என்பர். குணமாகிவிட்டது என நிம்மதியாக இருக்க முடியாது. இத்தகையவர்களுக்கு முழுமையான பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

கால்களில் விறைப்பு ஏற்படுவதற்கு விட்டமின் பீ12 (Vitamin B12)  குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். இது முக்கியமாக மீன், இறைச்சி, ஈரல், சிறுநீரகம், பால் போன்றவற்றில் காணப்படுகிறது. இதனால் தாவர உணவு மட்டும் உண்பவர்களில் இது வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். கால் விறைப்பு மட்டுமின்றி, இரத்த சோகை, வாயில் புண்கள், கடைவாய்ப் புண், நாக்கு அவிச்சல் போன்ற பிரச்சனைகளையும் விட்டமின் Vitamin B12    குறைபாடு ஏற்படுத்தும்.

மது அருந்துபவர்களிலும் விறைப்பு எரிவு நோய்கள் வருவது அதிகம். மது அருந்தும் சிலர் ஒரு Vitamin B12    ஊசி அடித்துவிடுங்கோ என வருவதுண்டு. ஓட்டைப் பானையில் தண்ணி விட்டு நிரப்ப முனைபவர்கள் அவர்கள். மதுவினால் பல பாதிப்புகள் ஏற்படும். அதில் போசாக்கு உணவின்மையால் ஏற்படும் B12 குறைபாடும் ஒன்று. ஊசி போடுவதால் மட்டும் அவர்களைக் குணமாக்க முடியுமா?

புகைத்தலும் மற்றொரு காரணமாகும்.

எமது உடலில் கல்சியம், பொட்டாசியம்; போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் குறைபாடுகளும் மாற்றங்களும் அத்தகைய அறிகுறிகளுக்கு காரணமாகலாம்.

விறைப்பும் உணர்வு குறைதலும் பல பிரச்சனைகளை பாதிப்புற்றவருக்கு ஏற்படுத்தும். பொருட்களை இறுக்கமாக பற்ற முடியாமை, கால்களில் ஆணி முள்ளு ஆகிய குத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிக் கூறினோம்.

உணர் திறன் குறைவாக இருப்பதால் நடக்கும்போது அடி எடுத்து வைப்பது திடமாக இருக்காது. இதனால் விழுவதற்கும் காயம் படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாகும். வீதி விபத்துகளில் மாட்டுப்படும் அபாயமும் உண்டு.

உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டுமா?

பெரும்பாலான விறைப்பு எரிவு என்பன படிப்படியாக வருபவை. அவற்றை நீங்களாகவே அவதானித்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஆயினும் கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

  • திடீரென அங்கங்கள் செயலிழந்து ஆட்டி அசைக்க முடியாது இருந்தால் அவசர சிகிச்சை பெற வேண்டும்.
  • விழுந்து அல்லது தலை கழுத்து அல்லது முள்ளந்தண்டில் அடிபடுவதைத் தொடர்ந்து விறைப்பு எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றினாலும் உடனடியாக ஆலோசனை பெறுங்கள்.
  • திடீரென உங்களது அங்கங்களை ஆட்டி அசைக்க முடியாது போனாலும்
  • மலம் சலம் வெளியேறுவதை உங்களால் திடீரென கட்டுப்படுத்த முடியாதுவிட்டால்
  • திடீரென மயக்கம், நினைவுக் குழப்பம் மாறாட்டம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்
  • திடீரென ஏற்படும் பார்வைக் குறைபாடு, கொன்னித்தல், நடைத்தடுமாற்றம் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்,

நன்றி: டொக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (col) – ஹாய் நலமா