Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2017
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,247 முறை படிக்கப்பட்டுள்ளது!

கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்!

  •  இந்தியாவில் ஆண் சிசு இறப்புடன் ஒப்பிடுகையில், பெண் சிசுவின் இறப்பு விகிதம் 75 % அதிகம்.
  •  இந்தியா, சீனா, கொரியா போன்ற நாடுகளில் பெண்சிசுக்கொலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன.
  •  உலகின் பல நாடுகளிலும் 100 ஆண் குழந்தை பிறக்கும்போது, 105 பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள்தான் பிறக்கின்றனர்.
  •  இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பெண் சிசுக்கள் சட்டத்துக்குப் புறம்பாக கருவிலேயே கொலை செய்யப்படுவதாகக் கூறுகிறது, ஐக்கிய நாடுகளின் அறிக்கை. இதனால் ஆண், பெண் விகிதாச்சாரம் அதிகளவில் வேறுபடுகிறது.
  •  யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்தியாவில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

மேற்கண்ட ஒவ்வொரு புள்ளி விபரமும் அதிர்ச்சியை உண்டாக்கும் செய்திகள். கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளை மகாலட்சுமி எனவும், வீட்டின் அதிர்ஷ்ட தேவதை எனவும் கருதுவோர் அதிகம். மறுபுறமோ பெண் குழந்தைகளை சுமையாகக் கருதுவோரும் இருக்கின்றனர்.

இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்களே அதிகம் இருப்பதால், ஒரு பெண் குழந்தையை பெற்றது முதல், வளர்த்து, அப்பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வரையில் ஏற்படும் செலவுகளை வறுமையின் காரணமாக பெற்றோர்களால் சமாளிக்க முடிவதில்லை. இதனால் வேறு வழியின்றி மனதை கல்லாக்கியோ, ரணமாக்கியோ, அல்லது சர்வ சாதாரணமாகவோ பெண் குழந்தைகளை கருணைக் கொலை செய்துவரும் பழக்கம், இந்தியா சுதந்திரம் பெறும் முன்பிலிருந்து இன்றுவரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

1990-களுக்கு முன்புவரை மருத்துவ வசதிகள் சரிவரக் கிடைக்காத, சென்று சேராத நிலையிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மருத்துவச்சிகளின் உதவியால் கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொண்டனர் மக்கள். பெண் குழந்தை என்று தெரியவந்தால், கருக்கலைப்பு செய்ய முயற்சித்தனர். அது நிறைவேறாதபட்சத்தில், குழந்தை பிறந்ததும் கள்ளிப்பால், நெல் என அதற்குக் கொடுத்து சிசுக்கொலை செய்தனர். அதற்கு மனம் ஒப்பாதவர்கள், குழந்தையைக் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர்.

தொடர்ந்து மருத்துவ வசதி முன்னேறி, நவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் முறை வந்தபிறகு, கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என சௌகரியமாகத் தெரிந்துகொண்டு பெண் குழந்தைகளை சர்வ சாதாரணமாக கருக்கலைப்பு செய்து அழித்துவருகின்றனர்.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்போர் குடும்பத்தை நடத்த கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுவதால், ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அதுவும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் என்பதற்காக, கருவில் இருக்கும் குழந்தையை முன்கூட்டியே தெரிந்துகொள்கின்றனர். அது பெண் குழந்தையாக இருந்தால், எளிதாக கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர்.

 கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது பெண் சிசுக்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அவை  இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது வேதனையான செய்தி. பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை இதேநிலையில் உயர்ந்துகொண்டே சென்றால், பிற்காலங்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் மிகவும் அதிகரித்து, பலருக்கும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் போகலாம்.

பெண் குழந்தைகளை பெற்றோர் ஒதுக்கக் காரணங்கள்:

  • பெண் குழந்தைகளை பெற்றது முதல் திருமணம் செய்து கொடுத்தபிறகும்கூட தொடரும் பல்வேறு கடமைகளுக்கான செலவுகள்.
  • ஆண் குழந்தையாக இருந்தால், பிற்காலத்தில் தங்களை காப்பாற்றுவான், பெண் குழந்தையாக இருந்தால் வேறு ஒருவர் வீட்டுக்குத்தானே செல்வாள் என்ற கணிப்பு.
  •  தனக்குப் பிறகு குடும்பத் தலைமுறை தொடர ஆண் குழந்தை வேண்டும் என்ற எண்ணம்.
  •  தங்கள் இறுதிச்சடங்கினை செய்ய ஆண் பிள்ளை வேண்டும் என்ற காரணம்.

பெற்றோர்களின் இதுபோன்ற மனநிலையை அரசும், சமூக ஆர்வலர்களும் மெதுவாக மாற்றினார்கள். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் பெண் சிசுக்கொலைக்கு, பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளும், மக்களின் அந்த எண்ணத்தை மாற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்தன. அவற்றில் சில இங்கே…

  • வரதட்சணை ஒழிப்புச் சட்டம்
  • கருவிலேயே பாலினம் தெரிந்துகொள்வதற்கு எதிரான சட்டம்
  • தொட்டில் குழந்தைத் திட்டம்
  • பெண் கல்விக்கு ஆதரவான சட்டம்
  • பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம்
  • பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை தரும் சட்டம்
  • கல்வி, திருமணம், குழந்தைப்பேறு வரை பல்வேறு காலகட்டங்களில் பெண்களுக்கு வழங்கப்படும்
    உதவிகள்

உலக அளவில் நடக்கும் பெண் சிசுக்கொலைகளில் பெண் சிசு எத்தனை என தெரிந்தால் அதிர்ச்சியாவீர்கள். அதற்கு கீழே இருக்கும் வீடியோவை க்ளிக் செய்க!

இதுபோன்ற சட்டங்களும், திட்டங்களும் ஓரளவுக்கு பலனைக் கொடுத்தாலும், இன்னும் இவை பெயரளவிலான செயல்பாடுகளாகவும் இருக்கின்றன. அதனால்தான் பெண் சிசுக்கொலையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. பெண் சிசுக்கொலை என்றதும் கருவில் அல்லது பிறந்த பிறகு ஒரு குழந்தையைக் கொல்வது என்பது மட்டுமின்றி, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொல்லப்படுவதும் இப்பிரச்னையில் அடங்கும். பெற்றோர்களே பெண் குழந்தைகளை கருணைக்கொலை செய்வதைத்தாண்டி, பெண்குழந்தைகளை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இப்படிப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து, 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் முதல் ஏராளமான பெண்கள் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருபகுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  பின்னர், அப்பெண் குழந்தைகளை கொலைசெய்து விடுகின்றனர். இப்படி ஒவ்வொரு காலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதுபோன்ற குற்றச் சம்பவங்களை,  கடுமையான சட்டங்களைக் கொண்டு ஒழிக்கவேண்டியது அரசின் முதன்மையான கடமை.

இப்போது 100:90 என்ற அளவில் இருக்கும் ஆண் பெண் விகிதாச்சாரம், இனிவரும் காலங்களில் இன்னும் குறையாமல் இருக்கவேண்டும். அதற்கு முதல்கட்டமாக நம் ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பாகுபாடுகளை அறவே ஒதுக்கி, ‘நம் பிள்ளை’ என்ற மனநிலைக்கு நாம் மாறவேண்டும்.

நன்றி: விகடன்

பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (அல்குர்ஆன் : 6:151)