Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2016
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
2829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 6,650 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை பாரம்பரிய சமையல் 1/2

0  தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியந்து அடிக்கும் கமென்ட் இது! நம் பாரம்பரிய சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும், உடல் உபாதைக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி, ரெகுலராக பயன்படுத்தினால், வருமுன் காக்காகும் பாதுகாவலானகவும் பரிமளிக்கின்றன. அதேசமயம், நாக்குக்கு ருசியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த இணைப்பிதழில் ’30 வகை பாரம்பரிய சமையல்’ செய்முறையை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் மாலதி பத்மநாபன்.

”இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக செலவில்லாத, மருத்துவ குணம்மிக்க பாரம்பரிய உணவுகளை கொடுத்திருக்கிறேன். இவற்றை அடிக்கடி உங்கள் குடும்ப மெனுவில் இடம்பெறச் செய்யுங்கள். ஹேவ் எ ஹேப்பி அண்ட் ஹெல்தி ஃபேமிலி” என்று மனம் உருகி சொல்லும் மாலதியின் ரெசிபிகளை, கண் கவரும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

கறிவேப்பிலை குழம்பு

  1தேவையானவை: கறிவேப்பிலை – ஒரு கப், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு – தலா 2 டீஸ்பூன்,  இஞ்சி – ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயம் – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, தோல் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைப் போட்டு நன்றாக கிளறவும். பிறகு, புளிக் கரைசலை சேர்த்து… உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

இது வயிற்றுக்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. குழந்தை பெற்றடுத்திருக்கும் பெண்களின் உடல் நலத்துக்கு நன்மை விளைவிக்கும்.

——————————————————————————–

 மாங்காய் பருப்பு சாதம்

2தேவையானவை: மாங்காய் கொட்டையின் உள்ளிருக்கும் பருப்பு – ஒன்று, வெந்தயம் – அரை டீஸ்பூன், மணத்தக்காளிக்காய் வற்றல், சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, சாதம் – ஒரு கப், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாம்பருப்பு, வெந்தயம், மணத்தக்காளிக்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து (தனித்தனியாக வறுத்தால் நல்லது), மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சாதத்துடன் சேர்த்து,  மாம்பருப்பு பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இது வயிற்றுப் பொருமல், பசியின்மை, வயிற்றுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். பொடியை மோரில் அரை டீஸ்பூன் போட்டு குடித்தாலும் நல்லது.

——————————————————————————–

மாங்காய் வற்றல் குழம்பு

3தேவையானவை: மாங்காய் வற்றல் – 6 (மாங்காயை நறுக்கி, உப்பில் 3 நாட்கள் ஊற வைத்து. வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும்), உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை,பெருங்காயம் – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும். வாணலியில் சிறிதளவு  எண்ணெய் விட்டு… உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும். பிறகு, மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுது, ஊற வைத்த மாங்காய் வற்றல், புளிக் கரைசல் விட்டு… மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, இறக்கவும்.

மாங்காய் வற்றல் வயிற்றுக்கு நல்லது.

——————————————————————————–

மிளகு ரசம்

4தேவையானவை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, புளி – எலுமிச்சை அளவு, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு… உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கொதித்ததும், அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் தண்ணீர் சேர்த்து, நுரைத்ததும்… நெய்யில் கடுகை தாளித்து சேர்க்கவும்.

ஜுரம், ஜலதோஷம், இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ரசம் மிகவும் நல்லது.

——————————————————————————–

 தூதுவளை சாதம்

5தேவையானவை: தூதுவளை இலை – அரை கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சாதம் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு… கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தூதுவளை இலையையும் சேர்த்து வறுக்கவும். இதை  மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடுகு தாளித்து, மஞ்சள்தூள் போட்டு, சாதத்தில் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தூதுவளை பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

தூதுவளை, மார்சளியை எடுக்கும்.

——————————————————————————–

 ஓமம் குழம்பு

6தேவையானவை: ஓமம் – 2 டீஸ்பூன் (சுத்தப்படுத்தியது), கடுகு – அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, பெருங்காயம் – சிறிதளவு, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, ஓமத்தை சேர்க்கவும். கடுகு வெடித்ததும் புளித் தண்ணீர் விட்டு, சாம்பார் பொடியை போட்டு… உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கொதித்தவுடன் இறக்கி கறிவேப்பிலையை சேர்க்கவும்.

இந்தக் குழம்பை, குழந்தை பெற்றெடுத்திருப்பவர்களுக்கு பத்தியமாக தரலாம். வயிற்று பொருமல், வாயு பிரச்னையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

——————————————————————————–

 கறிவேப்பிலை பொடி

7தேவையானவை: கறிவேப்பிலை – ஒரு கப், ஓமம், சீரகம் – தலா 2 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு வாணலியில் கறிவேப்பிலை, ஓமம், சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, அதன் நடுவில் இருக்கும் குச்சி எல்லாற்றையும் தனித் தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து நைஸாக பொடிசெய்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும். இதை மோரில் கலந்தும் சாப்பிட்டாலும் நல்லது.

இது, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

——————————————————————————–

 கொள்ளு ரசம்

8 தேவையானவை: கொள்ளு – ஒரு கப், காராமணி அல்லது ஏதாவது ஒரு வகை தானியம் –  2 டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொள்ளுடன் தானியத்தை சேர்த்து  3 மணி நேரம் ஊற வைக்கவும். தனியா, மிளகு, சீரகம். காய்ந்த மிளகாய் ஆகியவற்றை  நெய்யில் வறுத்து பொடி செய்து வைக்கவும். ஊறிய கொள்ளு – தானியத்தை குக்கரில் வைத்து 4 விசில் விட்டு எடுத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கொள்ளு வேக வைத்த நீர்,  புளிக் கரைசல், வறுத்து அரைத்த பொடி, கொள்ளு விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

இந்த ரசம், உடம்பிலிருக்கும் கெட்ட நீரை நீக்கக்கூடியது.

——————————————————————————–

 பிரண்டை பொடி

9தேவையானவை: பிரண்டை –  சற்று நீளமான துண்டு ஒன்று, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயம் – சிறிதளவு, புளி – சிறிய உருண்டை, நல்லெண் ணெய், மிளகு, கடுகு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பிரண்டையைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நன்றாக வறுக்கவும். ஆறியதும் எல்லா வற்றையும் ஒன்று சேர்த்து,  உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்து எடுத்த பொடியைப் போட்டு புரட்டி வைக்கவும்.

இந்த பொடி நாள்பட இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பிரண்டை, மூலச் சூட்டை தணிக்கும்.

——————————————————————————–

 கறிவேப்பிலை  மிளகு சாதம்

10 தேவையானவை: கறிவேப்பிலை – ஒரு கப், மிளகு – 2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு , கடுகு – அரை டீஸ்பூன். சாதம் – ஒரு கப், நெய் – ஒரு டீஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து,  கருகிவிடாதபடி வறுக்கவும். பிறகு, கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும் பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும். அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக பொடி செய்யவும். வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து, சாதத்தில் சேர்த்து, கறிவேப்பிலை – மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.

இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.

——————————————————————————–

 இஞ்சித் தொக்கு

11தேவையானவை: இஞ்சி – ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் – 2, வெல்லம் – ஒரு சின்ன கட்டி, பெருங்காயம் – சிறிதளவு, புளி – ஒரு சிறிய உருண்டை, கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியை நன்றாக கழுவி, சிறு துண்டு களாக நறுக்கவும். இஞ்சி, புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெல்லம், உப்பு ஆகிய வற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அரைத்து வைத்த விழுதைப் போட்டு நன்றாக கிளறவும்.

இதை நாள்பட வைத்து பயன்படுத்தலாம். பித்தம், வாயுத் தொல்லை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

——————————————————————————–

 நெல்லிக்காய்  இஞ்சி லேகியம்

12தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 6, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, தக்காளி – ஒன்று, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், கல்கண்டு – 250 கிராம்.

செய்முறை: நெல்லிக்காயைக் கழுவி, தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் வேகவிடவும். தக்காளியை சுடுநீரில் போட்டு, ஒரு நிமிடம் கழித்து எடுத்து தோல் உரித்து வைக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி… இஞ்சி, தக்காளியுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும். கல்கண்டை பாகு போல காய்ச்சி, அரைத்த நெல்லிக்காய் விழுது, சீரகத்தூள், நெய் விட்டு, நன்றாக லேகிய பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும்.

இந்த லேகியம் கபத்தை நீக்கும். பித்தத்தை எடுக்கும்.

——————————————————————————–

 கண்டத்திப்பிலி ரசம்

 13தேவையானவை: கண்டதிப்பிலி – 3 குச்சி, மிளகு, துவரம்பருப்பு, தனியா, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய் விட்டு,  கண்டதிப்பிலி, மிளகு, துவரம்பருப்பு, தனியா, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுக்கவும் (சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்). வறுத்த பொருட்களை பொடி செய்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியைப் சேர்த்து, தண்ணீர் விட்டு, நுரைத்து வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

இது, குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு நல்லது. ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதை சாப்பிட்டால்… கை, கால் வலி நீங்கும்.

——————————————————————————–

 சுரைக்காய் கூட்டு

14தேவையானவை: சுரைக்காய் – ஒன்று, பாசிப்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுரைக்காயை சின்னதாக நறுக்கவும், வாணலியில் சிறிதளவு நெய் விட்டு… உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து வறுத்து, விழுதாக அரைக்கவும்.  பாசிப்பருப்புடன், சுரைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும். வெந்த காயுடன் அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் நெய்யில் கடுகை தாளித்து சேர்த்து இறக்கவும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சுரைக்காய் நல்லது.

——————————————————————————–

 பச்சை சுண்டைக்காய் கறி

15தேவையானவை: பச்சை சுண்டைக்காய் – 100 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: பச்சை சுண்டைக்காயைக் கழுவி, நன்றாக நசுக்கி, விதைகள்போக அலசி வைக்கவும். குக்கரில் சுண்டைக்காயை 3 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு, சுண்டைக்காயை சேர்த்துக் கிளறி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

பச்சை சுண்டைக்காய், வயிற்றுக்கு மிகவும் நல்லது.

——————————————————————————–