Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2017
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,335 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2

     கத்திரிக்காய் சாதம் 


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், கத்திரிக்காய் துண்டுகள் – அரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பொடி செய்ய: தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.

செய்முறை:
பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, அரைத்த பொடி, சாதம் சேர்த்துக் கலக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.


மினி சீஸ் தோசை

தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், சீஸ் துருவல் – ஒரு கப், கேரட் துருவல் – கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உருக்கிய வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: சீஸ் துருவலுடன் கேரட் துருவல், கொத்த மல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு, மாவைச் சிறிய தோசைகளாக ஊற்றி, மேலே சீஸ் கலவையைச் சேர்த்துப் பரப்பி, சுற்றிலும் வெண்ணெய்விட்டு, மூடிபோட்டு வேகவிட்டு எடுக்கவும்.


கீரை ஃப்ரைடு ரைஸ்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், பொடியாக நறுக்கிய பருப்புக்கீரை – அரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (இரண்டாகக் கீறவும்), எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, கிராம்பு – ஒன்று, பூண்டுப் பல் – 4, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் தனியா, பட்டை, கிராம்பு, பூண்டு சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பச்சை மிளகாய், வெங்காயம், கீரை சேர்த்து வதக்கவும், இதனுடன் உப்பு, அரைத்த பொடி, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். எலுமிச்சைச் சாறு கலந்து லஞ்ச் பாக்ஸில் போட்டுக் கொடுத்தனுப்பவும்.


மில்லட் வெஜ் நூடுல்ஸ்


தேவையானவை:
சிறுதானிய சத்து மாவு – ஒரு கப், விரும்பிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) – ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, சுடுநீர் சேர்த்து இடியாப்ப மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிக் கலவை, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு உப்பு, தக்காளி சாஸ், வேகவைத்த இடியாப்ப நூடுல்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: தானியங்கள், காய்கறிகள் சேர்ப்பதால் இது சத்துகளை உள்ளடக்கியது.


மின்ட் ரைஸ்


தேவையானவை:
அரிசி – ஒரு கப், புதினா இலைகள் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை – அரை கப், தேங்காய்ப்பால் – ஒரு கப்,  சீரகம் – ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் அரிசி, தேங்காய்ப்பால், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.


பொட்டேட்டோ ஸ்மைலி



தேவையானவை:
வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, சீஸ் துருவல், கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – தலா 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக் கிழங்கின் தோலை உரித்துத் துருவவும். இதனுடன் சீஸ் துருவல், சோள மாவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கட்டி யில்லாமல் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி தட்டி, ஸ்டிராவால் கண், வாய் போல துளையிட வும். இதுதான் ஸ்மைலி. வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, தயாரித்து வைத்துள்ள ஸ்மைலிகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சிறந்தது.

இதை கே.ஜி செல்லும் குட்டீஸ் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


பனீர் ஃப்ராங்கி


தேவையானவை:
சப்பாத்தி – 5, பனீர் துருவல் – கால் கப், கேரட் துருவல் – சிறிதளவு, நறுக்கிய குடமிளகாய் – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி சாஸ், சோயா சாஸ் – தலா 2 டீஸ்பூன், வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம், பனீர் துருவல், குடமிளகாய், கேரட் துருவல், உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி இறக்கவும். தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கி, சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் சூடு செய்து எடுக்கவும். சப்பாத்தியின் ஓரத்தில் தயாரித்து வைத்துள்ள பனீர் கலவையை வைத்து, சுருட்டி லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.


முளைப்பயறு புலாவ்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), முளைகட்டிய பச்சைப்பயறு – கால் கப் (வேகவைக்கவும்), இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், கிராம்பு – ஒன்று, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன், எண்ணெய்,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கிராம்பு, இஞ்சித் துருவல் தாளிக்கவும். இதனுடன் தக்காளி, குடமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு முளைகட்டிய பச்சைப்பயறு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


வெஜ் கோகனட் ரைஸ்


தேவையானவை:
அரிசி – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – ஒரு கப், கேரட் துண்டுகள், பச்சைப் பட்டாணி – தலா கால் கப், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், நெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: குக்கரில் அரிசியுடன் கேரட், பட்டாணி,    2 கப் தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு உருக்கி சீரகம், காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பிறகு, வடித்த சாதக் கலவை சேர்த்துக் கிளறி இறக்கவும்.


ஸ்வீட் கார்ன் இட்லி


தேவையானவை:
ஸ்வீட் கார்ன் – 2, ரவை, தயிர் – தலா ஒரு கப், பச்சைப் பட்டாணி – சிறிதளவு, இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சமையல் சோடா – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஸ்வீட் கார்னை வேகவைத்து துருவவும். பச்சைப் பட்டாணி யுடன் பச்சை மிளகாயைச் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். ரவையுடன் தயிர், இஞ்சித் துருவல், உப்பு, அரைத்த விழுது, துருவிய கார்ன், சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து ரவைக் கலவையுடன் கலக்கவும். கொத்தமல்லித்தழை தூவி பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, மாவைக் கரைத்து இட்லித்தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


பாலக் – கேரட் தோசை


   தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப், நறுக்கிய பாலக்கீரை – ஒரு கப், கேரட் துருவல் – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: பாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவிடவும். ஆறியபின் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். தோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


மிளகு சாதம்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், மிளகு – 4 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறி வேப்பிலை – சிறிதளவு, பெருங்காயத்தூள் –  ஒரு சிட்டிகை, புளி – கொட்டைப்பாக்கு அளவு, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், புளி சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து பவுடராகப் பொடிக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து சாதம், தேவையான அளவு பொடி சேர்த்துக் கலந்து இறக்கவும்.


சாக்லேட் அண்ட் நட்ஸ் பராத்தா


தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், நெய் – தேவையான அளவு, சாக்லேட் துருவல் – கால் கப், முந்திரித் துருவல், பாதாம் துருவல், பிஸ்தா துருவல் கலவை – கால் கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: சாக்லேட் துருவலுடன் பாதாம் துருவல், முந்திரித் துருவல், பிஸ்தா துருவல் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி, வட்டமாகத் தேய்க்கவும். இதன் நடுவே சாக்லேட் துருவல் கலவையை வைத்து மூடி, மீண்டும் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டிய  பராத்தாக்களைப் போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


தேங்காய்ப்பால் சாதம்


தேவையானவை:
அரிசி – ஒரு கப், தேங்காய்ப்பால் – 2 கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: அரிசியைக் களைந்து, தேங்காய்ப்பால் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் நெய்விட்டு உருக்கி சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு, ஊறவைத்த அரிசி சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.


ஸ்வீட் பூரி


தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், தேவையான உப்பு, தண்ணீர்விட்டு பூரி மாவு பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக்கி தேய்த்து விரும்பிய வடிவில் துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, நறுக்கிய துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக இருக்கும்போதே மேலே பொடித்த சர்க்கரை தூவவும்.