Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2014
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,258 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேக்கரி மஹராஜ்

என் கடைகளை வாடிக்கையாளர்கள் நடத்துகிறார்கள்.

புதுக்கோட்டை மஹாராஜ் பேக்கரி உரிமையாளர் திரு. சின்னப்பாவின் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

 உங்கள் தொடக்க காலம் பற்றி எங்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா?

எங்கள் முன்னோர்கள், காரைக்குடியில் பேக்கரி துறையில் மிகவும் சிறிய அளவில் ஈடுபட்டவர்கள். எங்கள் தாத்தா, ரொட்டிக்கு ஈஸ்ட் கிடைக்காத காலத்தில், புளிக்க வைப்பதற்காகவே பனங்கள்ளைப் பயன்படுத்தியவர். சிரமமான சூழ்நிலையில், காரைக்குடியில் நடத்தி வந்த பேக்கரிக்குப் பிறகு முதல் முதலாக 1984ல் புதுக்கோட்டை பர்ஜீமியன் பஜாரில் பேக்கரியைத் துவங்கினேன்.

உங்கள் இளமைக்காலப் போராட்டங்கள் பற்றி சொல்ல முடியுமா?

உயர்நிலைப் பள்ளியில் எனது படிப்பை முழுமையாக நிறைவு செய்ய முடியாத நிலையில் தொழிலில் ஈடுபட்டேன். தொழிலை கற்றுக் கொள்ளவே தொழிலை செய்தேன். நான் உற்பத்தி செய்த பேக்கரி தயாரிப்புகளை நானே மறுநாள் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, திருத்துறைப் பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை வழியாக பட்டுக் கோட்டை வரை சாலையோர கடைகளுக்கு விற்பனை செய்தேன். இதை வாரந்தோறும் இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தேன்.

ஒருமுறை வீட்டில் எனது தாயார் திட்டியதால் வீட்டில் சொல்லாமல் வெளியேறி 17 வது வயதில் பட்டுக்கோட்டையில் ஆறுமாதங்கள் சிறிய பேக்கரியை வாடகைக்கு எடுத்து நடத்தினேன். லாபமாக நடத்த முடியாமல் சிரமம் ஏற்பட்டு ஒரு நாள் சாப்பாட்டுக்கே கஷ்டமாக முடிந்தது.

அப்போது வாடகை கொடுக்காததால் கடைக்காரர் எனது பொருள்களையும் சேர்த்து கடையை பூட்டி சென்றுவிட்டார். கையிலே காசு இல்லை. உடுத்த துணியில்லை. சாப்பிட வழியில்லை. மதுக்கூர் ரோட்டில் உள்ள ஆற்றில் குளிக்க சென்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை மாற்றுத் துணியில்லாமல் நான் குளித்தது, அன்று இரவு சாப்பிட வழியில்லாமல் கடைத்தெருவில் சுற்றி வந்தது, எதிரில் எனது ஊர்க்காரர்கள் வந்தபோது மறைந்து கொண்டது, இரவு 11 மணியளவில் படுக்க இடம் தேடி பஸ் ஸ்டாண்ட் சென்றது. அங்கு ஒரு சர்பத் ஸ்டால் மூடும் வரை காத்திருந்து அதில் நிம்மதியோடு படுத்தபோது ஒருவர் அந்த இடத்தை அவர் இடமாக கூறி என்னை விரட்டியது. அதற்கு பிறகு ரயில்வே ஸ்டேஷன் சென்றது. அங்கு போலீஸ் விரட்டியது. எப்படியோ அன்றைய தினம் இரவு கழிந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.

எடுத்த எடுப்பிலேயே சொந்தமாக தொழில் தொடங்கினீர்களா?

இல்லை. 1952ல் புயலில் சொத்தை இழந்தது எங்கள் குடும்பம். கடும் வறுமை, தொழில் கற்கும் ஆசையில் ஒரு பேக்கரியில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே தொடர்ந்து 3 நாட்கள் தூங்கவிடாமல் வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். மூன்றாவது நாள் கண்ணை அசத்தியது.

அந்த கடைக்காரர் மனைவி உடனே குச்சியால் தொடையில் அடிப்பார். விழித்துக் கொள்வேன். சிறிது நேரம் கழித்து அவர் அடித்துக் கொண்டேயிருக்க அந்த வலி கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தேன்.

பிறகு சந்தைகளுக்கு பகோடா, பிஸ்கட் போட்டு கண்ணாடிப் பெட்டியில் எடுத்துக் கொண்டு 20 கி.மீ. சைக்கிளிலேயே போவேன். விடாமுயற்சியுடன் மெல்ல மெல்ல வளர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கினேன்.

பூர்வீகத்தில் என் தாத்தா இழந்த அதே பூமியை, அதன் விலைக்கு வாங்கிய பண்ணையாரிடம், அவர் கேட்ட விலைக்கு மீண்டும் வாங்கினேன். அது பெரும் மனநிறைவைத் தந்தது.

இன்று பல இடங்களில் உங்கள் கிளைகள் இயங்குகின்றன. தொடர்ந்து கிளைகள் தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?ஏழை எளிய மக்கள் வந்து போகும் விதத்தில், அவர்களுக்குரிய விலையில் பேக்கரி தயாரிப்புகள் இருந்ததாலும் அதன் தரத்தைக் கண்டு செல்வந்தர்களும், தேடிவரத் தொடங்கினர். தரமான பேக்கரி தயாரிப்புகளுக்கு உள்ள தேவைகளை உணர்ந்து தொடர்ந்து கிளைகள் திறந்தேன். அதற்கு நல்ல அதரவும் கிடைத்தது.

ஒரே வீதியில் இரண்டு மூன்று கிளைகள் கூட வைத்துள்ளீர்களே?

வாடிக்கையாளர்தான் ஒரு தொழிலுக்கு முக்கியமானவர். அவர்களுக்கு நினைத்ததும் நினைத்த பொருள் உடனே கிடைக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. பொதுவாகவே வீடுகளுக்கு கேக் வாங்கிப் போகிற பழக்கம் வளர்ந்து வருகிறது. எனவே, பக்கம்பக்கமாகவும் கிளைகள் துவங்கினேன்.

வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள என்ன செய்கிறீர்கள்?

வருடம் தவறாமல் ‘வாடிக்கையாளர் தினவிழா’ நடத்துகிறோம். குறைகள், கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் சொன்னால் உடனே அதற்கான இன்ஸ்டன்ட் தீர்வுகளும் தருகிறோம். இந்த உறவு காரணமாய், கடையை மக்கள் கண்காணிக்கிறார்கள். என் கடையை வாடிக்கையாளர்களே நடத்துகிறார்கள். ஊழியர்கள் தவறு செய்தால் உடனுக்குடன் தொலைபேசியில் தெரிவிக்கிறார்கள். உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்.

எல்லாத் தொழில்களுக்குமே போட்டி உண்டு. உங்கள் தொழிலில் உங்களுக்குப் போட்டி என்று யாரையாவது கருதுகிறீர்களா?என் பேக்கரி தயாரிப்புகளுக்கு போட்டி, நானே தயாரிக்கும் இனிப்புகள்தான். நாங்கள் தயாரிக்கும் ‘மகா லட்டு’ திருப்பதி லட்டுக்குத் தம்பி மாதிரி அதே அளவில் இருக்கிறதாய் மக்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக தயாரான உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. இவற்றைஎப்படி பாதுகாப்பாக தயாரித்து விற்க முடிகிறது?அன்றாட தேவைக்கு மட்டும் எங்களது பேக்கரி தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றது. ஒருசில நாளில் விற்பனை ஆகாத பொருள்கள் கெட்டுவிடும். ஆகையால் உடனுக்குடன் அழிக்கப்பட்டு விடும்.

இந்தத் தொழிலுக்கான ஆட்களை எப்படி தயார் செய்கிறீர்கள்?

ஆட்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன். தேர்வு செய்தவர்களை உரியமுறையில் பயிற்றுவித்து தொழிலில் ஈடுபடுத்துகிறேன்.

புதுக்கோட்டை போன்ற நகரங்களில் தொழில் நடத்துவதற்கும் பெரிய நகரங்களில் தொழில் நடத்துவதற்கும் வேறுபாடு ஏதாவது உள்ளதா? மற்ற நகரங்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் உண்டா?

புதுக்கோட்டை, காரைக்குடி மட்டும் தொடர்ந்து தொழில் செய்யவே விரும்புகின்றோம். மற்ற நகரங்களில் செய்ய வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேற முயற்சிக்கின்றேன். எங்களது பேக்கரி தயாரிப்புகளை அனைத்து பெருநகரங்களிலும் இருந்து வருகின்ற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.

உங்கள் வெற்றிக்கு அடித்தளமாக எதைக் கருதுகிறீர்கள்?

என்னை வளர்த்த தாத்தா திரு.சோமசுந்தரம் சேர்வை அவர்கள் அளித்த அறிவுரைகள்தான் என்னுடைய வெற்றியின் மூலதனம். கிராமத்தில் மரியாதைக்குரியவர். ஆன்மீகத்தில் அதிக பற்று உள்ளவர். எதிலும் நேர்மையை கடைபிடிப்பவர். ஒழுக்கத்தில் சிறந்தவர். எங்கள் கிராமம் பாமணியில் அனைவராலும் மதிக்கத்தக்க அய்யாவின் ஆசியோடு அவரின் பேரனாக வாழ்வதில் பெருமையடைகிறேன்.

புதிதாக தொழில் தொடங்குவோர்க்கு நீங்கள் தரும் ஆலோசனைகள் என்ன?

எந்த தொழில் செய்ய நினைத்தாலும் மனதில் உறுதி வேண்டும். எந்த நேரமும் தொழிலை பற்றிய சிந்தனை வேண்டும்.அதிக நண்பர்கள் வட்டம் இல்லாமல் நல்ல ஆலோசனை வழங்கக் கூடிய ஒன்று அல்லது இரண்டு நண்பர்கள் போதும்.குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தொழிலின் மூலதனத்தை அதிக படுத்திக்கொண்டே போக வேண்டும்.தொழிலின் வளர்ச்சியை மற்றவர்கள் பாராட்டும் முகமாக நேர்மையாக நாணயமாக நல்ல தரத்துடன் செய்தால் தொழிலில் வெற்றி பெறலாம்.

சமூக நலப்பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறீர்கள். இந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?

எனது சமூகப் பணிகள் மூலம் நான் சமுதாயத்தில் அக்கறை உள்ளவனாக, மனிதநேயம் உள்ளவனாக, உதவி செய்பவனாக வாழ்வதால் என்னுடைய நிறுவனத்துக்கும், எனக்கும் பெருமையும் புகழும் கிடைக்கின்றது. இதுகூட தொழில் வளர்ச்சியடைய காரணமாகிறது.

நீங்கள் வாங்கிய விருதுகள், வகித்துவரும் பொறுப்புகள் பற்றி….?

சிறந்த தொழிலதிபருக்கான விருதினை ஜேசீஸ் சங்கம், சுழற்சங்கம் ஆகியவை வழங்கியிருக்கின்றன. இலக்கியப் பேரவை “இளம் வள்ளல்” விருது கொடுத்துப் பாராட்டியுள்ளது. தமிழ்நாடு பேக்கரி பெடரெஷன் துணைத்தலைவர் மாவட்ட சாரணர் சாரணீய தலைவர், அறங்காவல் குழு நியமன உறுப்பினர், ரோட்டரி முன்னாள் தலைவர் உலக திருக்குறள் பேரவை புரவலர்.