Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,173 முறை படிக்கப்பட்டுள்ளது!

சந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க !

நம் மண்ணில் நெல்லும் கரும்பும் காய்கறிகளும் செழித்து விளைந்து நிற்க, உழவர் பண்டிகையான ‘பொங்கல்’ விழாவை ஊருடனும் உறவுகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சி ‘பொங்கப் பொங்க’ கொண்டாடுகிறோம்! அந்த நெல்லையும் கரும்பையும் பல பயிர்களையும் ஆசையுடனும் அக்கறையுடனும் விளைவிப்பது நம்நாட்டின் ‘முதுகெலும்பு’ எனப்படும் விவசாயிகள்தான். அவர்கள்தானே இப்பண்டிகையின் கதாநாயகர்கள்! அப்படி சில வி.ஐ.பி., விவசாயிகள் இங்கே பேசுகிறார்கள்…

aval21‘என் வழி… இயற்கை வழி’ என்று விளம்பரப் பலகை வைக்காத குறையாக, இயற்கை வழி விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார் காங்கிரஸைச் சேர்ந்தவரும், திருச்சி மாநகர முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான். மாநகரத்துக்குள்ளேயே விவசாயம் பார்க்கும் இவர், ”இந்த இயற்கை விவசாய அக்கறை, நான் மேயரா இருந்தப்போ என்னை ஆட்கொண்ட விஷயம். இன்னிக்கு ஆறேழு ஏக்கர்ல முழுக்க முழுக்க இயற்கையான முறையில நெல்லு விளைவிக்கறேன். அதுக்கு எந்த கெமிக்கல் உரமும் போடறது இல்ல. மண்புழு உரம், மக்கின குப்பை உரம், மாட்டுச் சாணம்… இதைஎல்லாம்தான் போடறேன்.

சந்தேகம் வந்தா, நம்மாழ்வார் ஐயாகிட்ட கேட்டுக்குவேன். ‘பசுமை விகடன்’ல சொல்லித் தர்ற ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாயத்தையும் ஃபாலோ பண்ணுவேன். கொடைக்கானல்ல இருக்குற எங்க தோட்டத்துல விளையுற காபி, மிளகு பயிர்களுக்கும் இயற்கை வழி விவசாயம்தான். எனக்கு மட்டும் அது புரிஞ்சா பத்தாதுனு எங்க தோட்டத்துல வேலை பார்க்கறவங்ககிட்டயும் இதைப் பத்தி தெளிவா சொல்லிக் கொடுத்து, அவங் களை வேலை பார்க்க வைக்கறேன். இந்த விவசாயம்தான் பல நேரம் எனக்குப் பெரிய ஆறுதல், தேறுதல்…” என்றவர்,

aval21a”ஒரே ஒருநாள் வயல்ல, காட்டுல இறங்கி வேலை பாருங்க. உங்க மேலயே உங்களுக்கு பெரிய மதிப்பும் மரியாதையும், இந்த உலகத்தை பாரபட்சம் இல்லாம நேசிக்குற மனசும் தானா வரும். அதுக்கு பெரிய வயலு வேணுங்கற அவசியமில்ல. நம்ம வீட்டுல சும்மா இருக்குற இடத்துல, தொட்டியில ஏதாவது ஒரு பயிரை வளர்த்துப் பாருங்க. உங்க மனசும் சந்தோஷப்படும். வீட்டு காய்கறி பட்ஜெட்டும் கைக்குள்ள அடங்கும்!” என்று எளிய யோசனை சொன்னார் சாருபாலா!

கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஈரோட்டில் இருக்கும் தன் காய்கறித் தோட்டத்தில் வெண்டைக் காய்களுடனும், சுரைக்காய்களுடனும் உரையாடத் தவறுவதில்லை… தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

”இன்னிக்கு நேத்தில்ல… பள்ளிக்கூடம் போற வயசுலயிருந்து விவசாயத்துக்கும் எனக்கும் பிரிக்க முடியாத பந்தம். அக்கா, தங்கச்சிங்க மூணு பேரு. எங்ககிட்ட கத்திரி, வெண்டை, கீரைனு ஏதாவது காய்கறி விதைகளக் கொடுத்து, ‘உங்கள்ல யாரு நல்லா பயிர் பண்றீங்களோ அவங்களுக்குப் பரிசு’னு எங்கம்மா சொல்வாங்க. வெயிலு விழற இடம் பார்த்து விதை தூவி, தண்ணி தெளிச்சு, செடி முளைச்சு வரும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் எங்களுக்கு. அதனாலதான், இன்னிக்கும் உடம்புக்கு முடியாம இருந்தாலும் தோட்டத்துக்குப் போனாத்தான் மனசு லேசாகும். சின்ன வயசுலஇருந்து இன்னிவரைக்கும் சாம்பல், கோமியம், சாண உரம்னு போட்டு இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன்” என்றவர்,

”பரபரப்பான அரசியல் வாழ்க்கைக்குள்ள போன பிறகும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் காய்கறித் தோட்டம், பூந்தோட்டம் வளர்க்கறதை நிறுத்தினதில்ல. அதுவும் நான் வளர்த்த ஜாதிமல்லி, மல்லிகை, முல்லை ரோஜா செடிகள்ல இருந்து பூப்பறிச்சு தலையில வெச்சுக்கறப்ப… வார்த்தைகளால விவரிக்க முடியாத ஒரு பரவசம்; சந்தோஷம் நெஞ்சுக்குள்ள பூக்கும்.

விவசாயங்கறது தொழில் மட்டும் இல்லை. நம்ம உடம்புக்கு வேலை தர்ற உடற்பயிற்சி. மனசை ஒருநிலைப்படுத்தற தவம். சந்தோஷ வெளச்சல் தர்ற வெள்ளாமை. அதை செஞ்சு பார்த்துதான் உணர முடியும்!” என்று நெக்குருகிச் சொன்னார் சுப்புலட்சுமி.

aval21b
சேலம், பாரப்பட்டியில் ‘பண்ணைக்காரம்மா’வாக நிற்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி. ஒரு முழுநேர விவசாயியாக, மரவள்ளிக் கிழங்குத் தோட்டத்தில் செடிகளுடனும் களைகளுடனுடன் ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ போட்டுக் கொண்டிருப்பவர், மண் மணம் மாறா வார்த்தைகளுடன் பேசினார் நம்மிடம்.

”கண்ணு… இந்தத் தோட்டம் எங்கம்மா வீட்டுத் தோட்டம். நான் பொறந்து வளர்ந்த மண்ணுலயே விவசாயம் பார்க்குறதுக்கு ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும். விவசாயம்தான் எங்க பாட்டன், தாத்தா காலத்துல இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தற ஆதார வருமானங்கறதால, இப்பவும் அதை ஒரு தொழிலா செய்யாம… ‘வாழ்வியல் தர்மம்’னு நெனச்சுதான் செஞ்சுட்டு இருக்கேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து எங்க பாரப்பட்டித் தோட்டத்துல குச்சிக்குழங்குதான் (மரவள்ளி) பிரதானப் பயிர். அப்புறம் நம்ம கொங்கு மண்டலத்தோட ஸ்பெஷலே தென்னைதான். என்ன மாதிரியே இரண்டு தலைமுறை பார்த்த மரங்களும் தோட்டத்துல இருக்கு. நானும் எங்க அண்ணனும் ஓடி விளையாடின இடம் இது. இப்ப அதுங்ககிட்ட நிக்கும்போது, இறந்துபோன எங்க அண்ணன்கிட்ட நிக்குற உணர்வு…’ என்று கண்கலங்கிய விஜயலட்சுமி,

”என் பசங்க, பொண்ணுங்க டாக்டர், இன்ஜினீயர்னு படிக்கக் கிளம்பிட்டாங்க. எங்க போனாலும் திரும்ப வந்து, எனக்கு அப்புறம் இந்த விவசாயத்தை அக்கறையாப் பார்த்துக்கணும்னு என் புள்ளைங்ககிட்ட சொல்லுவேன். அதையேதான் எல்லா இளசுங்ககிட்டயும் கேட்டுக்குறேன். விவசாயம் நம்ம நாட்டுல நீடிச்சு நிலையா இருக்குற வரைக்கும்தான் இந்த மண்ணும் மக்களும் தலை நிமிர்ந்து பெருமையா நிக்க முடியும் கண்ணு! நீங்க பட்டணத்துல பங்களா கட்டினாலும், உங்க சொந்த ஊருல ஒரு தோட்டம், தொரவுனு வாங்கிப் போட்டு விவசாயம் பண்ணினா, அது உங்கள வளர்த்த இந்த மண்ணுக்கு நீங்க செய்யற நன்றி…” என்று உருகி உருகி அவர் சொன்னபோது, மரவள்ளிக் கிழங்கு செடிகள் நிமிர்ந்து நின்றிருந்தன பெருமையுடன்!

நன்றி: நாச்சியாள்  – விகடன்