Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2014
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,594 முறை படிக்கப்பட்டுள்ளது!

வெடிக்கும் சமையலறைகள்!

தமிழகத்தில் ஓராண்டில் 876 பேர் பலி!- பெண்களின் காலடியில் ‘காஸ்’ குண்டு!!

cylinderதமிழகத்தில் ஆங்காங்கு காஸ் சிலிண்டர் வெடிவிபத்து துயரங்கள் நிகழ்ந்தவாறு உள்ளன. குழந்தைகளுடன் குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக உடல்கருகி உயிரிழக்கும் சம்பவங்கள், கல் நெஞ்சத்தையும் கரைய வைக்கின்றன. இதுபோன்ற விபரீதங்களுக்கு, காஸ் சிலிண்டரை கையாளுவோரின் அஜாக்கிரதையே காரணம் என, பெரும்பாலான சம்பவங்களில், ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அதேவேளையில், ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் அலட்சியம் குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை. காரணம், அந்நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகள், நுகர்வோரின் உரிமை குறித்த விழிப்புணர்வு பலருக்கும் தெரிவதில்லை; குறிப்பாக, இல்லத்தரசிகளுக்கு தெரிவதில்லை.

அபாய சிலிண்டர்கள்:
காஸ் சிலிண்டர்கள், தங்களது வீட்டுக்கு சப்ளையாகும்போது, ‘சீல்’ இருக்கிறதா, முழுமையான எடையளவில் காஸ் இருக்கிறதா என்று மட்டுமே நுகர்வோர் பலரும் ஆராய்கின்றனர். தங்களுக்கு சப்ளையாகும் சிலிண்டரின் தரம் மற்றும் பாதுகாப்பு முறைகள் உறுதி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு, சிலிண்டரின் மேற்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் பாதுகாப்பு குறித்த குறியீடுகளை கவனிப்பதில்லை. எப்படி கண்டறிவது என்ற விவரம் தெரியாததும் காரணமாக இருக்கக்கூடும்.

பாதுகாப்பு குறியீடுகள்:
ஒவ்வொரு சமையல் காஸ் சிலிண்டரையும், ஆண்டுக்கு நான்கு முறை (அதாவது, குவாட்டர் இயர்) அடிப்படையில், ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் பரிசோதித்து, அதுதொடர்பான விவரங்களை, சிலிண்டரின் மீது, கைப்பிடி பகுதியில் குறிப்பிட வேண்டும். சிலிண்டரின் பாதுகாப்பு நம்பகத்தன்மை 10௦ ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன்பிறகே, சிலிண்டரில் காஸ் நிரப்பி, நுகர்வோருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், காலாவதியான மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத சிலிண்டர்களிலும் காஸ் நிரப்பி, வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதாக, சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன.

எப்படி கண்டறிவது?
சமையல் காஸ் சிலிண்டர் மீது, ஜனவரி – மார்ச் மாதம் வரையான முதல் காலாண்டு ஆய்வு A–14 என, குறிப்பிடப்படும். இதில் A என்பது முதல் காலாண்டையும் 14 என்பது காஸ் சிலிண்டரின் உறுதி தன்மை காலாவதி ஆண்டையும் (2014) குறிப்பிடுகிறது.ஏப்ரல் – ஜூன் வரையான இரண்டாம் காலாண்டு ஆய்வு B–14 என்றும், ஜூலை – செப்டம்பர் வரையான மூன்றாம் காலாண்டு ஆய்வு C–14 என்றும், அக்டோபர் – டிசம்பர் வரையான நான்காம் காலாண்டு ஆய்வு D–14 எனவும் சிலிண்டரின் மேல் பகுதியில் குறிப்பிடப்படும்.’காலி சிலிண்டரில் எல்.பி.ஜி., நிரப்பும் போது, சிலிண்டரின் நம்பகத்தன்மையை பரிசோதனை செய்து காஸ் நிரப்ப வேண்டும். காலாவதியான காஸ் சிலிண்டர்களை புழக்கத்தில் விடக்கூடாது’ என்பது கண்டிப்பான விதிமுறை. ஆனால், சில நேரங்களில் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள், விதிமுறையை முறையாக கடைபிடிப்பதில்லை. காலாவதியான காஸ் சிலிண்டரிலும் காஸ் நிரப்பி புழக்கத்தில் விடுவதாக கூறப்படுகிறது. இவற்றை, நுகர்வோர் புறக்கணித்து, டீலருக்கே திருப்பி அனுப்ப வேண்டும். சிலிண்டர் சப்ளை செய்யும் முன்பாக, டீலர்களும் இதை பரிசோதித்து, ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அந்த நிறுவனங்கள், காலாவதி சிலிண்டர்களை புழக்கத்திற்கு அனுப்புவதை, மத்திய அரசு தடுக்க வேண்டும் என்கின்றன, நுகர்வோர் அமைப்புகள்.

உருமாறும் சிலிண்டர்கள்:
சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யும்முன், அந்த ஏரியாவின் குறிப்பிட்ட பகுதியில், வாகனத்தில் கொண்டுவந்து குவியலாக இறக்கப்படுகின்றன. ஊழியர்கள், வாகனம் மீதிருந்து சிலிண்டர்களை துாக்கி தரையில் வீசியெறிகின்றனர். அவை, கட்டாந்தரையில் விழுந்து உருண்டோடி உருக்குலைவதும் நடக்கிறது.

சோதனையும் இல்லை
காஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் ‘புஷ்’கள் சரியாக உள்ளதா என்பதை டீலர்கள் பரிசோதித்த பிறகே, நுகர்வோருக்கு வினியோகிக்க வேண்டும். ஆனால், டீலர்கள் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. காஸ் சிலிண்டர்கள் ஒடுங்கி, உருக்குலைந்த நிலையிலும் புழக்கத்தில் விடுகின்றனர். சிலிண்டரில் ரெகுலேட்டரை பொறுத்தும் போது

அசைவும் ஏற்படுகிறது. இதனால், காஸ் கசிவு ஏற்பட்டு விபத்துக்கு வழி வகுக்கிறது.காஸ் சிலிண்டரில் பிரச்னை ஏற்பட்டால், டீலர்களுக்கும், சம்பந்தப்பட்ட ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மேலாளர்களுக்கும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. காஸ் புத்தகத்திலும் அந்த எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், எப்போது தொடர்பு கொண்டாலும், அந்த எண்களில் பேச முடியாத நிலையே உள்ளதாக, வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே, தவறுகளை கண்காணிக்கவும், விபத்து அபாய சூழ்நிலையின்போது துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், நுகர்வோருக்கென பிரத்யேக ‘டோல் ப்ரீ’ எண்கள் வழங்கப்படவேண்டும் என்கின்றன, நுகர்வோர் அமைப்புகள்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் வள்ளுவனிடம் கேட்டபோது, ”சமையல் காஸ் சிலிண்டர்கள், தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, ‘பாட்லிங் யூனிட்’டில், ‘எல்.பி.ஜி.,’ நிரப்பப்படுகிறது. அதேபோன்று, ஒவ்வொரு காஸ் சிலிண்டரும் உறுதி தன்மை பரிசோதனை செய்யப்பட்டு, காலாவதி மாதம், ஆண்டு பற்றி சிலிண்டரில் எழுதப்படும். சில நேரத்தில் பரிசோதனை செய்யப்பட்டாலும், அதை சிலிண்டரில் பதிவு செய்யாமல் வெளியில் அனுப்பி விடுகின்றனர். ‘பாட்லிங் யூனிட்’டில் முழு பரிசோதனைக்கு பிறகு, சிலிண்டர்கள் டீலருக்கு அனுப்பப்பட்டாலும், சில நேரங்களில், காலாவதியான சிலிண்டரும் புழக்கத்திற்கு வந்து விடுகிறது. ஏதாவது ஓரிடத்தில் ஒரு தொழிலாளி கவனக்குறைவாக இருப்பதால் இவ்வாறு நேரிடுகிறது. அதனால், காலாவதியான சிலிண்டர் வந்தால், நுகர்வோருக்கு வினியோகிக்காமல், டீலர்கள் திருப்பி அனுப்ப வேண்டும். நுகர்வோருக்கு சிலிண்டர் அனுப்புவதற்கு முன், முழுமையாக பரிசோதித்து அனுப்ப வேண்டும், என, காஸ் டீலர்களுக்கு நிரந்தர உத்தரவிடப்பட்டுள்ளது. நுகர்வோரும் சப்ளை செய்யப்படும் சமையல் காஸ் சிலிண்டரை ‘டெலிவரி’ எடுக்கும் போது, காலாவதி மாதம், ஆண்டு மற்றும் நம்பகத்தன்மையை பரிசோதித்து பெற வேண்டும். காலாவதியான சிலிண்டராக இருந்தால், அதனை ஏற்க மறுக்க வேண்டும். சமையல் காஸ் சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டால் உடனடியாகசம்பந்தப்பட்ட டீலருக்கு தகவல் கொடுக்க வேண்டும் அல்லது, கோவை அவிநாசி ரோட்டிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு 0422- 2247 396 என்ற எண்ணில் தகவல் கொடுக்க வேண்டும். அலுவலக நேரம் தவிர மற்ற நேரத்திலும், விடுமுறை மற்றும் அரசு
விடுமுறை நாட்களில், ஐ.ஓ.சி., நுகர்வோர்கள் புகார் தெரிவிப்பதற்காக, ‘எமர்ஜென்சி சர்வீஸ் சென்டர்’ துவங்கப்பட்டுள்ளது. நுகர்வோர்கள், சென்னையிலுள்ள, 1800 425 247 247என்ற, ‘டோல் ப்ரீ’ எண்ணுக்கு தொடர்பு கொள்ளவேண்டும். உடனடியாக சம்பந்தப்பட்ட டீலருக்கும், கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் ‘எஸ்.எம்.எஸ்’ அலர்ட் செய்யப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு, மேலாளர் வள்ளுவன் தெரிவித்தார்.

டீலர்கள் சொல்வது என்ன?
காஸ் சிலிண்டர் விபத்து தவிர்ப்பு குறித்து, அகில இந்திய எரிவாயு வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: சிலிண்டர்களின் நம்பகத்தன்மையை பரிசோதித்த பிறகே, காஸ் நிரப்பப்பட்டு, டீலர்களுக்கு அனுப்பப்படுகிறது. காலாவதியான சிலிண்டர்கள் புழக்கத்திற்கு வராது. காலாவதியான சிலிண்டரை, ‘ரீ கண்டிஷன்’ செய்து, உறுதித்தன்மை பரிசோதனைக்கு பின், பெயின்ட் அடித்து, எண்ணெய் நிறுவனங்களின் தர பரிசோதனை பிரிவில் குறியீட்டு எண் எழுதப்படும். பயன்படுத்த தகுதியற்ற சிலிண்டர்கள் முடக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு சப்ளையின் போது, சிலிண்டரில் உள்ள ரப்பர் ‘புஷ்’சில், ரெகுலேட்டர் சரியாக பொருந்தாவிட்டால் காஸ் கசிவு ஏற்படும். இதை தவிர்க்க, காஸ் டெலிவரி செய்யும் ஊழியர் முன், சிலிண்டரை சரிபார்க்க வேண்டும். காஸ் கசிவு இருந்தால் திருப்பி கொடுத்துவிட்டு, வேறு சிலிண்டர் பெறலாம். வீட்டினுள் வைத்து காஸ் சிலிண்டரை பரிசோதிக்கக்கூடாது. காஸ் கசிவு ஏற்பட்டதை உணர்ந்தால், முதலில் வீட்டிலுள்ள மின்இணைப்பை துண்டிக்க வேண்டும். ஜன்னல், கதவுகளை திறந்து, காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான காஸ் விபத்துகள், விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படுகிறது.
இவ்வாறு, ராஜேந்திரன் தெரிவித்தார்.

2ம் இடம்:
சமையல் காஸ் கசிவாலும், சிலிண்டர் வெடித்தும், ஏற்படும் தீ விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில், சமையல் காஸ் விபத்தால் குஜராத்தில் 735 பேரும், தமிழகத்தில், 586 பேரும் பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு சமையல் காஸ் சிலிண்டர் மூலம் 96 விபத்துக்கள் நடந்து, 91 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 541 பேரும், ஆந்திராவில் 426 பேரும், கர்நாடகத்தில் 386 பேரும் பலியாகியுள்ளனர். கேரளாவில் மட்டுமே பலியானோர் எண்ணிக்கை குறைவு; இங்கு ௫௨ பேர் பலியாகியுள்ளனர். காஸ் விபத்து நிகழ்வில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் ௨வது இடத்திலும் உள்ளது. காஸ் சிலிண்டர் வெடித்து உடல் கருகி பலியானவர்களில் 82 சதவிகிதம் பேர் பெண்கள் என்கிறது, தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளிவிபரம்.

‘உரிமத்தை ரத்து செய்யலாம்’:
‘கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ்’ செயலர் கதிர்மதியோன் கூறியதாவது: காஸ் சிலிண்டர்களின் தரம், ௧௦ ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்பட்டு ‘ரீ- கண்டிஷன்’ செய்யப்பட வேண்டும். காலாவதியான சிலிண்டர்கள் புழக்கத்தில் இருந்தால், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் மீதும், டீலர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டீலர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், கேரள மாநிலத்தில் காலாவதியான காஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் இருப்பதை அறிந்த, கலெக்டர் ஒருவர் அதிரடி நடவடிக்கை எடுத்து, காலாவதியான சிலிண்டர்களை பறிமுதல் செய்து, டீலர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார்.கேரளாவில் தற்போது, காலாவதியான சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு வருவதில்லை. மற்ற மாநிலத்தில் அவ்வாறான நிலை இல்லை.மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இந்த பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால், அதற்கான உண்மையான காரணத்தை புலனாய்வு செய்ய வேண்டும். சிலிண்டரில் ஒவ்வொரு முறை காஸ் நிரப்பும் போதும், அதன் நம்பகத்தன்மை பரிசோதனை செய்யப்பட வேண்டும். திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்.பி.ஜி) கசிவு ஏற்படாமல், அடைக்கும் ரப்பர் புஷ்களை புதுப்பிக்க வேண்டும். நுகர்வோருக்கு காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது, அதனை ரெகுலேட்டரில் பொருத்திப் பார்த்த பிறகே, புத்தகத்தில் ‘என்ட்ரி’ செய்ய வேண்டும். நுகர்வோரும் விழிப்புணர்வுடன் இருந்து, காஸ் சிலிண்டரின் காலாவதி ஆண்டு மற்றும் நம்பகத்தன்மையை பரிசோதித்து பெற வேண்டும்.

பி.பி.சி., -எச்.பி.சி., அலட்சியம்:
சமையல் காஸ் சிலிண்டரில், காஸ் கசிவு ஏற்பட்டாலோ, காலாவதியான சிலிண்டர் டெலிவரி செய்தாலோ, புகார் தெரிவிக்க ஐ.ஓ.சி., நிறுவனம், சேவை தொலைபேசி எண்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேவேளையில், பி.பி.சி., மற்றும் எச்.பி.சி., நிறுவனங்கள் நுகர்வோர் சேவைக்காக பிரத்யேகமாக, ‘எமர்ஜென்சி சர்வீஸ் சென்டர்’ துவங்கவில்லை. எனவே, பி.பி.சி., நுகர்வோர் 0422- 2532 205 என்ற எண்ணிலும், எச்.பி.சி., நுகர்வோர் 0422- 2307 460 என்ற எண்ணிலும், அந்தந்த நிறுவனங்களின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் வசதி மட்டுமே உள்ளது.

சிலிண்டர் பெறும் முன்உஷார்!
ஒவ்வொரு சமையல் காஸ் சிலிண்டரையும், ஆண்டுக்கு நான்கு முறை (அதாவது, குவாட்டர் இயர்) அடிப்படையில், ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் பரிசோதித்து, அதுதொடர்பான குறியீடுகளை, சிலிண்டரின் மீது, கைப்பிடி பகுதியில் குறிப்பிடுகின்றன.

கவனியுங்க… இது ரொம்ப முக்கியம்:
இந்த குறியீடு (D-13) காலாவதியானதை குறிக்கிறது.சமையல் காஸ் சிலிண்டர் மீது, ஜனவரி – மார்ச் மாதம் வரையான முதல் காலாண்டு ஆய்வு A–14 என, குறிப்பிடப்படும். இதில் A என்பது முதல் காலாண்டையும் 14 என்பது காஸ் சிலிண்டரின் உறுதி தன்மை காலாவதி ஆண்டையும் (2014) குறிப்பிடுகிறது. ஏப்ரல் – ஜூன் வரையான இரண்டாம் காலாண்டு ஆய்வு B–14 என்றும், ஜூலை – செப்டம்பர் வரையான மூன்றாம் காலாண்டு ஆய்வு C–14 என்றும், அக்டோபர் – டிசம்பர் வரையான நான்காம் காலாண்டு ஆய்வு D–14 எனவும் சிலிண்டரின் மேல் பகுதியில் குறிப்பிடப்படும்சிலிண்டரின்மேல் பகுதி கைப்பிடி வளையத்துடன் இணைந்திருக்கும் மூன்று குறுக்கு தகடுகளில், ஏதாவது ஒரு தகடில், இந்த குறியீடு இருக்கும்.

ம. சண்முகவேல்