Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2017
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,168 முறை படிக்கப்பட்டுள்ளது!

வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்

 வரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல் –   அனுராதா ராமன் 

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மதங்கள் தொடர்பான ஆய்வுத் துறையின் உறுப்பினரான ஆட்ரே டிரஷ்கே, ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ நூலை எழுதியிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்நூல் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் ஆட்ரே டிரஷ்கே.

இந்திய வரலாற்றுப் பக்கங்களில் முகலாயர்களுக்கு இடமில்லை என்கிறது தற்போது ஆளும் பாஜக. ஆனால் முகலாயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருத மொழியை முன்னிறுத்தினார்கள் என்கிறது உங்களுடைய புத்தகமான ‘கல்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’. இந்த இரு வேறு கருத்துகளும் எப்படி ஒத்துப்போகும்?

இரண்டு கருத்துகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு முக்கியக் கேள்விகளை முன்வைக்கிறேன்.

முதலாவதாக, இந்த இரண்டில் எந்தப் பார்வைக்கு அழுத்தமான வரலாற்று ஆதாரம் உள்ளது? இரண்டாவதாக, இந்திய வரலாற்றிலிருந்து முகலாயர்களை பாஜக அழிக்க நினைப்பதற்கான அரசியல் காரணங்கள் என்ன?


வரலாற்று உண்மைகளை நேர்மையாக வெளிக்கொணருவதே என் புத்தகத்தின் நோக்கம். இந்திய வரலாற்றில் பெரும் பங்கு வகித்தவர்கள் முகலாயர்கள். அதேபோல, அவர்களுடைய சாம்ராஜ்ஜியத்தில் சம்ஸ்கிருத மொழிக்குத் தனி முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இத்தகைய உண்மைகள் பாஜகவுக்கு அசவுகரியமாக இருக்கலாம். ஆனால் வரலாற்றாசிரியர் என்ற முறையில் எத்தகைய சமரசமும் இன்றியே இதை நான் சொல்கிறேன். இந்தியாவின் கடந்த காலத்தை மிகவும் பலவீனமான முறையில் மாற்றி எழுத முயல்கிறது பாஜக என்பதையும் என் புத்தகம் நிரூபிக்கும்.

இதில் நகைமுரண் என்னவென்றால், ஒருபுறம், இந்த அரசு சம்ஸ்கிருதத்தைத் தூக்கிநிறுத்தப் பாடுபடுகிறது. மறுபுறம் முகலாயர்களை வெறுக்கிறது.

சம்ஸ்கிருதத்தின் ஒரு அங்கத்தை மட்டுமே தூக்கிப்பிடிக்கிறது பாஜக. இதிகாசங்கள், பண்டைய கவிதைகள் மட்டுமின்றி சம்ஸ்கிருத இலக்கியங்கள் எத்தனையோ உள்ளன. பாஜகவினர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய காளிதாசனை மட்டும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதே சம்ஸ்கிருத மொழியில் முகலாயர்களைப் பற்றி 16-ம் மற்றும் 17-ம் நூற்றாண்டில் சமணர்கள் எழுதிய நூல்களைப் படிக்கும்படி மாணவர்களிடம் சொல்வார்களா?

உங்களைப் பொருத்தவரை சம்ஸ்கிருதம் மற்றும் பாரசீகத்தை வளர்த்தெடுத்த முகலாய மன்னர்கள் யார்?

அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் உள்ளிட்டவர்களின் ஆட்சியில் சம்ஸ்கிருதம் ராஜ சபையில் கவுரவிக்கப்பட்டது. அதற்காகக் கொடுங்கோல் ஆட்சியாளராகக் கருதப்படும் அவுரங்கசீப் சம்ஸ்கிருதத்தை வெறுத்தார் என நினைத்துக்கொள்ளக்கூடாது. வரலாற்று நாயகர்களில் அநியாயத்துக்குத் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்தான்.

அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருதம் முக்கியத்துவம் இழந்தது உண்மைதான். ஆனால் அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்திக்கு வழிவிட்டு மெதுவாகச் சம்ஸ்கிருதம் விடைபெற்றுச் செல்லத் துவங்கிய காலம் 17-ம் நூற்றாண்டு. ஷாஜஹானின் ஆட்சிக் காலத்திலேயே இந்தி இலக்கியவாதிகள் முன்னிறுத்தப்பட்டு சம்ஸ்கிருதம் மெல்ல நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் சம்ஸ்கிருதம் முற்றிலுமாகக் காணாமல்போனது ஒரு தற்செயல் நிகழ்வே.

இரண்டாவதாக, 1640,1650-களில் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை சம்ஸ்கிருத மொழியில் பதிந்தவர் மன்னர் தாரா ஷிகவ். அவரை வீழ்த்திய பின்னரே அரியணை ஏறினார் அவுரங்கசீப். ஆட்சி மாற்றத்தை நிறுவ சம்ஸ்கிருத மொழியினால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரத் தொடர்புகளை அவர் துண்டித்தார். ஆக, சம்ஸ்கிருத மொழியை முகலாயர்கள் கைவிடக் காரணம் அரசியலே அன்றி மதமோ, கலாச்சாரமோ அல்ல.

இச்சூழலில், மற்றொரு வரலாற்று உண்மையையும் வெளிப்படுத்திவிடுகிறேன். திறந்த மனப்பான்மையும் சகிப்புத்தன்மையும் கொண்ட மதச்சார்பற்ற இஸ்லாமிய மன்னர் அக்பர் என்னும் பிம்பமும் கட்டுக்கதையே. உதாரணத்துக்கு, ஒரு முறை சமண ஞானிகளைத் தனது தர்பாரில் சந்தித்தபோது, ஓர்இறைக் கொள்கை இல்லாவிடில் அவர்களை அரசவையிலிருந்து வெளியேற்றுவேன் என எச்சரித்தாராம் அக்பர்.

மேட்டுக்குடி முகலாயர்கள், இந்து பிராமணர்கள், சமணர்கள் இடையில் எத்தகைய கலாச்சாரப் பகிர்வு அன்று இருந்தது?

அன்று, முகலாயர்களுக்கும் பிராமணர்களுக்கும் பொதுவான மொழி இந்தியாக இருந்தது. ஒரு சம்ஸ்கிருத நூலை பாரசீகத்தில் மொழிபெயர்க்க வேண்டுமானால் முதலில் பிராமணர்கள் அதை வாசிப்பார்கள். வாய்மொழியாக இந்தியில் மொழிபெயர்த்துச் சொல்வார்கள். அதைக் கேட்டுப் பாரசீகத்தில் முகலாயர்கள் எழுதிக்கொள்வார்கள்.

அதேபோல, சமணர்களும் பிராமணர்களும் முகலாயர்களுக்கு ஜோதிடம் கூறும் வழக்கம் இருந்தது. முகலாய ராஜ வம்சத்துக்கு பிராமணர்கள் சம்ஸ்கிருதத்தில் ஜாதகம் எழுதுவார்கள். மன்னர் ஜஹாங்கிருக்குப் பெண் குழந்தை பிறந்தவுடன் ஜாதக தோஷம் நிவர்த்தி அடைய சமணர்கள் பூஜை நடத்தியுள்ளனர். என் புத்தகத்தில் இதுகுறித்தெல்லாம் விரிவாக எழுதியுள்ளேன்.

வரலாற்றைத் திரிக்க இரு நோக்கங்கள் அவர்களுக்கு இருப்பதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று, முகலாய வரலாற்றை அழிப்பது. மற்றொன்று, மதக் கலவரங்கள் நிறைந்தது இந்திய வரலாறு எனப் பதிவுசெய்வது. அப்படியானால், நீங்கள் சொல்ல வருவது என்ன, முகலாயர்களின் காலத்தில் மதக் கலவரங்களே நடைபெறவில்லை என்பதுதான் உங்கள் வாதமா?

அப்படிச் சொல்லவில்லை. முகலாயர்கள் ஆண்ட இந்தியாவில் வன்முறைக்குப் பஞ்சமில்லை. வன்முறையும், கலவரமும் நிறைந்ததுதான் மனித வரலாறு என்பதில் எனக்கும் மாற்றுக் கருதில்லை. அக்பர் ஆண்டபோதும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அத்தகைய வன்முறைச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மதமா என்பதே என் கேள்வி.

அரசியல் எதிரிகள் பலருடன் மூர்க்கமாகப் போரிட்டவர்கள் முகலாயர்கள். அவர்கள் சண்டையிட்டது யாருடன் எனத் தேடிப்பார்த்தால் அதில் ராஜபுத்திரர், இஸ்லாமியர், இந்துக்கள் இப்படிப் பலரை அடையாளம் காண முடியும். ஆக, இது ஆட்சிக்கான போரே தவிர மதம் மற்றும் கலாச்சாரம்சார் போர் அல்ல. ஆனால் பண்டைய இந்தியாவில் மதத்துக்குப் பெரிய இடமில்லை என்று சொன்னால் பலரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

இதையே ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்களுக்கு மேலும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். மதச் சகிப்புத்தன்மையை மேற்கத்தியர்கள் கற்றுக்கொண்டதே முகலாயர்களிடமிருந்துதான் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அதாவது முகலாயர் ஆட்சியின்போது இந்தியா வந்த ஐரோப்பியர்கள் கண்கூடாக அவர்களுடைய மதச் சகிப்புத்தன்மை கண்டு பூரித்துப்போய்த் தாங்களும் பின்பற்ற முயன்றார்கள்.

பாஜக அரசு குற்றம்சாட்டுவதைப் போல வரலாற்றை விளக்கும் முறையில் மார்க்சியர்களிடமும் சிக்கல் உள்ளதா?

என்னைப் பொருத்தவரை மார்க்சிய வரலாற்றுப் பார்வை குறுகலானதுதான். வரலாறு என்றாலே வர்க்கம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள்தான் என அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் கடந்த காலத்தை விளக்க நவீன வரலாற்றாசிரியர்களிடம் பல அணுகுமுறைகள் உள்ளன.

வரலாற்றில் முகலாயர்களுக்குப் பங்குள்ளது என்பதை ஒரு இந்து தேசியவாதிகளால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. இத்தகைய புரிதலை எப்படி மாற்றப்போகிறீர்கள்?

உலகெங்கிலும் இப்படித்தான், வரலாற்று உண்மைகளைச் சொல்லும்போதெல்லாம் அதைப் பலரால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை. இந்தியாவில் இது அதிகம். அதே நேரத்தில் மதரீதியாக வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் இந்தியாவில் நடந்துவருவதைப் பலரும் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வரலாற்று ஆய்வுகள் கைகொடுக்கும்.

வரலாற்றைத் திரித்து எழுதினால் என்னவாகும்?

வரலாற்றைத் திரிப்பதும், சுருக்குவதும் அபாயகரமானது. முதலாவதாகச் சகிப்புத்தன்மை அற்றுப்போகும். ஏற்கனவே இந்தச் சிக்கலை 21-ம் நூற்றாண்டு அனுபவித்துவருகிறது. அடுத்து,கடந்த காலத்தைக் கொச்சைப்படுத்துகிறோம். இந்தியாவுக்கு அற்புதமான வரலாறு உள்ளது. ஈடு இணையற்ற இலக்கியச் செழுமை உள்ளது. ஆனால் குறுகலான பார்வை நம் ஞானக் கண்ணை மறைத்துவிடும்.

ஆங்கிலேயரின் காலத்தில்தான் (1757 முதல் 1947 வரை) முகலாயர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே முதன்முதலில் பிளவு ஏற்படுத்தப்பட்டது என்பது உங்களுடைய வாதம். தற்போது மோடி அரசாங்கம் அதே உத்தியைப் பிரயோகிக்கிறது.

மிகவும் அபாயகரமான போக்கு இது. என்னைக் கேட்டால் இந்தியாவின் மகிமையே அதன் பன்முகத்தன்மைதான். அத்தகைய செழுமைவாய்ந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் பலர் முயற்சிக்கத் தவறுவதால்தான் பாஜக வரலாற்றை மாற்றி எழுதத் துணிகிறது.

தமிழில்: ம. சுசித்ரா – நன்றி: தி இந்து (ஆங்கிலம்)