Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,577 முறை படிக்கப்பட்டுள்ளது!

சிறு தானியங்களில் சத்தான சேமியா

மதுரையில் பலசரக்கு விற்பனைக்கு பேர்போன கீழமாசி வீதியை ஒட்டியுள்ள வெங்கலக்கடை தெரு வழியாக போகும் போது ஒரு கடை வாசலில் இருந்த வித்தியாசமான போர்டு கண்களை ஈர்த்தது.

இன்றைய துரத்தலான வாழ்க்கையில் எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் நாம் இந்த வேகமான ஓட்டத்தில் தொலைத்தவை மொட்டை மாடிக்காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து கோலம், தோட்டத்து பூக்கள், கிணற்றுக்குளியல், எதிர்பார்ப்பு இல்லாத நட்பு, திருவிழாக்களிப்பு இவை எல்லாவற்றையும் விட தற்போது அதிகமாக இழந்த, இழந்து கொண்டு இருக்கும் மாபெரும் விஷயம் நம் நல்வாழ்வும்,ஆரோக்கியமும்தான்…
அந்த ஆரோக்கியத்தை மீட்டெடுக்க குறைந்த விலையில் தரமான முறையில் இங்கு சிறு தானியங்கள் கிடைக்கும் என்று எழுதிப் போடப்பட்டு இருந்ததை பார்த்ததும் கால்கள் பிரேக் பிடித்தன. விசாரிக்க ஆரம்பித்தேன்.

நூறு ரூபாய்க்கு வீடு வாடகைக்கு கிடைக்குமா என விசாரித்து அதன்படியே விளாச்சேரியில் கிடைத்த வீட்டில் வாழ்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர்.

தன் குடும்ப சுமைகளை களைய கடுமையாக உழைத்து, கவனமாக படித்து கம்ப்யூட்டர் சிஸ்டம் இன்ஜினியரானார், படித்த படிப்பில் நல்லபடியாக சம்பாதிக்க சலனமற்ற ஆறு போல சென்று கொண்டிருந்த குடும்பத்தில் நண்பர் உருவில் பிரச்னை வந்தது.

ரெடிமேட் சேமியா தயாரிக்க பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது, ஒரு பத்துலட்சம் ரூபாய் மதிப்பில் சேமியா மெஷின் வாங்கினால் நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கு இரண்டு மாதத்தில் பணம் திருப்பித் தரப்படும் உதவ முடியுமா? என்று கெஞ்சி கேட்ட நண்பருக்கு உதவுவதற்காக அதுவரை சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் திரட்டி கொடுத்து மெஷின் வாங்க உதவினார்.

இரண்டே மாதம்தான், எனக்கு இது ஒத்துவரவில்லை என்று சொல்லிவிட்டு நண்பர் கையை உதறிவிட்டு செல்ல சேமியா தயாரிக்கும் மெஷினும், கண்ணனும் மட்டும் தனியாக நின்றனர். என்ன செய்வதென்ற தெரியாத நிலை.

அப்போதுதான் இயற்கை விவசாயி நம்மாழ்வாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அதைத் தொடர்ந்து சாமை, குதிரைவாலி, கொள்ளு, தினை, கேழ்வரகு, கம்பு, சோளம் என்ற சிறு தானியங்கள் மீது இவரது கவனம் சென்றது. ஒவ்வொரு தானியமும் நடப்பில் உள்ள அரிசியை விட பலமடங்கு உயர்ந்தது ஆனால் விலை குறைந்தது என்பதை முதலில் உணர்ந்தார்.

இதுவரை புழக்கத்தில் உள்ள அனைத்து சேமியாக்களும் மைதாவால் தயாரிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் சிறு தானியங்களை கொண்டு சேமியா தயாரிக்கக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினார். கம்ப்யூட்டர் துறைக்கு குட்பை சொன்னார்.

இந்த நேரம் இவரது தாயார் சர்க்கரை நோயால் இறந்து போனார், அப்போது இவருக்கு சத்தான நமது பராம்பரிய உணவு கொடுத்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் இருந்திருப்பார் என்று மருத்துவர்கள் சொல்ல தன் தாயாரைப் போல சத்தான சரியான உணவு இல்லாமல் யாரும் இறந்து விடக்கூடாது குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் என்று முடிவிற்கு வந்தார்.

சிறு தானியங்கள் குறித்து நிறைய படித்தார், நிறைய ஆராய்ச்சி செய்தார், முறைப்படி அனுமதி பெற்றார், கூத்தியார்குண்டில் தயாரிப்பு கூடத்தை நிறுவினார்.

சிறு தானியங்களை உற்பத்தி செய்யும் இடங்களுக்கே தேடிப்போய் வாங்கிவந்து சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் செயற்கை வண்ணம் சேர்க்காமல் ராசாயன மாற்றம் செய்யாமல் சிறு தானியங்களான கொள்ளு, கேப்பை, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற தானியங்களைக் கொண்டு வெற்றிகரமாக சேமியாவை உருவாக்கினார்.

இதனை தேவையான காய்கறிகளுடன் சேவையாக சமைத்து நம்மாழ்வார் நடத்திய இயற்கை விவசாயம் குறித்த முகாமிற்கு வந்தவர்களுக்கு பரிமாறினார். சாப்பிட்டவர்கள் சந்தோஷப்பட்டனர். குறிப்பாக நம்மாழ்வார் நிறையவே பாராட்டினார். சமூகத்திற்கான அவசிய தேவை என்றும் குறிப்பிட்டார்.

சரி இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும் என்பதற்காக தற்போது மேலே சொன்ன இடத்தில் தனது தயாரிப்புகளை “மாஸ்டர் பிராண்ட்’ என்ற பெயரில் கடை பிடித்து காலை முதல் இரவு வரை அதிக லாப நோக்கமின்றி விற்பனை செய்து கொண்டு இருக்கிறார். முப்பது ரூபாய் கொள்ளு சேமியா பாக்கெட்டை வாங்கினால் அதனை நான்கு பேர் நன்றாக சாப்பிடலாம். ஆரோக்கியமாக வாழலாம். இது போல வரகு, சாமை, குதிரைவாலி என்று எண்ணற்ற சிறு தானியங்கள் பாக்கெட் பாக்கெட்டாக உள்ளன.

கடையில் ஒரு சார்ட்டையும் தொங்கவிட்டுள்ளார், அரிசி உணவைவிட சிறு தானியங்கள் எந்த அளவில் சிறந்தது, சத்து மிகுந்தது, உடலுக்கு உற்சாகம் தருவது என்பதை அந்த “சார்ட்’ விளக்குகிறது. ஒவ்வொன்றிலும் எந்த அளவிற்கு நார்ச்சத்து, புரோட்டீன் போன்றவை இருக்கிறது என்பதையும் மேற்கண்ட் “சார்ட்’ விளக்குகிறது.

பெரிதாக விளம்பரம் கிடையாது வாங்கிப்போனவர்கள் , சாப்பிட்டு பலன் பெற்றவர்கள் வாய்வழியாக சொல்லி சொல்லி அதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வந்து வாங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இது நோயாளிகளுக்கு மட்டுமான உணவு அல்ல வாழ்க்கையில் எப்போதுமே எந்த நோயும் வராமல் தடுக்ககூடிய உணவு பொருள். குழந்தை பருவத்தில் இருந்தே கொடுத்து பழக்க வேண்டிய உன்னத பொருள். ஒரு காலத்தில் இதுதான் நமக்கு பிரதான உணவு ஆனால் இப்போது தேடிப்பிடித்து வாங்க வேண்டிய உணவு.
வாழும் வாழ்க்கை சமூகத்திற்கு பயன்படும்படியாக இருக்கவேண்டும் என்பது என் கொள்கை அந்த கொள்கைக்கும் அர்த்தம் உண்டாக்கும்படியாக இந்த உணவு பொருளை தரமாக கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இப்போது தேனும் தினைமாவும் கலந்து பிஸ்கட் தயாரித்துள்ளேன் அதுவும் நன்றாக போகிறது, அடுத்ததாக முருங்கை கீரையை பயன்படுத்தி என்ன செய்யலாம் என்றும் எனது ஆராய்ச்சி செல்கிறது.

பீட்சா, பர்கர், எப்போதோ செத்த கோழியின் பொறித்த உணவுகள் போன்றவை உரக்க சத்தமிடும் தற்போதைய வணிக சந்தை இரைச்சலில் ஓரமாக ஒடுங்கி ஒளிந்திருக்கும் நம் பராம்பரிய உணவை மீட்டெடுத்து அதை மக்கள் பயன்பெறும்படியாக மாற்றினால் பின்னாளில் வரக்கூடிய இறுக்கமான பலவித நோயின் பிடிகளிலில் இருந்து நம் சமுதாயம் நிச்சயம் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது, லட்சங்கள் பெரிதல்ல லட்சியமே பெரிது என எண்ணுவோர் யார் வேண்டுமானாலும் எனது இந்த பணியில் என்னோடு கைகோர்க்கலாம் என்று கூறிய கண்ணனின் எண்: 9788854854.

நன்றி: – எல்.முருகராஜ் – தினமலர்