Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2017
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,662 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 1/2

      பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குச் சுவையான, வித்தியாசமான உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்போதுதான் அவர்கள் மீதம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால் அன்றாடம் தயாரிக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிகளில் கவனம் செலுத்துவது அவசியம்’’ என்று சொல்லும் சமையல்கலைஞர் தீபா பாலசந்தர், நமக்காக வெரைட்டியான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிகளை வழங்குகிறார்.

சாக்லேட் பணியாரம்


தேவையானவை:
பச்சரிசி, இட்லி அரிசி – தலா அரை கப், உளுத்தம்பருப்பு – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – சிறிதளவு, வெல்லத்தூள் – கால் கப், சாக்லேட் சிரப் – கால் கப், சாக்கோ சிப்ஸ், நெய், பொடித்த சர்க்கரை – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயத்தைச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, கிரைண்டரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு கெட்டியாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைத்து, சுமார் 8 மணி நேரம் புளிக்கவிடவும். பாத்திரத்தில் வெல்லத்தூள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். புளித்த மாவுடன், ஏலக்காய்த்தூள், வெல்லக்கரைசல், சாக்லேட் சிரப் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவிட்டு, குழிகளில் சிறிதளவு நெய்விட்டு உருக்கி, மாவைக் குழிகளில் பாதியளவு ஊற்றி, சாக்கோ சிப்ஸ் சிறிதளவு தூவி மேலே மீண்டும் மாவை ஊற்றி, நன்கு வேகவைத்து எடுக்கவும். பொடித்த சர்க்கரையை மேலே தூவவும்.


முருங்கைப் பொடி இட்லி

 தேவையானவை: இட்லி – 5 (சதுரங்களாக நறுக்கவும்), எண்ணெய் – தேவையான அளவு.

பொடி செய்ய: ஆய்ந்த முருங்கைக்கீரை – ஒரு கப், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறுப்பு எள் – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – 15, உப்பு, பெருங்காயத்தூள் – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாக  வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு இட்லி துண்டுகள், தேவையான அளவு பொடி சேர்த்து நன்கு புரட்டி இறக்கவும்.

குறிப்பு: புரதம், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த இட்லி இது.


எள்ளோதரை


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், கறுப்பு எள் – 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வடித்த சாதம், அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.


கேப்சிகம் ரைஸ்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், குடமிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, வடித்த சாதம் சேர்த்துக்கலந்தால் கேப்சிகம் ரைஸ் தயார்.


சாக்லேட் தோசை

 தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், கோகோ பவுடர் – தேவையான அளவு, முந்திரித் துருவல் – கால் கப், நெய் – தேவையான அளவு.

செய்முறை: கோகோ பவுடருடன் முந்திரித் துருவல் சேர்த்துக் கலந்துவைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி, மேலே கோகோ – முந்திரி கலவையைத் தூவி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குட்டீஸைக் குஷியில் ஆழ்த்தும் தோசை இது.


தக்காளி – பூண்டு சாதம்

தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், தக்காளி – 4 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் – 10 (ஒன்றிரண்டாகத் தட்டவும்), பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பூண்டு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


இட்லி ஃப்ரை


தேவையானவை:
இட்லி – 5 (சிறிய சதுரங்களாக நறுக்கவும்), வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங் காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், இட்லி துண்டுகள் சேர்த்து வதக்கி இறக்கவும்.


மசாலா லெமன் ரைஸ்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 4, எலுமிச்சைப்பழம் – ஒன்று, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும்.


ஆனியன் அவல்


தேவையானவை:
கெட்டி அவல் – ஒரு கப், தேங்காய்த்துருவல் – கால் கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10, வறுத்த வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு களைந்து நீரை வடியவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, ஊறவைத்த அவல், மஞ்சள்தூள், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


ஃப்ரூட்ஸ் தயிர் சாதம்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், பால் – அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது), தயிர் – 2 டீஸ்பூன், திராட்சை (பச்சை, கறுப்பு) – தலா 10, மாதுளை முத்துகள் – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா அரை டீஸ்பூன், இஞ்சித் துருவல், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி தாளிக்கவும். அகலமான பாத்திரத்தில் சாதத்து டன் உப்பு சேர்த்து நன்கு மசிக்க வும். இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பினால், மதியம் சாப்பிடும் போது கொஞ்சம்கூட புளிக்காது.


பிரெட் வெஜ் ரோல்


தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ்கள் – 10, கேரட் துருவல் – கால் கப், புதினா சட்னி, தக்காளி சட்னி – தலா கால் கப், வெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை அப்பளக் குழவி யால் தேய்க்கவும். இதன்மீது வெண்ணெய் தடவவும். பிறகு, ஒரு பிரெட் ஸ்லைஸின் ஓரத்தில் மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து ஒட்டியதுபோல தேய்க்க வும். இதன்மீது புதினா சட்னி, தக்காளி சட்னியைத் தடவவும். பிறகு, மேலே கேரட் துருவலைத் தூவி, பாய் போல சுருட்டினால் பிரெட் வெஜ் ரோல் ரெடி.


வற்றல் குழம்பு சாதம்


தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, சுண்டைக்காய் வற்றல் – 5, தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10, பூண்டுப் பல் – 10, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வற்றல் குழம்பு பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் சுண்டைக்காய் வற்றல், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, 2 டீஸ்பூன் வற்றல் குழம்பு பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கிளறினால் வற்றல் குழம்பு சாதம் தயார்.

வற்றல் குழம்பு பொடி தயாரிக்கும் முறை:  துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், கடலைப் பருப்பு, தனியா (மல்லி) – தலா ஒரு டீஸ்பூன், மிளகு, கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியபின் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.


சட்னி தோசை


தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப், எண்ணெய் – தேவையான அளவு.

சட்னி செய்ய:
பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல் – தலா ஒரு கப், பச்சை மிளகாய் – 2, பூண்டுப் பல் – ஒன்று, புளி – ஒரு கொட்டை பாக்கு அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை: பொட்டுக்கடலையுடன் தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, புளி, உப்பு சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டுக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி மேலே சட்னியைத் தடவவும். சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: இதை அப்படியே சாப்பிடலாம்; தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.


உருளைக்கிழங்கு – பட்டாணி சாதம்

  தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், வேகவைத்த உருளைக்கிழங்கு – 2, வேகவைத்த பச்சைப் பட்டாணி – கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை உரித்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


சப்பாத்தி ரோல்


தேவையானவை:
சப்பாத்தி – 5, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேகவைத்து  மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். சப்பாத்திகளின் நடுவே வதக்கிய கலவையை வைத்து, பாய்போல சுருட்டவும். தோசைக் கல்லைக் காயவைத்து, சுருட்டிய சப்பாத்திகளை வைத்து இருபுறமும் சூடு செய்து எடுக்கவும்.