Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2016
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,993 முறை படிக்கப்பட்டுள்ளது!

செவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம்!!

செவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் – அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்!

ஆடு வளர்ப்பு

p42aஆடு, மாடு போன்றவற்றை அவை வாழும் பகுதியை வைத்தே தனி ரகமாக அடையாளம் காணுவது வழக்கம். மாடு வகைகளில் பர்கூர் மாடு, காங்கேயம் காளை, புலிக்குளம் மாடு… என இருப்பது போல, செம்மறி ஆட்டு வகைகளில் ராமநாதபுரம் வெள்ளை, சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு என வாழும் பகுதியை அடிப்படையாகக் கொண்டு ரகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படும் பல  ஆட்டினங்கள் இதுவரை கண்டறியப் படாமலேயே உள்ளன.  அப்படி ஒரு செம்மறி ஆட்டினத்தைக் கண்டறிந்து, அதற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளார், கன்னியாகுமரி மாவட்டம்,  நாகர்கோவிலில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் ரவிமுருகன்.

ஆட்டினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் ரவிமுருகனிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் சென்னைச் சிவப்பு, திருச்சிக் கறுப்பு, கோயமுத்தூர்க் குரும்பை, நீலகிரி, ராமநாதபுரம் வெள்ளை, மேச்சேரி, கீழக்கரிசல், வெம்பூர்ப் பொட்டுப்போர் ஆடு மற்றும் கச்சக்கட்டி ஆகிய 9 செம்மறியாட்டு இனங்கள் மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படிக் கண்டறியப்பட்டுள்ள ரகங்களில் ஏதாவது ஒரு ரக செம்மறியாடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும்போது அந்த இனங்களைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுப்பது வழக்கம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கீழக்கரிசல் செம்மறியாடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. அதனால், 2006-ம் ஆண்டில் அவற்றைப் பெருக்கும் நோக்கில், ‘கீழக்கரிசல் பாதுகாப்புத் திட்டம்’ எனப் பெயரிட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள கிராமங்களுக்குச் சென்று கீழக்கரிசல் இன ஆடுகள் குறித்து ஆய்வு செய்தோம். அப்போது, செவல் நிறத்தில் சிறிய உடலமைப்புடன், தனித்தன்மையுடன் இருந்த ஒரு செம்மறி ஆட்டினத்தை கிராமங்களில் வளர்த்து வந்ததைப் பார்த்தோம். அதுகுறித்து விசாரித்தபோது அதை ‘செவ்வாடு’ அல்லது ‘சிவலையாடு’ என்று அழைப்பதாகச் சொன்னார்கள். கீழக்கரிசல் ஆட்டு ரகம் வளர்க்கப்பட்ட கிராமங்களில் எல்லாம் இந்தச் செவ்வாடும் வளர்க்கப்பட்டு வந்தது. உடனே அதுகுறித்த ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டேன்.

p42b1972-ம் ஆண்டில், கணேஷ் கலே என்ற விலங்கின மரபியல் மற்றும் இன விருத்தியியல் துறைப் பேராசிரியர், தமிழ்நாட்டிலுள்ள செம்மறியாட்டு இனங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து அளித்த அறிக்கையிலும் செவ்வாடு குறித்த தகவல்கள் இல்லை. 1984-ம் ஆண்டில் இதே துறையைச் சேர்ந்த ஆச்சார்யா என்ற பேராசிரியர் மேற்கொண்ட ஆராய்ச்சியிலும் செவ்வாடு குறித்து அறியப்படவில்லை. அதல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள செம்மறியாட்டு இனப்பட்டியலிலும் செவ்வாடு இடம்பெறவில்லை. அதனால், செவ்வாட்டு ரகத்தைப் பட்டியலில் சேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உதவியோடு ஆராய்ச்சி செய்து, பல ஆவணங்களைத் தயார் செய்தேன். பிறகு, கால்நடைப் பராமரிப்புத்துறையின் பரிந்துரை பெற்று, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாக அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள ‘தேசிய கால்நடை மரபுவள நிறுவன’த்துக்கு அறிக்கைகளை அனுப்பினேன். சென்னைச் சிவப்பு, கீழக்கரிசல் ஆகிய இனச் செம்மறியாடுகளுக்கும் செவ்வாட்டுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்துக் கூடுதல் தகவல்கள் கேட்டது, தேசிய கால்நடை மரபுவள நிறுவனம்” என்ற ரவிமுருகன் தொடர்ந்தார்,

p42c“உடனே, தலா 50 சென்னைச் சிவப்பு, கீழக்கரிசல் ஆகிய செம்மறியாட்டு இனங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகளையும், 50 செவ்வாடுகளின் டி.என்.ஏ மூலக்கூறுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து மூன்று இன ஆடுகளுக்கும் எந்தவிதமான நெருங்கிய உறவும் ஒற்றுமையும் இல்லை என்பதை நிரூபித்தேன். அதோடு உடல் அமைப்பு, கொம்பின் வடிவம், நிறம் ஆகியவற்றிலும் முழுவதுமான வேறுபாடுகள் உள்ளன என்பதற்கான ஆதாரங்களையும் இணைத்து, 2013-ம் ஆண்டில் தேசிய கால்நடை மரபுவள நிறுவனத்துக்கு அனுப்பினேன். உடனே அந்நிறுவனத்தின் வல்லுநர் குழு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வந்து ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, 18.03.2015-ம் நாள் செவ்வாடு, தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டு இந்தியச் செம்மறியாட்டு இனங்களின் பட்டியலில் இணைத்துப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகச் செம்மறியாட்டு இனப்பட்டியலிலும் செவ்வாடு இணைக்கப்பட்டது. இதற்காக, கடந்த 23.08.16-ம் நாள், டெல்லி, வேளாண்பவனில் நடைபெற்ற கால்நடை இனப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் விழாவில், எனக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது” என்ற ரவிமுருகன் நிறைவாக,

“திருநெல்வேலி மாவட்டம் மானூர், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், பாப்பான்குளம், பாளையங்கோட்டை, நாங்குனேரி ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சுற்று வட்டாரத்திலும் உள்ள 120 கிராமங்களில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் செவ்வாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால்,  ஆடு வளர்ப்பவர்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தால் கலப்பினச்சேர்க்கை மூலம், இந்த ரகம் மற்ற ரகங்களோடு கலந்து கொண்டே வருகின்றன. அதனால், செவ்வாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி இவ்வினத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதேபோல, தென் மாவட்டங்களில் பட்டியலில் இடம்பெறாத சில செம்மறியாட்டு இனங்கள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். விரைவில் அவற்றையும் அடையாளப்படுத்துவேன்” என்றார், நம்பிக்கையுடன்.

தொடர்புக்கு,முனைவர் ரவிமுருகன், செல்போன்: 94881 07766

தாய் மாமன் கிடா!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டாரம், எட்டாங்குளம் கிராமத்தில் செவ்வாடுகளை வளர்த்து வரும் மாரியப்பனிடம் பேசியபோது, “மூணு தலைமுறையா மேய்ச்சல் முறையில செம்மறியாடுகளை வளர்த்துட்டு வர்றோம். எங்ககிட்ட 45 கீழக்கரிசல், 72 செவ்வாடுனு மொத்தம் 117 செம்மறியாடுகள் இருக்கு. எங்க எட்டாங்குளம் கிராமத்துலயே கிட்டத்தட்ட ரெண்டாயிரம் செவ்வாடுகள் இருக்கு. செவ்வாட்டோட கறி, வெள்ளாட்டுக்கறி மாதிரியே இருக்கும். அதனால, இதுக்கு  மத்த ஆடுகளைவிட கூடுதல் விலை கிடைக்கிது. மற்ற ரக  செம்மறியாடுகளை காலையில 8 மணியில் இருந்து சாயங்காலம் 4 மணி வரைக்கும் மேய்க்கணும். ஆனா, செவ்வாடுகளை 4 மணி நேரம் மேய்ச்சாலே போதுமானது. அதனால, செவ்வாடு வளர்க்கிறப்போ, மத்த விவசாய வேலைகளைச் செய்றதுக்கும் நேரம் கிடைக்கிது.

முப்பது வருஷத்துக்கு முன்னாடியெல்லாம், எங்க பகுதியில அக்கா, தங்கச்சி மகள்களுக்குச் சடங்கு விசேஷம் வெச்சா தாய்மாமன் சீர் கொண்டு போறப்போ, ஒரு செவ்வாட்டுக் கிடாவையும் கொடுக்கிறது வழக்கம். அதுக்காகவே செவ்வாட்டுக் கிடாவை வளர்ப்பாங்க. இப்பவும் சில கிராமங்கள்ல இந்தப்பழக்கம் இருக்கு. கோவில்கள்ல பலி கொடுக்கிறதுக்கு சுத்த கறுப்பு நிற வெள்ளாட்டை வாங்குற மாதிரி… எங்க பகுதியில பலி கொடுக்கச் சுத்த சிவப்பு நிற செவ்வாட்டை வாங்கிட்டுப் போறாங்க. அப்படி சுத்த செவ்வாட்டுக்குக் கூடுதல் விலையும் கிடைக்கிது” என்றார்.

தொடர்புக்கு, மாரியப்பன், செல்போன்: 99426 30113

செவ்வாடுகளில் உட்பிரிவுகளும் உண்டு!

“உடலின் மேற்புறம் இளம் பழுப்பு நிறமும், அடித்தொண்டை முதல் பின் தொடை வரை உட்புறம் வெண்மை கலந்த இளம்பழுப்பு நிறத்திலுமுள்ள செவ்வாடுகள் ‘அரிச்செவ்வாடுகள்’ என அழைக்கப்படுகின்றன. உடல் முழுவதும் கறுமை கலந்த சிவப்பு நிறமுள்ள செவ்வாடுகள் ‘கறுஞ் செவ்வாடு’ என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் செவ்வாடுகள் சிறிய உடலமைப்பில்தான் உள்ளன.

இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை உள்ள கிடாக்கள், 68 சென்டிமீட்டர் உயரம், 61 சென்டிமீட்டர் நீளம், 73 சென்டிமீட்டர் மார்புச் சுற்றளவைக் கொண்டுள்ளன. இதே வயதில், பெட்டையாடுகள் 63 சென்டிமீட்டர் உயரம், 51 சென்டிமீட்டர் நீளம், 67 சென்டிமீட்டர் மார்புச்சுற்றளவைக் கொண்டுள்ளன. ஒரு வயது கிடா, சராசரியாக 26 கிலோ எடையும், பெட்டை சராசரியாக 21 கிலோ எடையும் உள்ளன. ஆறு வயது வளர்ந்த கிடாவின் கொம்புகள் பின்புறமாக வளைந்து உட்பக்கம் திருகி பக்கவாட்டில் நீண்டும் இருக்கின்றன.

16 சென்டிமீட்டர் முதல் 51 சென்டிமீட்டர் வரை கொம்புகள் வளர்கின்றன. கிடாக்களில் 92 சதவிகிதமும், பெட்டைகளில் 2 சதவிகிதமும் கொம்புடன் இருக்கின்றன” என்கிறார், ரவிமுருகன்.

நன்றி  பசுமை விகடன்