Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2014
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,314 முறை படிக்கப்பட்டுள்ளது!

உழ்ஹிய்யாவின் சட்ட திட்டங்கள்

இஸ்லாமிய சின்னங்களில் ஒரு சின்னமாகும். அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கி வைக்கும் இபாதத்துகளில் மகத்தான ஒரு இபாதத் ஆகும். வணக்க வழிபாடுகளை  அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டுமானால் அதற்க்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.

1.அல்லாஹ்விற்காக அந்த வணக்க வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும்.

2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி அவ்வணக்கத்தை செய்யவேண்டும்.

உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (22:37)

துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் (பெருநாள் தொழுகைக்குப் பின் ) அன்றும் அதற்க்கு அடுத்த நாட்களான 11,12,13 ஆகிய நாட்களும் இதனை நிறைவேற்றலாம். பெருநாள் தொழுகைக்கு முன்பாக இதனை நிறைவேற்றக்கூடாது. ஆதாரம்; (புகாரி 5545)

உழ்ஹிய்யா  கொடுப்பவர்களின் கவனத்திற்கு….

உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் துல் கஃதா மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்த பிறகு அல்லது துல்ஹஜ் மாதம் முதல் பிறை தென்பட்டதிலிருந்து  உழ்ஹிய்யா கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக்கூடாது.  நீங்கள் உழ்ஹிய்யா கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் உழ்ஹிய்யா கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.           அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)நூல் :முஸ்லிம் , 5234

10 நாட்களுக்கு இடையில் உழ்ஹிய்யா கொடுப்பதாக ஒருவர் நிய்யத் வைத்தால்  அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. இதற்க்கு முன் அவர் வெட்டி இருந்தால் அவர் மீது குற்றமில்லை.

உழ்ஹிய்யா கொடுப்பவர் ஹஜ்ஜிலே பங்கெடுப்பவராக இருந்தால் இந்த பத்து நாட்களில் முடிகளையோ, நகங்களையோ வெட்டுவது அனுமதிக்கப் பட்டது.

தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்ற இந்த சட்டம் உழ்ஹிய்யா கொடுக்கும் நபருக்கு மட்டும் உரித்தானது. இச்சட்டம்  அவருடைய குடும்பத்தார்களையோ, உறவினர்களையோ, ஒருவரின் உழ்ஹிய்யாவை  கொடுப்பதற்கு பொறுப்பேற்றவரையோ உள்ளடக்காது.

உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் தனது நகத்தையோ, முடியையோ எடுத்தால் அவர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடவேண்டும். மீண்டும் அவர் இவ்வாறு செய்யக் கூடாது. இதற்கு எந்தப்  பரிகாரமும் இல்லை. அவர் தனது உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதில் தடையேதுமில்லை.

உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் மறதியாலோ, நகங்களை, முடிகளை எடுக்க கூடாது என்ற சட்டத்தை  தெரியாமலோ, அல்லது தானாக முடி கொட்டி விட்டாலோ அவர் மீது குற்றமில்லை. அவரும் தனது உழ்ஹிய்யா  நிறைவேற்றலாம்.

கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அல்லது அறுவைசிகிட்ச்சை செய்வதற்காகவோ காயத்தை குணப்ப டுத்துவதற்காகவோ நகம்,  முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற நிர்பந்த நிலையில் நகத்தை முடியை வெட்டுவது அனுமதிக்கப் பட்டதே! இவரும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.

உழ்ஹிய்யாவின் நோக்கம் இறையச்சமே !

பெருமைக்காகவோ, புகழுக்காகவோ இருக்கக் கூடாது. அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாக கொள்ளவேண்டும்.

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்…. 22:37

யாரின் மீது கடமை : உழ்ஹிய்யாவை நிறை வேற்றுவது வாஜிபா? வலியுறுத்தப்பட்ட சுன்னத்தா? சுன்னத்தா? என்று அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது.

“யாருக்கு வசதி இருந்தும் அவர் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய தொழும் திடலை நெருங்க வேண்டாம்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஹாக்கிம் 2/389

இது போன்ற இன்னும் சில  ஹதீஸ்களின் அடிப்படையில் பெரும்பாலான அறிஞர்கள் வலியுறுத்தப் பட்ட சுன்னத் என்றே கருதுகின்றனர். எனினும் கடன் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

உழ்ஹிய்யாவின் பிராணிகள்

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள். 22:28, 34, 36, உழ்ஹிய்யாவின் இறைச்சியை  நாமும் உண்ணலாம், சேமித்தும் வைக்கலாம் ஏழைகளுக்கும் கொடுக்கலாம் எனினும் ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிப்பதே மிகச் சிறந்தது. மூன்று பங்குகள், இரண்டு பங்குகள் வைக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனைகள் குர் –ஆனிலும் ஹதீஸிலும் இல்லை.

செம்மரியாடு: ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்தது. வெள்ளாடு: ஒரு வருடம் பூர்த்தியடைந்தது.

மாடு: இரு வருடம் பூர்த்தியடைந்தது.

ஒட்டகம்: ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்தது.   ஃபதாவா அல் லஜ்னதுத் தாயிமா 11/ 378

ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் பெண்  இனத்தையும்  உழ்ஹிய்யா  கொடுக்கலாம்

(நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன – செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக. 6:143,144

கர்ப்பிணியையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் :

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “கர்ப்பிணியாக உள்ள பிராணிகளைக் கொடுக்க முடியும், அதன் குட்டி இறந்த நிலையில் வெளியேறினால் அதை அறுக்க வேண்டியதில்லை என்பதே இமாம் ‘ஷாஃபிஈ(ரஹ்),  அஹ்மத்பின் ஹம்பல் (ரஹ்) போன்றவர்களின் கருத்தாகும்’ அது உயிருடன் வெளியேறினால் அதையும் அறுக்கவேண்டும். மஜ்மூஉல்ஃபதாவா 6/178

பாலூட்டும் பிராணியை அறுக்க கூடாது

அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி) முஸ்லிம் : (3799)

பிராணிகளும் அதன் தன்மைகளும்

அறுக்கும் பிராணிகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். கண்கள் குருடாகவோ, காதுகள் வெட்டப் பட்டதாகவோ, துவாரமிடப்பட்டதாகவோ, நோயுள்ளதாகவோ, நொண்டியாகவோ, மெலிந்ததாகவோ, கொம்புகள் உடைந்ததாகவோ இருக்க கூடாது. அறிவிப்பாளர்கள்: அல்பரா பின் ஆசிப்(ரழி)   அலி (ரழி) நூற்கள்: அஹ்மத்1/149 , திர்மிதி1504, நாஸாயி4462, அபூதாவூத்2803,  இப்னுமாஜா3143

அறுக்கும் முறை :

அறுப்பதற்கு முன் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.  தக்பீர் கூறியும் அறுக்க வேண்டும்.

நபி(ஸல்)அவர்களும் உழ்ஹிய்யா கொடுத்தார்கள். அவர்கள் பின்வரும் பிரார்த்தனையைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பிறகு அந்தக் கத்தியை வாங்கி செம்மரியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால், இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தா ரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதைஏற்றுக்கொள்வாயாக) என்று கூறி அதை அறுத்தார்கள். அறிவிப்பவர் ஆய்ஷா (ரழி)    நூல்:முஸ்லிம் 5203,  அபூதாவூத் 2794

இந்த அடிப்படையில் ஒருவர் தனித்து உழ்ஹிய்யா கொடுப்பதாக இருந்தால் اَللّهُمَّ    تَقَبَّلْ مِنِّي –அல்லாஹும்ம தகப்பல் மின்னீ – இறைவா என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! தனது குடும்பத்தாருக்கும் சேர்த்து கொடுப்பதாக இருந்தால்  اَللّهُمَّ تَقَبَّلْ مِنِّي وَمن اَهْلِي – அல்லாஹும்ம தகப்பல் மின்னீ வமின் அஹ்லீ   என்னிட மிருந்தும் எனது குடும்பத்தாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக ! என்று பிரார்த்தனை செய்யலாம். கிப்லாவை முன்னோக்கி அறுப்பது விரும்பத்தக்கது, கிப்லாவை முன்னோக்காமலும் அறுக்கலாம்

கூர்மையான கத்தியினால் அறுக்க வேண்டும், அறுக்கப்படும் பிராணியை விட்டும் கத்தியை மறைக்க வேண்டும், விரைவாக அறுக்க வேண்டும். அறுக்கப்பட்ட பிராணியின் உயிர் முழுமையாகப் பிரியும் வரை விட வேண்டும், யார் உழ்ஹிய்யாவை நிறை வேற்றுகின்றார்களோ அவர்களே நேரடியாக அறுப்பது சிறந்தது. எனினும் அறுக்கும் முறையை நன்கு அறிந்தவர்கள் அறுப்பதே மிகச்சிறந்தது.  ஆதாரங்கள்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி,இப்னு மாஜா, நஸாயி, அஹ்மத்,  பைஹக்கீ, ஹாக்கிம்,

நபி (ஸல்) அவர்கள் கறுப்பும் வெள்ளையும் கலந்த இரு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தம்முடைய பாதத்தை அவற்றின் கழுத்தில் வைப்பதை நான் பார்த்தேன். பிஸ்மிலாஹ்வையும் தக்பீரையும் கூறி அவற்றை தம் கையால் அறுத்தார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)  நூல்:புகாரி

ஒட்டகத்தை நிற்க வைத்து  அதன் ஒரு காலை கயிற்றால் கட்டி வைத்துக் கொண்டு அறுக்க வேண்டும். அறிவிப்பாளர்: இப்னு உமர் ஆதாரம்:புகாரி

பிராணியை அறுக்கும் முன் தண்ணீர் கொடுக்க வேண்டுமென்றோ  குளிப்பாட்ட வேண்டுமென்றோ  எவ்வித ஆதாரங்களும் இல்லை.

பெண்களும் அறுக்கலாம் :

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி), நூல் :புகாரி 2304

உழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் இடம்:

தொழும் திடலில் நபி (ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தார்கள்.” அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல் :புகாரி

இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (இல்லத்திற்கு) திரும்பிச் சென்று உழ்ஹிய்யா கொடுப்போம். அறிவிப்பவர் : பராஇப்னு ஆஸிப் (ரலி) நூல்:புகாரி

இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகை நடை பெற்ற திடலிலும், வீட்டிலும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உழ்ஹிய்யா பிராணியை பயன்படுத்தலாம்

உழ்ஹிய்யா பிராணியை பால் கறப்பதற்காகவோ, விவசாய நிலத்தை உழு வதற்க்காகவோ பயணம் செய்வதற்காகவோ பயன் படுத்தலாம் என்பதற்கு மார்கத்தில் எந்த தடையும் இல்லை. அனுமதிக்கும் வகையில் ஆதாரங்களே உள்ளன. அறுக்கப் போகும் பிராணிதானே எனக் கருதி உணவு கொடுக்காமல் இருப்பதோ, அதிக நோவினை செய்வதோ கூடாது.

ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். அதற்கவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். மீண்டும் அவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும்  அதில் ஏறிக்கொள்ளும் என மூன்றாம் தடவையும் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி

மரணித்தவர்களுக்காக  உழ்ஹிய்யா கொடுப்பதில்  சில நிபந்தனைகள்

ஒரு மனிதன் தனக்காவும் தன் குடும்பத்தார்கள் சார்பாகவும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் இதில் உயிரோடு இருப்பவர்களும் மரணித்தவர்களும் அடங்குவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் சார்பாகவும், தங்கள் குடும்பத்தார்கள் சார்பாகவும்  உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள். ஆதாரம்: முஸ்லிம்: 5203

ஆனால் இன்னார் சார்பாக என்று மரணித்தவர்களுக்கு  குறிப்பாக்கி கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

வஸியத் நிறைவேற்றப் பட வேண்டும்

தன்னுடைய மரணத்திற்குப் பின் தனது செல்வத்திலிருந்து உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும் என்று வஸியத் செய்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்

வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.  2:181

ஸதக்கததுல் ஜாரியா என்ற அடிப்படையில் உயிரோடு இருப்பவர்கள் மரணித்த வர்களுக்காக  உழ்ஹிய்யா கொடுக்கலாம்

என்று ஹனபி மத்ஹபை சார்ந்த சில அறிஞர்கள் கருதுகிறார்கள். என்றாலும் நபி (ஸல்) சுன்னாவிலிருந்து இதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் நெருங்கிய உறவினரான ஹம்ஸா (ரழி) அவர்களுக்கோ , நபி (ஸல்) வாழ்நாளில் மரணித்து விட்ட  திருமணம் முடித்த மூன்று பெண்குழந்தைகளுக்கோ, சிறு வயதில்  மரணித்து விட்ட மூன்று ஆண் குழந்தைகளுக்கோ, மனைவிமார்களில் தனக்கு மிகவும் விருப்பமான கதீஜா (ரழி) அவர்களுக்கோ  உழ்ஹிய்யா கொடுத்ததாக எந்த  ஆதாரமும் இல்லை. ஸஹாபாக்களின் காலத்திலும் எந்த ஒரு  ஸஹாபியும் மரணித்து விட்ட  ஸஹாபிக்காக உழ்ஹிய்யா கொடுக்க வில்லை.

மாற்றுமதத்தவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கலாமா?

22:28 இந்த வசனத்தில் முஸ்லிம் ஏழைகள்  காஃபிர் ஏழைகள் என்று பிரிக்கவில்லை ஏழைகளுக்கும்  உண்ணக் கொடுங்கள் என்று பொதுவாக சொல்லப் பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தின் பக்கம் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படலாம். அவர்களை இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுக்கலாம். மேலும் முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் எதிர்ப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு வழங்கக்கூடாது.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். 60: 8, 9 ஃபதாவா அல் லஜ்னதுத் தாயிமா 10/437,438

கூட்டாக நிறை வேற்றுவது

ஹுதைபியா ஆண்டில் நபி (ஸல்) அவர்களோடு மாட்டில் ஏழு பேர் வீதமும் ஒட்டகத்தில்  ஏழு பேர் வீதமும் அறுத்துப் பலியிட்டோம். அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் , நூல் :முஸ்லிம் :1318

ஆட்டில் கூட்டு சேர்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

உழ்ஹிய்யா தோல்

உழ்ஹிய்யா பிராணியின் தோல் அல்லது இறைச்சியை உரித்தவருக்குக் கூலியாகக் கொடுக்கக் கூடாது. இதை தர்மமாக ஏழைகளுக்கோ, அநாதை நிலையங்களுக்கோ மதரஸாக்களுக்கோ வழங்கலாம்.

ஒரு ஒட்டகத்தைக் குர்பானி கொடுக்கும் பொறுப்பை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அதன் மாமிசத்தையும், தோலையும் அதன் மீது கிடந்த(கயிறு, சேனம் போன்ற)வைகளையும் தர்மமாக வழங்குமாறும் உரிப்பவருக்குக் கூலியாக அதில் எதனையும் வழங்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அதற்கான கூலியை நாங்கள் தனியாகக் கொடுப்போம். அறிவிப்பவர் : அலீ(ரலி),  நூல்: புகாரி

அல்லாஹ்விற்க்காக மட்டும்!

அறுத்துப் பலியிடுதல் என்ற இந்தச் செயல் மகத்தான ஒரு இபாதத் ஆகும். அத்துடன் நம்மை இறைவனின் பக்கம் நெருக்கி வைக்கும். மரணித்துவிட்ட நபிமார்க ளுக்காகவோ, வலிமார்களுக்காகவோ, மஹான்களுக்காகவோ  அவ்லியாக் களுக்காகவோ, ஜின்களுக்காகவோ    அறுத்துப்பலியிடுதல் மாபெரும் இணைவைப்பாகும்.

நபியே நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

“அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). 6:162,163

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான்…. அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி) நூல் : முஸ்லிம் 5240

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த அடிப்படையில் இவ்வணக்க வழிபாட்டை நிறைவேற்றி மறுமையில் வெற்றி பெற அல்லாஹ் உதவி செய்வானாக! 

இக்கட்டுரையை தொகுக்க உதவிய நூல்கள்:

அல்- ஜாமிஃ   லிஅஹ்காமில் உழ்ஹிய்யா – ஷைக்  நதா அபூ அஹ்மத், அஹ்காமுல் உழ்ஹிய்யா –

முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமின் (ரஹ்)

தயாரிப்பு: யாஸிர் ஃபிர்தௌஸி, அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம்