Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2014
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,178 முறை படிக்கப்பட்டுள்ளது!

“போலீஸ் பொன்னுசாமி” by அறிஞர் அண்ணா

அதோ! உயர்ந்த உருவமும், நீண்ட மீசையும் கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை அறியாதார் இரார். போக்கிரி! சாக்கிரி! கொலைகாரன், கொள்ளையடித்தவன்! எல்லாம் அவருக்குத் துரும்பு போல, விட மாட்டார்! திறமையைப் பாராட்டி ‘மெடல்’கள் கூட அளிக்கப்பட்டிருப்பவர்!!

அவருக்குச் சட்டம் என்றால் சட்டம் தான்! – அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணிய மாட்டார். இலஞ்சம், ஊழல் இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற பயத்தை விட, நாளைய தினம் இறந்தபிறகு நடக்குமே ‘எமதர்மனின் விசாரணை’ அதற்காக மிகவும் அஞ்சுபவர்! நெற்றியில் பள பளவென்று மின்னும் நாமமே சொல்லும், அவர் எவ்வளவு பக்திமான் என்பதை! ”யாராயிருந்தா நமக்கென்ன சார்? டூட்டின்னா டூட்டிதான்! பணக்காரனாயிருந்தா அவன் வீட்டிலே பலே கில்லாடின்னா, இரண்டு குத்திலே அலறனும்” என்று துணிச்சலோடு சொல்வார். ஆனால் கோயில் குருக்களைக் காணும்போது, போலீஸ் தொப்பியைக் கழட்டிவிட்டு அவர் கும்பிடத் தவறமாட்டார். டி.எஸ்.பியை விட அய்யருக்கு போலீஸ் பொன்னுசாமியிடமிருந்து அதிக மரியாதை கிடைக்கும்! அவ்வளவு சனாதன நம்பிக்கையுள்ளவர்.

அவருக்கு இப்போது ஒரு சிக்கல்! பக்கத்து கிராமத்துக்கு, ஒரு ’கேசை’ப் பிடிக்க போக வேண்டும் – கொலைக்கேஸ் அல்ல! கலியாணக் கேஸ்! ஆமாம், முதல் தாரம் இருக்கும்போது, இரண்டாம்தாரம் செய்து கொள்ள ஒருவர் முனைவதாகப் போலீஸ் இலாகாவுக்குத் தகவல் எட்டியிருக்கிறது. சட்டம் என்றால் சட்டம் தானே, அவருக்கு. அதனால் புறப்படப் போகிறார் கிராமத்துக்கு. சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்து ஒரு தினுசான ஆசாமி! அவருக்கு, பொன்னுசாமியைப் பற்றி அதிகம் தெரியும்!! கொஞ்சம் குறும்பு சுபாவம் உள்ள்வர்.

அதனால் பொன்னுசாமி ‘ஸ்டேஷனிலிருந்து’ விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போகும்போது கூப்பிட்டார் அவரை.

“பொன்னுச்சாமி”

“சார்..”

“உனக்கு என்ன ‘டூட்டி’ ஞாபகம் இருக்கிறதா?”

“கிராமத்துக்குப் போய் இரண்டாம்தாரக் கலியாணத்தை தடுத்து அந்த ஆளை ‘அரெஸ்ட்’ செய்து கொண்டு வர வேண்டிய டூட்டி சார்…!”

“ஊம். உம்முடைய பத்து வருஷத்து சர்வீசிலே சட்டத்தை மீறிய யாரையும் நீர் பிடிக்காமல் விட்டதுண்டா?”

“கிடையாது சார்… இவருக்குச் சட்டம்னா சட்டம்தாங்க!”

“அதை மீறுகிற யாரையும் விட மாட்டீரே?”

”அண்ணன் தம்பின்னா கூட விடமாட்டேங்க – முதலிலே கையில விலங்கைப் பூட்டிடுவேன்..”

“ரொம்பச் சரி… ஒரு பெண்டாட்டி இருக்கும்போது இன்னொரு பெண்டாட்டியைக் கட்டிக்கறது தப்பு தானே?”

“சட்டப்படி தப்பு சார் – தப்பு”

“சரி, இது என்ன? பாரும்..”

பார்த்தார், பொன்னுச்சாமி.

ஏன் விழிக்கிறார் அப்படி? ஏன் அவர் முகம் ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருக்கிறது? முகத்திலே ஏன் அவ்வளவு வியர்வை? அப்பப்பா மிகவும் சோகத்துடன் அல்லவா காணப்படுகிறார்!

விஷயம் இதுதான். பெரிய தெரு பீமராயர் வீட்டில் நாளைக்கு ருக்மிணி கலியாணமாம்! விசேஷ போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார், பீம ராயர். ருக்மிணி என்பது, பீமராயருடைய பெண்ணல்ல; சாட்சாத் எம்பெருமான் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மனைவி ருக்மிணிதான்! அந்த ருக்மிணிக்கு மீண்டும் கலியாணம்.

நோட்டீசைக் காட்டிக் கேட்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் “என்ன பொன்னுசாமி! பாமா இருக்கறப்ப இந்த கிருஷ்ணன் இன்னொரு பெண்ணைக் கட்டிக்கலாமா?”

“கிருஷ்ணன் சாமிங்க”

“சாமி தப்புத் தண்டா செய்யலாமா பொன்னுச்சாமி! சட்டம்னா சட்டம் தானே?” – கேட்கிறார், சப் – இன்ஸ்பெக்டர்! விழிக்கிறார், பொன்னுச்சாமி.

பாவம், என்ன பதில் சொல்வார், அவர்?! எந்தச் சாமிதான் ஒரு மனைவியோடு வாழ்வதாக இருக்கிறது, நமது புராணத்தில்!! ஊம்… ‘அரெஸ்டு’ செய்வதென்றால், சட்டப்படி போலீஸ் பொன்னுச்சாமி, எந்தக் கடவுளைத்தான் விட்டு விட முடியும்? சிக்கலான விஷயம் தானே! திகைக்கும் பொன்னுசாமியால் என்ன பதில் சொல்ல முடியும்! திகைக்கிறார்.