Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,702 முறை படிக்கப்பட்டுள்ளது!

அன்று இன்று! கான்க்ஷா -Gonxha

mother_teresa_youngஅவர் பெயர் கான்க்ஷா. 1910ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் குடும்பத்தில் மிகவும் இளையவர். இவர் தந்தை நிக்கோலா ஒரு காண்ட்ராக்டர். அரசியலில் மிகுந்த தீவிரத்தோடு பங்கு கொண்டிருந்தார். கான்க்ஷாவிற்கு 8 வயதாக இருந்தபோது இவர் தந்தை இறந்தார். அன்று முதல் கான்க்ஷாவையும் அவருடன் பிறந்த மற்ற இரண்டு சகோதரர்களையும் பார்க்கும் பொறுப்பும் அவருடைய இளம்தாய்க்கு வந்தது, அவர்களுடைய குடும்ப சூழ்நிலை ஒரே இரவில் முற்றிலுமாக மாறியது. ஆடைகள் தைத்தும், கை வேலைப்பாடுகள் செய்தும் வருமானம் ஈட்டி வந்தனர்.

கான்க்ஷா சிறு வயது முதலே, பிறருக்கு உதவுவது, சேவைகள் புரிவது குறித்த கதைகளை கேட்டே வளர்ந்தார். அவருடைய மொத்த குடும்பமும் கடவுள் நம்பிக்கை கொண்டதாகவே இருந்து வந்தது. அவருடைய 12ஆம் வயதில் கடவுளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமே சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருள் உதித்தது. அவர்கள் மதத்தின், நாட்டின் கலாச்சாரப்படி, கடவுளுக்கு சேவை செய்பவர்கள். திருமணத்தையும், குழந்தைகளையும் மட்டு மல்லாமல் அவருடைய மொத்த குடும்ப உறவுகளையும் துறக்க வேண்டும் என்பது மரபு. இதை எளிதில் கான்க்ஷாவால் செய்ய முடிய வில்லை. 12ஆம் வயது முதல் தேவாலயங்களில் பாட்டுக்கள் பாடியும், தன் தாயுடன் இணைந்து ஏழைகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதையும் செய்து வந்தார்.

சேவை செய்வது குறித்து பல ஆண்டுகள் மனதை தயார்படுத்தியபின், எண்ணற்ற கட்டுரைகள் புத்தகங்கள் படித்தபின், அவருடைய 18ஆம் வயதில் அந்த துணிவான முடிவை எடுக்கத் துணிந்தார். தன்னுடைய சொந்த வாழ்வை காட்டிலும் மற்றவர்களுக்கு உதவுவது தான் அவருடைய விருப்பமாக இருந்தது. “சிஸ்டர் ஆப் லொபார்ட்டே” என்ற சேவை அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த நாள் துவங்கி அவர் வாழ்நாளில் அவருடைய தாயையும், சகோதரியையும் சந்திக்கவேயில்லை. அயர்லாந்து நாட்டிலும், இந்தியாவின் டார்ஜிலிங் பகுதியிலும் அவருக்கு சேவைகள் செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

துவக்க காலத்தில், கல்கத்தாவின் புனித மரியன்னை பெண்கள் பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் துவங்கினார். பின்பு அதன் முதல்வர் ஆனார். அவருடைய சேவையின் திசை வேறு முகமாக பயணிக்கத் துவங்கியது, ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் உதவ அவர் தன்னை “சிஸ்டர் ஆப் லொபார்ட்டா”வில் இருந்து சட்டப்படி விடுவித்துக்கொள்ள வேண்டி இருந்தது. அதை அவர் செய்த நாள்முதல், கல்கத்தா தெருக்களில் அடுத்து என்ன செய்யப் போகிறார், எங்கு இருக்கப்போகிறார் என்ற அனைத்தும் கேள்விக்குறி.

அவருடைய வருங்கால கனவுகளை நிறைவேற்ற பாட்னா சென்று “நர்சிங்” துறையில் பட்டம் பெற்றார். பின்பு கல்கத்தா திரும்பியவர், முதலில் குடிசை வாழ் மக்களுக்கு கல்வியையையும், அடிப்படை சுகாதாரத்தையும் கற்றுத் தந்தார். அவர்கள் மெல்ல வளர வளர, நோய் வாய்ப்பட்ட குடும்பங்கள், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்யத் துவங்கினார்.

1950களில் கான்க்ஷாவின் சொந்த அறக் கட்டளையான “மிஷினரீஸ் ஆப் சாரிட்டி” (Missionaries of Charity) மொத்தம் 13 உறுப்பினர் களுடன் துவங்கப்பட்டது. அவர் எதிர் பார்க்காமலேயே பலரும் அவரை ஊக்குவிக்க முன் வந்தனர். இந்த அறக்கட்டளை சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, வறுமையிலும், நோயிலும் வாடும் குடும்பங்களை அரவணைத்து அவர்களின் தேவைகளை தீர்க்கத் துவங்கியது.

அதன் பின்னான இரண்டு ஆண்டுகளில் கான்க்ஷா துவங்கிய, “ஹோம் ஆப் டையிங்” (Home for the Dying) என்ற அமைப்பை துவங்கினார். இது எந்தவித ஆதரவும் இல்லாமல் மிகவும் கொடிய முறையில் இறப்பவர்களுக்கு மருத்துவமும், அவர்கள் சிகிச்சை பலனின்றி இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தக்க மரியாதையும் தரும் அமைப்பாய் விளங்கியது.

அவருடைய அறக்கட்டளை இந்தியாவை கடந்து பல நாடுகளிலும் விரிய ஆரம்பித்த காலத்தில் கான்க்ஷா சொன்ன வார்த்தைகள் “நான் பிறப்பால் அல்பேனியன். குடியுரிமையால் இந்தியன். என்னுடைய நம்பிக்கையின்படி, நான் ஒரு கன்யாஸ்திரி. என் மனதளவில் நான் இயேசுவிற்கு சொந்தமானவள். நான் உலகத்திற்கே பொதுவானவள் என்று என்னை அழைத்துக்கொள்ள விரும்புகிறேன்.”

தான் செய்யும் செயலில் அளவற்ற ஈடுபாடும், தீராத விருப்பமும் கொண்டிருந்த கான்க்ஷாவின் வாழ்நாட்களில் அவருக்கு பெரும் தடையாய் இருந்தது அவருடைய உடல்நிலை. 1983ஆம் ஆண்டு முதல் மாரடைப்பால் அவதியுற்றார். தனக்கிருந்த ஆர்வத்தில் உடல் நலக்குறைவை எல்லாம் புறம் தள்ளி எழுந்தவருக்கு மீண்டும் 1989இல் மாரடைப்பு ஏற்பட்டது. நிமோனியா நோயினாலும் பாதிக்கப் பட்டார். நாட்கள் செல்ல செல்ல அவருடைய உடல் நலம் குன்றியே வந்தது. 1997ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு உணவையும், பிரார்த்தனையையும் முடித்தபின் அவருடைய வாழ்நாளும் முடிவுற்றது.

அன்று 13 உறுப்பினர்களுடன் துவங்கிய அறக்கட்டளையில் இன்று 4000 உறுப்பினர்களுக்கு மேலும், 610 கிளைகளுக்கு மேலும் நிறுவப்பட்டுள்ளது.

அன்று கல்கத்தா தெருக்களில் நோயாளிகளின் அன்பையும், நன்றியையும் மட்டுமே பரிசாய்ப் பெற்றவர், இன்று உலகத்தின் முக்கிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, ஜான் கென்னடி சர்வ தேச விருது, இந்தியாவின் உயரிய விருதுகள் பலதும் பெற்ற பெருமைக்கு உரியவர்.

அன்று தன்னுடைய சேவைக்காக அன்னையையே துறந்தவர், இன்று உலகத்தினர் அனைவராலும் அன்னை என்றழைக்கப்படுபவர்.

எந்தத் துறையாக இருந்தாலும், அதில் வெற்றி பெறத் தேவை ஈடுபாடு, சுயவிருப்பம். தனக்கு விருப்பமானவற்றைச் செய்ய குடும்பம், புறச்சூழல், பொருளாதாரத் தடைகள் மற்றும் உடல்நிலை என எதுவாக இருந்தாலும், அனைத்தையும் புறம்தள்ளி தன்னுடைய இலக்கில் முனைப்புடன் இருந்து இன்று சர்வ தேசப்புகழ் பெற்ற இந்த வெற்றியாளர் யார்……..?MotherTeresa

இப்போதும் கண்டு பிடிக்கவில்லையா?  படத்தை பார்த்த பின் அன்னை தெரசா என்று புரிகிறதா?

நன்றி: நமது நம்பிக்கை