Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2016
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,705 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஏற்றுமதி – துளிர்விடும் நம்பிக்கை!

இந்தியாவின் ஏற்றுமதி 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், உலகளாவிய பொருளாதார மந்த நிலை என்பது வெளிப்படை. நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை தற்போது நம் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலையில் இல்லை.

நல்ல வேளையாக, 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல், நம் ஏற்றுமதி ஏறுமுகத்தில் உள்ளது.

2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாம் மேற்கொண்ட ஏற்றுமதியை விட, 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1.27 சதவீதம் கூடுதல் ஏற்றுமதி செய்துள்ளோம். ஏற்றுமதியின் மதிப்பு 22.57 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.

இதே கால கட்டத்தில், நமது இறக்குமதி 7.33 சதவீதம் குறைந்துள்ளது. இறக்குமதிப் பொருள்களின் மதிப்பைப் பொருத்தவரை 30.69 பில்லியன் டாலர் (சுமார் இரண்டு லட்சத்து நான்காயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. குறிப்பாக, தங்க இறக்குமதியும், கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைந்துள்ளது. இவை நடப்புக் கணக்கில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவியுள்ளன.

உலக வர்த்தக நிறுவனம் (WTO) கடந்த ஜூன் மாதத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, உலக நாடுகள் மேற்கொள்ளும் ஏற்றுமதி, இறக்குமதி அளவை துல்லியமாக, உடனுக்குடன் தெரிவிக்கும் முறையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் நம் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியின் அளவு என்ன என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்துள்ளது. இது ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு உந்து சக்தியாக இருக்கும்.

“ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக ரூபாயின் மதிப்பை குறைக்க வேண்டும்’ (Devaluation of Rupee) என்ற கோரிக்கையை சில நிபுணர்கள் முன் வைக்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி இதனை ஏற்கவில்லை.

தற்போதைய இந்திய ரூபாயின் மதிப்பு நியாயமான நிலையில் இருப்பதையும், சீனாவைப்போல் இந்தியா நாணய மதிப்பைக் குறைக்க முற்பட்டால், அது பல பொருளாதார சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளது. எனவே, நாணய மதிப்பு குறைப்பு என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடம் இல்லை.

பாரம்பரியமான சந்தைகளாகக் கருதப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் தவிர, புதிய சந்தைகளை இனம் கண்டு அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இதற்காக மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு சபை ஆகியவை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய திட்டங்களை உருவாக்குவது நல்ல பலனைத் தரும்.

அந்த வகையில், உலகின் புதிய சந்தைகளாகத் திகழும் ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, நியூசிலாந்து, ஆப்பிரிக்க நாடுகள், கேமேன் தீவுகள், லட்டிவா, லித்துணியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாகப் பார்க்கப்படும் பொறியியல் உற்பத்திப் பொருள்கள், ரசாயனம், மருந்து வகைகள், மின்னணுப் பொருட்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், ஜவுளி, தோல் பொருள்கள், கடல்சார் உணவுப் பண்டங்கள், காபி, தேயிலை, ரப்பர், காஷ்மீர் மற்றும் லக்னெள போன்ற வடமாநிலங்களில் தயாரிக்கப்படும் கலை அழகு மிளிரும் நேர்த்தியான கம்பளங்கள், தரை விரிப்புகள் என பல உள்ளன.

அண்மைக்காலமாக இவற்றில் சிலவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பதும் வேறு சிலவற்றின் ஏற்றுமதி சரிவதும் நிதர்சனம். இந்நிலையில் மத்திய அரசு வழங்கிவரும் சலுகைகளைத் தொடரவேண்டும் என்றும், சொல்லப்போனால் சலுகைகளை மேலும் அதிகரித்திட வேண்டும் என்றும் இந்திய தொழில் வர்த்தகச் சம்மேளனம் (சி.ஐ.ஐ.) கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள சில பெருநிறுவனங்கள், அண்மைக்காலமாக ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக, மோட்டார் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தவிர, வெளிநாடுகளில் தங்களது ஒருங்கிணைக்கும் அமைப்புகளை (assembling units) நிறுவி, அந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்திட முன் வந்துள்ளனர்.

இந்த அணுகுமுறை மூலம், இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான 100 சதவீத பாகங்களை உற்பத்தி செய்வார்கள். சென்னையில் உள்ள ஒரு மோட்டார் உற்பத்தி நிறுவனம், கென்யா நாட்டில் ஒரு அசெம்பிளிங் யூனிட்டை அமைத்து, சென்னையில் உற்பத்தி செய்த பாகங்களை கென்யாவுக்கு ஏற்றுமதி செய்யும்.

அந்த நாட்டில், பாகங்களை ஒருங்கிணைத்து (assemble)  பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதன் மூலம், சம்பந்தப்பட்ட சென்னை தொழிற்சாலைக்கு நியாயமான முறையில் வரிச் சலுகை மற்றும் போக்குவரத்து (freight)  செலவு கணிசமாக மிச்சப்படும்.

அதே நேரம், ஏற்கெனவே சென்னை தொழிற்சாலை இதுவரை நேரடியாக செய்துவரும் ஏற்றுமதி குறையாது. மாறாக, புதிய ஏற்றுமதி ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்பது நிபுணர்

களின் கணிப்பு.

கென்யாவில் மோட்டார் பாகங்களை ஒருங்கிணைத்து வாகனங்களை உருவாக்கி ஏற்றுமதி செய்வதன் மூலம், கிழக்கு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அதன் சுற்றுப்புற புதிய சந்தைகளை இந்தியா வசப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்கும் துறை ஜவுளித் துறை. நான்கு கோடியே ஐம்பது லட்சம் பேருக்கு இத்துறை நேரடி வேலைவாய்ப்பு தருகிறது.

அதேபோல், இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தியில், 14 சதவீதம் ஜவுளி உற்பத்தியின் பங்கு. ஆக, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்(GDP) நான்கு சதவீதம் ஜவுளி உற்பத்தியின் பங்கு. இத்தனை இருந்தும், இத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு மட்டும் இரண்டு சதவீதமாகவே உள்ளது.

அதேநேரம், ஒட்டுமொத்த ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையில், ஜவுளித் துறையின் பங்கு 21.3 சதவீதத்திலிருந்து 34.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அதிகரித்தால்தான் அன்னியச் செலாவணியோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இத்தருணத்தில் வெளிவந்துள்ள இனிப்பான செய்தி ஒன்று உண்டு. மத்திய அரசு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத்துறையின் மேம்பாட்டுக்காக, ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது என்பதுதான் அது.

மத்திய அரசின் இந்தப் புதிய திட்டம் செம்மையாகச் செயல்படுத்தப்படுமானால், ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

ஆயத்த ஆடைத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 கோடியில் ரூ.5,500 கோடி ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ஐந்து சதவீதம் அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் மாநில அரசுகளுக்குச் செலுத்தும் வரிகளை, இதன் மூலம் மத்திய அரசு அவர்களுக்குத் திருப்பித் தருகிறது (Duty Drawback). ஏற்றுமதியாளர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவு பெறுகிறது.

மீதமுள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் தங்களது இயந்திரங்களையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் மானியமாக வழங்கப்பட உள்ளது.

தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 15 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இது 25 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. ஆக, இந்த புதிய திட்டம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியையும் புதிய வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

===

ஆளுமைத்திறன் வளர்ப்போம்

By ப. ஜஸ்டின் ஆன்றணி  |    Last Updated on : 08th August 2016 03:12 AM  |   அ+அ அ-   |  

ஆளுமை என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளை குறிக்கிறது. இவையனைத்துக்கும் நெற்றிப்பொட்டு வைத்தாற்போல சூழ்நிலைகேற்ப சரியான முடிவெடுக்கும் சக்தியும் பெரும்பங்கு வகிக்கிறது.

அணிகலன்களும் அலங்காரமும் மட்டுமே ஒருவரது ஆளுமை ஆகாது. உலகினில் எத்தனையோ மனிதர்கள் இருக்க அப்துல் கலாமும், காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூகியும் ஒளிர்கிறார்கள் எனில் அதற்கு இவர்களது ஆளுமையே காரணம்.

இறைவா, இவர்கள் செய்வது என்னெவென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்ற இயேசுவின் ஆளுமைக்கு நிகர் உண்டோ?

பர்சனாலிட்டி (Personality) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இச்சொல், முகமூடி, மறைப்பு எனும் பொருள் கொண்ட பர்சொனே (Persone) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. ஆகவே, ஆளுமை என்பது ஒருவரின் முகமூடி என்ற கருத்தை கொண்டது.

பலரும் ஒரே ஆளுமைத்தன்மையுடன் இருக்க நினைப்பது தவறு. படிப்பில் 90 மதிப்பெண் பெறும் ஒரு மாணவிக்கு ஒருவரது முகத்தைப்பார்த்து பேச இயலாது. ஒரு பெருங்கூட்டத்தின் முன்னே நின்று பேசும் திறன் கொண்ட மாணவனுக்கு படிப்பில் அக்கறையில்லை.

ஆளுமைத்தன்மையின் சில இயல்புகளாக நடத்தையில் காணப்படும் ஒழுங்கு, சீர்த்தன்மை உளவியல் உருவாக்கம் சூழலுக்கேற்ப நடப்பது மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட முறையில் நடப்பதுமாகும்.

நாம் வாழும் சமூக சூழலும் ஆளுமையை வளர்ப்பதில் பங்கு வகிக்கிறது. கிராமத்தில் படிக்கிற மாணவனுக்கும் நகரத்தில் வசிக்கும் மாணவனுக்குமிடையே பெரும் வித்தியாசமே இருக்கிறது.

கிராமச்சூழலும் நகரச்சூழலும் ஆளுமையின் அடிப்படைகளில் ஒன்று.

மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களாலே நடத்தப்படும் ஆட்சி என்று முழக்கமிட்ட ஆபிரகாம் லிங்கனின் ஆளுமையும், பழமைவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகியும் பெண்குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடிவரும் நோபல்பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் ஆளுமையும், சாதாரண அன்னையாக இல்லாமல் தள்ளாத வயதிலும் தத்தி தத்தி நடந்து மதங்களை கடந்து உலக மக்கள் அனைவர் மனங்களிலும் கருணையின் உருவமாக விளங்கும் மறைந்த அன்னை தெரசாவின் ஆளுமையும் வெவ்வேறானவை.

இன்று வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது படித்து வாங்கிய பட்டங்களையும் மதிப்பெண்களையும் மட்டுமே கருத்தில் கொள்வதில்லை. மாறாக, இவரால் நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியும், இக்கட்டான சூழ்நிலைகளில் தகுந்த முடிவெடுக்கும் ஆற்றலும் இதற்கான ஆளுமைத்தன்மையும் உண்டா என்பதே அதிகம் பரிசோதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டிங் துறையில் தனது பேச்சினால் பிறரை கவரும் ஆற்றலும், பிரச்னைகளை கையாளும் திறமையும் அதிகம் விரும்பப்படுகிறது.

சில நேரங்களில், நகரவாசிக்கு கிடைக்காத வாய்ப்பு குக்கிராமத்திலிருந்து வரும் ஒருவருக்குக் கிடைக்கிறது. காரணம், அவரின் ஆளுமைத்திறன்.

எப்படிப்பட்ட நவீன வாகனத்தில் சென்றாய்? எத்தனை புத்தகங்களை சுமந்தாய்? என்பதல்ல முக்கியம். எந்தளவுக்கு உன்னை தரமேற்றிக்கோண்டாய் என்பதே முக்கியம்.

ஆளுமை மேம்பாட்டுக்கு வாழும் இடம் ஒரு காரணம் என்றாலும் நாம் எப்படிப்பட்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்கிறோம் என்பதும் முக்கியமே.

நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மேடையில் முழங்குவதில் சிறந்து விளங்கவும், தமிழக முதல்வரானதும், ஆங்கிலேயருக்கு நிகராக பேசுவதில் புலமை பெற்றதும் அவரது ஆளுமையே காரணம்.

தெருவிளக்கில் படித்து, தனது திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர், எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர்.

ஒரு சமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலேயரின் வீட்டுத்தோட்டத்தில் நுழைந்தமைக்காக ஒருவரை கடுமையாக தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடிவாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஐயரிடம் வந்து, குற்றம் சுமத்தப்பட்டவர் ஆங்கிலேய நீதிபதியாக இருக்கிறார். எனவே, அவரை நேரில் வந்து ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என கூறினர்.

ஆனாலும், முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதமும் விதித்தாராம்.

ஓர் இந்திய குடிமகனுக்காக, ஆங்கிலேய ஆட்சியில், ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையும் துணிச்சலும் கூடிய ஆளுமை வியப்பளிக்கக்கூடியதல்லவா?

தன்னம்பிக்கையும் தலைமைப்பண்பும் இருந்தால் நம்மை யாரால் வெல்ல முடியும்? நாம் வளர்த்துக்கொள்ளும் ஆளுமைத்திறன் நம் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்தும்.

 எஸ். கோபாலகிருஷ்ணன்